மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 13

சிவமகுடம்  - 13
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 13

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சித்திரைத் திங்களின் பின்பாதியில், வான சஞ்சாரத்தில் உறையூர்  மீதான தமது பார்வையை வியாழ பகவான் விலக்கிக் கொள்ள, அங்காரகனின் ஆதிக்கம் உச்சம் பெற்றுவிட்டிருந்ததை உணர்த்தும்விதமாக, அந்த நாளின் மாலை சந்தியாகாலத்தில், தனது அந்திக் கிரணங்களால் உரகபுரத்தையும், அதை சுற்றிப் பாயும் பொன்னியையும்கூட செந்நிறமாக்கிவிட்டிருந்த பகலவன், மெள்ள மெள்ள தன் செங்கதிர்களைச் சுருக்கி, மேற்கிலும் மேகத் திரையிலுமாக மறைந்துவிட்டிருந்தான்.

அப்போதும் தலைகாட்டாமல், கோடை மழையின் காரணமாக சில நாழிகைகள் கழித்தே முகம் காட்டிய பிறைச் சந்திரன், அன்று உறையூரில் நிகழவிருக்கும் - தமிழக சரித்திரத்தில் மிக முக்கியமான திருப்பத்தைத் தரப்போகும் சம்பவங்களை இன்னும் அருகிலிருந்து காணும் ஆசையுடன், ஆயிரமாயிரம் உருவெடுத்து தரையிறங்கிவிட்டது போல், அந்த நந்தவனத்துச் செடிகொடிகளில் தங்கிய நீர்த் திவலைகளில் பிரதிபலித்து கண்சிமிட்டிக் கொண்டிருந்தான்.

இங்ஙனம், பெரும் மாறுதலைக் காணும் ஆவலுடன் காலம் காத்திருப்பதை அறியாத இளவரசி மானி, நீர்த் திவலைகளில் பிறைகளைக் கண்டதும் பிறைசூடியப் பெருமானையே நேரில் கண்டுவிட்டதுபோல், மனம் நெகிழ்ந்து வாகீசரின் பதிகங்களைப் பாடத் துவங்கினாள். இப்படி நீண்ட நெடுநேரம் பாடிக் களித்தும் அரண்மனை அறைக்குத் திரும்பினாள் இல்லை; நந்தவனத்தில் பூத்துக் குலுங்கிய இரவு மலர்களின் அழகில் மனதைப் பறிகொடுத்தவள், மெய்ம்மறந்து அவற்றை ரசிப்பதிலேயே நேரத்தைப் போக்கினாள். அதே நிலையில் ஒரு செடியின் அருகில் சென்று, அதன் மலர்களில் ஒன்றை பறிக்க முற்பட்டபோதுதான், அவளுடைய பின்புறத்தில் இருந்த புதரை விலக்கிக் கொண்டு, கரத்தில் குறுவாளுடன் அவளை நோக்கிப் பாய்ந்தது ஓர் உருவம்.

சட்டென்று சுதாரித்து விலகிய மானி, குறுவாளைப் பற்றியிருந்த கையைப் பிடித்து வளைத்து அந்த உருவத்தை அந்தரத்தில் ஒரு சுழற்று சுழற்றி தரையில் வீசினாள். எதிர்பாராத அந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன உருவம், பதில் தாக்குதல் நிகழ்த்தியதா என்றால், இல்லை! தரையில் கை  ஊன்றி மெள்ள எழுந்து அமர்ந்த உருவம், தனது வலது முழங்கையிலும் காலிலும் ஏற்பட்ட சிராய்ப்பு களால் உண்டான எரிச்சலைத் தாங்காமல் சிறிது சிணுங்கவும் செய்தது.

சிவமகுடம்  - 13

‘‘அப்பப்பா... யானை பலம் உங்களுக்கு இளவரசியாரே!’’ என்று கூறியபடி எழுந்து நிற்கவும் செய்தது.  

‘‘அடி பேதையே! உன்னைத் தூக்கி வீச யானையின் பலம் தேவையில்லை பொங்கி. என் கையில் இருக்கும் இந்தப் பூவை போலதான் நீயும்’’ என்று கூறி நகைத்தாள் மானி.

‘‘ஒஹோ... அப்படியென்றால், உங்கள் மீது பாயும்போதே, நான் யாரென்பதை யூகித்துவிட்டீர் களா? இத்தனைக்கும், இன்னும் நான் என் முகக் கவசத்தைக்கூட கழற்றவில்லையே! பிறகு எப்படி கண்டுபிடித்தீர்கள்?’’ வியப்புடன் கேட்டாள் பொங்கி.

அவளை நெருங்கி ஆதரவுடன் அணைத்துக் கொண்டு, பொங்கியின் முகக் கவசத்தின் மீது பாசத்துடன் இதழ் பதித்த மானி, தானே அதைக் கழற்றியும் விட்டாள். பிறகு கூறினாள். ‘‘பொங்கி!

உன்னை இனம் காண்பது அவ்வளவு கடினமா என்ன? எப்போதும் நீ சூடிக்கொள்ளும் தாழம்பூவின் நறுமணம் போதாதா, வந்திருப்பது பொங்கிதான் என்பதை அறிந்துகொள்ள!’’ என்ற மானி மீண்டும் சிரித்தாள்.

‘‘அதெப்படி? காலையில் நான் சூடிக் கொண்ட தாழம்பூ, எப்போதோ வாடி வதங்கிவிட்டது. அதன் நறுமணம் இன்னுமா நீடிக்கும்? அப்படியே மணம் வீசினாலும், அது இந்தத் தோட்டத்துப் பூக்களின் மணத்துடன் போட்டிபோட முடியுமா?’’

அவளை மேற்கொண்டு பேசவிடாமல் இடை மறித்தாள் மானி. ‘‘பொங்கி... பொங்கி! தாழம்பூ மட்டுமல்ல... எப்போதும் உன் இடையில் காப்பாக முடிந்து வைத்திருப்பாயே, சீரலைவாய் வேலவனின் பிரசாத விபூதி! மரிக்கொழுந்து கலந்த அதன் மணமும் உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது’’ என்றவள், ‘‘அதுசரி! தாங்கள் முன்னறிவிப்பு எதுவுமின்றி நந்தவனத்துக்குள் புகுந்து, குறுவாளால் என்னைக் கொல்ல பாய்ந்தது ஏனோ?’’ என்று கேட்டாள் குறுநகையுடன்.

அவள் தன்னை நகைக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட பொங்கி, ‘‘அதுவா..? இளவரசியாரின் முன்னெச்சரிக்கை உணர்வை யும், திடீர் ஆபத்தை எதிர்கொள்ளும் சாமர்த்தியத்தையும் பதம் பார்க்க’’ என்றாள் நகைப்பும் வேடிக்கையுமாக. மானியும் இணைந்து கொண்டாள் பொங்கியின் நகைப்பில்!

தோழிகள் இருவரும் ஒருவாறு சிரித்து முடித்தபிறகு, பொங்கியே முதலில் பேசத் துவங்கினாள். இப்போது அவளுடைய பேச்சில்,  மரியாதை நீங்கி, தன் அணுக்கத் தோழியிடம் காட்டும் பரிவும் உரிமையும் தொனித்தது. ‘‘மானி! உன்னைப் பற்றிய பேச்சு மதுரை மாநகர் வரையில் பரவிக் கிடக்கிறது. நான்குபேரை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு நீ பாண்டிநாடு சென்று மீண்டதை, பெரும் வியப்போடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஆனால்...’’

‘‘என்ன ஆனால்... ஏன் தயங்குகிறாய் பொங்கி?’’

‘‘ஆனாலும் உனக்கு இவ்வளவு அசட்டுத் தைரியம் கூடாது’’

‘‘அசட்டு தைரியமா?’’

‘‘ஆம்! ஓர் இளவரசி, நான்கு வீரர்களை மட்டும் துணைக்கு அழைத்துக் கொண்டு, பெரும் போருக்குக் காத்திருக்கும் பகை வர் தேசத்துக்குள் ஒற்றறியச் செல்வதை வேறு எப்படிச் சொல்வதாம்?’’
இதைக் கேட்டதும் பெரிதாகச் சிரித்தாள் மானி. அதைக் கண்டு ‘‘இதில் நகைப்பதற்கு என்ன இருக்கிறது?’’ எனச் சீறினாள் பொங்கி.

‘‘ஏன் பொங்கி... உளவு பார்க்கச் செல்லும் வீரர்கள் எல் லாம் பெரும் படையை  அழைத் துக் கொண்டா செல்வார்கள்?!’’

‘‘அவர்கள் நிலை வேறு; உன் நிலை வேறு அல்லவா? இளவரசி பகைவரின் கையில் சிக்கிக்கொண்டால், தேசமே சிக்கிக்கொண் டதற்குச் சமம் அல்லவா?’’

‘‘உண்மைதான். ஆனால், நம் பகைவர் வேறுபட்டவர். அவரது வியூகமும் வேறுபட்டது. அதனால்தான் நானே நேரில் சென்றுவர முடிவெடுத்தேன்’’ என்றவள், ‘‘ஏன் பொங்கி என்னை நினைத்து பெரிதும் பயந்துவிட்டாயா?’’ என்றும் கேட்டாள்.

‘‘பயப்படாமல் என்ன செய்வது?’’

‘‘பொங்கி! இந்தப் பெயரை வைத்துக்கொண்டு நீ அச்சத்துக்கு ஆளாகலாமா? * ‘பொங்கி’ என்பது உன் குலதெய்வத்தின் பெயர் அல்லவா? வேலவனின் மணவாட்டியான வள்ளிக் குறத்தியின் அம்சமாக, மலைப்புறங்களை காத்து நிற்கும் அந்ததேவி, உன்னைக் காவல் செய்யமாட்டாளா என்ன?’’ எனக் கேட்ட மானியை இடைமறித்தாள் பொங்கி.

‘‘மானி! என்னைக் குறித்த அச்சம் என்றைக்கும் எனக்கு இருந்ததில்லை. என் அச்சம் எல்லாம் உன்னைப் பற்றித்தான். எப்படி ஊடுறுவினாய் பாண்டிய தேசத்தை? அதற்கான அவசர அவசியம் என்ன நேர்ந்துவிட்டது? சோழர் பிரான் உன்னை எப்படி அனுமதித்தார்?’’

‘‘தெரிந்தால் அனுமதிப்பாரா என் தந்தை?!’’

‘‘பிறகு?’’

‘‘அவர் அறியாமல்தான் சென்று வந்தேன். நான் திரும்பிய பிறகே விஷயத்தை விரிவாக விளக்கினேன் முதலில் கடிந்துகொண்டார். பிறகு புரிந்துகொண்டார். உனக்கும் எல்லாவற்றையும் விளக்கி கூறுகிறேன்; நீயும் என்னைப் புரிந்துகொள்வாய்’’ என்ற மானி, நடந்தது அனைத்தையும் விவரித் தாள் தோழியிடம்.

‘‘நாகைக் காரோணத்துக்கு வழக்கம்போல் கடலாடச் சென் றேன். அங்கே நம் நலம் சார்ந்த சில வணிகர்கள் மூலம், பாண்டியர் பெரும்போருக்குச் சன்னத்தமாகும் செய்தியை அறிந்தேன். அத்துடன், பாண்டியர் ஒற்றர்கள் சிலர் மாறுவேடத்தில், நாகையின் பட்டினப்பாக்கத்து குடிசை ஒன்றில் உறைந்திருப்பதையும் அறிந்தேன். சற்றும் தாமதிக்காமல், போர் குறித்த தகவலை மட்டும்
தந்தைக்கு ஓலை அனுப்பிவிட்டு, நமது உபதளபதியும் எனது மெய்க்காவலருமான கோச்செங் கணனுடனும் அவனது வீரர்கள் சிலருடனும் சென்று ஒற்றர்களைச் சிறைப்பிடித்தேன். அதில் ஒருவன் முக்கிய பதவி வகிப்பவன். அவனிடம் இருந்து பாண்டியரின் முத்திரை மோதிரத் தைக் கைப்பற்றினேன். அது, பாண்டிய தேசத்தில் நான் தங்கு தடையின்றி உலவ உதவியது.
அப்புறம் என்ன? நாங்கள் பகைவர் தேசத்துக்குள் புகுந் தோம். மதுரையில் பிரிந்தோம். கோச்செங்கண் ரிஷபகிரிக்குச் செல்ல, நான் சீரலைவாய் வரை சென்று, அங்கே பாண்டியரின் மீது அதிருப்தியில் இருக்கும் பரதவரின் ஆதரவைப் பெற்றுத் திரும்பினேன்’’ என்று விவரித்து முடித்த மானி, உறையூர் திரும்பிய பிறகு, தான் வகுத்த இரண்டு திட்டங்களைக் குறித்தும், அவற்றின் அங்கமான ‘பூ வியூகம்’ குறித்தும், தனது அந்த திட்டங்கள் இரண்டும் தோல்வியில் முடிந்தால், மூன்றாவது திட்டம் ஒன்றும் உண்டு என்றும் தோழியிடம் பகிர்ந்துகொண்டாள். மூன்றாவது திட்டம் குறித்து பொங்கி கேட்டபோது, அதுபற்றி விவரிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டாள் மானி.

‘‘எல்லாம் எம்பெருமான் செயல்’’ என்று பெரு மூச்செறிந்தாள் பொங்கி.

‘‘ஆமாம், அவன் செயல்தான்’’ என்று ஆமோதித்த மானி, ‘‘உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்...’’ என்றவள், அந்த கதையையும் சொல்லத் துவங்கினாள்.

‘‘சோழ மன்னர் ஒருவர் என்னைப் போலவே சிவபக்தர். என்னைப் போலவே அவரும் மதுரையம்பதிக்குச் செல்ல ஆசைப்பட்டார். ஆனால், அவரது நோக்கம் வேறு. மதுரையில் அருளும் சொக்கநாதரை ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. ஆனால், அப்போதும் பாண்டியர்களுடன் நமக்குப் பகைதான். இந்த நிலையில் அவர்களது எல்லைக் குள் நுழைவது எங்ஙனம் என்று திகைத்தார் மன்னர். ஒருநாள் அவர் கனவில் சித்தராகத் தோன்றிய எம்பெருமான், மதுரைக்கு வரும்படி ஆணையிட்டார்.

சிவமகுடம்  - 13

மன்னரும் ஓரிரவில் தனியொரு வனாக மாறுவேடத்தில் மதுரையின் எல்லையை அடைந்தார். வைகையில் பெருவெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. அப்போது சித்தனாக வந்த சிவனார், வைகையை எளிதில் தாண்ட அருள் செய்ததுடன், ஆலவாய் கோயிலுக்கும் சோழ மன்னரை அழைத்துச் சென்றார். கோயிலின் கதவங்கள் தாமே திறந்துகொள்ள, சோழர் மனம் நிறையும்படி இறை தரிசனமும் செய்துவைத்தார் சித்தர். அத்துடன்விட்டாரா...?’’ எனக்கூறி மானி சற்று நிறுத்த, ‘‘வேறென்ன அற்புதம் செய்தார்?’’ என்று ஆவலுடன் கேட்டாள் பொங்கி.

‘‘சோழனை வடக்கு வாயில் வழியாக வெளியேறச் செய்து, வைகை வரையிலும் வந்து வழியனுப்பியும் வைத்தார். அத்துடன், மீண்டும் கோயிலுக்குச் சென்று வடக்குப்புறக் கதவை மூடி ரிஷப முத்திரை பதித்து மறைந்தார். மறுநாள் காலையில் விஷயம் அறிந்து கோயிலுக்கு ஓடோடி வந்த பாண்டியன், வடக்குப் புறத்தில் ரிஷப முத்திரையைக் கண்டு திகைத்தான். அன்றிரவு அவன் கனவிலும் தோன்றி, நடந்ததை விளக்கி மறைந்தது சிவப்   பரம்பொருள்’’

மானி கதையைக் கூறி முடிக்க, ‘‘அப்பப்பா! எந்தை சிவனாரின் திருவிளையாடலுக்கு நிகரேதும் இல்லை!’’ என்று சிலிர்த்து வணங்கினாள் பொங்கி.

‘‘ஆமாம் பொங்கி! நமசிவாயனின் அடியவருக்கு என்றைக்குமே ஆபத்தில்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கதையைச் சொன்னேன்’’ என்று மானி பேசிக்கொண்டிருக்கும்போதே, மதிலுக்கு வெளிப் புறத்தில் எச்சரிக்கை தாரைகள் ஒலிக்கும் சத்தம். தொடர்ந்து நந்தவனத்து வாயிலிலும், எவரோ  உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்கும் விதமாக சிறு கொம்பு வாத்தியம் முழங்கியது.

‘‘யாரங்கே... உள்ளே வரலாம்’’ என்று மானி உத்தரவையடுத்து பதற்றத்துடன் ஓடோடி வந்த காவலன் ஒருவன், ‘‘தாயே! அங்காடி வீதியில் திடுமென கலகம் மூண்டிருக்கிறது. எவ்வளவு முயன்றும் அடங்க மறுக்கிறார்கள் வணிகர்கள். அவர்கள் ஆயுதபாணிகளாக வேறு இருக்கிறார்கள். தங்களுக்குத் தகவல் சொல்லும்படி மன்னர் உத்தரவு’’ என்று மூச்சிரைக்கக் கூறி முடித்தான்.
‘‘திடுமென கலகம் வெடிக்க என்ன காரணம்?’’ என்று பொங்கி கேட்க, கண்களில் கனல் தெறிக்க பதில் கூறினாள் மானி:

‘‘கலகம் அல்ல பொங்கி. போர் மூண்டுவிட்டது!’’

அதேநேரம்... முரடன் அச்சுதனும் அவன் சகாக்களும் ஆபத்தில் சிக்கிக்கொண்ட ஏரிக்கரைக்கு சற்றுத் தள்ளி, வனத்தின் நடுவில் இருந்த சிவாலயத்தில், எவருக்காகவோ காத்திருந்தான் பரமேசுவரப்பட்டரின் பிரதான சீடன்.

சற்று நேரத்தில், அவன் யாருக்காகக் காத்திருந் தானோ அவன் வந்துசேர்ந்தான். அவன் தந்த நறுக்கோலையை வாங்கிப் பார்த்த பிரதம சீடனுக்குப் பேரதிர்ச்சி! அந்த ஓலையில் எந்தத் தகவலும் இல்லை; தப்பும்தவறுமாகக் காணப்பட்ட சில பாடல் வரிகளைத் தவிர!
- மகுடம் சூடுவோம்...

ஆலுவிளக்கு அற்புதம்!

வைக்கம் மகாதேவர் கோயிலில் மூலவருக்குப் பின்புறம் ஒரு சிறிய கதவு எப்போதும் அடைக்கப் பட்டிருக்கும். அங்கே பார்வதி தேவி இருப்பதாக நம்பப்படுகிறது. எதிரே ஒரு ஆலு விளக்கு. இவ்விளக்கில் எண்ணெய் ஊற்றும் குழிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இவ்விளக்கில் ஒருவரே எண்ணெய் ஊற்றி வழிபடுவது பிரத்யேக வழிபாடாகும். பார்வதியே விளக்கு வடிவில் தரிசனம் தருவதாக ஐதீகம்.

- எஸ்.மாரிமுத்து, சென்னை-64