
க.புவனேஸ்வரி
‘சரீரத்தை விட்டு ஸித்தியான ஞானிகளுடைய அனுக்ரஹ சக்தியில் ஒரு கலை, அவர்கள் தேக வியோகமான பிறகும் அவர்களுடைய சரீரத்திலேயே இருந்துகொண்டிருக்கும். அந்த ஞானியின் தேகத்தைப் புதைத்து வைத்திருக்கிற இடத்தில் இந்த அனுக்ரஹ கலையானது ஊன்றி நின்று, பக்தர்களுக்குப் பாயும்படியாக, அவர்கள் வாழ்க்கை செழிக்கச் செய்யும்படியாக ஸ்தானம் ஏற்படுத்தித் தரப்படுகிறது. அதனால்தான் ஞானியின் சமாதியை அதிஷ்டானம் என்கிறோம்’ என்று காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் தெய்வத்தின் குரலாக மொழிந்திருக்கிறார்கள்.
ஒரு ஞானியின் அதிஷ்டானமே பக்தர்களுக்கு அளவற்ற நன்மைகளைத் தரும் என்றால், ஒரே இடத்தில் அமைந்திருக்கும் மூன்று ஞானிகளின் அதிஷ்டானங்கள் பக்தர்களுக்கு அளவற்ற நன்மைகளை அள்ளித் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படி ஸ்ரீநல்லூர் ஸ்வாமிகள், ஸ்ரீஸ்வயம் பிரகாசேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்ரீஅச்சுதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற மூன்று ஞானியரின் அதிஷ்டானங்கள் திருவாரூர்-கும்பகோணம் சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள அரசவனங்காடு என்னும் ஊரில் அமைந்திருக்கிறது.


ஸ்ரீ நல்லூர் ஸ்வாமிகள்:
இவர் 1895-ம் ஆண்டு அரசவனங்காட்டில் ஸித்தி அடைந்தார். இந்த ஸ்வாமிகளைப் பற்றிய தெளிவான விவரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், செவிவழிச் செய்தியாக ஸ்வாமிகள் நிகழ்த்திய ஓர் அற்புதம் சொல்லப்படுகிறது.
ஸ்வாமிகள் இந்த ஊரில் தங்கியிருந்தபோது, சுற்றுப்புறங்களில் காலரா நோய் பரவி, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது ஸ்வாமிகள் அந்த ஊர் தலையாரியை தம்முடன் அழைத்துச் சென்று, ஊரின் எல்லைகளைக் காட்டச் சொல்லி, அங்கெல்லாம் விபூதியைத் தெளித்துவிட்டு வந்தாராம். அதனால், காலரா ஊருக்குள் வராமல் தடுக்கப்பட்டதாம்.
இப்போதும்கூட இவரது அதிஷ்டா னத்தை வலம் வந்து வணங்கினால், நாள்பட்ட பிணிகளும் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

ஸ்ரீஸ்வயம் பிரகாசேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்:
நாகப்பட்டினம் பெரியவாள் என்று பக்தர்களால் போற்றப்பெறும் இந்த ஸ்வாமிகள், ஸ்ரீவித்யா உபாசனையில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர். காஞ்சிப் பெரியவர் பட்டத் துக்கு வந்த சமயத்தில், இவர்தான் ஸ்ரீவித்யா பூஜா விதானங்களை எழுதி மடத்துக்கு அனுப்பியதாக ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
இவருடைய அதிஷ்டா னத்தை தரிசித்து வழிபட்டால், குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும் என்றும், தொழிலில் இருந்து வரும் தேக்க நிலை மாறும் என்றும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் பக்தர் கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
ஸ்ரீஅச்சுதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்:
உரியடி வைபவத்துக்குப் பிரசித்தி பெற்ற வரகூரில் பிறந்தவர் என்பதால் வரகூர் ஸ்வாமிகள் என்று பக்தர்களால் போற்றப்பெறும் இவர், ஸ்ரீஸ்வயம் பிரகாசேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்றவர். இவர் மேதா தக்ஷிணாமூர்த்தி உபாசகர். வேத சாஸ்திரங்களிலும் மந்திர சாஸ்திரங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

திருச்சி அருகில் உள்ள அரியூர் என்ற கிராமத்தில் ஸ்வாமிகள் ஒரு வீட்டுக்கு பிக்ஷைக்காக சென்றிருந்தபோது, அந்த வீட்டில் இருந்த ஓர் இளைஞன் இறந்துவிட்டதை அறிந்து, ஸ்வாமிகள் அவ்வூரில் உள்ள வேத பண்டிதர்களை அழைத்து ஸ்ரீருத்ரம் சில ஆவர்த்திகள் சொல்லச் செய்தார். பின்னர் மந்திரசக்தி பெற்ற தீர்த்தத்தை அந்த இளைஞன் மீது தெளித்து அவனை பிழைக்கச் செய்து, அந்த வீட்டிலேயே பிக்ஷை எடுத்துக் கொண்டதாக செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.
ஒருமுறை, பக்தர்கள் சிலர் காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளிடம் சென்று தங்களுடைய குறைகளைச் சொல்லி முறையிட்டபோது, வரகூர் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்துக்குச் சென்று வழிபட்டால் குறைகள் நிவர்த்தியாகும் என்று கூறி அருளினார்.
இவருடைய அதிஷ்டானத்தை தரிசித்து வழிபட்டால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறலாம் என்று பலரும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
அரசவனங்காட்டில் அமைந்திருக்கும் இந்த மூன்று அதிஷ்டானங்களிலும் ஒவ்வொரு வருடமும் ஆராதனை உற்ஸவங்கள் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.
ஒரே இடத்தில் அமைந்திருக்கும் மூன்று மகான்களின் அதிஷ்டானங்களையும் பக்தர்கள் தரிசித்து, வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெறலாம்.

எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?
திருவாரூர்-கும்பகோணம் சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது அரசவனங்காடு. திருவாரூரில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
படங்கள்: க.சதீஷ்குமார்