திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

ராமாயண சிறுவன்! - அசத்தும் அவ்யுக்த்!

ராமாயண சிறுவன்! - அசத்தும் அவ்யுக்த்!
பிரீமியம் ஸ்டோரி
News
ராமாயண சிறுவன்! - அசத்தும் அவ்யுக்த்!

ராமாயண சிறுவன்! - அசத்தும் அவ்யுக்த்!

ராமாயண சிறுவன்! - அசத்தும் அவ்யுக்த்!

‘என்னிடம் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள நூறு  இளைஞர்களைத் தாருங்கள். நான் இந்தியாவையே வலிமையானதாக மாற்றிக் காட்டுகிறேன்’ என்றார் சுவாமி விவேகானந்தர். அவர் கேட்டுக்கொண்டதுபோல் இன்றைக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் எட்டு வயதே நிரம்பிய அவ்யுக்த்.

ராமாயணச் சொற்பொழிவில் அனைவரையும் அசத்தும் அவ்யுக்த், ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இதுவரை நான்கு முறை ராமாயணச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார். இவருடைய தாத்தா நரசிம்மன், பெற்றோர் தேவநாதன்-ஹேமா தேவநாதன் அவ்யுக்த் சிறு குழந்தையாக இருந்தபோதே நல்ல நல்ல நீதிக் கதைகளைச் சொல்லிக் கொடுக்கத் துவங்கினர். குறிப்பாக இரவு உறங்குவதற்கு முன்பு தாத்தா அபிநயத்துடன் வால்மீகி ராமாயணத்தைச் சொல்லிக் கொடுத்தார். ராமாயணத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக அவ்யுக்த் நிறைய சி.டி.க்களையும் புத்தகங்களையும் கேட்கவும் படிக்கவும் செய்ததுடன், கம்ப்யூட்டரில் யூ-டியூப் மூலமாகவும் ராமாயணத்தைக் கற்றுக்கொண்டு, பெற்றோர்களுக்கே சொல்லும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார். தினமும் உறங்குவதற்கு முன் சுமார் ஒரு மணி நேரமாவது ராமாயணம் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இவர்.

ராமாயண சிறுவன்! - அசத்தும் அவ்யுக்த்!

ராமாயணத்தில் நல்ல தேர்ச்சி பெற்ற அவ்யுக்த் தன்னுடைய ஆறாவது வயதில் முதன்முதலாக சென்னை பெருங்களத்தூரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ராமாயண உபந்நியாசம் செய்தார். தற்போது வரும் ராமநவமி அன்று ஐந்தாவது முறையாக ராமாயண உபந்நியாசம் செய்ய உள்ளார். ராமாயணம் படிப்பது, உபந்நியாசம் செய்வது, யோகா, ஸ்லோகம் வகுப்புகளுக்குச் செல்வது என்று பரபரப்பாக இருந்தாலும், படிப்பிலும் வகுப்பிலேயே முதல் ரேங்க் மாணவராக இருக்கிறார்.

‘‘நான் ஏழு வருஷமா ராமாயணம் கற்றுக்கொண்டு வருகிறேன். ராமாயணத்தின் மூலமா ராமபிரானைப் போல் நல்லவராக வாழவேண்டும் என்ற நீதியை நான் கற்றுக்கொண்டேன். தவறு செய்வது மனித இயல்புதான். ஆனால், செய்த தவறை உணர்ந்து நம்மைத் திருத்திக் கொள்ள முயற்சிக்காமல் இருப்பது பெரிய தவறு. என் வயதுக்கு நானும் சின்னச் சின்ன தவறுகளைச் செய்யவே செய்கிறேன். ஆனால், என் அம்மா சுட்டிக்காட்டும்போது, அதை உணர்ந்து என்னைத் திருத்திக் கொள்வேன். ராவணன் நல்லவர்தான். ஆனால், சூர்ப்பணகையின் தூண்டுதலால்தான் அவர் கெட்டவர் ஆகிறார். அதேபோல் ராவணனைக் கொன்றதால் ராமருக்கே பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது. எனவே நம்முடைய எண்ணம், செயல் எல்லாமே நல்லதாக இருக்கவேண்டும். அப்போது தான் பெயரும் புகழும் நமக்குக் கிடைக்கும்.

ராமாயண சிறுவன்! - அசத்தும் அவ்யுக்த்!

இதிகாசங்களைக் கற்றுக்கொண்டால், புண்ணியம் கிடைக்கும் என்று சொல்வார்கள். எனவே, நான் ராமாயணம் கற்றுக்கொண்டதுடன், மற்றவர்களும் நன்மை பெறவேண்டும் என்பதற்காக ராமாயண உபந்நியாசம் செய்யத்தொடங்கினேன். என்னுடைய நண்பர்களுக்கும் ராமாயணம் கற்றுத் தருகிறேன். இப்போது மகாபாரதத்தை ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருப்பதுடன், திவ்விய பிரபந்தம், பகவத் கீதை, கிருஷ்ணலீலை, ஆண்டாள் கல்யாணம் ஆகியவற்றையும் யூ-டியூப் மற்றும் புத்தகங்கள் மூலம் கற்றுக்கொண்டு வருகிறேன்.

‘நாம் எல்லோரும் எப்படி வாழவேண்டும் என்று ராமாயணத்தைப் படித்துத் தெரிந்துகொண்டு, அப்படியே நடந்துகொண்டால், அதுவே நாம் பிறந்த பலனை அடையச் செய்யும் சிறப்பான வழி’ என்று என்னுடைய பெற்றோர்கள் எனக்குச் சொன்னதையே நான் என்னுடைய உபந்நியாசத்திலும் நண்பர்களிடத்திலும் சொல்கிறேன்’’ என்று முடித்தார் அவ்யுக்த்.

சிறுவன் அவ்யுக்த்தின் ராமாயணச் சொற்பொழிவை சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்திலும் (www.facebook.com/sakthivikatan) வீடியோ வடிவில் காணலாம்.

- கு.ஆனந்தராஜ், படங்கள்: எம்.உசேன்