திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

திருமுருகனின் இரு முகங்கள்!

திருமுருகனின் இரு முகங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
திருமுருகனின் இரு முகங்கள்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

காலத்தால் முற்பட்ட ரிக் வேதத்தில், (சிவபெருமானின் நெற்றியிலிருந்து தீப்பொறியாகத் தோன்றியதால்) அக்னியின் அம்சமாகக் கூறப்படுகிறான் ஸ்கந்தன். அக்னியில் இருந்து தோன்றிய குமாரனாக சதபதபிரமாணம் எடுத்துரைக் கிறது. ‘குஹா’ என்ற பெயரும் ரிக்வேதத்தில் அக்னி தொடர்புடன் விளங்குகிறது.

வேத காலத்தில் இந்திரனும் அக்னியும் சேனைகளுக்குத் தலைவர்களாகக் குறிப்பிடப்பட்டனர். மேலும், ரிக் வேதத் தில் பல இடங்களில் போர்க் கடவுளாக அக்னி திகழ்கிறார்.கிருஷ்ணயஜூர் வேதத்தில் - ‘காடகம்’ சம்ஹிதையில் அக்னியிலிருந்து குமரன் தோன்றியதாகக் காணப்படுகிறது. அதர்வண வேதத்திலும் அக்னியை போர்க்கடவுளாக அறிய முடிகிறது. ஸ்கந்தன் அக்னியின் புதல்வனாக வேதங்களிலும், புராணங்களிலும் விவரிக்கப்படுவதால், வீரத்தின் மொத்த உருவமாக கூறப்படுகிறான். இதனா லேயே குமரனை ‘அக்னி பூ:’ (அக்னிபுத்ரன்) என்று அதர்வண வேதம் கூறுகிறது.

தேவர்களின் சேனாபதியாக - வீரத்திருமகனாக விளங்கிய ஸ்கந்தன், தாரகனை வதம் செய்தவன். மஹா பாரதத்தில் சல்ய பர்வத்தில் இந்த வீரச்செயலை பலராமர் பாண்டவர்களுக்கு விவரிக்கிறார். அதில் ஸ்கந்தப் பெருமா னுக்கு தேவசேனாபதியாக பட்டம் சூட்டப் பெற்றபோது நிகழ்ந்த சம்பவம் ஒன்று விவரிக்கப்படுகிறது.

திருமுருகனின் இரு முகங்கள்!

சரஸ்வதி நதி தீரத்தில் ஸ்கந்தனுக்கு பிரம்மா தலைமைப் பட்டம் சூட்டுகிறார். அப்போது ஸ்கந்தனின் தோற்றத்துக்குக் காரணமான சிவபெருமான், பார்வதி, அக்னி, கங்கை உள்ளிட்ட அனைவரும் சூழ்ந்திருந்தனர். தமது பெற்றோரை வணங்கி ஆசிபெற விரும்பிய ஸ்கந்தன் நான்கு வடிவங்களாகப் பிரிந்தான். ஸ்கந்தனாக சிவபெருமானையும், விசாகனாக (கன்று) பார்வதி தேவியையும், சகனாக அக்னி பகவானையும், நைக மேயனாக கங்காதேவியையும் வணங்குகிறான். இந்த ஸ்கந்தன் யார்? இவன் ஒருவனா, இருவனா, மூவரா, நால்வரா? வியப்பாக உள்ளதே என்று மலைத்துப்போய் விவரிக்கிறது மஹாபாரதம்.

இதேபோல மஹாபாரதம் அனுசாசன பர்வத்தில் அம்புப் படுக்கையில் பீஷ்ம பிதாமகர் படுத்திருக்கும்போது பிரபஞ்சத்தின் தொடக்கமான (ஹிரண்ய கர்ப்பம்) பொன் மயமான முட்டையின் தோற்றம் பற்றி தருமனிடம் விவரிக்கும்போது, அக்னி பகவானையும் அவனது அம்சமான ஸ்கந்தனின் தோற்றத்தையும் கூறுகிறார். ராமாயணத்திலும் ஸ்கந்தன் அக்னியின் புதல் வனாகவே குறிப்பிடப் பெறுகிறான். இதே குறிப்பை விஷ்ணு மற்றும் வாமன புராணத் திலும் காணமுடிகிறது. விசாகன், சகன், நைகமேயன் ஆகியோர் குமரனது இளைய தம்பிகளாகக் கூறப்படுகின்றனர்.

மேலும், ஸ்கந்தன் ஆழ்ந்தகன்ற மெய்யறிவு நிறைந்தவன்; கல்வி கரைகண்ட புலவன். ரிக் வேதத்தில் அக்னி ‘விஸ்வதத்’ - எல்லாம் தெரிந்தவன்; ‘விஸ்வதேவா’ - எல்லா அறிவும் உடையவன்; ‘கவி’ - புலமை நிறைந்தவன்; ‘கவிகிரதன்’ - அனுபவ அறிவுத்திறம் உடைய வன் என்று புகழப்படுவதால், அக்னியின் அம்சமான ஸ்கந்தன் மேற்குறித்த அனைத்து ஆற்றலும் நிறைந்தவன் அல்லவா?

அக்னிக்கு மிகவும் புனிதமான வாகனமாக ஆடு குறிப்பிடப் பெறுகிறது. இதிகாசங்களில் ஆட்டு வாகனத்துடன் ஸ்கந்தன் தொடர்புபடுத்தப்படுகிறான். நாரதர் செய்த வேள்வியில் ஒரு ஆடு வடவாக்னி போல கொதித்து எழுந்தது. அதைக் கண்டு மருண்ட தேவர்கள் முருகனைச் சரணடைய, அவர் வீரவாகு தேவரை அனுப்பி அதனைப் பிடித்து வரச் செய்து, அதன் மேல் ஏறி அமர்ந்தார். இவ்வடிவை அஜாரூடர் - ஆட்டு வாகனர் என்றழைப்பர்.

வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத் அருங்காட்சியகத்தில், சுற்றிலும் நெருப்புச் சுடரான நாக்குடன் அக்னியின் வடிவம் காணப் படுகிறது. இதன் வலப்புறம் மயிலுடன் ஒரு உருவம் உள்ளது. அது ஸ்கந்தன்தானே!

நாகை மாவட்டம், நன்னிலம் - நாகப் பட்டினம் வழியில் உள்ள திருப்புகலூர் அக்னீச்வர ஸ்வாமி திருக்கோயிலின் அக்னி பகவானின் அற்புதமான வடிவம் கண்டு இன்புறத்தக்கது. அக்னி இரண்டு முகம், ஏழு கரங்கள், மூன்று பாதங்கள் (கால்கள்), நான்கு கொம்புகள் மற்றும் ஏழு ஜ்வாலைகளுடன் தோற்றமளிக்கிறார். இது ஓர் அபூர்வமான வடிவமாகும்.

திருமுருகனின் இரு முகங்கள்!

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய அக்னியின் வடிவமான முருகனுக்கு ‘அக்னிஜாதா’ (அக்னி குமாரன்) என்று பெயர். அக்னியை உடலாக உடைய முருகனை ‘பாவகி’ என்பர் (‘பாவகி கூர்வேல் காக்க’ என்று சண்முக கவசத்தில் பாம்பனார் போற்றுவார்) அக்னிக்கு இரண்டு முகங்கள் உள்ளதுபோல் இவ்வடிவிலும் கந்தனும் இரண்டு முகங்கள் எட்டு கரங்களுடன் திகழ்கிறார்.

வஜ்ரசக்தி, கோழிக்கொடி, கேடயம், ஆஜ்ய (நெய்) பாத்திரம் (யாகத் தீயில் நெய்யிடுவதற்குப் பயன்படும்) சுருவம், அட்சமாலை, கத்தி, ஸ்வஸ்திகம் என்னும் எட்டு பொருட்களை ஏந்தியுள்ளார். நின்ற கோலத்தில் அமைந்த இந்த அற்புத வடிவை சென்னிமலை முருகன் கோயில் மூலஸ்தான கோஷ்டத்தில் தரிசிக்கலாம். இவ்வடிவை ‘ஸ்ரீதத்வ நிதி’ என்னும் சிற்பநூல் விவரிக்கிறது.

இதே அக்னி ஜாதரின் மிக அருமையான சிற்பத்தைக்காண திருக்குறுங்குடி செல்ல வேண்டும். திருநெல்வேலி - நான்குநேரி வழியில் திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி திருக்கோயிலில் உள்ள சித்ர கோபுரத்தில், பல அரிய சிற்பக் காட்சிகள் நம்மை ஈர்க்கும். அவற்றில் உள்ள அக்னிஜாதர் சிற்பம் இரண்டு முகங்கள், மூன்று கால்களோடு காட்சி அளிக்கிறது. இடது காலை மடித்து வலது கால் இரண்டையும் தொங்கவிட்ட நிலையில் எட்டு கரங்களிலும் மேற்கூறிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளார். தலையில் ஜடா மகுடம், கழுத்தில் கண்ணிமாலை, மார்பில் வாகுவலயம், கரங்களில் கங்கணம் அணிந்து புன்னகை ததும்பும் முகம் மிக மிக அழகு.

மேற்புறம் இரண்டு தேவ அரம்பையர் பூமாரி சொரிய, வலது பாதத்தின் அருகில் ஆட்டுக்கிடா ஒன்று காணப்படுகிறது. மிகத் திறமை வாய்ந்த சிற்பியின் அற்புதக் கலைப்படைப்பைக் காண்பதற்காகவே திருக்குறுங்குடி சென்று வரலாம் அல்லவா?

படங்கள்: ஜெ.லக்ஷ்மிநாராயணன்