திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

பாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்

பாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்
பிரீமியம் ஸ்டோரி
News
பாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்

ம.மாரிமுத்து

தேனி - போடிநாயக்கனூர் சாலையில், தேனியில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் தீர்த்தத்தொட்டி என்னும் இடத்தில் கொட்டக்குடி ஆற்றின்கரையில் அமைந்திருக்கிறது சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில்.

ஸ்தல வரலாறு

சுமார் 600 வருடங்களுக்கு முன்னர், தீர்த்தத்தொட்டி அருகேயுள்ள கோடாங்கிபட்டி எனும் ஊரில் இருந்த பெரியவர் ஒருவர் உடல்நலம் குன்றியிருந்தார். தான் இறந்துவிட்டால் தன்னுடைய குடும்பம் ஆதரவு இல்லாமல் போய்விடுமே என்று வருந்தியவர், தனக்குப் பூரண உடல்நலம் கிடைக்கவேண்டும் என்று சிவபெருமானிடம் பிரார்த்தித்துக் கொண்டார். ஒருநாள் இரவு அந்தப் பெரியவரின் கனவில் தோன்றிய சித்திரகுப்தர், தனக்கு ஒரு கோயில் கட்டினால் ஆயுள் பலம் கூடும் என்றும், கோயிலுக்கு வந்து என்னை வழிபடுபவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவேன் என்றும் கூறினார்.

பாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்

தன்படியே அந்தப் பெரியவர் ஊர்மக்களின் உதவியுடன் இந்தக் கோயிலைக் கட்டியதாக ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

சித்திரகுப்தர் தோன்றிய வரலாறு

மனிதர்களின் ஆயுட்காலம் முடிந்ததும் அவர்களின் உயிரைக் கவரும் யமதர்மன், அவர்களுடைய பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நரகமோ அல்லது சொர்க்கமோ அருள்வான். ஆனால், அனைத்து மனிதர்களின் பாவ புண்ணியங்களைத் தன்னால் மட்டுமே கணக்கிடுவது கடினமாக இருந்ததால், சிவபெருமானிடம் சென்று தனக்கு உதவியாக ஒருவரைத் தந்து அருளவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

யமதர்மனின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் அம்பிகையை அர்த்தபுஷ்டி யுடன் பார்த்தார். பார்வையின் பொருள் புரிந்த அம்பிகை, தங்கப்பலகை ஒன்றில் ஒரு சித்திரம் வரைந்தார். அந்தச் சித்திரத்துக்கு சிவபெருமான் உயிர் கொடுத்து காமதேனுவின் வயிற்றில் பிறக்கும்படி செய்தார். அப்படி காமதேனுவின் வயிற்றில் இருந்து சித்திரகுப்தன் பிறந்ததினம் தான் ‘சித்திரை மாத பௌர்ணமி’ ஆகும். சித்திரத்தில் இருந்து சித்திரை மாத பௌர்ணமியில் தோன்றியதால் சித்திரகுப்தன் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை, சித்திரபுத்திரன் என்றும் கூறுவர்.

பாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்

சிவனின் அருளால் காமதேனுவின் வயிற்றில் பிறந்த சித்திரகுப்தனை வளர்க்கும் பொறுப்பை இந்திரன் ஏற்றதால், சித்திரகுப்தரை இந்திரனின் பிள்ளை யாகவும் கூறுவர்.  உரிய காலத்தில் சிவபெருமானின் கட்டளைப்படி, யமதர்மனுக்கு உதவியாக உயிர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுக்கும் பொறுப்பை ஏற்றார் சித்திரகுப்தன். இவருக்கு, காஞ்சிபுரத்திலும்
இந்தத் தலத்திலும் மட்டும்தான் தனிக்கோயில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமியில் இந்தத் தலத்தில் விழா நடக்கிறது. அன்றைய தினம் விரதமிருந்து, இந்தக் கோயிலுக்கு வந்து சித்திரகுப்தரை வேண்டி வணங்கினால் மாங்கல்ய பலம் பெருகும்; புண்ணியங்கள் பெருகும்படியான வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

 சித்ரா பெளர்ணமியன்று எண்ணெய் தேய்த்து, சித்திரகுப்த நாயனாரை வணங்கிக்கொண்டு குளித்தால், பக்தர்களின் பாவக் கணக்கு குறையும் என்கிறார்கள் பக்தர்கள். திருமண வரம் வேண்டுபவர்கள் 3 பெளர்ணமி மற்றும் 3 வெள்ளிக்கிழமைகளில் தொடர்ச்சியாக இந்தக் கோயிலுக்கு வந்து ‘சித்திர குப்த நாயனாரை’ வணங்கிச் சென்றால் திருமணம் எளிதில் கைகூடும். இந்தக் கோயிலுக்கு வந்து துளசி மற்றும் எலுமிச்சை கலந்த தீர்த்தத்தைப் பெற்றுச் சென்று, மரண வேதனையில் இருப்பவருக்குக் கொடுத்தால், மரண வேதனை நீங்கும்.

பாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயிலில் சித்திரபுத்திர நாயனாரைத் தரிசிப்பதுடன், பரிவார தெய்வங்களாக சித்திரபுத்திர நாயனார் சகோதரியாக ஏற்ற சீலைக்காரியம்மன், விநாயகர், சுப்ரமணியர், நாகம்மாள் ஆகியோரும் அருள்புரிகின்றனர்.

பக்தர்களின் கவனத்துக்கு...

ஸ்வாமி: அருள்மிகு சித்திரபுத்திர நாயனார்.

தலம் இருப்பிடம்: தீர்த்தத் தொட்டி - கோடாங்கிபட்டி ஊர் எல்லை.

ஸ்தல விருட்சம்: வன்னி மரம்

பிரார்த்தனைக்கு ஏற்ற நாட்கள்: ஒவ்வொரு மாதமும் வரும் சித்திரை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி நாள்களில் இங்கு வந்து வழிபட்டால், உடல் ஆரோக்கியத்துடன் செய்த பாவங்களும் நீங்கப் பெறலாம்.

எப்படிச் செல்வது: தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் ஏறி, தீர்த்தத்தொட்டி என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், அருகிலேயே அமைந்திருக்கிறது கோயில்.

நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் அதிகாலை 5.00 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரை தொடர்ந்து நடைதிறந்திருக்கும்.

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

லட்சுமி அருள்!

பாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்

வீட்டின் வாயிலில் லட்சுமி ஐந்து வடிவங்களில் வீற்றிருக்கின்றாள். தலைவாயில்களை அமைக்கும் அளவுகளில் பஞ்சலட்சுமி லட்சணம் என்ற அளவு உள்ளது. விழா நாட்களில் தலைவாயிலில் மாவிலைத் தோரணம் கட்டுதல், பெரிய மாலைகளை அணிவித்தல் முதலியவற்றால் லட்சுமி மகிழ்ந்து அருள்புரிகிறாள்

- கே.சீதா, கும்பகோணம்