திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

‘வள்ளி கல்யாண வைபோகமே!’

‘வள்ளி கல்யாண வைபோகமே!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘வள்ளி கல்யாண வைபோகமே!’

பூசை ச.அருணவசந்தன்

திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் மங்கலக் காட்சிகள் நிறைந்த பாடல்களைப் பாடுவது வழக்கம். திருமணத்தின் போது மணமக்களை ஊஞ்சலில் அமர்த்தி, ‘கெளரி கல்யாண வைபோகமே, கொத்தோடு குலைவாழை நிறுத்தி, தோரணம் கட்டி, கெளரி கல்யாண வைபோகமே’’ என்று பாடுவது வழக்கம். இந்தப் பாட்டில் தொடர்ந்து, ‘சீதாராம கல்யாண வைபோகமே, ராதாகிருஷ்ண கல்யாண வைபோகமே’ என்று பாடுவார்கள். இது நெடும் பாடலாக அமைந்ததாகும்.

திருமணக் காட்சிகளை விளக்கும் பாடல்களைப் பாடி வந்தால் பாடுபவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் தொடர்ந்து நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை. வைணவர்கள் ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் உள்ள, ‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத’ என்ற பாசுரத்தைப் பாடி மகிழ்கின்றனர்.

முருகனடியார்கள் வள்ளியின் திருமணத்தைச் சிந்தித்து மகிழ்கின்றனர். வள்ளித் திருமணத்தைப் படிக்கும் கன்னியர்க்கு அழகும், நல்ல குணமும் நிறைந்த மணவாளன் கிடைப்பான் என்பது உறுதி!
வள்ளித் திருமணத்தை முழுவதுமாக சிந்தித்துப் பாராயணம் செய்யமுடியாமல் போனாலும், பின்வரும் மூன்று பாடல் களையாவது தினமும் பாராயணம் செய்து பலன் அடையலாம்.

‘வள்ளி கல்யாண வைபோகமே!’

பாடலைப் படிக்கும் முன்பாக, சிறிய முன்கதைச் சுருக்கத்தைக் காண்போம். தினைப் புனம் காத்திருந்த வள்ளியிடம் சென்று காதல் மொழி பேசி மகிழ்ந்த முருகன், அவளை அழைத்துக் கொண்டு சென்று ஒரு சோலையில் தங்கியிருந்தார். அதையறிந்த வள்ளியின் தந்தையான நம்பிராஜனும் சகோதரர்களும் படை திரட்டிக்கொண்டு சென்று, அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்.

அப்போது முருகனின் கையில் இருந்த சேவல் பெருங் குரலெடுத்துக் கூவியது. அந்தப் பெரிய இடி போன்ற குரலால் வேடுவர் அனைவரும் வீழ்ந்து மாண்டனர். அங்கு வந்த நாரதர், முருகனிடம் அனைவரையும் உயிர்ப்பிக்கும்படி வேண்டிக் கொண்டார். முருகன் கடைக் கண்ணால் பார்க்க, எல்லோரும் உயிர்பெற்று எழுந்தனர். நம்பிராஜனும் அவனது குமாரர்களும் முருகனை வணங்கினர்.
இனி, பாடல்கள் சொல்லும் கதையைப் பார்ப்போம்.

முதற் பாடல்:

அன்னதோர் வேளை தன்னில் ஆறுமுக முடைய வள்ளல்
தன்னுழை இருந்த நங்கை தனையரு ளோடு நோக்கக்
கொன்னவில் குறவர் மாதர் குயிற்றிய கோலம் நீங்கி
முன்னுறு தெய்வக் கோலம் முழு தொருங்குற்ற தன்றே!


 கருத்து: முருகன் ஆறு திருமுருகங்களும் பன்னிரண்டு தோள்களும் கொண்டவராகக் காட்சி தந்தார். அவர் தன்னருகில் இருந்த வள்ளியை அருளுடன் பார்த்து, ‘நீ மேற் கொண்ட குறப்பெண் கோலத்தை விடுத்து, முன்னம் இயல்பாக இருக்கும் உனது தேவ வடிவை அடைவாய்’ என்றார். வள்ளி தனது குறக்கோலத்தை விடுத்து, தனது தெய்வப் பெண் வடிவம் கொண்டாள்.

இரண்டாவது பாடல்:

அந்த நல் வேளை தன்னில் அன்புடையக் குறவர் கோமான்
கந்த வேற் பாணி தன்னில் கன்னிகை கரத்தை நல்கி
நந்தவ மாக்கி வந்த நங்கையை நயப்பால் இன்று
தந்தனன் கொள்க வென்று தண்புனல் தாரை உய்த்தான்.


கருத்து: அந்த நல்ல வேளையில் குறவர் அரசனான நம்பிராஜன் கந்தவேளின் கையில் வள்ளியின் கையை வைத்து, ‘எங்களது பெருந்த வத்தால் எம்மிடம் வந்த இந்த நங்கையை விருப்போடு உமக்குத் தந்தேன்’, என்று கூறியதுடன், நீரைத் தாரையாக வார்த்தான்.

மூன்றாவது பாடல்:

நற்றவம் இயற்றுத் தொல்சீர் நாரதன் அனைய காலைக்
கொற்றம துடைய வேலோன் குறிப்பினால் அங்கியோடு
மற்றுள கனுந் தந்து வதுவையின் சடங்கு நாடி
அற்றமது அடையா வண்ணம் அருமறை
விதியாற் செய்தான்.


கருத்து: நல்ல தவத்தைச் செய்து கொண்டிருப்பவரும், பழம்பெருமை வாய்ந்த வருமான நாரதரை, முருகன் நோக்கினான். அவர் அவனது குறிப்பை உணர்ந்து, வேள்வித் தீயை மூட்ட, வேத விதிப்படியான அனைத்துச் சடங்குகளையும் செய்தான்.

 இந்த மூன்று பாடல்களையும் தினமும் படித்து வந்தாலே வள்ளித் திருமணத்தைப் பாராயணம் செய்த பலனைப் பெறலாம். நாமும் படிப்போம்; பயன்பெறுவோம்!