திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலயம் தேடுவோம்

எஸ்.கண்ணன்கோபாலன்

துர்கைக்கு சாந்தி அருளிய ஆபத்சகாயேஸ்வரர்!

ஆலயம் தேடுவோம்

‘தாயிற் சிறந்த தயா ஆனத் தத்துவனும், மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரும்’ ஆன மகேஸ்வரனுக்குத்தான் தேன்தமிழ் ஒலிக்கும் தென்னாட்டில் எத்தனை எத்தனை ஆலயங்கள்?! அத்தனை ஆலயங்களுமே ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்பு கொண்டதாக, ஐயன் ஈசனின் அருள்திறனுக்கு நிதர்சன சாட்சியாகத் திகழ்கின்றன.

ஒருகாலத்தில் பூரண சாந்நித்யத்துடன் திகழ்ந்த ஐயனின் ஆலயங்களில் மிகப் பல ஆலயங்கள் இன்றைக்குச் சிதிலம் அடைந்து காணப்படும் அவலமும் இதே தென்னாட்டில்தான் என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம் அல்லவா?

ஆலயம் தேடுவோம்

பல மன்னர்களின் பொருளும், சிற்பக் கலைஞர்களின் பல வருட உழைப்பும் சேர்ந்து உருவாக்கிய இறைவனின் ஆலயங்கள் பாழ்பட்டுக் கிடப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது, ஆலயத்தில் இருக்கும் இறைவனை மட்டுமல்ல, ஆலயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் ஒப்பற்ற கலைஞர்களின் கடும் உழைப்பையும் சேர்த்தே உதாசீனப்படுத்துவதாகும். இதோ, இப்போது நாம் துக்காச்சி என்னும் தலத்தில் தரிசிக்கப் போகிறோமே, இந்தக் கோயிலும்கூட ஒருகாலத்தில் ஏழு பிராகாரங்களுடன் மிகவும் பிரமாண்டமாக இருந்த கோயில்தான். ஆனால், இன்றைக்கு இது இரண்டே பிராகாரங்களுடன் சிறிய கோயில் போன்று காட்சி அளிக்கிறது. இந்தத் தலத்துக்கு முற்காலத்தில் துர்கை ஆட்சி என்ற பெயர் இருந்ததாகவும், அதுவே காலப்போக்கில் மருவி துக்காச்சி என்று தற்போது வழங்கப்படுவதாகவும் ஊர்ப் பெரியவர்கள் கூறினார்கள்.

துர்கை ஆட்சி என்ற பெயருக்கான காரணம் குறித்து ஆலய அர்ச்சகர் ராம்குமார் குருக்களிடம் கேட்டோம்.

‘‘இந்தத் தலம் துர்கையின் காரணமாகத் தோன்றியது என்பதால், துர்கையைப் பிரதானப்படுத்தி துர்கை ஆட்சி என்ற பெயர் இந்தத் தலத்துக்கு ஏற்பட்டது. மகிஷாசூரனை சம்ஹாரம் செய்வதற்காகப் புறப்பட்ட துர்கை, மகிஷனின் உடலில் இருந்து சிந்திய ஒவ்வொரு ரத்தத் துளியும் ஓர் அசுரனாக மாறவே, செய்வதறியாது திகைத்துப்போனாள். ஈசனைப் பிரார்த்தித்தாள். ஈசன் கூறியதுபோல் தன்னுள் இருந்த உக்கிர சக்தியைக் காளியாக வெளிப்படுத்தி, மண்ணில் சிந்தும் மகிஷனின் ரத்தத் துளிகளை உறிஞ்சுமாறு செய்தாள். மகிஷ வதம் முடிந்ததும், அவனுடைய ரத்தத் துளிகளைப் பருகிய காரணத்தால், காளி தேவி அசுர குணம் பெற்று அட்டகாசம் செய்யத் தொடங்கினாள்.

ஆலயம் தேடுவோம்

இதைக் கண்டு வருந்திய துர்கை, மீண்டும் சிவபெருமானி டம் பிரார்த்தித்தாள்.சிவபெருமான் துர்கையிடம், ‘அரசலாற்றங் கரையின் வடபுறத் தில் அமைந்துள்ள பாதிரி வனத்துக்குச் சென்று எம்மை லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்து, பாதிரிப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டால் உன் சக்தி சாந்தம் அடைவாள்’ என்று அருளினார்.

ஈசனின் ஆணைப்படியே துர்கை இந்தத் தலத்துக்கு வந்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து, பாதிரி மலர்களால் ஈசனை அர்ச்சித்து வழிபட்டாள். அதன் பயனாக தன் சக்தி கொண்டிருந்த அசுர குணம் நீங்கப் பெற்றாள். தான் எந்த வடிவத்தில் இங்கே ஈசனை பூஜிக்க வந்தாளோ, அதே வடிவத்தில் தனிச் சந்நிதி கொண்டு அருள்புரிகிறாள். ராகு காலத்தில் இவளை வழிபடுபவர்களின் சகல கஷ்டங் களையும் உடனுக்குடன் நிவர்த்தி செய்து அருள்புரிகிறாள்’’ என்ற ராம்குமார் குருக்கள்,

‘‘இந்தத் தலத்தில் அசுர குணத்தால் துர்கைக்கு ஏற்பட்ட ஆபத்தில் இருந்து காப்பாற்றிய காரணத்தால் ஈசன் ஆபத்சகாயேஸ்வரர் என்ற திருப்பெயருடன் அருள்கிறார்; லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி ஆகிய மூன்று சக்திகளும் இணைந்த வடிவமாக சிவதுர்கை இந்தத் தலத்துக்கு வந்தபோது, ஈசன் தன்னுடைய தேவியை ‘சௌந்தரமாக வா’ என்று அழைத்ததால், அம்பிகை சௌந்தரநாயகி என்று திருப்பெயர் கொண்டாள்’’ என்று தெரிவித்தார்.

ஆலயம் தேடுவோம்

இத் திருக்கோயிலுக்கு ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் போன்ற மன்னர்கள் திருப்பணி கள் செய்திருப்பதை அங்கிருக்கும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. விக்கிரம சோழன் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ததன் பின்னணியில் செவிவழிச் செய்தியாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

விக்கிரம சோழன் வெண் குஷ்டம் வந்து துன்பப்பட்ட தாகவும், பல தலங்களுக்கும் சென்று வழிபட்டவன் கனவில் இத்தலத்து ஈசன் தோன்றிக் கட்டளை இட்டதால், இங்கே வந்து இறைவனை வழிபட்டு 48 நாட்கள் வில்வம், வன்னி, கொன்றை, துளசி போன்றவற்றால் அர்ச்சித்து, அவற்றையே வெறும் வயிற்றில் பிரசாதமாக உட்கொண்டு நோய் நீங்கப்பெற்றதாகவும், அதன் காரணமாக இந்தக் கோயிலுக்குப் பெரிய அளவில் திருப்பணிகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலைப் போலவே அமைந்திருக்கும் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரர், வாராஹி, குபேரன் ஆகியோரின் சந்நிதிகளும் அமைந்திருக்கின்றன. இங்குள்ள சரபேஸ்வரரே ஆதி சரபேஸ்வரராக விளங்குகிறார். இவரை ராகு காலத்தில் வழிபட்டால், பலதரப்பட்ட துன்பங்களில் இருந்தும் விரைவில் நிவாரணம் கிடைப்பதாக ஊர்மக்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

ஆலயம் தேடுவோம்

முற்காலத்தில் ரிஷிகளும் முனிவர்களும் தவமியற்றியதும், ஸ்ரீதுர்கை வழிபட்டு சாந்தி பெற்றதுமாகிய துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் இன்றைக்குச் சிதிலம் அடைந் திருப்பதைக் கண்ட போது, மனம் விவரிக்கமுடியாத துன்பத்தில் ஆழ்ந்தது. நம்முடைய துன்பத்தைப் போக்குவது போல் ஒலித்த உளிகளின் ஓசையைக் கேட்டு, ஓசை வந்த இடத்துக்குச் சென்றோம். உடன் வந்த ராம்குமார் குருக்களைப் பார்த்து, திருப்பணிகள் பற்றிய விவரங்கள் குறித்துக் கேட்டோம்.

ஆலயம் தேடுவோம்

‘‘பல வருஷமாவே இந்தக் கோயில் சிதிலம் அடைந்த நிலையில்தான் இருந்தது. இந்த ஊர் மக்கள் எல்லோருமே நடுத்தர வசதி கொண்ட மக்கள் தான் என்பதால், திருப்பணி செய்ய விருப்பம் இருந்தும் அவர்களால் முடியவில்லை. கோயிலுக்கும் அவ்வளவாக வருமானம் இல்லை. பின்னர் கோயிலின் தொன்மை பற்றி அறிந்த தொல்பொருள் துறை யினர், திருப்பணிகள் செய்து கோயிலைப் புதுப்பிக்கவேண்டும் என்று பரிந்துரைத்தனர். இந்தக் கோயிலுக்கு வருமானம் இல்லாததால், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலின் உப கோயிலாக இது சேர்க்கப்பட்டு, உதவி ஆணையர் மேற்பார்வையில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அவை விரைவில் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற, ஆபத்சகாயேஸ்வரர்தான் அருள்புரியவேண்டும்’’ என்றார்.

ஆலயம் தேடுவோம்

துர்கையின் சக்திக்கு ஏற்பட்ட அசுரகுணத்தில் இருந்து காத்து, அவள் பெயரிலேயே இந்தத் தலத்துக்கு துர்கை ஆட்சி என்ற பெயர் வழங்க அருள்புரிந்த ஆபத்சகாயேஸ்வரரின் ஆலயத் திருப்பணிகள் விரைவிலேயே நிறைவு பெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். நாளும் தவறாமல் ஆறு கால பூஜைகள் ஐயனுக்கு நடைபெறவேண்டும். அதன் பயனாக சாந்நித்யம் பெறும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் ஆபத்துகள் எல்லாம் அகல வேண்டும் என்பதே ஊர் மக்களின் விருப்பம்.

ஆலயம் தேடுவோம்

என்னதான் கோயில் திருப் பணிகளை அறநிலையத் துறை மேற்கொண்டிருந்தாலும், நம்மால் இயன்ற பொருளு தவியைச் செய்யவேண்டியது நமது கடமை அல்லவா? அப்படி நம்மால் இயன்ற பொருளு தவியைச் செய்து, பிறைசூடிய பெருமானைப் பணிந்தால், ஐயன் நம்மையும் நம் சந்ததி யினரையும் அனைத்து ஆபத்து களில் இருந்தும் காத்தருள்வார் என்பது உறுதி.

எஸ்.கண்ணன்கோபாலன், படங்கள்: க.சதீஷ்குமார்

துளசியும் விபூதியும்!

சங்கரன்கோவில் சங்கரநாராயண ஸ்வாமி திருக்கோயிலில் சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது, அருள்மிகு சங்கர நாராயணர் சந்நிதி. இங்கே, காலை பூஜையில் மட்டும் துளசி தீர்த்தமும், மற்ற நேரங்களில் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

- எஸ்.மாரிமுத்து, சென்னை-64

எங்கு இருக்கிறது? எப்படிச் செல்வது?

கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக கூத்தனூர் செல்லும் சாலையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக் கிறது துக்காச்சி திருத்தலம். கும்பகோணத்தில் இருந்து துக்காச்சி செல்ல மினி பஸ் வசதி உள்ளது.