திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

சிந்தை மகிழ்விக்கும் சித்திரை!

சிந்தை மகிழ்விக்கும் சித்திரை!
News
சிந்தை மகிழ்விக்கும் சித்திரை!

சிந்தை மகிழ்விக்கும் சித்திரை!

சிந்தை மகிழ்விக்கும் சித்திரை!

சித்திரை மாதப் பிறப்பை சைத்ர விஷூ புண்ணிய காலம் என்பார்கள். ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள்; சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரையை வசந்த ருது என்பார்கள்.

அற்புதமான இந்த மாதத்தின் முதல் நாளில், திறந்தவெளியில் சூரியக் கடவுளுக்கு பூஜைகள் செய்வர். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சித்திரை முதல் நாளை புனித தினமாகக் கொண்டாடுகின்றனர். பிரம்மன் உலகைப் படைத்தது சித்திரை முதல்நாளில் என்கின்றன சில ஞான நூல்கள். 

பஞ்சாங்க படனம்

முந்தைய காலத்தில் தினந்தோறும், பஞ்சாங்கம் படிக்கச் செய்து கேட்கும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. தினமும் படிக்க முடியாவிடினும், வருடப் பிறப்பு அன்றாவது பஞ்சாங்கம் படிக்கும் இடத்துக்குப் போய், வரவிருக்கும் வருடத்தின் பலாபலன்களைக் கேட்க வேண்டும். இதை பஞ்சாங்க படனம் எனச் சொல்வார்கள். வருடப் பிறப்பன்று புதுப் பஞ்சாங்கத்தை பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள்.

பஞ்ச அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். தினமும் இதைப் படிப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

யோகம்: ரோகங்களைப் போக்கும். திதி: நன்மையை அதிகரிக்கச் செய்யும். கரணம்: வெற்றியைத் தரும். வாரம்: ஆயுளை வளர்க்கும். நட்சத்திரம்: பாவத்தைப் போக்கும்.

மேலும், கசப்பும் இனிப்பும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் விதமாக, இல்லத்தில் வேப்பம்பூ பச்சடி செய்து சாப்பிடுவார்கள்.

சிந்தை மகிழ்விக்கும் சித்திரை!

குழைத்த மனமுமலர் கொண்டு குவிகையும்

இழைத்த அருச்சனையு மில்லேனை யாள்குவையோ

தழைத்த படையைச் சவுந்தரசா மந்தனுக்கா

அழைத்த புகழ்க் கூடல் அங்கயற்க ணாயகியே

- அங்கயற் கண்ணிமாலை


 விஷுக்கணி

பங்குனி மாதக் கடைசி நாள் இரவில், தங்க - வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள், நவரத்தினங்கள், பழ வகைகள், காய் வகைகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதிகாலையில் எழுந்ததும், அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இது ‘விஷுக் கணி’ (விஷுக் காட்சி) எனப்படுகிறது. பிறகு கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள். சிறியவர்கள், பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். அவர்களைப் பெரியவர்கள் ஆசிர்வதிப்பார்கள். அன்றைய தினம் வயதில் சிறியவர்களுக்கும் வீட்டுக்கு வருபவர்களுக்கும் பணம் பரிசளிக்கும் வழக்கம் உண்டு. இதை ‘விஷுக் கை நீட்டம்’ என்பர்.

 சித்திரை ஏகாதசிகள்

சித்திரை மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இந்த மாதத்தின் தேய்பிறை ஏகாதசி, ‘பாப மோசனிகா ஏகாதசி’ எனப் படும். இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், நம் பாவங்கள் யாவும் பொசுங்கிவிடும். சாபத்தின் காரணமாக பேயாக மாறித் திரிந்த மஞ்சுகோஷை என்ற தேவமங்கை, இந்த விரதத்தைக் கடைப்பிடித்து இறையருளால் சாபம் நீங்கப் பெற்றாள்.
 சித்திரை வளர்பிறையில் வருவது ‘காமதா ஏகாதசி’ எனப் படும். விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. லலிதன் என்ற காந்தர்வன், ஒரு சாபத்தின் காரணமாக ராட்சஸ உருவை அடைந்தான். அவனது மனைவியான லலிதை, சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, கணவனின் சாபம் நீங்குவதற்கு வழி கண்டாள். விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றும் விரதம் ஆதலால் காமதா ஏகாதசி என்று பெயர்.

 சித்ரகுப்த விரதம்

சித்திரை மாத வைபவங்களில் மிக முக்கியமானது சித்ரகுப்த விரதம். சித்திரை மாத வளர்பிறை அல்லது தேய்பிறை சப்தமி அன்று, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும்போது, சித்திரகுப்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதற்கு முதல் நாளான சஷ்டி அன்று உபவாசம் இருந்து அன்று இரவு கலச ஸ்தாபனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். விரத நாளன்று அதன் மகிமையைச் சொல்லும் திருக்கதையைப் படிப்பது விசேஷம். அந்தக் கதை முருகப்பெருமானுக்கு சிவனாரால் அருளப் பெற்றது என்பார்கள்.

த்விஜவர்யர்’ என்ற வேதியர் சகல சாஸ்திர-வேதங்களிலும் தேர்ந்தவர். இருந்தாலும், அவற்றில் சொன்னவற்றை அவர் கடைப்பிடிப்பதில்லை. தான - தர்மம் என்பது அவரைப் பொறுத்தவரை புத்தகங்களில் மட்டும்தான்!

சிந்தை மகிழ்விக்கும் சித்திரை!

இப்படியெல்லாம் இருந்தாலும் அவரிடம் ஒரு நல்ல குணமும் இருந்தது. அவர் சாப்பிடுவதற்கு முன்னால், ‘‘சித்ராய நம: சித்ரகுப்தாய நம: யமரூபிதராய நம:’’ எனச் சொல்லி சித்திரகுப்தருக்கு பலி போடுவார். பிறகுதான் சாப்பிடுவார். த்விஜவர்யரின் மனைவி சோமாவும் நல்லதே நினைத்தது இல்லை. ஆனால், சித்திரகுப்தருக்கு உணவு இடும்போதெல்லாம் த்விஜவர்யர், சோமாவையும் கூடவே வைத்துக் கொண்டதால், அவளுக்கும் பலன் கிடைத்தது. அவர்கள் இருவரும் இறந்த பிறகு, அவர்களை யமதர்மன் முன் நிறுத்தினார்கள். சித்திரகுப்தன், ‘‘இவர்கள் சித்திரகுப்த விரதம் இருந்தார்கள்!’’ என்றான்.

‘‘இந்த இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்!’’ என்றான் யமன். விரதத்தை அறியாமல் செய்த அவர்களுக்கே அப்படியென்றால், அறிந்து செய்பவர்கள் அடையும் பலனைச் சொல்லவும் வேண்டுமா?!

 சித்ரா பௌர்ணமி

செல்வங்களிலேயே பெரிய செல்வமாக இருந்து, நிம்மதியைத் தருவது நோயில்லாத வாழ்க்கையே. அதனால்தான் பதினாறு பேறு (செல்வங்)களைச் சொன்ன அபிராமிபட்டர், ‘நோயின்மை’க்கு முதல் இடம் கொடுத்தார்.

மனித குலம் நோயில்லாத வாழ்வு வாழத் தங்களையே அர்ப்பணித்தவர்கள் சித்த புருஷர்கள். சித்ரா பௌர்ணமியின் உண்மையைக் கண்டுபிடித்து, அதை மனித குலத்துக்கு வெளிப்படுத்தியவர்கள் சித்த புருஷர்களே.

சிந்தை மகிழ்விக்கும் சித்திரை!

சித்ரா பௌர்ணமியன்று ஒரு சில ஊர்களில் இரவில் முழு நிலா வெளிச்சத்தில், பூமியில் இருந்து ஒரு வகை உப்பு வெளிக் கிளம்பும். பூமிநாதம் என்று அழைக்கப்படும் அந்த உப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை அளிக்கக் கூடியது. இது, ரசாயன- மருத்துவத் துறையில் உபயோகப்படுகிறது. இந்த உப்பு சித்ரா பௌர்ணமி அன்று வெளிப்படுவதைக் கண்டு பிடித்தவர்கள் சித்த புருஷர்களே. இதனால் சித்ரா பௌர்ணமி ஆதியில் ‘சித்தர் பௌர்ணமி’ எனப்பட்டது.

 சித்திரை வைபவங்கள்!

சித்ரா பௌர்ணமி அன்றுதான் மீனாட்சியம்மை சொக்கநாதரை மணந்து கொண்டாள்.

* சித்திரை சுக்லபட்ச பஞ்சமியில்தான் ஆதிசங்கர ஜயந்தி. ஸ்ரீராமானுஜர் அவதார வைபவமும், ஸ்ரீரமணர் ஆராதனையும் சித்திரையில்தான்.

சித்திரை சுக்லபட்ச திருதியை அன்றுதான் அட்சய திருதியை கொண்டாடப் படுகிறது. யமதருமனின் கணக்கரான சித்திரகுப்தன் தோன்றியது சித்ரா பவுர்ணமி அன்றுதான்.

* சித்திரை- சுக்லபட்ச அஷ்டமியில், அம்பிகை பிறந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திருநாளில் அம்பிகையை மனமுருகி பூஜிப்பதும், நதி நீராடலும் சிறப்பாகும். சித்திரை திருவோணத்தில் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு வசந்தகால அபிஷேகம் நடைபெறும்

* கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரரும் ஸ்ரீமங்களாம்பிகையும், சித்திரை மாதம் நடைபெறும் சப்தஸ்தான விழாவுக்காக பல்லக்கில் புறப்பட்டு, சுமார் 20 கி.மீ தூரம் பயணித்து... சாக்கோட்டை, திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய ஏழு திருத்தலங்களுக்கும் சென்று திரும்புகிறார்கள். மிக அற்புதமான விழா வைபவம் இது!

* கோவை சிங்காநல்லூரில், சித்திரகுப்தருடன் யமதருமன் சேர்ந்து அருளும் தனிக்கோயில் உள்ளது. இங்கே, சித்ரா பௌர்ணமியன்று 101 வகை படையல்கள் படைத்து, பொங்கலிட்டு வெகு சிறப்பாக வழிபாடுகள் நிகழும். வராத கடன்பாக்கி வந்து சேரவும், மரண பயம் நீங்கவும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டி பலனடைகிறார்கள்.