Published:Updated:

கலகல கடைசி பக்கம்

கலகல கடைசி பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
கலகல கடைசி பக்கம்

பாஸ்வேர்டுயுவா

“டேய்... டேய்... டவலை விடுடா!” என இடுப்புத் துண்டைப் பிடித்துக்கொண்டு பதறினார் அப்பா. டவலைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான் ஒன்பது வயது பிரசாத்.

“பாஸ்வேர்டு சொல்லலைன்னா விட மாட்டோம்” எனக் குளியலறை கதவை மறைத்துக்கொண்டு நின்றாள் நவீனா.

பிரசாத் நாலாம் வகுப்பும் நவீனா ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள். சோறு தண்ணி இல்லாமல் அப்பாவின் ஸ்மார்ட்போனில் விளையாடுவதென்றால் அவர்களுக்கு அத்தனை குஷி!

“ரொம்ப நேரம் போனில் விளையாடக்கூடாது. கண்களுக்கும் கெடுதி! போனும் சீக்கிரம் கெட்டுப் போயிடும்” என அன்பாகச் சொல்லும் அப்பா, சில நேரம் கோபத்தோடு திட்டி, போனை பிடுங்கிக்கொள்வார். பிரசாத்தும் நவீனாவும் உம்மென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வார்கள். எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான். பிறகு மீண்டும் அப்பாவின் போனுக்குத் தலைவலிதான்!

பார்த்தார் அப்பா! இன்று, அலுவலகத்தில் இருந்து வரும்போதே போனில் புது பாஸ்வேர்டு வைத்துவிட்டார். விடுவார்களா நம் பிள்ளைகள்... குளிக்கச் சென்றவரை மடக்கிவிட்டார்கள்.

“மத்த நேரத்துல ஒருத்தரோடு ஒருத்தர் வெட்டி மடிவீங்க;  இதுக்கு மட்டும் ஒண்ணு கூடிட்டீங்களாக்கும்! சரி, நமக்குள்ளே ஒரு டீல் வெச்சுப்போம். பாஸ்வேர்டு பத்தி ஒரு க்ளூ தருவேன். யார் கண்டுபிடிக்கிறாங்களோ, அவங்க 15 நிமிஷம் விளையாடலாம். தாத்தாவின் பிறந்த வருஷத்தைதான் செட் பண்ணியிருக்கேன். கண்டுபிடிங்க” எனச் சொல்லிவிட்டுக் குளியலறைக்குச் சென்றார் அப்பா.

கலகல கடைசி பக்கம்

பிரசாத்தும் நவீனாவும் பரபரப்பாகி, பூஜையறைக்கு ஓடி, தாத்தாவின் படத்தைப் பார்த்தார்கள். அதில் தாத்தாவின் தோற்றம்-மறைவு பற்றி எதுவும் இல்லை. அம்மாவுக்கும் தெரியவில்லை. உடனே அம்மாவின் செல்போனை வாங்கி, அத்தையிடம் பேசினாள் நவீனா.

குளித்துவிட்டு வந்த அப்பாவிடம், “நாங்க பாஸ்வேர்டு கண்டுபிடிச்சுட்டோமே!” என குஷியாகச் சொல்லிக்கொண்டே, தாத்தாவின் பிறந்த வருஷமான 1930 என்கிற பாஸ்வேர்டைப் போட்டு, செல்போனை இயக்கி, கேம்ஸ் விளையாடினார்கள்.

பதினைந்து நிமிடம் கழித்து, வேறு ஒரு பாஸ்வேர்டு செட் செய்தார் அப்பா. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பாஸ்வேர்டுகளை அப்பா வைப்பதும், அதற்கான க்ளூவைக் கேட்டறிந்து விடையைத் தேடுவதுமே இவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக ஆகிப் போனது.

ஒருநாள் அப்பா எந்த பாஸ்வேர்டையும் வைக்காமல் செல்போனைக் கொடுத்தபோதும், “இல்லேப்பா, பாஸ்வேர்டு வெச்சே கொடுங்க. விடையைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சு, விளையாடும்போதுதான் இன்னும் ஜாலியா இருக்கு!” என்றான் பிரசாத்.

“ஆமாம்ப்பா! அதோடு, இந்த பாஸ்வேர்டு மூலமா எங்க ஜென்ரல் நாலெட்ஜும் இம்ப்ரூவ் ஆகுது!” என்றாள் நவீனா.

ஒரு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைத்த மகிழ்ச்சி அப்பாவுக்கு!