
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
லக்னத்தில் இருந்து ஏழாம் வீடு, ஆண் ஜாதகத்துக்கு வரப் போகும் மனைவியின் தரத்தையும், பெண் ஜாதகத்துக்கு வரப் போகும் கணவனின் தரத்தையும் சுட்டிக்காட்டும். நாலாம் வீடு அவனது மகிழ்ச்சியை சுட்டிக் காட்டும். அத்துடன் நிற்காமல் லக்னத்தில் இருந்து நாலாம் வீட்டின் 4 மற்றும் 7... அதாவது, நான்கின் நான்கான ‘7’ அந்த மகிழ்ச்சியின் நிறைவை வரையறுக்கும். (இதில், நான்கின் நான்கு என்றதும் 8 என்று எண்ணக் கூடாது. 4-யும் சேர்த்து எண்ணும்போது 4, 5, 6, 7 என்று எண்ணிக்கை 7-ல் முடிந்து விடும்).
அதேபோல் நான்கின் ஏழான ‘10’-ம் வீடு, அவனது வாழ்வுக்கு ஆதாரமான வேளை (கர்மம்), வேலையின் தரத்தை வரையறுக்கும். பத்தின் பத்து... அதாவது 7-ம் வீடு அவனது வேலையில் ஈட்டிய ஆதாயத்தின் அளவை நிறைவு செய்யும். இதிலும் முன்பு சொன்னது போலவே 10-ம் வீட்டை ஒன்று என்று வைத்து எண்ணினால் 7-ம் வீட்டோடு எண்ணிக்கை முடிந்துவிடும். இதை ஜோதிடத்தில் ‘பாவத் பாவம்’ என்று சொல்வார்கள்.
நாம் விரும்பும் பாவத்தை லக்னமாக வைத்துப் பார்க்கவேண்டும். ஒருவனது வேலையை (கர்மத்தை) எடைபோட அவனது லக்னத்திலிருந்து 10-ம் வீட்டை ஆராய வேண்டும். அதன்பிறகு,
10-ம் வீட்டின் பத்தாம் வீட்டையும் (7-ம் வீடு) இணைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் ஆராய்ச்சி நிறைவை எட்டும். ஒருவனது ஆயுளை நிர்ணயிக்க 8-ம் வீட்டை ஆராய வேண்டும். ‘பாவாத்பாவம்’ என்கிற நோக்கில் எட்டின் எட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். எட்டின் எட்டு என்பது லக்னத்தில் இருந்து 3-வது வீடு. நெருடல் இல்லாமல் ஆயுளை வரையறுக்க, அதன் எட்டான மூன்றாம் வீட்டையும் ஆய்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எட்டாம் வீட்டின் பன்னிரண்டு-7. மூன்றாம் வீட்டின் பன்னிரண்டு 2-ம் வீடு. இவை இரண்டும் அவனது மாரக ஸ்தானம். அவனுக்கு ஆயுள் முடிவைச் சுட்டிக்காட்டும் இடம் என்று பாவாத்பாவத்தின் பெருமையை சுட்டிக்காட்டும் ஜோதிடம் (அஷ்டமம் ஹி ஆயுஷ: ஸ்தானம். அஷ்டமாத் அஷ்டமம் ச யத். தயோ ரபிவ்யயம் ஸ்தானம் மாரகஸ்தானமுச்யதே).
லக்னத்தில் இருந்து 7-ம் வீடு மனைவியின் ஸ்தானம். அதன் ஏழு அதாவது லக்னமானது (ஏழின் ஏழு) அவள் சுவைக்கும் தாம்பத்தியத்தின் அளவைச் சொல்லும். அதுபோல் லக்னத்தில் இருந்து 7-ம் வீடு (பெண் ஜாதகத்தில் கணவன் ஸ்தானம்) அதன் ஏழு லக்னம். அந்த ஏழின் ஏழான லக்னம், மனைவியிடமிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை வரையறுக்கும். இப்படி, நான்கின் பாவாத்பாவம்-7, பத்தின் பாவாத்பாவம்-7, லக்னத்தின் பாவாத்பாவம் லக்னம், 7-ன் பாவாத்பாவம் 7 - இவைகளையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஜோதிடம் சொல்லும்.
ஆக 7-ம் வீடு மகிழ்ச்சியையும் (நான்கின் நான்கு) சொல்லும், வேலையையும் (பத்துக்கு பத்து) சொல்லும், கணவன் - மனைவி குறித்தும் (7-க்கு ஏழு) சொல்லும், ஆயுளின் முடிவையும் (எட்டின் 12-7) சொல்லும். ஏழாம் பாவத்தின் செழிப்புக்கு நான்கின் நான்கு தேவைப்படும். அதற்கு ஒத்துழைக்கும் பொருளாதாரத்துக்கு பத்தின் பத்து தேவைப்படும். தாம்பத்தியம் சிறக்க (ஏழின் ஏழு) தேவைப்படும் திருமணம், தாம்பத்திய சுகம், கணவன் - மனைவி என்கிற அந்தஸ்து, அவர்களது சுகம், துக்கம், பிரிவைச் சுட்டிக்காட்டும் காலம் (இழப்பு) ஆகிய அத்தனையும் 7-ம் வீட்டில் இணைந்திருப்பதை கவனிக்கச் சொல்லும் ஜோதிடம்.
10-ம் வீட்டில் சுக்ரன் இருக்கிறான்; பொருளாதாரம் நிரம்பி வழியும். 7-ல் குரு இருக்கிறான்; தாம்பத்யத்தின் சுவை நிறைவை எட்டிவிடும். 4-ம் வீடு பலமாக அமைந்திருக்கிறது; இறக்கும் வரை மகிழ்ச்சி குன்றாமல் இருக்கும் என்றெல்லாம் விளக்கி பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது. உள்ளதை உள்ளபடி ஆராய்ந்து சொல்லாமல் ஜோதிடத்தின் தரத்தை பின்னுக்குத் தள்ள முற்படக்கூடாது. சூரியனும், சந்திரனும், மற்ற கிரகங்களும் இயற்கையின் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு சளைக்காமல் ஆகாயத்தில் பவனி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் தரத்தை சீர்தூக்கிப் பார்த்து (ஷட்பலம், ஷோடசபலம்) வருங் காலத்தை உணர்த்த வேண்டும். கட்டத்தில் இருக்கும் இடத்தைப் பார்த்து ஆராய்ந்து சொல்லவேண்டும்.
எளிமையான முறையில் பலன் சொல்லும் திறமை யாருக்கும் இருக்காது. முயற்சி எடுத்துக்கொண்டு நன்றாக ஆராய்ந்துதான் சொல்லவேண்டும். வருங்காலம் மனித சிந்தனைக்கு எட்டாத விஷயம். அதை எட்டிப்பிடிக்க கிரகங்களின் ஒத்துழைப்பு அவசியம். மாறுபட்ட இயல்புகளை உடைய கிரகங்கள், மாறுபட்ட பலனை வெளியிடும். அவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு பிரபலங்களுக்கு உண்டு.
ஆண் ஜாதகத்தில் 7-ல் சுக்ரன் இருந்தால் தாம்பத்தியத்தை சுவைப்பதில் அளவு கடந்த ஆர்வம் இருக்கும். புதன் இருந்தால் மாற்றான் மனைவியைத் தேடும் எண்ணம் இருக்கும். குரு இருந்தால், தனது மனைவியோடு முழு மகிழ்ச்சியை எட்டிவிடுவதால் ஏகபத்தினி விரதனாக மாறுவான். சனி இருந்தால் தரம் தாழ்ந்த பெண்மணிகளிடம் விருப்பம் ஏற்படும். ஏழுக்கு உடையவன் சுபனாக இருந்தால், நல்ல மனைவியோடு இணைந்து தாம்பத்தியத்தை சுவைத்து மகிழ்வான் என்கிறது ஜோதிடம் (சுக்ரே களத்ரேது அதி காமுக: ஸ்யாத். புதே அன்யதாரே,.....).
7-ல் இருக்கும் கிரகம், 7-க்கு உடையவன் இந்த இரண்டையும் ஆராயவேண்டும். 7-ல் அமர்ந்த கிரகங்கள், 7-ஐ பார்க்கும் கிரகங்கள்... அவற்றில் சுப கிரகங்களும் அசுப கிரகங்களும் இருக்கும். அவற்றின் தரத்தை அறிந்து பலன் சொல்ல வேண்டும். அமர்ந்த கிரகங்களும், பார்க்கும் கிரகங்களும் விகிதாசாரப்படி அதனதன் திறமையை வைத்துப் பலனளித்துவிடும். எந்த கிரகமும் மற்ற கிரகத்தின் பலனை முடக்கிவிடாது. சுபனும் அசுபனும் சேர்ந்து இருந்தாலும், சுபனும் அசுபனும் சேர்ந்து பார்த்தாலும் விகிதாசாரப்படி (ப்ரபோர்ஷனாக) பலனை அளித்துவிடும்.

அறுசுவையின் இணைப்பு தனிச்சுவையை உருவாக்கி உணர வைக்கும். ஒரு சுவையை தூக்கலாக உணர்ந்தால், மற்ற சுவைகள் அழிந்துவிட்டதாக அர்த்தம் ஆகாது. கசப்பான மருந்தை இனிப்போடு கலந்து குழந்தைகளுக்கு ஊட்டும்போது, மருந்தின் தரம் மங்கிப்போவதில்லை (குடசிஹ்விகாந்யாயேன). அதேவேளையில் 7-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அமர்ந்த கிரகங்களின் பலன்களும், பார்க்கும் கிரகங்களின் பலன்களும் உணரப்பட்டாலும், 7-க்கு உடையவனின் பலனுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதத்தில் மாறுபாட்டை ஏற்றுக் கொண்டுவிடும். பாவாதிபதி (வீட்டுக்கு உடையவன்) பாவத் தில் இருந்தாலோ (வீட்டில் அமர்ந்தாலோ), பாவாதிபதி ஷட்பலம் பெற்று வலுப்பெற்று இருந்தாலோ, அந்த பாவம் செழிப்பை எட்டிவிடும் என்று ஜோதிடம் கூறும்.
பாவத்தில் இல்லாமலும், வலுவிழந்தும் பாவாதிபதி இருந்தால் அமர்ந்த கிரகங் களும், பார்க்கும் கிரகங்களும் தத்தமது தகுதிக்கு உகந்த பலனை நடைமுறைப்படுத்தும். வீட்டுக்காரி அல்லது வீட்டுக் காரன் இல்லாத வேளையில், குழந்தைகளின் ஆரவாரம் மேலோங்கியிருக்கும். ஆசான் இல்லாத வகுப்பறையில் மாணவர்களின் ஆரவாரம் ஆட்சி செலுத்தும்!
மேஷம் அல்லது விருச்சிகம் 7-ம் வீடாக அமைந்து (அதாவது துலா லக்னத்துக்கும் விருஷப லக்னத்துக்கும்), செவ்வாய் மேஷத்திலும், விருச்சிகத்திலும் அமர்ந்திருந்தால் அந்த வீட்டின் பலன் சுபமாக மாறிவிடும். செவ்வாய் அசுபக் கிரகமாக இருந்தாலும் தனது வீட்டுக்கு அசுபத்தை ஏற்படுத்தத் துணியமாட்டான். திருடன் தனது வீட்டில் களவாடமாட்டான்; அந்த வீட்டுப் பொருளுக்குப் பாதுகாவலனாக மாறிவிடுவான். அசுப கிரகத் துக்கு இருக்கும் சுறுசுறுப்பும், முன்பின் யோசனை இன்றி சடுதியில் செயல்படும் இயல்பும் சாதகமாகவே மாறிவிடும். வலுப்பெற்ற வீட்டுக்கு உடையவனின் பலன், வீட்டில் அமர்ந்த கிரகங்களுடைய பலனையும் பார்க்கும் கிரகங்களுடைய பலனையும் தனது பலனுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் பயன்பட வைப்பான். பலன் குன்றியிருந்தால், மற்ற கிரகங்களின் பலன் வலுப் பெற்று பாவாதிபதியின் பலனை நீர்த்துப்போக வைத்துவிடும்.

7-ல் செவ்வாய் அமர்ந்து பாவாதிபதியான சுப கிரகங்களில் ஒன்று வலுப்பெற்று இருந்தால், அமர்ந்த செவ்வாய் தனது பலனை நடைமுறைப்படுத்தினாலும் பயனற்றதாகச் செய்துவிடுவான். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி- இந்த ஐந்து கிரகங்களுக்கும் ராசிச் சக்கரத்தில் இரண்டு இரண்டு வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கும். அதில் புதனும், சுக்ரனும், குருவும் சுபக் கிரகங்கள். புதனும் சுக்ரனும் அசுபக் கிரக சேர்க்கையில் அசுபராக மாறிவிடுவர். குரு எந்த கிரகத்தின் சேர்க்கையாலும் தனது இயல்பை மாற்றிக்கொள்ளமாட்டான். மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் - இந்த ராசிகளுக்கு உடையவர்கள் 7-ம் பாவமாக அமைந்து அதில் தென்பட்டால், அந்த பாவம் கெடுதலைச் சந்திக்காது. அசுப கிரகமானாலும் நல்ல பலனை ஏற்படுத்திவிடும்.
புதன், சுக்ரன், சந்திரன், குரு ஆகியோர் 7-ம் பாவமாக அமைந்த நிலையில், தனது வீட்டிலேயே தென்பட்டால், அந்த 7-ம் பாவம் சிறப்புப் பெற்றுவிடும். அதியுச்சம், உச்சம் மூல த்ரிகோணம், ஸ்வக்ஷேத்ரம், பந்துக்ஷேத்திரம் போன்ற பாகுபாட்டில் வலுப்பெற்றால், பாவத்தின் பலனை நிறைவோடு உணரவைப்பார்கள். அதிநீசம், நீசம், சத்ருக்ஷேத்திரம், மெளட்யம், அஸ்தமனம் போன்ற பாகுபாட்டில் வலுவிழந்தால் பாவத்தின் பலனை உணரமுடியாமல் செய்துவிடுவார்கள். ஆக, கிரகங்கள் பலனை இறுதி செய்யவில்லை; கிரகத்தின் தரமே பலனை இறுதி செய்யவைக்கிறது. அதுபோல், லக்னாதிபதி வலுப்பெற்று 7-ல் அமர்ந்து இருந்தால் (சுப கிரகமானாலும் அசுப கிரகமானாலும்) 7-ம் பாவத்தை சிறப்பாக்குவான். சேர்க்கை, பார்வை போன்றவற்றால் அவன் (லக்னாதிபதி) இணைந்து இருந்தாலும் அவற்றைப் பின்னுக்குத் தள்ளி, லக்னாதிபதி அனுபவத்துக்கு வந்துவிடும்.
சேர்க்கையிலும், பார்வையிலும் வலுப்பெற்ற கிரகத்தின் பங்கு மேலோங்கிவிடும். வலுவிழந்தவை படுத்துவிடும். வலுவிழந்த கிரகத்தின் (நீசம், மெளட்யம், அஸ்தம், கதம்) பார்வையும் தானாகவே வலுவிழந்துவிடும். கடகத்தில் இருக்கும் செவ்வாய் தோஷம் நீசகுருவின் (மகரம்) பார்வையில் விலகியதாக சொல் வதும், கன்னியில் இருக்கும் செவ்வாயை... மீனத்தில் இருக்கும் நீச புதனின் பார்வையில் செவ்வாய் தோஷத்தை சரிக்கட்டுவதும், மேஷத்தில் இருக்கும் செவ்வாயை நீச சனியின் பார்வையால் விலகியதாகச் சொல்வதும் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லாதவை.

தாம்பத்தியத்தின் முறிவுக்கு செவ்வாயையும், உலக சுகங்களின் செழிப்புக்கு சுக்ரனையும், எல்லையை எட்டின படிப்புக்கு (கல்விக்கு) புதனையும், எல்லாவிதமான இடையூறையும் விலக்க குருவையும் சுட்டிக்காட்டுவதிலும் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. இடம், பொருள், ஏவல் ஆகியவற்றையும், லக்னம், அதையொட்டி அமையும் வீடுகளையும், அந்தந்த வீட்டுக்கு உடையவர்களையும், அதன் வலுவையும் சீர்தூக்கிப் பார்த்து அந்தந்த பாவத்தின் பலனை இறுதி செய்யவேண்டும். சுப கிரகங்கள் நல்லதைச் செய்யும்; அசுப கிரகங்கள் கெடுதலைச் செய்யும் என்று தோராயமாக பலன் சொல்லும் பிரபலங்களாக மாறக்கூடாது. 10-ம் பாவத்தில் அமர்ந்த வலுவான அசுப கிரகம் (செவ்வாய், சூரியன், சனி) அவனை வேலை அல்லது தொழில் மூலம் குடும்ப வாழ்க்கையில் செழிக்கச் செய்துவிடும்.
10-ம் பாவத்தில் வலுவிழந்த சுப கிரகம், வாழ்க்கைப் பயணத்தில் பொறுக்க முடியாத அளவுக்கு தொந்தரவை அளித்துவிடும். தரகனாக செயல்பட்டு கார் வாங்கி விற்றவன் புகழ்பெற்றான். பிற்பாடு அத்தனைப் புகழும் இழுக்காக மாறியது. பங்குச் சந்தையைக் கையாண்டு அரசனானான் ஒருவன். பிறகு ஆண்டியாக மாறினான். செல்வந்தர்களின் முதல்வனாக இருந்தவன் சரிவு ஏற்பட்டு சமுதாயத்தில் தலைகுனிவு ஏற்பட்டு மீளமுடியாமல் தவிக்கிறான். எல்லாம் துறந்த துறவி செல்வந்தனாக மாறினான். வாழ்க்கையின் மறுபகுதியில் சங்கடத்தைத் தழுவ நேரிட்டது. மேடுபள்ளம் இல்லாத வாழ்க்கை இல்லை என்று வேதாந்தம் பேசுவதை ஜோதிடம் ஏற்காது. ‘இந்த ஜாதகத்தில் தென்படும் மேடு ஆழமான பள்ளத்தில் தள்ளிவிடும்’ என்று எச்சரிக்கும் ஜோதிடம். 7-ல் சுக்ரன் இருக்கிறான். ஆசை அதிகமாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, பெண் ஜாதகத்திலும் ஆசை தூக்கலாகவோ அல்லது தனது பண்பில் ஆசையை அடக்கும் திறமையோ இருப்பதை அறிந்து சேர்க்க வேண்டும். புதன் இருந்தால், மாற்றான் மனைவியை நினைக்கவிடாமல் முழு மகிழ்ச்சியையும் அளிக்கும் திறமை வாய்ந்தவளை சேர்க்க வேண்டும். தரம் தாழ்ந்த பெண்மணிகளை விரும்புபவனுக்கு, தாம்பத்தியத்தில் ஈடுபாட்டைக் குறைக்கும் தகுதியுடையவளை சேர்த்து வைக்கவேண்டும்.

‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே’ என்ற பழமொழி பழைய நாளில் பிரசித்தம். எல்லாவிதத்திலும் பொருத்தமான மனைவி அமைந்தால், கணவனுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து அவனையும் உயர்த்தி தன்னையும் உயர்த்திக் கொள்வாள். பொருத்தமற்ற மனைவி (இயல்பில்) அவனையும் திருத்த முற்படாமல், அவனையும் அழித்து தானும் அழிவைச் சந்திப்பாள். பண்டைய நாளில் இரண்டு தாரங்களை ஏற்று இருவருடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் உண்டு. இன்று ஒரு தாரத்தைத் தக்கவைக்கத் தெரியாமல், மறுதாரத்தை ஏற்று பரிதாபத்துக்கு உள்ளானவர்கள் இருக்கிறார்கள்.
இன்றைய சூழல் தாம்பத்தியத்தின் புனிதத்தை மறந்துவிட்டது. புலன்களின் வேட்கையைத் தணித்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று எண்ணுபவர்களும் தென்பட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆக, கற்றறிந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு இணையைச் சேர்க்கும் முயற்சியில் இறங்கினால், இப்போது தென்படும் விவாகரத்தைச் சிறுகச் சிறுக அழித்து, பரிணாம வளர்ச்சியில் கிடைத்த தாம்பத்தியத்தைச் சுவைத்து மகிழச் செய்து, இந்த மண்ணிலேயே சுவர்க்கத்தைக் காணலாம்.
- தொடரும்