திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

வி.ஐ.பி-கள் பார்வையில்... மதுரை சித்திரை திருவிழா...

வி.ஐ.பி-கள் பார்வையில்... மதுரை சித்திரை திருவிழா...

‘மதுரைக் காஞ்சியும் திருப்பணி மாலையும்!’

குடவாயில் பாலசுப்ரமணியன்

வி.ஐ.பி-கள் பார்வையில்... மதுரை சித்திரை திருவிழா...

‘‘திட்டமிட்ட நகரமயமாக்கம், நகரத்தை உருவாக்குதல் என்றெல்லாம் இப்போது சொல்கிறோம். சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பே, மதுரை மாநகரம் திட்டமிட்ட நகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகக் கோயில்களில், மிகவும் புராதனமான, தொன்மையான, பழைமையான கோயில் ஸ்ரீமீனாட்சி அம்பாள் கோயில்தான். மதுரைக் காஞ்சி எனும் சங்க இலக்கிய நூல், கோயிலின் பிரமாண்டத்தையும், சுந்தர பாண்டிய மன்னர் காலத்தில் கிழக்கு கோபுரம் கட்டப்பட்டதையும், கோயிலின் பெருமைகளையும் விரிவாக எடுத்துச் சொல்கிறது. பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்துக்கு அள்ளி அள்ளிக் கொடுத்திருந்தாலும் திருமலை நாயக்க மன்னரின் கைக்கு மதுரை வந்த பிறகுதான், கோயில் விரிவுபடுத்தப்பட்டு, பொலிவுபடுத்தப்பட்டுள்ளது என்று, ‘மதுரை திருப்பணி மாலை’ எனும் தலைப்பிலான ஓலைச்சுவடி தெரிவிக்கிறது’’ என்கிறார் சரித்திர ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

‘பீமபுஷ்டி அல்வா!’

பேராசிரியர் கு.ஞானசம்மந்தன்

மதுரை சித்திரைத் திருவிழா, சாதி பேதங்களை உடைத்தெறிகிற விழா! உணவுப் பண்டங்கள் தயாரிப்பவர்களும், பாண்டங்கள் செய்பவர்களும், உடைகள் தயாரித்து விற்பவர்களும், இனிப்பு வகைகள் செய்பவர்களும், கலைஞர்களும்  என அனைவருக்குமே இந்தச் சித்திரைத் திருவிழா லாபத்தைத் தருகிறது. பெயரையும் புகழையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது.

முக்கியமாக, உறவுக்காரர்களைச் சந்திப்பதும், ‘எங்கள் வீட்டில் திருமண வயதில் பெண் இருக்கிறாள்’ என்பதை அறிவிக்கவும் இந்த சித்திரைத் திருவிழா பெரிதும் உதவி செய்தது. கருத்து வேற்றுமையால் பிரிந்த உறவுகளும் தோழமைகளும்கூட, அழகருக்கு முன்னே, மீனாட்சியம்மையின் திருவுருவத்துக்கு முன்பாக, ‘இனி ஒருபோதும் பிரியமாட்டோம்’ என்று உறுதியேற்று, இணைந்துகொள்வார்களாம்.

‘‘உண்மைதான்! மதுரைலேருந்து 24 கி.மீ. தொலைவுல இருக்கிற சோழவந்தான் கிராமம்தான் எனக்குப் பூர்வீகம். மதுரை சித்திரை விழாவுக்கு வர்றதுன்னா, எங்களுக்கெல்லாம் லண்டன், அமெரிக்கா போறது மாதிரி. ஊர் நாட்டுல, தண்ணி தெளிச்சு விட்டுட்டாய்ங்கன்னு சொல்வாங்களே... அதுமாதிரி, மதுரை சித்திரைத் திருவிழான்னா, ‘ஐயய்யோ... புள்ளையக் காணோமே’னு யாரும் தேடமாட்டாங்க. திருமலை நாயக்கர் மஹால், காந்தி மியூஸியம், சினிமா, ஓட்டல் சாப்பாடுன்னு ஒரே கொண்டாட்டம்தான்!

வி.ஐ.பி-கள் பார்வையில்... மதுரை சித்திரை திருவிழா...

தமுக்கம் மைதானத்துல பொருட்காட்சி துவங்கிடும். இன்னொரு ஏரியாவுல ஜெமினி சர்க்கஸ், ஓரியண்ட் சர்க்கஸ்னு போட்டிருப்பாங்க. பொருட்காட்சில அந்த ராட்சச ராட்டினத்தை ஹானு பாத்துப் பிரமிச்சுப் போயிருவோம். அப்புறம்... அந்த பீமபுஷ்டி அல்வா! எந்தப் பட்டாகத்தியாலயும் அணு குண்டாலயும் வெட்டவோ துளைக்கவோ முடியாத அதி பயங்கர, இனிப்பு அல்வா அது.

அந்த அல்வாவை பத்துப் பைசாவுக்கு வாங்கி வாய்ல போட்டுகிட்டாப் போதும்... இன்றைய சூயிங்கம் மிட்டாய்லாம் கிட்டக்கூட வரமுடியாது. எப்படியும் ரெண்டு மணி நேரத்துக்கு வாய்லயே கிடந்து, இனிப்பு ஊறிக்கிட்டே இருக்கும். அதேபோல, சீவல் ஐஸ். சீவுன ஐஸ்ல, 12 பாட்டில்கள்லேருந்து கலர்கலரா ஊத்திக் கொடுப்பாங்க. தேசியக் கொடி கலர் ஐஸ்தான், எங்க ஃபேவரைட்!’’ என்று இனிக்க இனிக்க, திருவிழா குறித்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் ஞானசம்பந்தன்.

‘இந்த விழாவை அடிச்சுக்க வேற திருவிழா இல்லைய்யா!’

பேராசிரியர் சாலமன்பாப்பையா

‘மதுரை, மீனாட்சி, அழகர், திருவிழா இவை பிரித்துப் பார்க்கவே முடியாத விஷயங்கள். மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்ட விழாக்கள். திருமலை நாயக்கர், மதுரை மண்ணுக்கு வழங்கிய கொடைகளில் இந்த சித்திரைத் திருவிழாவும் ஒன்று.  அந்தக் காலத்தில், மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சித்திரையில்தான் புதுக்கணக்கு எழுதுவார்கள். ஒருபக்கம் விவசாயிகள் அறுவடை செய்து, விளைந்த பொருட்களை விற்றுக் காசு வைத்திருப்பார்கள். அடுத்து விதைப்பதற்குத் தயாராக இருப்பார்கள். அதேபோல், பண்ணையார்களிடம் வேலை பார்ப்பவர்கள், சித்திரையின் துவக்கத்தில் கணக்கு முடித்து, புதிய கணக்கு போட்டுக்கொள்வதும் அப்போதுதான்! பழைய கணக்கு முடித்து, சம்பளம் வாங்கிய கையோடு, கூட்டு வண்டியும் மாட்டு வண்டியுமாக குடும்பத்துடன் மதுரைக்கு வருவார்கள்.

வி.ஐ.பி-கள் பார்வையில்... மதுரை சித்திரை திருவிழா...

ஆற்றில் மணல் திருட்டெல்லாம் அப்போது இல்லை. எனவே, கரை புரண்டோடுகிற வைகை ஆற்றுக்கு நடுநடுவே, ஆங்காங்கே மணல் திட்டுகள் இருக்கும். மாட்டுவண்டி ஆற்றில் இறங்கி, மணல் திட்டில் போய் நிற்கும். அங்கேயே சமைத்துச் சாப்பிடுவார்கள். பிறகு ஊரையெல்லாம் சுற்றிவிட்டு, அழகரையும் மீனாட்சியையும் பார்த்து விட்டு, மீண்டும் இங்கே வந்து மணல் திட்டில் தூங்குவார்கள்.

மதுரையில், மிகப் பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படுவதற்குக் காரணமே இந்தச் சித்திரைத் திருவிழாதான். வியாபாரிகளிடம் இருக்கும் விற்காத பொருட்கள் எல்லாம் விற்று விடும். விரும்பியதெல்லாம் திருவிழாவில் கிடைக் கும். கிடைப்பதையெல்லாம் வாங்குவதற்குக் கையில் காசும் இருக்கும். மனைவி மக்கள் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து, பூரித்துப் போவார்கள் ஆண்கள். ஆக, காசு பார்க்கிற விழாவாக, பொருளாதாரம் சிறக்கும் விழாவாக மட்டுமின்றி, இல்லறம் மகிழ்ந்து செழிக்கிற விழாவாகவும் இருந்திருக்கிறது’’ என்று சரித்திரம் சொல்கிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

‘’என் பத்தாவது வயசில் இருந்தே சித்திரை விழாவைப் பார்த்துக்கிட்டிருக்கேன். அடாடா! என்னா கூட்டம்... என்னா கூட்டம்! சுத்தியிருக்கிற கிராமங்கள்லேருந்து, நேர்த்திக்கடனா அழகர் வேஷம் போட்டுக்கிட்டும், மத்த சாமிங்க வேஷம் போட்டுக்கிட்டும் ஆடிப்பாடி வருவாங்க.

இன்னொரு பக்கம், ஹரகர கோஷம் போட்டுக் கிட்டும் பாட்டுப் பாடிக்கிட்டும் பெருங்கூட்டம் வரும். அடுத்தாப்ல பார்த்தா, அழகருக்குத் தண்ணீர் பீய்ச்சியடிக்கறதுக்காக, ரப்பரால செஞ்ச விநோதமான வஸ்து ஒண்ணை வயித்துல கட்டிக்கிட்டு, தண்ணியைப் பீய்ச்சிப் பீய்ச்சி அடிப்பாங்க. அது அழகர் மேல மட்டுமா விழும்... அழகரைப் பார்க்க வந்திருக்கிற ஜனங்க மேலயும் விழும். இப்ப ஆட்டமும்பாட்டும் குறைஞ்சிருச்சு. ஆனாலும் உலக அளவுல, இந்தத் திருவிழாவை அடிச்சுக்க இன்னொரு விழா இல்லைன்னுதான் சொல்லணும்’’ என்கிறார் சாலமன் பாப்பையா.