மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25
News
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25

40. அடி வாங்கினேனோ  கொங்குபிராட்டியைப் போலே...?

இந்த வாசகத்தைப்  பார்த்தால்  விபரீதமான  அர்த்தங்கள்  வருகின்றன  அல்லவா? ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில்  ஆசாரிய  சம்பந்தத்துக்கு  எத்துனை முக்கியத்துவம் உள்ளது என்பது இந்த ஒரு வாக்கியம் மூலம் விளங்கி விடும்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆசார்ய சம்பந்தம் இல்லாது எம்பெருமான் சம்பந்தம் இருந்து ஒரு பயனும் இல்லை. ஆனால் ஆசார்ய சம்பந்தம் மட்டும் இருந்தால் போதும். எம்பெருமான்  சம்பந்தம் தானே அமைந்து விடும். இதனை இந்தக் கொங்குப்பிராட்டியின் சரித்திரம் நமக்கு விளக்கிக் கூறும்.

ஆளவந்தாரின் உள்ளக்கிடக்கையின்  வண்ணம்  ராமாநுஜர்  திருவரங்கத்தில்  எழுந்தருளியிருந்தார். திருவரங்கன்  கோவில்  நிர்வாகம் அவர் மூலம்தான்  சீர்பட்டது.

அங்கிருக்கும்  அர்ச்சகர்  ஒருவரே  அவருக்கு  உணவில்  விஷம் கலந்து கொடுக்கும் அளவுக்கு ராமாநுஜரின்  சீர்திருத்தங்கள்  மிகக் கடுமையாக இருந்தன.

 கிடாம்பியாச்சான்  கட்டளைப்படி  அவர் மடத்தில்  சமைத்த  உணவைத் தவிர வேறு எங்கும்  உணவு உண்ணக்கூடாது  என்ற நியமம் வரும்வரையில்   ராமாநுஜர்  வெளியில் பிட்சை எடுத்து உண்பதுதான் வழக்கம். இதற்கு மாதுகரம் என்று பெயர். திருவரங்கன்  சந்நிதியை ச் சுற்றியுள்ள வீதிகளில் உடையவர் ஒவ்வொரு இல்லத்தின் வாயிலில் சென்று பிக்ஷைக்கு நிற்பார். ஒரு பசுமாட்டின் மடியை கறக்கும் நேரத்துக்குள் உள்ளேயிருந்து  வீட்டுப் பெண்மணி பிக்ஷை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அன்று அவருக்கு உணவு இல்லை.. மேல் உத்தரியத்தில்  வாங்கிய பிக்ஷையை அப்படியே உத்தரியத்துடன் முடிச்சு போட்டு காவேரிக்கரைக்கு சென்று நதியில் நன்றாக அலசி கொஞ்சநஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும்  உப்பு, புளி போன்றவற்றை பிக்ஷையிலிருந்து விலக்கிய பின்னரே உண்பது வழக்கம்.

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25

இந்த மாதுகரம் என்பது ஒரு திருவிழா போல நடக்குமாம். அவருடன் நூற்றுக் கணக்கில் சிஷ்யர்களும் , சிம்மாசனாதிபதிகளும்  உடன் வருவார்களாம்.. இவ்வாறு ஒருமுறை ராமாநுஜர்  மாதுகரத்துக்காக வீதியில் எழுந்தருளியிருக்கும்போது  ஒரு பெண்மணி அவரை வீதியில் தனது கரங்களால் தடுக்கிறாள். அந்தப் பெண்மணி கொங்குதேசத்திலிருந்து  வந்தவள். கோயம்புத்தூரிலிருந்து  மேற்கு தொடர்ச்சி மலை வழியாக ஹொய்சால தேசம் வரை இருக்கும் பகுதி கொங்குதேசம் என்று அழைக்கப்படும்.

அந்தப் பெண்மணி தன் தேசத்தில் மழை நெடுநாட்களாக பெய்யாமையால்  திருவரங்கப் பெருமாள் ஸ்ரீரங்கநாதனிடம்  முறையிட தனது கணவருடன்  அங்கு வந்திருந்தாள். வந்த இடத்தில் ஸ்ரீராமாநுஜரின்  தேஜசைக்  காண்கிறாள். சடார் சடார் என்று வீதி என்றும் பாராமல் அவர் முன்னால்  தண்டனிடும்  உயர் அதிகாரிகளை, செல்வந்தர்களை, வயதானவர்களைப் பார்த்தாள்.. இந்த சந்நியாசி மிக உயர்ந்தவர் என்பது புரிந்தது. எனவே துணிச்சல் மிகுந்த அந்தக் கொங்குதேசத்து பெண்மணி  ராமாநுஜரை த் தடுத்து நிறுத்துகிறாள்.  பெருமைவாய்ந்த  மகான் ஒருவரை தடுத்து நிறுத்த அவளுக்கு நிஜமாகவே எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும்.?

“ ஏன் நிறுத்தினாய் ? “ ராமாநுஜர்  கேட்டார்.

“ மற்றவர்கள் தண்டனிட்டு  சேவிக்கும் அளவுக்கு உங்களிடம்  இருப்பதென்ன?''

“ என்னிடம் இருக்கும் ஒன்று மற்றவரிடம் இல்லை. மற்றவரிடம் இருக்கும் ஒன்று என்னிடம் இல்லை'' என்றார். அந்த ஒரு வாக்கியத்திலேயே அவர் ஞானி என்பது அவளுக்கு விளங்கிவிட்டது.
“ அந்த ஒன்றை எனக்கு உபதேசிக்க வேண்டுகிறேன் “என்றாள்.

இளைய பெருமாள் அவளை தனது மடத்துக்கு வருமாறு பணித்தார். அதன் பிறகு அவளுக்கு த்வயம் என்னும் மந்திரத்தை உபதேசித்து பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து ஒரு ஸ்ரீ வைஷ்ணவப் பெண்ணாக மாற்றினார். அவள் அங்கேயே சிறிதுகாலம் தங்கியிருந்துவிட்டு  தனது நாட்டில் பஞ்சம் அகன்ற சேதி அறியப்பெற்று கொங்குதேசம்  கிளம்ப உத்தேசித்தாள். . நெடுநாட்கள் ஆனபடியால், அந்தப் பெண்மணிக்கு உடையவர்  ஸ்ரீராமாநுஜர்  உபதேசித்த  த்வய மந்திரம் மறந்து போயிற்று. அதற்காக அவள் வருத்தப்படவில்லை. ,கேட்பதற்கு அச்சப்படவில்லை. ,மீண்டும் ஒருமுறை தனக்கு த்வயம் உபதேசித்து அருள வேண்டினாள்.

ராமாநுஜரும்  சிறிதும் கோபம் கொள்ளாமல்  அவளுக்கு த்வயத்தை மீண்டும் ஒருமுறை உபதேசித்து அனுப்பினார். .போகும்போது  தனது திருவடிகளை அதாவது பாதுகைகளை அவளிடம் கொடுத்தார். இப்போது புரிகிறதா அடி வாங்கியது எப்படி என்று? கதை இன்னும் முடியவில்லை.

இது நடந்து வருஷங்கள் பலவாயின.

ராமாநுஜர்  கிருமிகண்டன்  என்ற மன்னனின்  கொடுங்கோன்மை  பொறாமல் கூரத்தாழ்வானை த் தனது பீடத்தில் அமர்த்திவிட்டு, வெள்ளையாடை உடுத்தி. உடன் நான்கைந்து பேர்களுடன் காவேரி வரும் வழியாக தமிழகத்தின்  மேற்கு திசையில் பயணம் செய்து ஹொய்சால நாட்டின் மேல்கோட்டையில் அமர்கிறார். அந்த நெடிய பயணத்தின்   நடுவழியில் கொங்கு தேசத்தில் இரவு ஓய்விற்காக ஒரு திருமாளிகையில்  ஒதுங்குகிறார்.

அப்படி ஒதுங்கிய மாளிகை கொங்குப்பிராட்டியின்  மாளிகை. ராமாநுஜர்  வைணவ சம்பந்தம் இல்லாத இல்லத்தில்  உணவு அருந்துவதில்லைஎன்பதை  வழக்கமாக்கிக் கொண்டவர் . அந்தப் பெண்ணிடம் அவருடைய சீடர்கள் அவளுக்கு ஸ்ரீவைஷ்ணவ சம்பந்தம் இருக்கிறதா என்று கேட்கின்றனர். தான் திருவரங்கம்  வந்து இளைய பெருமாளிடம்  த்வயம கற்றுக் கொண்டதைக்  கூறுகிறாள். ராமாநுஜர் த்வய மந்திரத்தை அவளிடம் கூறச் சொல்கிறார். அவளும் கூறினாள். தளிகை வைணவ முறைப்படி சமைக்கப்படுகிறதா  என்று சமையலறையில்  சென்று பார்த்துவிட்டு  வரச் சொன்னார்.  அந்த அம்மையார்  சமைத்த உணவை ஒரு சிறிய அறைக்குள் கொண்டு வைத்துவிட்டு  மீண்டும் வருவதை சீடர்கள்  பார்க்கின்றனர்.. அந்த அறையில் அப்படி என்ன இருக்கின்றது என்று பார்வையிடுகின்றனர். அங்கே ஒரு சிறிய பீடத்தில்  உடையவர் ஸ்ரீராமாநுஜர் அந்த அம்மையாரிடம் கொடுத்த  திருவடிகள் வைக்கப்பட்டிருந்தன. . அதற்குத்தான்  அந்த அம்மையார்  நைவேத்தியத்தைச்  சமர்ப்பித்துக் கொண்டிருந்தார்.  சீடர்கள் நெகிழ்ந்து  ராமாநுஜரிடம்  விஷயத்தை சொல்கின்றனர்..

ராமாநுஜர்  அப்போதும்  சாப்பிட  ஒப்பவில்லை. அந்தப் பெண்மணியை அழைத்து அவள் வணங்கும் பாதுகைகளுக்கு உரிய திருவடிகளை அவளால் அடையாளம் காட்ட முடியுமா என்று கேட்கிறார். அவளும் அங்கு வந்திருந்தோர்  திருவடிகள் ஒவ்வொன்றின்  அருகிலும் கையில் ஏந்திய விளக்குடன் சென்று பார்க்கிறாள்.. ராமாநுஜரின்  திருவடிகள்  வந்ததும் கண்களில் நீர் ததும்ப அவர் முகத்தைப் பார்க்கிறாள்.  ராமாநுஜர் அவளை முழுவதும் அங்கீகரித்ததாக சரித்திரம். அப்படிப்பட்ட கொங்குப் பிராட்டியைப் போல   ராமாநுஜரின்  திருவடிகளை த் தான் வாங்கவில்லையே  அதனால் திருக்கோளூரில்  தான் இருக்கத் தகுதி இல்லை என்று  அந்தப் பெண் கிளம்புகிறாள்.