Published:Updated:

நாரதர் உலா

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

கண்ணகி நீதி சொல்வாளா?

ள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பற்றியும், தமிழக- கேரள எல்லையில் அடிக்கடி சர்ச்சைக்கு உள்ளாகும் மங்கலதேவி கண்ணகி கோயில் பற்றியும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், அறைக்குள் விஜயம் செய்தார் நாரதர்.

நாரதர் உலா

“சில நாளைக்கு முன்னால தேனி, இடுக்கி மாவட்ட கலெக் டர்கள் தலைமையில தேக்கடியில் ஒரு கூட்டம் நடந்தது. போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் காலை 5.00 மணியிலேர்ந்து மாலை 3.00 மணி வரைக்கும்தான் பக்தர்கள் கண்ணகி கோயிலுக்குப் போய் வரலாம்னு அந்தக் கூட்டத்தில் முடிவெடுத் தாங்க. இதுல தமிழர்களுக்கு அதிருப்திதான்!’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘ஏன் இந்த நேரக் கட்டுப்பாடு?’’ என்று கேட்டோம்.

‘‘எல்லாம் கேரள வனத்துறையினரின் கைங்கர்யம்தான். தேனி மாவட்ட எல்லையில் கண்ணகி கோயில் இருந்தாலும் கூடலூர் - பளியன்குடி மலைப்பாதையில் செல்வதில் சிரமம் இருக்கிறது. அதனால், ஜீப்பில் சென்று வர வசதி உள்ள குமுளி மலைப் பாதையைத்தான் பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். அந்தப் பாதை பெரியார் புலிகள் சரணாலயத்தின்கீழ் வருவதாகச் சொல்லி, சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலை 5.00 மணியிலிருந்து மாலை 3.00 மணி வரைக்கும்தான் வரவேண்டும்னு கெடுபிடி செய்கிறார்கள் கேரள வனத்துறையினர். மாலை 5.00 மணிக்குள் அத்தனை பேரும் கீழே இறங்கி வந்துடணும்னு கடுமையான உத்தரவு! அன்னிக்கு மட்டுமே சுமார் 50,000 பக்தர்கள் வருவதால், எல்லோரும் அவசரம் அவசரமாக கோயிலுக்குச் சென்று தரிசித்து வரவேண்டி இருக்கிறது. அதுமட்டுமல்ல, நேரம் இல்லாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏமாற்றத்துடன் பாதியிலேயே திரும்பவேண்டியும் இருக்கிறது’’ என்று ஆதங்கத்துடன் சொன்னார் நாரதர்.

நாரதர் உலா

அவரே தொடர்ந்து, ‘‘பிரச்னை இதோட முடியலை. விழா நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மேகமலை வனவிலங்குகள் சரணாலயத்தைச் சேர்ந்த வனப் பாதுகாவலர்களைவிடப் பலமடங்கு அதிகமாக கேரள வனத்துறை அதிகாரிகள் குவிக்கப்படுகிறார்கள். பாலிதீன் கவர் சோதனை என்கிற பெயரில் அவர்கள் தமிழக பக்தர்களை அதிகமாவே அலைக்கழிப்பதாக தமிழக பக்தர்கள் வருத்தப்படுகிறார்கள். இதுபோன்ற கெடுபிடிகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாக கண்ணகி கோயிலுக்குப் போய் வழிபட்டு வரவேண்டும் என்பதற்காக மங்கலதேவி கண்ணகிக்கு மூன்று தினங்கள் விழா எடுத்து வழிபட தமிழக மக்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கேரள அரசு இதற்கு அனுமதி மறுக்கிறது’’ என்று நாரதர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய வாட்ஸ்அப்பில் ஏதோ தகவல் வந்தது.

எடுத்துப் பார்த்தவர், “மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக் கிறார்களாம். அந்த மனுவில், கண்ணகி கோயிலை மத்திய தொல்பொருள் துறையின் கேரள கிளை எடுத்துக்கொண்டு செப்பனிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்களாம். அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், கேரள வனத்துறையினரின் கெடுபிடிகளில் இருந்து ஓரளவு விடுதலை கிடைக்கும்னு நினைக்கிறார்களாம் அவர்கள். அதுதான் இப்போது வந்திருக்கும் தகவல். ம்… கண்ணகிதான் இதுக்கு ஒரு நீதி வழங்கவேண்டும்’’ என்றார்.
“சரி, கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவம் பற்றி ஏதும் தகவல் உண்டா?’’ என்று கேட்டோம்.

‘‘அந்த வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். சென்ற ஆண்டு வரைக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக கழிவறை வசதி ஏற்படுத்தித் தரவில்லை. இருக்கிற ஒரு சில கழிவறைகளும் மூடிக் கிடக்கின்றன. அதுமட்டுமல்ல, போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லாத தால், திருட்டும், வன்முறையும் பக்தர்களின் பணம், நகைகளைப் பறிப்பதும், பெண்களைச் சீண்டுவதுமான குற்றங்கள் அதிகரித்துள்ளனவாம்’’என்ற நாரதர், “இன்னொரு கொடுமை தெரியுமா… தாங்கள் அரசுக்கு வேண்டியவர்கள்னு ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்தி, லஞ்சம் வாங்கிக்கொண்டு, கள்ளழகரை தரிசிக்க வைகையின் பாலங்களில் இடம் கொடுத்தாங்களாம் சிலர். இதில் ஒரு சில அதிகாரிகளும் அடங்குவாங்கன்னு புலம்புகிறார்கள் பக்தர்கள் சிலர். இந்த ஆண்டாவது இப்படிப்பட்டவர்களின் அத்துமீறல் களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கணும்!’’ என்றார்.

‘‘சரி நாரதரே, திருவல்லிக்கேணி திருக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதாகவும், அதுபற்றி விசாரிச்சுட்டு வந்து சொல்றேன்னு கிளம்பிப் போனீங்களே, விசாரிச்சீங்களா?” என்றோம்.

‘‘நான் போய்ப் பார்த்தபோது அந்தத் திருக் குளத்தைத் தன்னார்வலர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களாலும் மீன்களைத்தான் அப்புறப்படுத்த முடிந்ததே தவிர, மாசுபட்டிருந்த தண்ணீரை முழுமையாகச் சுத்தப்படுத்த முடியவில்லை. மேலும் குளக் கரையைச் சுற்றி மாடுகளின் நடமாட்டம் அதிகமாய் இருக்கிறது. அவற்றின் நடமாட்டத்தாலும், அவை இடும் கழிவுகளாலும் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறதாம். இது குறித்து உரிய அதிகாரிகளிடம் பக்தர்கள் பலப்பல தடவை முறையிட்டும், பலன் ஏதும்  இல்லை எனப் புலம்புகிறார்கள் உள்ளூர் பக்தர்கள்!”

நாரதர் உலா

‘சமீபத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதே, போயிருந்தீரா?’’ எனப் பேச்சை மாற்றினோம், ஏதேனும் நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள மாட்டாரா நாரதர் என்கிற எதிர்பார்ப்பில்.

‘‘போகாமல் இருப்பேனா? பக்தர்கள் பலர் தங்களின்மேல் குடமுழுக்குத் தீர்த்தம் தெளிக்கப் படவில்லை என்று ஆதங்கத்துடன் பேசிக்கொண்டார்கள். போதுமான கழிவறை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. அன்று மாலை சுமார் 1 கி.மீ. தொலைவுக்குத் திரண்டிருந்த பக்தர்களுக்கு சரியான கியூ வசதி ஏற்படுத்தித் தரவில்லை. திருப்பணிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு விழாவைக் காண சரியான பாஸ் வசதி செய்து தரப்படவில்லை. சில ஆதிக்கப் புள்ளி களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது; அவர்களைப் பொறுத்தவரை, வரிசையில் தரிசனம் என்னும் விதியே பின்பற்றப்படவில்லை. இப்படி பல இல்லைகள் இருந்தன’’ என்று சலித்துக் கொண்டார் நாரதர்.

‘‘கயிலைக்கு நிகராகப் போற்றப்படும் மயிலை திருத்தலத்திலா இத்தனை களேபரம்? ஆனால், திருப்பணிகளுக்காக அரசு பல கோடிகளை ஒதுக்கியதாகக் கேள்விப்பட்டோமே?’’

‘‘எல்லாம் அந்த கபாலீஸ்வரனுக்குத்தான் வெளிச்சம்’’ என்று வானத்தை நோக்கிக் கை காட்டிய நாரதர், நாம் அடுத்து எதுவும் கேட்பதற்குள் அந்தர்தியானமாகிவிட்டார்.

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ஈ.ஜெ.நந்தகுமார்