மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
News
அருட்களஞ்சியம்

ஓவியம்: சித்ரலேகா

அருட்களஞ்சியம்

ஆலமுண்ட நீலகண்டன்!

எந்த நல்ல காரியத்திலும் கெடுதல் என்று ஒன்று இல்லாமல் போவதில்லை. நல்லவற்றை ஏற்றுக்கொள்ள ‘நான், நீ’ என்று பலர் முன் வருவார்கள். கெட்டவற்றை ஏற்றுக்கொள்ள ஒருசில பெரியவர்கள் மட்டும்தான் முன்வருவார்கள்! மேற்கண்ட நீலகண்டப்பெருமானின் திரு உருவப் படமும் அதையே நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

அமிர்தம் கிடைக்க வேண்டுமென்ற ஆசையால், உடன் பிறந்தும் எதிரிகளாகிய தேவாசுரர்கள் இருவரும் கூடி ஒன்றுபட்டுக் கடலைக் கடைந்தார்கள். மலையை மத்தாக ஆக்கினார்கள். நச்சுப் பாம்பை நாணாக ஆக்கினார்கள்; கடலையே கடைந்தார்கள். இத்தகைய மாபெரும் முயற்சியின் பயனாக அமிர்தம் கிடைத்தது. அதோடு கூட ஐராவதம், சசி, திருமகள் முதலிய அரிய பொருள்களையெல்லாம் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால், அந்தச் சமுத்திரத்தில் தோன்றிய ஆலஹால விஷத்தை ஒருவரும் தனக்கென்று எடுத்துக்கொள்ள முன்வரவில்லை. ஆயினும் அப்போது ஜகத் ஸம்ரக்ஷணார்த்தம், ஸர்வஸங்க பரித்யாகம் செய்து, சுடலையிலாடிக் கொண்டிருக்கும் சிவபெருமான்தான் இதற்கென ஓடிவந்தார். வடவைக்கனல் போன்ற கொடிய விஷத்தைத் தம் திருக்கரத்தால் எடுத்து விழுங்கினார்.  அவருக்கு மட்டும் மனைவி மக்களில்லையா, என்ன? மனைவியான உமை தடுத்ததும், ஆலத்தைக் கழுத்திலேயே அடக்கிக் கொண்டு அகிலத்தைக் காத்ததனால்தான், ‘நீலகண்டன்’ எனும் திருநாமம் சூட்டப் பெற்றார்.

** 1951 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...

அருட்களஞ்சியம்

சாகஸக்காரி - காரியக்காரி!

தாதியான கூனி எஜமானியான கைகேசியின் காலில் விழுந்து, ‘தஞ்சமே!’ என்றாள். ‘நான் உனக்குத் தஞ்சம்’ என்று கொஞ்சவில்லை; ‘நீயே என் அடைக்கலப் பொருள்!’ என்றுதான் கொஞ்சினாள். ‘நீ ரட்சித்தாலும் பட்சித்தாலும் உனக்கு நன்மையான காரியத்தை உணர்த்தாமல் போகமாட்டேன்; போகவேமாட்டேன்’ என்று காலைக் கட்டிக்கொண்டு குழந்தை போலப் பிடிவாதம் செய்கிறாள். காலைச் சுற்றிய பாம்பு கடித்தாலொழியப் போகுமா?

புரியும் தன்மகன் அர(சு)எனின், பூதலம் எல்லாம்
விரியும் சிந்தனைக் கோசலைக்(கு) உடைமையாம் என்றால்,
பரியும் நின்குலப் புதல்வற்கும் உனக்கும்இப் பார்மேல்
உரிய தென், அவள் உதவிய ஒருபொருள் அல்லால்?


பூமியெல்லாம் விரிந்துகொண்டே போகிறதாம் கோசலையின் சிந்தனை. ‘‘அந்தப் பேராசைக்காரிக்கு உலகமெல்லாம் உடைமையாகிவிட்டால், அவள் ஜீவனாம்சத்துக்குக் கொடுத்துத்தானே உன் மகனும் நீயும் பிழைக்கவேண்டி இருக்கும்!” என்றுகூடச் சொல்லவில்லை, காரியக்காரியான கூனி. அந்த உரிமைகூட இவளுக்கு இல்லாமல் போய்விடுமாம். அந்தச் சக்களத்தி பார்த்துப் பிச்சை கொடுப்பதுபோல் கொடுக்கும் அற்பப் பொருளைக் கொண்டுதான் இவளது அருமை மகனும் இவளும் உயிரை வைத்திருக்கக்கூடுமென்கிறாள்.

‘‘உன் வயிற்றுக்கு யாசிப்பதோடு, உன்னைத் தேடி வரும் யாசகர்களுக்கும் சேர்த்துக் கோசலை யிடம் பல்லைக் காட்டி யாசகம் பெறப் போகிறாயா, என் செல்வமே! வெட்கமில்லை உனக்கு?” என்றெல்லாம் பேசுகிறாள், ஏசுகிறாள், எவ்வளவோ சொந்தம் பாராட்டி - கொஞ்சும் குரலிலே!

தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால்,
ஈண்டு வந்(து)உனை இரந்தவர்க்(கு), இருநிதி அவளை
வேண்டி ஈதியோ வெள்குதி யோ?விம்மல் நோயால்
மாண்டு போதியோ? மறுத்தியோ, எங்ஙனம் வாழ்தி?


இப்படிக் கூனி சொன்னது, கைகேசியின் இளகின ஹிருதயத்திலே மிகவும் மென்மையான பாகத்தைத் தொட்டுவிட்டது. ‘ஆம், சக்களத்திக்கு லாபம் நமக்கு நஷ்டம்தான்! நம்முடைய நஷ்டம், நம்மை நம்பி வரும் எத்தனையோ யாசகர்களுக்கும் கஷ்டம்தானே!’ என்று நம்பிவிடுகிறாள் கைகேசி.

அருட்களஞ்சியம்

சதியாலோசனை கும்பல்!

‘ஐயோ!  நாம் பட்டினி கிடந்தாலும் பாதகமில்லை; இல்லையென்று வந்தவர்களுக்கும் இல்லை என்று சொல்ல வேண்டியிருக்குமோ? சக்களத்தியிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டியிருக்குமோ?’ என்ற சிந்தனையில் கைகேசி மூழ்கும்போதே, கூனி கைகேசிக்குப் பிறந்தகத்தின் மீதுள்ள பேரபிமானத்தையும் தூண்டிவிடுகிறாள். அவள் பிறந்தகத்தின் எளிமையையும் இல்லாமையையும் ஞாபகப்படுத்துகிறாள். அந்த மலைநாட்டுக்காரர்கள் - தந்தை, தாய், சுற்றத்தார் - இவள் செல்வத்தை எதிர்பார்த்துப் பஞ்ச காலத்திலும் க்ஷேமமாயிருக்கலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்களாம்.

‘‘தசரதன் ராமனுக்குக் கொடுத்த ராஜ்யம் அந்த ராமனுக்கும் அவனுடைய சந்ததியாருக்கும் உரிய தாகும்; அவனை விட்டுப் பிரியாத தம்பியாகிய லட்சுமணனுக்கும் அனுபவிக்க உரியதாகும்; பரதனும் அவன் சந்ததியாரும் அன்னியாராகிவிடுவார்கள். ஆகவே, தானும் கெட்டுச் சந்திர புஷ்கரிணியையும் கெடுத்த கதையாக, நீயும் கெட்டு உன் அருமைப் பிள்ளையையும் கெடுத்தொழிந்தாய்!” என்று பேசி முடிக்கிறாள் கூனி.

கைகேசி தூய சிந்தை உடையவள்தான்; அன்பு உள்ளவள்தான்; இவளுக்கு ராமன் மீதிருந்த அன்போ அபாரம். எனினும், தீய கூனியின் சூழ்ச்சியால் இந்தத் தூய சிந்தையும் மாறிப் போகிறது என்று சொல்ல வந்த கவிஞனுக்குக் கவிதாதேவி, திரைமறைவிலே நடக்கும் ரகஸ்யமான ஒரு நாடகத்தையும் காட்டிவிடுகிறாள்.

இக்காட்சி அனுபவமும் கவிதையாகப் பரிணமிக்கிறது.

தீய மந்தரை இவ்வுரை செப்பலும், தேவி
தூய சிந்தையும் திரிந்தது, சூழ்ச்சியின் -


என்று பாடும்போதே, திரை விலகி இக்கம்ப நாடகப் பகுதியின் அடிப்படையான ‘தேவ ரகஸ்யம்’ என்ற அந்த நாடகமும் தெரிந்துவிடுகிறது. கவிஞன் தொடர்ந்து பாடுகிறான்...

                        - இமையோர்

மாயையும் அவர் பெற்றுள வரம்உண்மை யாலும்,
ஆய அந்தணர் இயற்றிய அருந்தவத் தாலும்.


கூனியோடு சேர்ந்து சூழ்ச்சி செய்தார்கள் தேவர் களும் முனிவர்களும். என்ன சேர்த்தியழகு! கூர்ந்து பார்த்தால் ‘இதெல்லாம் தேவ மாயைதான்!’ ‘ராவணன் இழைத்த தீமை கூனியாகிக் கைகேசிக்குப் போதிக்க வந்தது!’ என்று ஏற்கெனவே சொல்லியிருந்த கவி, இப்போது ‘தேவர் மாயை கூனியாக வந்து கைகேசி மனத்தைக் கலைத்துவிட்டது!’ என்றும் தெரிவிக் கிறான். ஆம், ராவணன் தீமையும் தேவர் மாயையும் சேர்ந்து நடத்தும் நாடகம்தானே?

முந்தியே இந்திராதிதேவர் பாற்கடலில் கண்வளரும் பரம்பொருளிடம் அரக்கர் தீமையைச் சொல்லி வரம் பெற்றிருந்தார்கள் அல்லவா? அந்த வரமும், அரக்கரால் அலைப்புண்ட ஸாது கோஷ்டியின் தவமும் பலிக்கும் காலம் வந்துவிட்டது. காலத்தின் கோலமாய்க் கூனியும் சூழ்ச்சி செய்ய, திரியாத கைகேசி மனமும் திரிந்தது என்பது பொருள். வரம் பலித்தது, தவம் பலித்தது, சூழ்ச்சி பலித்தது; தேவியின் தூய சிந்தனையும் திரிந்தது- என்று கவிஞன் காட்ட, கூனி- கைகேசிகளை விதியின் விசித்திரக் கைக் கருவிகளாக நோக்கி, நாமும் இந்த நாடகத்தை மேலே மேலே ரஸித்துக் கொண்டு போகிறோம்.

    அரக்கர் பாவமும், அல்லவர்
     இயற்றிய அறமும்
  துரக்க, நல்லருள் துரந்தனள்
     தூமொழி மடமான்
 இரக்கம் இன்மைஅன் றோ,
  இன்(று)இவ் உலகங்கள்,
            இராமன்
பரக்கும் தொல்புகழ்
அமுதினைப் பருகின் றதுவே?


‘கைகேசியின் இரக்கம் இன்மையினால் அன்றோ, ராமன் புகழை உலகம் இன்றும் அமிர்தமாய்ப் பருகுகின்றது?’ என்று, நாடகம் காட்டும் கவிஞன் நம்மை நோக்கிக் கேட்கிறான். கவிஞன் இப்படிக் கேள்வி போடாவிட்டாலும் நாடகம் பார்க்கும் நாமே நம்மை அறியாமல், ‘கைகேசி இரக்கத்தோடு இருந்துவிட்டால், ராமன் திருப்புகழாகிய ராமாயணம் எது?’ என்று எண்ணியிருக்கக்கூடும். எப்படியும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விதான் இது.

பூ உதிர்ந்த பூங்கிளை!

கைகேசி தன் கருத்துக்கு இசைந்துவிட்டாள் என்ற குதூகலத்தில் கூனி அவளைத் தொழுது புகழ்ந்து சமர்த்துப் பட்டம் கட்டி, ‘‘தோழீ! என் சொல்லைக் கேட்டால், உன் மகனுக்கு உலகத்துக்கெல்லாம் சக்ரவர்த்தியாகப் பட்டம் கட்டி வைப்பேன்’’ என்றாள். பிறகு, அதற்கு உபாயம் சொல்லத் தொடங்கி, பழைய ஞாபகத்தைக் கொஞ்சம் கிளறிவிட்டாள்.

அருட்களஞ்சியம்

சம்பராசுரன் என்ற அந்தத் துஷ்ட அசுரனை தசரதச் சக்ரவர்த்தி போரில் வீழ்த்திய அந்த வரலாற்றை ஞாபகப்படுத்தினாள். ‘அப்போது சக்ரவர்த்தி தானே மனமுவந்து உனக்கருளிய வரங்கள் இரண்டு’ என்று அந்த வரங்களையும் ஞாபகப்படுத்தினாள். உடனே கைகேசி மனக்கண் முன் அந்தப் போர்க்களமும், தான் கணவனைப் பிராணாபாயத்திலிருந்து மீட்டுச் சாரத்தியம் செய்து வந்ததும், அந்தப் பெருமகிழ்ச்சியில், ‘நீ கேட்கும் எந்த இரண்டு வரங்களையும் மறக்காமல் கொடுத்து விடுவேன்’ என்று சக்ரவர்த்தி வாக்களித்ததும், சலனப் படக் காட்சிகள் போல் ஓடி வந்தன.

‘அந்த இரண்டு வரங்களையும் இன்ன இன்ன வரமென்று குறிப்பிட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. இதுவே தருணம்!’ என்றாள் கூனி. அப்பால், அந்த இரண்டு வரங் களில் ஒன்றினால் பரதனுக்கு ராஜ்யம் கிடைத்து விடுமென்றும், மற்றொன்றினால் ராமனுக்குப் பதினான்கு வருஷம் வனவாசம் கிடைக்க வேண்டுமென்றும், அப்படியானால் பரதனுடைய ஆட்சி நிலைத்து ஜனங்களெல்லாம் வசமாகி விடுவர் என்றும் உபாயம் சொல்லிக் கொடுத்தாள்.

இவ்வுபாயத்தைக் கேட்டதும் கைகேசி கூனியைத் தழுவிக் கொண்டாள்; இறுகத் தழுவிக் கொண்டாள்; உயிரோடு உயிர் பொருந்தத் தழுவிக் கொண்டாள். மகிழ்ச்சி பெருகிக் கொண்டே போகிறது.

‘நன்று சொல்லினை; நம்பியை நளிர்முடி சூட்டல்,
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல், இவ் இரண்டும்
அன்ற தாம் எனில், அரசன்முன் ஆருயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென்யான்! போதிநீ’
என்றாள்.

‘பரதனுக்கு முடி சூட்டாவிட்டால், ராமனைக் காட்டுக்குத் துரத்தாவிட்டால், நான் பிராணனை விட்டுவிடுவேன்!’ என்று ராட்சஸ சாகஸம் செய்கிறாளே, இந்தக் கைகேசியைத்தான் கவிஞன் ‘கடைக் கண் அருள் பொழியப் பஞ்சணை மெத்தை மேல் கிடந்தவள்’ என்றும், ‘ஆழ்ந்த பேரன்பினாள்’ என்றும் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியிருக்கிறான்.

இப்போதோ அடையாளம் தெரியாமல் மாறிப் போய்விட்டாள். உருவத்திலே பழைய கைகேசிதான்; உள்ளத்திலோ அரக்கி! பூம் படுக்கையிலிருந்து இறங்கினாள்; கருமேகம் போல் கரிய நீண்ட அந்தக் கூந்தலில் சொருகியிருந்த பூமாலையை எடுத்துக் கசக்கி எறிந்தாள். இடையிலுள்ள மேகலாபரணத்தையும் அறுத்தெறிந்தாள். பாத கிண்கிணிகளையும் கைவளைகளையும் கழற்றி எறிந்தாள்.

நெற்றியிலுள்ள திலகத்தைத் துடைத்துக் கொண்டாள். ‘அது சந்திரனிலுள்ள களங்கத்தைத் துடைப்பது போல் இருந்தது!’ என்கிறான் கவிஞன். எனினும், இந்த உள்ளம் களங்கமடைந்து விட்டது. பூ உதிர்ந்த பூங்கிளை போலக் கீழே விழுந்துவிட்டாள் கைகேசி.

** 26.5.46, 2.6.46, 9.6.46 மற்றும் 16.6.46 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...