
புதிய தொடர் - 1
மந்திரம் - மனதைச் செம்மைப்படுத்துவதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் ஏற்படும் பலதரப்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கும் மகரிஷிகளால் கண்டறியப்பட்டு, மனித குலத்துக்கு அருளப்பட்ட ஒப்பற்ற சாதனமாகும்.
மந்திரம் ஜபிப்பதை மந்திர யோகம் என்று சொல்வார்கள். அதன் சிறப்பே, நம்மை அது உயர்த்துகிறது என்பதுதான். தவறாகப் பயன்படுத்தினால், அது நம்மைக் கீழே தள்ளிவிடும். மந்திரத்தைப் பிரயோகம் செய்பவர் அதற்குத் தகுதியானவராக இருக்கவேண்டும். இது மிகவும் முக்கியம். தகுந்த குருநாதரிடம் உபதேசம் பெற்று மந்திரங்களை ஜபிப்பது சிறப்பு.
நாத பிரம்மம் நம்முடைய இதயத்தில் இருந்து தோன்றுவது. முனிவர்கள் அங்கேதான் தெய்வத்தின் குரலைக் கேட்பார்கள். அனாஹத சக்ரம் என்று இதற்குப் பெயர். தவ வலிமை மிக்க முனிவர்களால் முப்பத்து முக்கோடி தேவர்கள் பேசுவதையும் இவ்வாறு கேட்க முடிந்தது. ஒவ்வொரு தேவதையுடன் பேச ஒவ்வொரு மந்திரம் தேவையாக இருந்தது. எந்தத் தேவதைக்கு எந்த மந்திரம் என்பதை முனிவர்கள் கண்டறிந்திருந்தனர். அதன் படியே அவற்றை நமக்கு அருளி உள்ளனர்.

இந்த மந்திரங்களைச் சரியான முறையில் உச்சரிப்பு பிசகாமல் ஜபிக்க வேண்டும். இதற்கு குருநாதரின் உபதேசம் உதவும். அதுமட்டுமல்ல, எந்தக் காரியத்துக்கு எந்தத் தேவதையை, எந்த மந்திரம் சொல்லி வழிபடவேண்டும் என்பதையும் ஒரு குருநாதர்தான் நமக்குத் தெளிவு படுத்த முடியும்.
இப்படி குருநாதர் மூலம் மந்திர உபதேசம் பெற்று ஜபிக்கும்போது, அதற்குரிய பூஜை கிரியைகளுடன் பக்திபூர்வமாக ஜபிக்கவேண்டும். மந்திரத்துக்கு உரிய தேவதையை முறைப்படி ஆவாஹனம் செய்து, முறையான கிரியைகளைச் செய்து மந்திரங்களை ஜபிக்கவேண்டும். தேவதைக்கு உரிய மந்திரத்தை உரிய முறையில் உச்சரிப்பு பிசகாமல், நாதம் எழும்படி ஜபிக்கவேண்டும். அப்போதுதான் மந்திரங்கள் உரிய பலனைத் தரும். வெறுமனே யந்திரகதியில் ஒப்பிப்பதால் பலன் கிடைக்காது.
மந்திரம் என்பது ஒரு விதையைப் போன்றது. விதை நன்கு செழித்து வளர வேண்டுமானால், மண்ணை நன்கு உழுது பக்குவப்படுத்தி, அதன் பிறகு அதை நடவேண்டியது முக்கியம். அதேபோல்தான், குருநாதர் நமக்கு மந்திர உபதேசம் செய்வதற்கு முன்பாக நம்முடைய மனம் உபதேசம் பெறுவதற்குத் தகுதியானதுதானா, உபதேசத்தால் நமக்குப் பலன் கிடைக்குமா என்றெல்லாம் சோதித்துப் பார்த்த பிறகே, நமக்கு அதை உச்சரிப்பு சுத்தமாக மந்திர உபதேசம் செய்வார்.
‘மந்த்ரம் யதாவிதி குரோர் ஸுதினே க்ருஹீத்வா’ என்று ப்ரஸ்ன மார்க்கம் கூறுவதன்படி தகுந்த குருநாதரிடம் சுபமுகூர்த்த வேளையில் முறைப்படி ஜப ஹோமாதிகள் செய்து மந்திர உபதேசம் பெறவேண்டும்.

இந்த மந்திரங்கள் எப்போது யாரால் உருவானவை என்று யாராலும் வரையறுத்துச் சொல்லமுடியாது. மந்திரங்கள் என்பவை யாராலும் இயற்றப்பட்டவை அல்ல. இந்தப் பிரபஞ்சவெளியில் வியாபித்திருந்தவை. அவற்றைக் கண்டறிந்தவர்களே மகரிஷிகள்.
மனிதகுல மேன்மைக்காக இறைவனால் அருளப்பட்ட இந்த மந்திரங்கள் தேவ பாஷை என்று சொல்லப்படும் சம்ஸ்கிருத மொழியில் அமைந்தவை. இந்த சம்ஸ்கிருத மொழியே சிவபெரு மானின் உடுக்கை ஓசையில் இருந்துதான் உருவானது.
ஒருமுறை, சகலலோக சஞ்சாரிகளாகிய ரிஷிகள் தேவலோகம் சென்றார்கள். அங்கே அனைவரும் நரை, திரை, மூப்பு எதுவும் இல்லாமல் அமரத்துவத்துடன் இருப்பதைக் கண்டார்கள். அதேபோல், மனிதகுலமும் பிரச்னைகள் இல்லாமல் வாழவேண்டும் என்று விரும்பினார்கள்.
எனவே அனைவரும் ஒன்றுசேர்ந்து, ‘ஒருவரின் விதியை மாற்றி அமைக்க வல்லமை படைத்தவர்’ என்று ராமசரித மானஸ் போற்றும் பரமேஸ்வரனிடம் சென்று பிரார்த்தித்தார்கள். அவரும் ரிஷிகளின் விருப்பத்துக்குச் சம்மதித்தார். காலங்கள் சென்றன. பரமேஸ்வரனின் அருளை எதிர்பார்த்து, ரிஷிகள் தங்களுடைய கடமைகளைச் செய்தபடி இருந்தனர்.
அப்படி இருந்த காலத்தில், ஒரு சிவராத்திரி புண்ணிய தினத்தன்று பிரதோஷ வேளையில், சிவபெருமான் தாண்டவம் ஆடத் தொடங்கினார். ஏழு வித்தியாசமான தாளங்களில் தம் திருக் கரத்தில் இருந்த உடுக்கையை அடித்தார்.

பதினான்கு முறை அப்படி உடுக்கை அடித்து எழுந்த அந்தச் சப்தமானது அதுவரை கேட்டிராத ஒன்று எனக் கண்டறிந்த பிரம்மாவின் மானஸ புத்திரர்களான சனகாதி முனிவர்கள் அவற்றை அப்படியே சேகரித்து வைத்தார்கள்.
அவையே மகேச சூத்ரம் என்ற 51 அட்சரங்கள் அடங்கிய சம்ஸ்கிருத மொழி. இந்த சம்ஸ்கிருத மொழியில்தான் மந்திரங்கள் பிரபஞ்ச வெளியில் வியாபித்திருந்தன.
மந்திரம் என்பதற்கு விளக்கம் சொல்ல வந்த நிருக்தம் எழுதிய யாஸ்கர் என்ற ரிஷி,
மனனம் விஸ்வ விக்ஞானம் த்ராணம் சம்சார பந்தனாத்
யத: கரோதி ஸம்ஸித்திம் மந்த்ர மித்யுச்யதே ததா:
என்று கூறி இருக்கிறார்.

அதாவது, மந்திரம் என்றால், மனத்தினாலும் ஆவர்த்தனத்தினாலும் ஜீவனை பந்தவிமுக்தி செய்கின்ற சப்த பிரதீகம். ஜனன மரண சம்சார சாகரத்தில் உள்ள துக்கங்களை மாற்றி, அறிவு என்கின்ற அநுபூதியைத் தருவதே மந்திர சாஸ்திரம் ஆகும்.
கர்மபூமியாகிய நம் பாரத தேசத்தில் அநேக ஆயிரம் ரிஷிகள் தோன்றி, நம்முடைய நன்மைக்காக பிரபஞ்ச வெளியில் எங்கும் வியாபித்திருந்த மந்திரங்களைக் கண்டறிந்து அருளியுள்ளனர்.
நம்முடைய தேசத்தில் 48,000 ரிஷிகணங்கள் உள்ளதாக பாரதம் கூறுகிறது. அவர்களில் தேவரிஷி, பிரம்மரிஷி, ராஜரிஷி என மூன்று பிரிவுகள் உண்டு. இந்த ரிஷிகளின் சிறப்பே அவர்களின் தன்னடக்கம்தான்.
ரிஷிகளில் அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்டர், கௌதமர், ஆங்கீரஸர், பாரத்வாஜர், விச்வாமித்திரர், காச்யபர், ஜமதக்னி ஆகியோர் மிகச் சிறந்த ரிஷிகளாகப் போற்றப் பெறுகின் றனர். நமக்கு இன்றைக்குக் கிடைத்திருக்கக்கூடிய அனைத்து விதமான மந்த்ரங்களும், அஸ்திர சாஸ்திரங்களும் அவர்களால் தரிசிக்கப் பெற்று, நம்முடைய நன்மைக்காக அருளப்பட்டுள்ளது.
சந்தான சௌபாக்கிய, பந்தய விஜய, ஐக்யமத்ய, சத்ருசம்ஹார, சுயம்வர, ஜகன்மோகன கணபதி, உக்ரநரசிம்ம, விக்ந நிவாரண, பாலா, சுதர்சன, லக்ஷ்மிகுபேர, பகளாமுகி, மகாலக்ஷ்மி, தன்வந்த்ரி,
மகாமிருத்யுஞ்சய, உச்சிஷ்டகணபதி, லக்ஷ்மிகணபதி, நவநீத கோபாலகிருஷ்ண, லகுசியாமா, சரஸ்வதி, வருண, சூரிய, கிரகதோஷ நிவர்த்தி என்று எண்ணிலடங்காத மந்திரங்கள் உள்ளன.
இந்த மந்த்ரங்களைப் பற்றி மந்த்ரமகோததி, அனுஷ்டான பத்ததி, சாரதா திலகம், மந்த்ர பிரயோக ரகசியம், ஷோடசார்ணவம், சம்ஸ்கார ரத்னமாலை போன்ற பழங்கால நூல்களில் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.

சிறப்பாக, தமிழ்நாட்டில் 1958-ல் வெளிவந்த ‘அஷ்ட லக்ஷ்மி விலாசம்’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்த புத்தகத்தின் 4-ம் பாகத்தில் ‘மணி, மந்த்ர, ஔஷத முறைகள்’ என்ற தலைப்பில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மந்திரமும் ரிஷிகளால் நமக்கு அருளப் பட்டது என்பது நமக்குத் தெரியும். அதேபோல் ஒவ்வொரு மந்திரத்துக்கும் தியான சுலோகம், மூலமந்த்ரம், மாலா மந்த்ரம், ஜபிக்கவேண்டிய முறைகள் என்று சில நியமங்கள் உள்ளன. எனவே, மந்திரங்களை ஜபித்துப் பலன் பெற விரும்புகிறவர்கள், மேலே சொல்லியுள்ளபடி தகுந்த குரு நாதரிடம் உபதேசம் பெற்று ஜபம்
செய்ய வேண்டும்.
நியமங்கள், குரு உபதேசம் என்றெல்லாம் சொன்னதும் மலைத்துவிட வேண்டாம். அனைத்தும் மிக எளிமையான வழிமுறைகளே!
அந்த வழிமுறைகள் குறித்தும், பாமரர்களும் நாள்தோறும் உச்சரித்து உன்னத பலன் அடையும் விதத்திலான இலகு மந்திரங்கள், அவற்றால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் அடுத்தடுத்த இதழ்களில் விரிவாகக் காண்போம்.
- (தொடரும்)
படங்கள்: ரமேஷ் கந்தசாமி
மிளகு தீபம்!

சிவப்புத் துணியில் சிறிதளவு மிளகை வைத்து மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் நிரம்பிய அகலில் இட்டு விளக்கேற்றி பைரவரை வழிபட்டு வந்தால், பொருள் வீண் விரயமாகாது; துன்பங்கள் அகலும்; தொழில் காரணமாகக் கடல் கடந்து வெளிநாடு சென்றிருப்பவர்கள் நன்மை அடைவார்கள்.
- கே.அருண், கோவை