
வில்லுபுரம்... விழுமியபுரம்... விழுப்புரம்!
‘எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கும் ஊர். அறியாமையிலிருந்து விழிப்பைத் தரக்கூடிய ஊர் ஆதலால், விழுப்புரம் என்று பெயர் இந்த ஊருக்கு’ என ஆன்மிகச் சான்றோர்கள் பலரும் பாராட்டும் ஊர் விழுப்புரம்.
வாரியார் சுவாமி வேறொரு காரணத்தைச் சொல்வார். ‘விழுப்புரம் என்றால் விழுமியபுரம் என்று பொருள்’ என்பது அவருடைய கருத்து. வில்லுபுரம் என்றொரு பெயரும் உண்டு இவ்வூருக்கு!
திருக்குறள் வீ.முனிசாமி வில்லுபுரம் என்ற பெயருக்குக் காரணம் ‘ராமாயணம்’ என்பார். எனினும், அது கர்ணபரம்பரையாகச் சொல்லப் படும் கருத்து எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
‘ராமாயணத்தில் பொன் மான் சம்பவம் நிகழ்ந்தபோது, ராமனும் சீதையும் இருந்தது தண்டகாரண்யம். அதுவே தற்போதைய திண்டி வனம், சீதை பொன்மானைக் கண்ட இடம் கண்டமானடி. ராமன் வில் வளைத்து அம்பால் குறிபார்த்து எய்த இடம் வில்லுபுரம். இந்த வில்லுபுரம் என்ற பெயரே விழுப்புரம் ஆனது’ - இதுவே திருக்குறள் வீ.முனிசாமி மேற்கோள் காட்டும் செவிவழித் தகவல். விழுப்புரம் ரயில் நிலைய பெயர் பலகையின் ஆங்கில பதம் வில்லுபுரம் (Villupuram junction) என்றே அறிவிக்கிறது!
இந்த ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில் மூலவர் சந்நிதியும், பெருமாள் கோயில் மூலவர் சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. ஸ்வாமிகள் இருவரது விழிகளும் ஒரே புறத்தை நோக்கி இருப்பதால், ‘விழி ஒரே புறம்’ என்று பெயர் வழங்கப்பட்டு, அதுவே, பின்னாளில் விழுப்புரம் ஆகிவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு.

விழுப்புரம் அருகிலுள்ள வில்லியனூர் எனும் பகுதியில் வாழ்ந்த வில்லியர்கள் என்ற சமூகத்தவர் தொடர்பால் வில்லிபுரம் என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே பின்னர் விழுப்புரம் என்று மருவியிருக்கலாம் என்றும் ஒரு தகவல் உண்டு.
சரித்திரக் காலத்தில் இதன் பெயர் என்ன தெரியுமா? விஜயநிருபதுங்க செயந்தாங் கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம் என்றெல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது இவ்வூர்.
பல்லவப் பேரரசன் நிருபதுங்கவர்மன் இப்பகுதிக்கு ‘விஜயநிருபதுங்க செயந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம்’ எனத் தனது பெயரை இட்டு, நான்கு வேதமும் ஓதும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கியிருக்கிறான். ‘ஜனநாதச் சதுர்வேதி மங்கலம்’ என தனது பெயரை இந்தப் பகுதிக்குச் சூட்டியது, முதலாம் ராசராசன்.
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலம் (கி.பி.1265) முதல் விழுப்பரைய புரம் என அழைக்கப்பட்டு, அதுவே பின்னர் விழுப்புரம் என மருவியதாகவும் சொல்லப் படுகிறது.

‘சோழர்கள் காலம் வரை யில் பிரம்மதேயமாயிருந்த நடு நாட்டுச் சதுர்வேதி மங்கலத்தில், அப்புறம் காடவராயர் ஆட்சி ஏற்பட்டு அதற்கும் அப்புறம் பாண்டியன் பிடித்தபோது விழுப்பரையர்களே அங்கே நிர்வாகத்தில் முக்கியமான ஸ்தானம் வகிக்கிற சமூகமாக ஆகி, அதனால்தான் ஊருக்கே விழுப்புரம் என்று பேர் மாறியிருப்பதாகத் தோன்றுகிறது’ - என்பது காஞ்சி மஹா பெரியவா அளித்த விளக்கம். இந்த தகவல், ‘காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம்’ எனும் நூலில் இடம் பெற்றிருக்கிறது.
1894-ம் ஆண்டு மே மாதம் 20-ம் நாள் பானு வாரம், அனுராதா நட்சத்திரம் கூடிய சுப தினத்தில், விழுப்புரம் கிழக்கு ஹனுமார் கோயில் தெருவில் சுப்ரமணிய சாஸ்திரிகள் - மகாலட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ஒரு மகான். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் சுவாமிநாதன்.
சுவாமிநாதன், விழுப்புரத்துக்கு அருகிலுள்ள திண்டிவனத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, பள்ளி நாடகத்தில், ஆர்தர் இளவரசர் வேடத்தில் நடிக்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார் ஆசிரியர். முதலில் அவனுடைய தந்தை அதற்கு மறுத்தாலும், பின்னர் மகன் நாடகத்தில் நடிக்கச் சம்மதித்தார். சிறுவனும் சிறப்பாக நடித்துப் பரிசும் பெற்றான். அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல, நடமாடும் தெய்வமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த மகாபெரியவாதான்!
மகாபெரியவர் விழுப்புரத்தில் அவதரித்த இடம், அவதார ஸ்தலமாக மாற்றப்பட்டு அங்கு வேதபாட சாலை நடந்து வருகிறது.
கி.பி.1471-ல் இந்த ஊர் பெரும் வெள்ளப் பெருக்கைச் சந்தித்தது என்கிறார்கள். தென்பெண்ணை மற்றும் பம்பை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிட, கயிலாசநாதர் கோயிலும் வெள்ளத்தில் மூழ்கியதாம். பிறகு மெள்ள மெள்ள புனரமைக்கப்பட்டதாம் இந்நகரம்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க விழுப்புரத்தின், பழைமைக்கும் ஆன்மிக பெருமைக்கும் சான்றாகத் திகழ்கின்றன, இங்குள்ள வைகுந்தவாசப் பெருமாள் கோயிலும், கயிலாசநாதர் கோயிலும்!
விழுப்புரம் நகரின் ஈசான்ய மூலையில் பெரியநாயகி சமேதராய் கோயில் கொண்டிருக்கிறார் கயிலாசநாதர். ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்க, ஸ்வாமி கிழக்கு நோக்கி அருள்கிறார். கோயிலின் நந்திமண்டபம், விஜயநகர பேரரசின் கலைத்திறனுக்குச் சான்றாக விளங்குகிறது.

அம்பாள் சந்நிதியையும் அர்த்த மண்டபத்தின் முன்பகுதியையும் இணைக்கும் மகா மண்டபம் நாற்பது தூண்களுடன் திகழ்கிறது. ஒவ்வொன்றிலும் நாயக்கர் காலச் சிற்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. அர்த்த மண்டபம் சோழர் காலத்தை சார்ந்தது. இங்குள்ள பிச்சைபுகும் பெருமானின் சிற்பம் முதலாம் ஆதித்தன் காலத்தைச் சார்ந்தது.
சைவம் - வைணவம் இரண்டையும் ஒரு சேர ஆதரித்த மண் விழுப்புரம். ஆம், கயிலாசநாதரும், வைகுந்தவாசப் பெருமாளும் வீற்றிருக்கும் தலம் இது. இந்த ஆலயங்கள் மட்டுமின்றி, மாரியம்மன், செல்லியம்மன், திரௌபதி அம்மன், வடபத்திரக் காளியம்மன் கோயில்களும் விழுப்புரத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. மேலும், எல்லை தெய்வங்களான ஐயனார், மதுரை வீரன் கோயில்களும் இந்த ஊரில் உள்ளன
விழுப்புரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வைகுந்த வாசபெருமாள் ஆலயம், ‘நடுநாட்டின் வைகுந்தம்’ எனப் போற்றப்படுகிறது. இது முதல் ஆழ்வார்கள் மூவராலும் திருமங்கை ஆழ்வாராலும் தரிசிக்கப்பட்ட தலமாகும்.
தாயார் சந்நிதியின் நுழை வாயில் அருகே சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கொற்றவையின் திருவுருவம் காணப்படுகிறது. மகிஷனின் தலை மீது நின்ற நிலையில் எட்டுக் கைகளுடன் தேவி காட்சியளிக்கிறாள்.

திருமணமாகாத பெண்கள் 18 வாரங்கள் நோன்பு இருந்து, செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமை களில் ராகு காலத்தில் இந்தக் கோயிலுக்கு வந்து, இந்த கொற்றவைக்கு எலுமிச்சைப் பழத்தில் நெய் தீபமேற்றி வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும் என்பது, இந்தப் பகுதி பெண்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
விழுப்புரத்தின் சரித்திரப் பொக்கிஷமாகத் திகழ்கிறது, இங்குள்ள ஆதிவாலீஸ்வரர் திருக்கோயில். விழுப்புரத்தின் வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுகளை தன்னகத்தே கொண்டுள்ள இக்கோயில் பழைய பஸ் நிலையத்தின் பின்புறம் (பூந்தோட்டம்) அமைந்துள்ளது.
பூந்தோட்டம் ஆதிவாலீஸ் வரர் கோயில், மகாராஜபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகியவற்றின் கல்வெட்டுகள் மற்றும் வைகுந்தவாசப் பெருமாள் கோயில் செப்பேடு ஆகியவை இன்றைக்கும் பெரும் பொக்கிஷமாகத் திகழ்கின்றன.
காஞ்சி மஹா பெரியவர் அவதரித்த இவ்வூர், அவரால் போற்றப்பட்ட மற்றொரு மஹானின் பாததீட்சையால் புனிதம் அடைந்திருக்கிறது.ஆம்! ரமண மகரிஷியின் பாதம்பட்ட மண் விழுப்புரம். அண்ணாமலையாரின் அடி தொழுவதற்காக, திருவண்ணா மலைக்குப் புறப்பட்டு வந்த ரமணர், விழுப்புரத்துக்கு வந்துள்ளார். இவ்வூரின் வீதிகளில் ஒரு நாள் நடந்து திரிந்துள்ளார்.
விழுப்புரத்தில் கோட்டை ஒன்றும் இருந்துள்ளது. சரித்திர சாட்சியாக நின்ற விழுப்புரம் கோட்டை 1803-ல் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது எனச் சொல்கிறார்கள்.
கயிலாசநாதர் கோயில் அருகில் உள்ள சித்தேரிக்கரை அல்லது மந்தக்கரைப் பகுதிகளில் ‘ விழுப்புரம் கோட்டை’ இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு சாட்சி சொல்வது போல், பெருமாள் கோயில் தெருவில் உள்ள விநாயகர், ‘கோட்டை விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார்.
விழுப்புரத்தில் நடந்த பிரிட்டிஷ் பிரெஞ்சுப் போர்களின்போது பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கிகள், பின்னாளில் கயிலாசநாதர் கோயில் அருகே புதைப்பொருளாய் கண்டெடுக்கப்பட்டன. இதில் ஒன்று விழுப்புரம் நகராட்சிப் பூங்காவிலும், மற்றொன்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு மிக அருகில், 36 வது கி.மீ-ல் இருக்கும் ஊர் விழுப்புரம். அன்றைய புதுச்சேரியை பிரெஞ்சு அரசு ஆண்டது. அருகில் உள்ள நம் ஊரோ பிரிட்டிஷ் ஆளுகையில் இருந்தது. இங்கிருந்து புதுச்சேரிக்கு சைக்கிளில் செல்ல வேண்டும் என்றால் கூட பாஸ்போர்ட் பெற்றிருக்க வேண்டுமாம்!
விழுப்புரம் ரயிலடி விநாயகர் கோயிலும், இங்கு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது.
வள்ளலார் அருள் மாளிகை, விழுப்புரத்தின் மற்று மோர் ஆன்மிக அடையாளம்.
ஒருகாலத்தில் சமணமும் இங்கு தழைத்து வளர்ந்திருக் கிறது. பெளத்தமும் போதிக்கப் பட்டிருக்கிறது. இங்குள்ள பயணிகள் தங்கும் விடுதி அருகில் சமணக் கோயில் இருந்ததாக வரலாற்றுத் தகவல்கள் உண்டு.


ரயில் நிலையத்தில் பழைய லோக்கோ ஷெட் அருகே சிதைந்த நிலையில் உள்ள புத்தர் சிலையைக் காணலாம்.
விழுப்புரம் சரித்திரத் திலேயே மிக முக்கியமானது, இங்கே ரயில் நிலையம் நிறுவப் பட்டதுதான். இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் துருப்புகளை எடுத்துச் செல்லும் முக்கியக் கேந்திரமாகத் திகழ்ந்த விழுப்புரம் ரயில் நிலையம், தேச விடுதலைககான போராட்டத்திலும் முக்கியப் பங்காற்றியுள்ளது.
விழுப்புரத்தில் இருந்த மிகப்பெரிய ஏரி-பூந்தோட்டம் ஏரி. இதன் பரப்பளவு சுமார் 118 ஏக்கர். சென்னை தேசிய நெடுஞ் சாலையையொட்டி அமைந்திருந்தது இது. தென்பெண்ணையாற்றில் இருந்து இந்த ஏரிக்குக் கொண்டு வரப்பட்ட நீர், கோலியனூரான் கால்வாய் வழியாக சாலமேடு ஏரி, மருதூர் ஏரி, அய்யனார் குளம், கீழ்ப்பெரும்பாக்கம் ஏரிகளுக்கு சென்று பாசன வசதியைப் பெற்றுத் தந்தது. காலப்போக்கில் வரத்து வாய்க்கால்கள் தூர்ந்துவிட, காய்ந்து போனது பூந்தோட்டம் ஏரி.
சமண சமயத்தின் இருப்பிடமான செஞ்சி, மேல்சித்தாமூர், அனந்தமங்கலம், ஜம்பை, பாடல்பெற்ற சைவத் தலங்களான திருவாமாத்தூர், பனையபுரம், திருவெண்ணெய் நல்லூர், வைணவத் தலங்களான திருக்கோவி லூர், தளவானூர், பரிக்கல், திருவரங்கம், பூவரசங் குப்பம், பல்லவர் கால குடைவரைக் கோயில் உள்ள மண்டகப்பட்டு, பனைமலை, சிங்கவரம், மேலச்சேரி ஆகிய திருத்தலங்கள் விழுப்புரத்தை மையமாகக் கொண்டு திகழ்கின்றன.
கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல், சுந்தர மூர்த்தி நாயனார், கவிகாளமேகம் ஆகியோரை தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பெருமையும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேரும்.
ஆன்மிகம் மட்டுமின்றி, விழுப்புரம் மண்ணின் சரித்திர மகிமைகளுக்கு கட்டியம் கூறும் வகையில், இவ்வூருக்கு அருகில் அமைந்திருக்கின்றன. செஞ்சிக் கோட்டையும், தியாகதுருகம் கோட்டையும்.
சிவன், கர்ணன், திருநாவுக்கரசர், சேக்கிழார் பெருமான், ஆழ்வார்கள் என தெய்வீக-புராணக் கதாபாத்திரங்களிலும், ராஜராஜ சோழன், கட்டபொம்மன், மராட்டிய சிவாஜி என சரித்திரக் கதாபாத்திரங்களிலும் அதிகம் நடித்து உலகப் புகழ் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தது விழுப்புரத்தில்தான்.

மூவாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கீழ்வாலை, செத்தவரை, நெகனூர்பட்டி, பெருமுக்கல் - பாறை ஓவியங்கள், காலம் இன்னதென்று வரையறுக்க இயலாதவாறு மிகப் பழைமை வாய்ந்த திருவக்கரை கல் மரம் ஆகியன, விழுப்புரத்தின் தொன்மைச் சிறப்புக்கு சான்றுகளாகத் திகழ்கின்றன.
படங்கள்: ஏ.ராஜேஷ்
அடுத்த இதழில்... தூத்துக்குடி
தொகுப்பு: ஏ.பழநியப்பன், தி.ராமகிருஷ்ணன், எல்.ஜெயவேல், மு,பிரியா, இ.முருகேசன், எம்.கலைப்ரியா, ஆனந்தி நடராஜன், சி.வாசுதேவன், மு.கணேஷ்குமார், சி.நந்தினி, சகுந்தலா வரதராஜன், எம்.வேணுகோபாலன்.
வாசகர்களே!
இந்த ‘ஊர்வலம்’ பகுதி முழுக்க முழுக்க உங்களுக்கான பகுதியே! உங்கள் ஊர், உங்கள் சாமி, உங்கள் வழிபாடு-கலாசாரப் பெருமைகள் குறித்த தகவல்களை இந்த பகுதியில் வழங்கப்போவது நீங்கள்தான்.
ஒவ்வோர் இதழிலும் ஒவ்வோர் ஊர் பற்றிய தொகுப்பு இடம்பெறும். அதுகுறித்த அறிவிப்பு முந்தைய இதழிலேயே வெளியாகும். ஆன்மிகம், கோயில்கள் குறித்த தகவல்கள் மட்டுமின்றி, குறிப்பிட்ட ஊரின் சரித்திரப் பெருமைகள், அங்கு வாழ்ந்த அல்லது வந்து அருள் வழங்கிச் சென்ற மகான்கள், அந்த ஊரில் செயல்படும் ஆன்மிக அமைப்புகள், அவர்களின் திருப்பணிகள், அந்த ஊருக்கே உரிய மண்சார்ந்த விரத வழிபாடுகள் என உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் அனைத்தையும் எங்களுக்கு எழுதி அனுப்பலாம். தகுதி உள்ளவை சக்தி விகடன் இதழில் பிரசுரமாகும்.
தபாலில் மட்டுமின்றி இ.மெயில், ஃபேஸ்புக் மூலமாகவும் தகவலை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி: சக்தி விகடன் - ஊர்வலம்
757 அண்ணாசாலை, சென்னை-600 002.
Email: svdesk@vikatan.com, www.facebook.com/sakthivikatan
லட்சுமி வாசம்!

வில்வ மரம் மகாலட்சுமியுடன் தோன்றியது. அந்த மரத்தில் லட்சுமி வசிப்பதால் அதற்கு லட்சுமி வாசம் என்று பெயர். வில்வமரத்தடியில் தாமரைத் தண்டு நூலிட்டு நெய்விளக்கேற்றி வழிபட... செல்வம் உண்டாகிப் பெருகும்.
- கு.விஷ்ணு, சேலம்