
சுபா கண்ணன்
கடவுளே ஆனாலும்...
‘கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா...’ ராமனைத் துயில் எழுப்ப, விஸ்வாமித்திர மகரிஷியால் அருளப்பெற்ற இந்தப் பாடல் உலகப் பிரசித்தம்.
அரண்மனையில் பஞ்சணையில் தூங்கிப் பழகிய ராம- லட்சுமணர், காட்டில் கல்லிலும் முள்ளிலும் நடந்த அசதி மேலிட கட்டாந்தரையில் துயில்கொண்டனர்.
அரண்மனையில் துயில்கொள்ளும் வேளையில், விடிந்ததும் லாலித்யர்கள் இனிமையாகப் பாடி துயிலெழச் செய்வார்கள். லாலி என்றால், தூங்கும்போது பாடும் தாலாட்டு. இதைப் பாடுபவர்கள் லாலித்யர்கள். லாலித்யர்களின் வேலை தூங்கச் செய்வது. அதேபோல், அமைதியாக துயிலெழுப்புவதும் அவர்களது பணியே!
இங்கே, கௌசிக மஹாராஜன் அதாவது விஸ்வாமித்திரர், எத்தகையதொரு பேரன்புடன் லாலித்யம் செய்கிறார் பாருங்கள். ‘கர்த்தவ்யம் தெய்வமாந்ஹிகம்’ - ‘கடவுளே ஆனாலும் நேரத்தோடு எழு; கர்த்தவ்யமே முக்கியம்’ அதாவது, கர்மமே முக்கியம் என்கிறார்!

ராமனின் சகோதரி!
சூரிய குலம், இக்ஷ்வாகு வம்சம், ரகுவம்சம் என்பவை ராமனின் வம்சத்துக்கான பெயர்கள்.
உலகின் முதல் காவியம் ராமாயணம். இதையடுந்து வந்த காவியங்களுக்கு இதுவே ஆதாரம். முதல் கவிஞர் வால்மீகி. ‘கவீனாம் ப்ரதமோ குரு!’ - கவிகளில் முதன்மையானவர் என்பது வழக்கு.
ராமனின் குலகுரு வசிஷ்டர். ராமனுக்கு அஸ்திர வித்தை கற்றுத் தந்தவர் விஸ்வாமித்திரர்.
ராமனின் பிராட்டி சீதா என்பது எல்லோருக்கும் தெரியும். அவனுடைய சகோதர்களின் பத்தினிகள் யார், யார்? லட்சுமணன்- ஊர்மிளா, பரதன் - மாண்டவி, சத்ருக்னன் - ஸ்ருத கீர்த்தி
ராமனின் உடன்பிறந்தோரைத் தவிர, அவன் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டவர்கள் இருவர் - குகன், விபீஷணன். ராமனுக்கு ஒரு சகோதரியும் உண்டு. அவள் பெயர் சாந்தை; ரிஷ்யஸ்ருங்க மகரிஷியின் மனைவி என்பர்.
சூரிய வழிபாடு!
சூரிய குலத்தில் தோன்றியவன் ராமன். ராம- ராவண யுத்தத்தில் தான் வெற்றிபெற வேண்டும் என சூரியனைக் குறித்து ஸ்துதி செய் தான். இந்த ஸ்லோகங்களின் தொகுப்பே ஆதித்ய ஹ்ருதயம். தினமும் இதைப் பாராயணம் செய்வது விசேஷம்! வீண் பயம், சஞ்சலம், இனம்புரியாத கவலை ஏற்படும்போது, இதைப் பாராயணம் செய்தால் நல்ல தெளிவு கிடைக்கும். ‘சூரியஹ ப்ரத்யக்ஷ தேவதா’ - சூரியனே கண்ணால் காணக்கூடிய தெய்வம் என்பது சம்ஸ்கிருத வசனம். சூரியனுக்கு நல்லது, கெட்டது என்ற பேதம் இல்லை. அனைத்தையும் தூய்மைப் படுத்துவார்.
ராமனின் வெற்றி ஏற்கெனவே நிச்சயிக்கப் பட்டது. எனினும், சூரியனை அவர் ஏன் வழிபட்டார்? சூரியனின் மகிமையை, சிறப்பை, முன்னோரை வழிபட வேண்டும் எனும் பாடத்தை உலகுக்குச் சொல்லவேண்டும் என்ற காரணத்தால்தான்!
சாப்பாட்டு ராமன்?
பீமன் நன்றாக சாப்பிடுபவன்; கிருஷ்ணனோ வெண்ணெய்த் திருடன். ஆனால், இவர்களை எதுவும் சொல்லாமல், நன்றாகச் சாப்பிடுபவர்களை ராமன் பெயரை வைத்தே சாப்பாட்டு ராமன் எனச் சொல்கிறோம். ஏன் இப்படி?
காரணம், ராமன் எவரையும் பட்டினியாக இருக்க விடமாட்டான். சபரி கடித்துச்சுவைத்த பழங்களையே உண்டான். குகனின் விருந்தை யும் அவன் சுவைத்த பிறகே ஏற்றான். ஆக, தனக்கு உணவு அளிப்பவர்களைக்கூட, அவர்கள் பசியாறிய பிறகே தனக்கு உணவு தரும் வண்ணம் செய்பவன் அவன். ஒருமுறை, விருந்தின்போது பந்தியில் அனைவரும் உட்கார்ந்துவிட்டனர். அனுமன் தாமதமாக வந்தான். ராமன் அவனைக் கூப்பிட்டு, தன் இலைக்கு எதிரில் அமரவைத்து உண்ணும்படி செய்தான். அதனால்தான் இலையில் இந்தப் பக்கம் சமைத்த தானிய வகைகள், அந்தப் பக்கம் குரங்கினத்துக்கு விருப்பமான காய்-கனி கறிவகைகள் பரிமாறப்படுகின்றன. ராமனின் பெயரைச் சொல்லி உஞ்சவிருத்தி செய்து பிழைக்கும் ஏழை அடியார்களுக்கும் சாப்பாட்டுக்குத் தேவையான தானியங்கள், காய்கறிகள் கிடைத்துவிடும்; சாப்பாட்டுக்குக் குறையிருக்காது. இப்படி, தன்னைச் சார்ந்தவர்களின் சாப்பாட்டுக்குக் குறைவைக்காத காரணத்தால், அவனைச் சாப்பாட்டு ராமன் என்று தாராளமாகச் சொல்லலாம்தானே?!