
பசுமை செழிக்கச் செய்யும் பச்சையம்மன்!

கிராம தேவதைகளில் பச்சையம்மனுக்கு சிறப்பான இடம் உண்டு. பல இடங்களில் கோயில் கொண்டருளும் பச்சையம்மனுக்கு, சென்னை அண்ணாசாலை பகுதியில், எல்.ஐ.சி-க்கு எதிரில் உள்ள சாலையிலும் பழைமையான ஓர் ஆலயம் உண்டு.
பசுமை செழிக்கச் செய்யும் இந்த அன்னை, ஒருமுறை ஈசனைக் குறித்து தவம் இயற்ற திருவுள்ளம் கொண்டு, பூமியில் ஓர் இடத்தில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட விரும்பினாள். மணல் லிங்கம் சமைக்க தண்ணீர் தேவைப்பட்டதால் விநாயகரையும் முருகனையும் அனுப்பினாள். அவர்கள் நீர் எடுத்து வர தாமதம் ஆகவே, தன்னுடைய கைப்பிரம்பினால் பூமியைத் தட்டி நீர் வரவழைத்து லிங்கம் சமைத்து முடித்தாள். அன்னையின் பூஜை வேளையில் அருகில் இருந்த வனத்தில் இருந்த அரக்கன் ஒருவன் தொல்லை கொடுத்தான். ஈசனும் விஷ்ணுவும் வரமுனி, செம்முனியாக வந்து அரக்கனை வதம் செய்தனர். பின்னர் அன்னை சிவவழிபாட்டை முடித்துக் கொண்டு, கயிலாயம் புறப்பட்டுச் சென்றாள். தான் பூஜை செய்த இடத்தில் தன்னுடைய சாந்நித்தியம் இருக்கவேண்டும் என்று நினைத்த அம்பிகை பூமியில் பல இடங்களில் பச்சையம்மன் என்ற திருப்பெயரில் கோயில் கொண்டாள் என்கிறது அம்மனின் திருக்கதை.

அப்படி அமைந்த இந்தக் கோயிலில், சுதை வடிவிலான பச்சை அம்மனுடன் ஈசன் மன்னார்சுவாமியாக அருள்கிறார். விநாயகர், முருகன், வாழ்முனி ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். மிகப் பழைமையான இந்தக் கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் அக்னி நட்சத்திர பூஜை விசேஷமானது. இங்கு வந்து, அம்மனை வழி பட்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மு.சித்தார்த், படங்கள்: உ.கிரண் குமார்