
அருட்களஞ்சியம்
நவரஸ ராகவம் (ராம கர்ணாம்ருதம்)

இந்த நாட்டிலே ராமாயண காலத்துக்குப் பிறகு எத்தனையோ குழப்பங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை முறையைப் பலவிதங்களில் மாற்றியிருக்கின்றன. எத்தனையோ நூல்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிட்டன. ஆனாலும், ஆதி காவ்யமாகிய ராமாயணம் மட்டும் அன்று போலவே இன்றும் நம் நாட்டு மக்களின் இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்றால், அதற்கு இந்த மகா காவ்யத்தின் நடையழகும் காவியப் போக்கும் இதயத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும், பாத்திரங்களின் குணசித்திரங்களுமே காரணமாகும். இதன் கதாநாயகனாகிய ராமன், கடவுளின் அவதாரம் என்றாலும், அன்னையின் வயிற்றிலேயே பிறந்தார். அவரவர் கடமையை அவரவர் செய்ய வேண்டும் என்பதற்குத் தாமே ஒரு உதாரணமாக விளங்கி மனுஷ்ய தர்மத்தை எடுத்துக் காட்டினார். அவரது சரித்திரத்தில் நவரஸங்களும் பொருந்தியிருக்கின்றன என்பதை மத் சங்கர பகவத் பாதர் ராம கர்ணாம்ருத சுலோகம் ஒன்றில் அழகாக விளக்கியிருக்கிறார்கள். அவற்றைச் சித்திரிப்பதே பின்வரும் பக்கங்களில் உள்ள சித்திரங்கள்.

சிருங்காரம்: வனவாச காலத்தில் ஒரு நாள் ராமரும் சீதையும் தனித்திருக்கிறார்கள். சீதா தேவியின் திலகம் கலைந்திருப்பதைக் கண்ட ராமபிரான் கீழே கிடந்த காவிக்கல் ஒன்றைப் பொறுக்கி, பாறையில் தேய்த்து அந்தக் காவிப் பொடியையே சீதைக்குத் திலகமாகத் தீட்டுகிறார்.

வீரம்: மிதிலையில் சிவதனுசை வளைக்கும்போது வீரமே உருவெடுத்து வந்ததுபோல் விளங்குகிறார் வீர ராகவன்.

காருண்யம்: ‘அபயம்!’ என்று அலறி விழுந்தான் காகாசுரன். அவனது ஒரு கண்ணை அம்பு விழுங்கிவிட்டது. கருணாமூர்த்தியாகிய ராகவன் எதிரிக்கு இரங்கினார். மீதம் உள்ள ஒரு கண்ணே இரண்டு கண்ணாகவும் உபயோகப்படும்படி வரம் அருளினார்.

பயம்: ராமனுக்கும் பயம் உண்டு. நம்மைப் போல் பாம்பையும், பழுதையையும் கண்டு பயப்பட மாட்டார். பாபத்துக்குப் பயந்தவர் ராமன். இல்லாவிட்டால் தாடகையைக் கொல்லும்போது யோசிப்பானேன்.

பீபத்ஸவம்: சந்திரசேனா எனும் தாசி ராமனை வசப்படுத்தப் பார்க்கிறாள். ‘இது ஏதடா கஷ்டம்?’ என்று ராமன் அருவருப்படைகிறார்.

அற்புதம்: ராமனது காரியம் என்றவுடன் குரங்குகள் எல்லாம் மலைகளைத் தூக்கிவந்து ஆழ்கடலை அடைக்க ஆரம்பித்துவிட்டன. இந்த அற்புதத்தைக் கண்ட ராமன் பிரமித்து நிற்கிறார்.

ஹாஸ்யம்: ராமபிரானுடன் வாதாடிக் கொண்டிருக்கிறாள் சூர்ப்பணகை. இந்த நேரத்தில் சீதை அவ்வழியே வந்தாள். சீதையைக் கண்ட அரக்கி, ராமனிடம் சொல்லுகிறாள்: ‘‘ராமா, அதோ வருகிறாளே அவள் பெண் என்று எண்ணிவிடாதே. ‘வரும் இவள் மாயம் வல்ல அரக்கி’ ’’ என்று ஒரு பொய்யைச் சொல்லி பயமுறுத்துகிறாள். இதைக் கேட்ட ராமன் சிரிக்காமல் வேறு என்ன செய்ய முடியும்?

ரெளத்திரம்: பத்துத் தலைகள், இருபது கைகளுடன் எதிர்ப்பட்டான் ராவணன். அவன் வருவது ஒரு நகரமே நகர்ந்து வருவது போலிருந்தது. இதைக் கண்ட ராமபிரான் திருபுராந்தக ருத்ரன் போல் சீறி எழுந்து அவனை ஒரே பாணத்தால் அழித்தார்.

சாந்தம்: சாந்தத்துக்கு உறைவிடம் மகரிஷிகள். அவர்களில் பலருக்கு ராமன் தரிசனத்தில் சந்தோஷம்: பலருக்கு ராமனைப் பிரியப் போகிறோமே என்று வருத்தம். பற்றற்ற ஞானிகள் எல்லாம் பாசத்தில் உழலுகிறார்கள். ஆனால் ராகவன் மட்டும் அவர்களிடையே சார்ந்த சொரூபனாக அமர்ந்திருக்கிறார்.

வலை விரிகிறது
கைகேசி பளிச்சென்று இளையாளாகிய தன்மேல் சக்ரவர்த்திக்கு உள்ள பெருங்காதலையும், தன் வயிற்றிலே பிறந்த பரதனது பெரும்புகழையும் வெளியிட்டு, ‘‘மன்னவர் மன்னன் என் கணவன்; மைந்தனோ பெரும் புகழ் பரதன். இப்படியிருக்க எனக்கு மேலாக அந்தக் கோசலைக்கு வரக் கூடிய வாழ்வுதான் என்ன?” என்று கர்வம் தோன்றக் கேட்கிறாள்.

அந்தக் கூனல் - தோழி இதற்கெல்லாம் மசிந்து போகிறவளா? தான் ஓரளவு வெற்றி பெற்றதற்கு உள்ளுக்குள்ளே திருப்தி அடைந்து, ‘‘உன் சக்களத்தியின் வாழ்வு இது!” என்று ராம பட்டாபிஷேகச் செய்தியைப் பரிகாசமாகத் தெரிவிக்கிறாள்:
‘ஆடவர் நகையுற, ஆண்மை மாசுறத்,
தாடகை எனும்பெயர்த் தைய லாள்படக்,
கோடிய வரிசிலை இராமன், கோமுடி
சூடுவன் நாளை, வாழ்(வு) இ(து)!’ எனச் சொல்லினாள்.
தாடகைப் பிராட்டி!
‘‘ராமனைப் பிரமாதமாய்ப் பேசினாய்! ‘என்னை விடக் கோசலைக்கு என்ன பிரமாத மான வாழ்வு!’ என்கிறாய்! சொல்லுகிறேன் கேள்” என்று பதில் சொல்லும் கூனி, ராமனைத் தூஷிப்பதற்காக, மிகவும் கொடிய அரக்கியான தாடகை மீது அளவு கடந்த அன்பும் இரக்கமும் காட்டுகிறாள். அந்தக் கோர ரூபத்தைத் ‘தையலாள்’ (கட்டழகு வாய்ந்த பெண்மணி) என்றுகூட வர்ணிக்கிறாள். அந்தப் பெண் கொலைக்காக வளைந்த வில்லைக் ‘கோடிய வரிசிலை’ (கோணிப்போன வில்) என்றும் குறிப்பிடுகிறாள்.
இவ்விதமாகப் பேசுவதால், தான் ஏற்கெனவே கைகேசி உள்ளத்தில் விதைத்திருந்த பொறாமையையும் வளர்த்துக் காரிய ஸித்தி பெறலாமென்று கூனி நம்புகிறாள். ஆனால், அந்த நம்பிக்கை வீணாகி விடுகிறது. அதற்கு மாறாக அந்தப் பட்டாபிஷேகச் செய்தியைக் கேட்டுக் கோசலை எப்படி மகிழ்ந்தாளோ அப்படியே கைகேசியும் மகிழ்ச்சி அடைகிறாளாம்.
அந்த மங்களச் செய்தி கேட்டுக் கோசலை, செய்தி சொன்னவருக்கு முத்தாரம் முதலியன பரிசு கொடுத்தாள் அல்லவா? அப்படியே கைகேசியும் இப்போது உளங் குளிர்ந்து முகமலர்ந்து, ‘மெத்தச் சந்தோஷம். இந்தா, இந்த முத்தாரம்!’ என்று பரிசளிக்கிறாள்.

இந்தப் பரிசு பெறவா கூனி வந்திருக்கிறாள்? ராம பட்டாபிஷேகத்துக்கு இவ்வளவு சந்தோஷமா? பரிசு வேறு கொடுப்பதா? பொங்கிச் சுழித்து எரிகிறது கோபம் கூனிக்கு. அந்தக் கோபப் பிரளயம் கூனியை என்ன பாடு படுத்துகிறது! பொன்னில் பதித்த அந்த இரத்தின மாலைதான் என்ன பாடு படுகிறது! குரங்கின் கைப் பூமாலை போலே! அந்தக் கொடிய கோபாவேசம் கம்பன் கவிதையைத்தான் என்ன பாடுபடுத்தி வைக்கிறது பாருங்கள்:
தெழித்தனள், உரப்பினள், சிறுகண் தீயுக
விழித்தனள், வைதனள், வெய்(து) உயிர்த்தனள்,
அழித்தனள், அழுதனள், அம்பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை, அக் கொடிய கூனியே.
‘காரியம் கைகூடாமல் போய் விடுமோ?’ என்ற ஆத்திரத்தினாலும் அகங்காரத்தினாலும் கூனி படுத்தும் பாடு அற்புதமாய்ச் சித்திரிக்கப் படுகின்றது. இதன் சிகரமாக வருகிறது ஹாரத்தை வீசி அடித்து நிலத்தைக் குழித்துவிட்ட காரியம்!
வன வாசம் பரதனுக்கா?
கள்ளங் கவடற்ற கைகேசியைக் கூனி, ‘அடி பைத்தியமே!’ என்று அருமையாக அழைக் கிறாள். அழைத்து, ‘‘உன் வயிற்றில் பிறந்த பிள்ளையோடும் நீ துயரப்படுவாயாக!” என்று சபிக்கிறாள் - ஏதோ ஆசிர்வதிப்பதுபோலே.
‘‘உனக்குச் சரியாகத் தோன்றலாம் அந்தத் துயர வாழ்வு; ஆனால் என்னாலே பொறுக்க முடியாதம்மா, உன் சக்களத்தியின் தாதிகளுக்கு அடிமை செய்து பிழைக்கும் அந்தப் பிழைப்பை!” என்கிறாள்.
ராமன் தலையில் கிரீடம் ஏறிவிட்டால், அதிகாரம் அந்த ராமனுக்கு மட்டுமில்லை; அவன் தாயான சக்களத்திக்கு மட்டுமில்லை; - அவளுடைய வேலைக்காரிகளுக்கும் வந்து விடுமாம் அவ்வளவு அதிகாரமும்! ராம பட்டாபிஷேகத்தின் பொருள் அது என்று வியாக்கியானம் செய்கிறாள்.
‘’சிவந்தவாய்ச் சீதையும், கரிய செம்மலும்,
நிவந்தஆ சனத்(து) இனி(து) இருப்ப, நின்மகன்
அவந்தனாய், வெறுநிலத்(து) இருக்க லானபோ(து),
உகந்தவா(று) என்? இதற்(கு) உறுதி யா(து)” என்றாள்.
தாடகைப் பிராட்டியை அழகிற் சிறந்த பெண் தெய்வமாக மதித்த இக்கூனல் - அழகி, சீதையின் அழகை எப்படி ஒப்புக்கொள்ளக் கூடும்? ‘சிவப்பு ஒரு அழகு; சூடு ஒரு ருசி’ என்று கேட்டிருக்கிறீர்களல்லவா? ‘சிவந்த வாய் இருந்துவிட்டால் அழகு வந்துவிடுமா? குரங்குக்குக்கூடத்தான் முகம் சிவந்திருக்கிறது!’ என்று குறிப்பிடுவதுபோல ‘சிவந்த வாய்ச் சீதையும்’ என்று தொடங்குகிறாள். பிறகு ‘அவளுக்காவது சிவப்புத்தோல்; அவனுக்கோ அதுவுமில்லையே, சுத்தக் கறுப்பன்!’ என்று சொல்வது போல், ‘சிவந்தவாய்ச் சீதை யும் கரிய செம்மலும்’ என்று பேசுகிறாள், சுமந்திரன் வியந்து பாராட்டிய சேர்த்தியழகை.சீதா ராமர்கள் சிங்காசனம் ஏறி வீற்றிருக்கும் அழகையும் பரிகசிக்கிறாள். ‘சிவப்பியும் அந்தக் கறுப்பனும் உச்ச ஸ்தானத்தில் ஏறிக் கொண்டு ஜோராக இருப்பார்கள்!’ என்று சொல்லுகிறாள். ‘அப்போது உன் மகன் எப்படி இருப்பான், எங்கே இருப்பான் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு, அக் கேள்விகளுக்கு விடையாக, ‘ஒரு பயலாவது அவனைக் கையெடுத்துக் கும்பிட மாட்டான்!’ என்கிறாள்.
‘‘உட்கார எப்படிப்பட்ட ஆசனமும் இல்லாமல், ஜமக்காளம் விரித்த தரையிலும் உட்காரக் கூசி, வெறுந் தரையில் அடங்கி ஒடுங்கிக் குந்தியிருப்பான்!” என்கிறாள்.
‘‘ராமன் சிங்காசனத்தில் இருக்க, பரதன் ‘இருக்கிறவனோடும் சேர்ந்தவனில்லை, இறந்தவனோடும் சேர்ந்தவனில்லை!’ என்று சொல்லும்படி வெறும் தரையில் குந்தியிருப்பதைக் காட்டிலும் காட்டுக்குப் போவதே நல்லது” என்று சொல்லத் துணிந்த கூனி, ‘‘அந்த நிலையில் பரதன் சுடுகாட்டுக்குப் போவதுகூட நல்லதுதான்!’’ என்று பேசவும் கூசவில்லை. ‘இருந்தால் ராஜாவாக இருக்கவேணும்; ராஜ குலத்திலே பிறந்தும் அரசர் வரிசையில் வைத்து எண்ணும்படி பிறந்தானில்லையே பரதன்!’ என்று பரிதவிக்கிறாள்; பிரலாபிக்கிறாள்.
சதிகாரன் தந்தை!
இவ்வளவு கவலைக்கிடையே கூனிக்குத் திடீரென்று ஒரு ஞானோதயம் ஏற்படுகிறது. ஏதோ ஒரு சதியாலோசனையில் ஒரு முக்கியமான பகுதியை - ஆம், அந்தச் சங்கிலித் தொடரில் ஒரு முக்கியமான வளையத்தைக் கண்டு பிடித்துவிட்டதாகவே எண்ணம். பரதன் இப்போது ஊரில் இல்லை அல்லவா? கைகேசியின் சகோதரனும் பரதனுடைய மாமனுமான கேகய ராஜா பரதனைத் தன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறான். அப்போது தசரதன் பரதனைச் சத்ருக்னனோடு அனுப்பிவைத்தான். அதைத்தான், தான் கண்டுபிடித்த சதி யோசனைச் சங்கிலியில் ஒரு முக்கியமான தொடர் வளையமாக்குகிறாள் கூனி.
அயோத்தியில் பரதன் இருப்பதே சரியில்லையென்று அவனைத் தொலை தூரம் துரத்திவிட்டு அவசர அவசரமாய்க் கோசலை பிள்ளைக்குப் பட்டங்கட்டப் பார்க்கிறானாம் சதிகாரனான தசரதன்:
பாக்கியம் புரிந்திலாப் பரதன் தன்னைப்பண்(டு),
ஆக்கிய பொலங்கழல் அரசன், ஆணையால்
தேக்குயர் கல்அதர் கடிது சேணிடைப்
போக்கிய பொருள்எனக்(கு) இன்று போந்ததால்!
தசரதனைப் ‘பண்டு ஆக்கிய பொலங்கழல் அரசன்’ என்கிறாள் கூனி. தசரதனது முன்னோர்கள் ஆதியில் அழகாய்ச் செய்து அணிந்து கொண்டார்களாம் வீரக் கழலை. ‘அதைத் தசரதனும் வெட்கமில்லாமல் அணிந்து கொண்டிருக்கிறானே!’ என்பது கூனியின் வருத்தம். ‘தசரதனது முன்னோர்களெல்லாம் வீரர்கள், தசரதனோ வஞ்சகன்!’ என்பது குறிப்பு. ‘அவன் செய்த வஞ்சனையால்தான் பரதனுக்கு இவ்வளவு கஷ்ட நஷ்டமும்!’ என்கிறாள் கூனி. இல்லாவிட்டால், அவ்வளவு தொலைதூரத்திலே தேக்கு மரங்கள் அடர்ந்த மலைக் காட்டின் வழியாகப் போக்கி இருப்பானா அந்த அருமைப் பிள்ளையை?
இப்படியெல்லாம் விபரீத வியாக்கியானங்களாலும், விநோத விவகாரங்களாலும் கைகேசி உள்ளத்தைக் கலைக்க முயலும் கூனி மேலும் மேலும் ஆத்திரத்தை மூட்டிக் கொள்கிறாள் தனக்குள்ளேயே. ‘பாக்கியம் செய்யவில்லை பரதன்!’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தவள், ‘‘என் அப்பனே! பரதா! உனக்குத் தந்தையும் தாயுமே சத்துருக்களாய்ப் போனார்களே!” என்று கதறுகிறாள், - தூர தேசத்திலுள்ள பரதனைக் கண் எதிரே பார்த்துவிட்டது போல!
மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள்;
‘’அந்தரம் தீர்ந்(து) உல(கு) அளிக்கும் நீரினால்
தந்தையும் கொடியன், நல் தாயும் தீயளால், -
எந்தையே பரதனே! என்செய் வாய்!” என்றாள்.
பரதன் மீது பரிதாபமாய்க் கூனி அவன் எதிரேயே கதறுவது போல், ‘’தந்தையும் கொடியன், தாயும் கொடியள்! என் அப்பனே! பரதா! நீ என்ன செய்யப் போகிறாயடா?” என்று அருமையாகக் கைகேசி முன் அலறுவது நாடகப் பண்பு வாய்ந்த ஒரு கட்டம்.
அஞ்சாத நஞ்சு
கூனியின் அருமை, ஆத்திரம், துவேஷம், கோபம், அனுதாபம், பரிதாபம் - எல்லாம் நடிப்பா, உண்மையா? அது எப்படியிருந்தபோதிலும், அந்தக் கூனல் - உள்ளத்திலிருந்து புறப்பட்ட வார்த்தைகள், சொன்ன வாயும் கசக்கும்படியே வெளிப்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றியது கைகேசிக்கு. பொங்குகிறது கோபம் குப் குப் என்று நெருப்பிலே நெய் சொரிந்த மாதிரி. கோபத்தோடு கோபமாய் ஒரு சன்மார்க்க உபதேசமும் செய்துவிடுகிறாள் கைகேசி கூனியைக் கடிந்து:
எனக்கு நல்லையும் அல்லைநீ; என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை; அத் தருமமே நோக்கின்,
உனக்கும் நல்லைநீ அல்லை; வந்(து) ஊழ்வினை தூண்ட,
மனக்கு நல்லன சொல்லினை, மதியிலா மனத்தோய்!
கூனி, கைகேசிக்காவது இவள் மகனுக்காவது நல்லவளாக இல்லையாம். ஏன், கூனி தனக்கே நல்லவள் இல்லையாம்.

‘‘மந்தரையே! அந்தப்பிரசித்தமான தர்மம் என்று இயற்கையான தெய்வச் சட்டத்தை நீ மீறப் பார்க்கிறாய். அதை மீறி அதற்கு உரிய தண்டனையை அனுபவிக்கும்படி இப்போது உன்னைத் தூண்டுவது உன் ஊழ்வினையாகிய தீவினைதான்! அந்த வினை அல்லது விதியோடு மதியைக் கொண்டு போராட வேண்டும். அதற்குத் தக்க மதிவன்மையோ உனக்கில்லை!” என்று குறிப்பிடுகிறாள் கைகேசி.
கைகேசியின் கோபம் உச்ச நிலையை அடைந்துவிடுகிறது. ‘‘என் எதிரே வந்து இப்படியெல்லாம் அற்பப் பேச்சுக்கள் பேசிய உன் நாக்கை அறுக்க வேணும்!” என்று கூடச் சொல்ல ஆரம்பிக்கிறாள், அந்தக்கோப வேகத்திலே!
28.4.46, 5.5.46, 12.5.46 மற்றும் 19.5.46 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...
நவ மூர்த்திகள்!
நாகை மாவட்டம், திருச்செங்காட்டங்குடி சிவாலயத்தின் வடசுற்று மண்டபத்தில், நவதாண்டவ மூர்த்தி களையும் தரிசிக்கலாம். அந்த மூர்த்திகள்: புஜங்கவளிதர், கஜ சம்ஹாரர், ஊர்த்துவ மூர்த்தி, காலசம்ஹாரர், கங்காள மூர்த்தி, பிட்சாடனர், திரிபுர சம்ஹாரர், பைரவர், உத்திராபதியார்.
- சி.டி.கே.மூர்த்தி, சென்னை-82