Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்
முன்னோர்கள் சொன்னார்கள்

புருஷ ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7-ல் செவ்வாய் இருந்தால், பலதரப்பட்ட பெண்மணிகளின் இணைப்பில் இன்புற்று வாழ்வான். பல பெண்களை ஈர்க்கும் அளவுக்கும் செல்வாக்கும், பெருந்தனமும் அவனிடம் இருக்கும். 7-ல் ரவி (சூரியன்) இருந்தால், பல பெண்மணிகளை மனைவிகளாக ஏற்று விரிவாக்கம் பெற்ற குடும்பத்தைப் பெற்று மகிழ்வான்.

2-க்கு உடையவன், 6-ம் வீட்டுக்கு உடையவன், 7-க்கு உடையவன், சுக்கிரன் ஆகியோர் ஒன்றாக இணைந்து, ஒரு பாவ கிரகத்துடன் சேர்ந்து லக்னத்தில் இருந்தால், மாற்றான் மனைவியை தன்வசப்படுத்துவான். அது பழக்கப்பட்டு தனது குலத்தின் பெருமையை அழித்துவிடுவான்.

2, 6, 7-க்கு உடையவர்களும் சுக்கிரனும் சேர்ந்து லக்னத்தில் இருக்கும்போது, ஒரு சுப கிரகத்தின் பார்வை லக்னத்தில் விழுந்தால், பரஸ்திரீகமனம் இருக்காது. தனது தாரத்தை மகிழ்வித்து நிறைவு பெறுவான். அதே போல் குஜன் 7-ல் இருக்க, சூரியன் 7-ல் இருக்க, ஒரு சுப கிரகம் 7-ஐ பார்த்தால், பல பெண்மணிகளோடு சேர்ந்து இருக்கமாட்டான் என்கிறது ஜோதிடம். சுபனின் பார்வை (7-ம் பார்வை) இடையூறை விளைவிக்கும் கிரகங்களை திசைமாறச் செய்துவிடும். 7-ல் அமர்ந்த கிரகம் அல்லது கிரகங்கள், அதிலும் பாவ கிரகங்கள்-அசுப கிரகங்கள், சுப கிரகமானாலும் பாவ கிரகத்தின் இணைப்பில் தன்னையும் பாவ கிரகமாக மாற்றிச் செயல்படும் சுபகிரகங்கள்... இவற்றைப் பார்த்ததும் நொடியில் பலனை இறுதியாக்கிவிடக் கூடாது.

சுப கிரகத்தின் 7-ம் பார்வை இருக்கிறதா என்று  கண்ணுற்று முடிவுக்கு வரவேண்டும் என்கிறது ஜோதிடம். ‘எண்ணிக்கையில் அதிகமான பாப கிரகங்கள் 7-ல் உள்ளன. இந்த நிலையில் ஒரு சுப கிரகம் 7-ம் பார்வையாகப் பார்ப்பதால், முற்றிலும் விலகாது’ என்ற ரீதியில், பக்குவம் பெறாத அறிவில் தோன்றிய விளக்கத்தை அளித்து, ஜோதிடத்தின் உண்மையான விளக்கத்தை ஏளனம் செய்யக் கூடாது. முனிவர்கள், ரிஷிகள் ஆகியோரது சிந்தனை வளம் பெற்ற முடிவை ஏற்றுக்கொண்டால் போதுமானது.

புருஷ ஜாதகத்தில் 7-ல் செவ்வாய் இருந்தால் மனைவி தங்க மாட்டாள் என்கிற முடிவு ஜோதிடத்துக்கு உடன்பாடு அல்லாதது. 7-ல் சுபனின் 7-ம் பார்வை இருந்தால், மனைவி இழப்பு நிகழாது என்கிறது ஜோதிடம். புருஷ ஜாதகத்தில் 7-ல் இருக்கும் செவ்வாய், வரப் போகும் மனைவி யின் ஆயுளை இறுதி செய்யாது. அவரவர் ஜாதகத்தின் பலன்கள் அவரவர் ஜாதகத்துக்கு மட்டும்தான் பொருந்தும். ஒரு ஜாதகம், சம்பந்தம் இல்லாத (கல்யாணம் ஆகாத நிலையில்) மற்றொரு ஜாதகத்தை வரையறுக்காது. தந்தையின் ஜாதகம் தனயனை அழித்தது, தனயனின் ஜாதகம் தந்தையை அழித்தது என்கிற விளக்கங்களில் ஜோதிடத்துக்கு உடன்பாடு கிடையாது. அவரவர் ஜாதகம் அவரவர் ஆயுளை நிர்ணயிக்கும்.

ஆகவே, பெண்ணின் (வரப்போகும் மனைவி யின்) மரணத்தை ஆண் ஜாதகம் (வரப்போகும் கணவனின் ஜாதகம்) நிர்ணயிக்காது. நீண்ட ஆயுளைப் பெற்ற பெண்ணொருத்திக்கு... வரப்போகும் கணவனின் ஜாதகத்தில் 7-ல் செவ்வாயைப் பார்த்து, அவள் இறந்துவிடுவாள் என்ற முடிவுகட்டுவது தவறு. பிறப்பில் கிடைத்த நீண்ட ஆயுளை, இணைபவனின் ஜாதகம் மாற்றி அமைக்காது.  மனைவியை இழப்பான் என்று முடிவை அறிவிக்குமுன், பெண் ஜாதகத்தின் ஆயுளை வரையறுக்க வேண்டும். அவளுக்கு நீண்ட ஆயுள் இருந்தால் இழப்பு ஏற்படாது. அவள் அல்ப ஆயுளுடன் தென்பட்டால், மரணத்தைச் சந்திப்பாள். அதற்குக் காரணம் புருஷன் ஜாதகத்தில் 7-ல் தென்படும் செவ்வாய் அல்ல; அவள் பிறக்கும்போது அற்பாயுள் யோகம் இருப்பதுதான். கல்யாணத்தில் இணையாமல் இருந்தாலும் அவள் மரணம் சம்பவிக்கும்.

தற்போது புருஷ ஜாதகத்தில் 7-ல் செவ்வாயைக் காரணம் காட்ட இயலாது. பெண் ஜாதகத்தை அலசி ஆராயாமல், 7-ல் செவ்வாய்க்கு பலன் அளிப்பது (அவள் மடிந்துவிடுவாள் என்று) தவறான விளக்கம். 7-ல் செவ்வாய் தென்படுகிறார். ஆனால் குரு பார்வை இருப்பதால் மனைவி மடியமாட்டாள் என்று சொல்வதும் தவறு. அங்கும் பெண் ஜாதகத்தின் ஆயுள் பாவம்தான் நடைமுறைக்கு வரும். இந்த செவ்வாயின் தரமோ, குரு பார்வையின் வலிமையோ அவளது ஆயுள் நிர்ணயத்தை இறுதியாக்காது. அவளுடைய ஆயுளை நிர்ணயிக்க, அவளுடைய ஜாதகத்தை ஆராயவேண்டும். புருஷ ஜாதகத்தின் எந்தத் தகவலும் பெண் ஜாதகத்தின் ஆயுளை வரையறுக்காது.

முன்னோர்கள் சொன்னார்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண் ஜாதகத்தில் 7-ல் செவ்வாய் இருந்தால், அவனது கர்ம வினைப்படி மனைவியின் இணைப்பில் ஏற்படும் இன்பத்தைச் சுவைப்பதில் நெருடல் அல்லது தடங்கல் ஏற்படலாம். அல்லது அந்த மகிழ்ச்சியை இவன் எட்ட முடியாமல் போகலாம். பரிணாம வளர்ச்சியில் கிடைக்க வேண்டிய உரிமை அவனுக்குப் பறிபோகலாம். முற்பிறவியில் அவன் சேமித்த செயல்பாடு அந்த உரிமையைப் பறித்து தண்டனை அளித்து (கர்மவினை) வென்று விடுகிறது.

திருமணம் நடந்து பிரிந்து வாழலாம். அவளது உடல்நிலை பாதிப்பால் தாம்பத்திய சுகத்தை சுவைக்க முடியாமல் போகலாம். அல்லது அவனுக்கே உடல்நலம் குன்றி, மனைவியுடன் இணைய முடியாமல் தவிக்க நேரிடலாம். எதிர்பாராத பல காரணங்களால் சந்திக்கும் தருணம் ஏற்பட்டும், அது வாய்க்காமல் போகலாம். தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில் கசப்பு உணர்வு ஏற்படலாம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகலாம். பிரிந்து வாழ முடிவெடுத்து, கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரியாக வாழவேண்டியது வரலாம். மனம் ஒத்துப் போகாமல், பகை வளர்ந்து பிரிவை நிரந்தரமாக்க முயற்சிக்கலாம். எல்லாம் இருந்தும் அவள் மடிந்துபோகலாம் அல்லது அவனுக்கே முடிவும் ஏற்படலாம். இத்தனை விஷயங்கள் 7-ல் செவ்வாயைப் பார்த்து நிகழ வாய்ப்பு உண்டு. எனவே, மற்றதையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மரணம்தான் நிகழும் என்று எப்படி முடிவெடுக்க முடியும்?

7-ல் செவ்வாய் இருந்தால், மனைவி இழப்பு என்ற முடிவு ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லாத ஒன்று. ஜோதிடத்தை ஏற்காத, பொருத்தம் பார்க்காத காதல் திருமணங்களில், 7-ல் செவ்வாய் இருந்தும் மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்க்கிறோம். ‘7-ல் செவ்வாய் - மனைவியை இழப்பான். ஆகையால் பெண் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது’ என்று பயந்து, ஜாதகம் பார்க்காமலே கல்யாணத்துக்குச் சம்மதித்து இணைந்து, வாழ்வில் இன்பத்தைச் (தாம்பத்யத்தை) சுவைப்பவர்களும் ஏராளம் இருப்பதைக் காண முடிகிறது.

ஆகவே, 7-ல் செவ்வாய் இருப்பதைக் கண்ணுற்று, அவனுக்கு மனைவி தங்கமாட்டாள் என்ற ஒரு வரி பதில் மூட நம்பிக்கையாகும். ஆழமான ஜோதிடம் என்பது சிந்தனை வளம் பெற்றவர்களுக்கு மட்டும்தான் இலக்காகும்.விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு விளையாடுவதெல்லாம் ஜோதிடம் ஆகாது. படித்து பட்டம் பெற்று, உழைத்து முன்னேறத் தவறியவர் களும் இன்றைய நாளில் ஜோதிட பிரபலங்களாக விளங்குகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு கொள்ள இயலாத அப்பாவிகள் ஏமாற்றம் அடைகிறார்கள்!

இந்த ‘7-ல் செவ்வாய்’ என்பதை வைத்து எத்தனை எத்தனை பட்டிமன்றங்கள்?! செவ்வாய் தோஷ ஜாதகம் என்று முத்திரை குத்தி ஒதுக்கிவைத்து, அவர்களிடம் தாழ்வு மனப்பான்மையையும், ஒரு பெண் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட, எதையும் ஆராயத் தோணாமல் நெருக்கடியில் ஒருத்தியை மணமுடித்து துயரத்தைச் சந்தித்தவர்களும் தென்படுகிறார்கள். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தவன் போல், செவ்வாய் தோஷத்தை பூதாகரமாக்கி சலசலப்பை உண்டு பண்ணி, மக்களை திசை திருப்புவது ஜோதிட பிரபலங்களுக்கு அழகல்ல. பரிணாம வளர்ச்சியில் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற வைப்பதுதான் ஜோதிடத்தில் குறிக்கோள். அதன் பரிந்துரையை உள் வாங்கி ஆராய்ந்து மக்கள் சேவை செய்யும் எண்ணம், ஜோதிட பிரபலங்களுக்கு இருக்க வேண்டும்.
 
இவன் ஏழ்மையில் வாடுவான், இவனுக்கு மனைவி இழப்பு உண்டு, இவன் செல்வந்தனாக இருப்பான், இவன் புகழோடு விளங்குவான், இவன் நோய்வாய்ப்பட்டு இறப்பான், இவன் தண்டனைக்கு உள்ளாகி துயரத்தைச் சந்திப்பான், இவன் களவாடுவான், இவன் மாற்றான் மனைவியைத் தீண்டுவான், இவன் பல பெண்களுடன் இணைந்து நோய்வாய்பட்டு மடிவான், இவனுக்குக் குழந்தைகள் பிறக்காது, இவனுக்கு யமனாக மனைவி மாறுவாள் - இப்படியெல்லாம் தகவல்களை அளிக்க ஜோதிடம் வேண்டாம். அது வரும்போது நாம் தெரிந்துகொண்டால் போதும்.  ஜோதிடம் என்பது வெறும் தகவல் மையம் அல்ல. பரிணாம வளர்ச்சியில் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்று வளர்ந்து மகிழ்வதற்குத் தேவையானவற்றை அது பரிந்துரைக்கும்.

கட்டிலில் இருந்து தவறி விழுந்து மரணம் என்று தெரிந்தால், அதைத் தவிர்ப்பதற்கு அது வலியுறுத் தும். நம்மை வாழ வைக்க வந்தது ஜோதிடம். வாழ்க்கையில் என்னவெல்லாம் நிகழும் என்பதை பட்டியலிட்டுக் காட்ட ஜோதிடம் வரவில்லை. நமது கசப்பான அனுபவங்களையும் இனிப்பாக மாற்றும் வழிவகைகளை சுட்டிக் காட்டும் அது.இயற்கை வளங்களை அனுபவித்து சுவைக்க வேண்டும். நமது உடலும் உள்ளமும் பரிணாம வளர்ச்சியில் அதை சுவைக்கும் தருணத்தை ஈட்டித் தரும் ஜோதிடம்.

ஆண் - பெண் இருவரது மனப்போக்கை அலசி ஆராய்ந்து செயல்பட்டால், எந்த விபரீதமும் நிகழ வாய்ப்பு இருக்காது. இருவரும் தங்களது உரிமையை இழக்கமாட்டார்கள். 7-ல் செவ்வாயைப் பார்த்தவுடன், பெண் ஜாதகத்தின் தரத்தை ஆராய்ந்து, இந்த இழப்பை வலுவிழக்கச் செய்யும் தகவல்களை சேகரித்து, திருமணத்தில் இணைந்தால் மனைவியை இழக்காமல் இருப்பான். முதலில் ஆண் - பெண் இரு ஜாதகங்கள் ஆராயும் முன், அவர்களது ஆயுளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். (பூர்வம் ஆயு:பரீஷேத). ஆயுள் நிறைவாக இருந்தால் மற்றவற்றின் இழப்பை, இருவரது மன ஒற்றுமையின் மூலம் இல்லாமல் செய்து சாதித்துவிடலாம்.

லக்னத்துக்கு உடையவனும், 6-க்கு உடையவனும் சேர்ந்து லக்னத்தில் இருந்தால், மாற்றான் மனைவியில் ஈடுபாடு இருக்கும். அறத்துக்குப் புறம்பாக, மனைவி இருந்தும் வேறொருவளிடம் இணைய விரும்புபவனை, ‘பரஸ்த்ரீகமனம்’ என்று குறையாகச் சொல்லும். பல பெண்களில் தனது புலன் வேட்கையைத் தணித்துக்கொள்வது அறத்துக்குப் புறம்பானது. அவனுக்கு அது இழுக்கு. அதேநேரம், பல மனைவிமார்களோடு இணைந்திருப்பது இழுக்கல்ல. தான் விரும்பிய அத்தனைபேரையும் பாகுபாடின்றி, மனைவியின் அந்தஸ்தை அளித்து கௌரவிப்பவன் என்று பொருள் கூறும் ஜோதிடம்.

7-ல் சூரியன் இருந்தால் பல மனைவிகளுடன் சேர்ந்து இருப்பான் என்று சொல்லும். அந்த மனைவிமார்களிடமும் இப்போதுள்ளது போன்று கசப்பு உணர்வு இருக்காது. அவனோடு இணைவதை எல்லோருமே பெருமையாகப் பார்ப்பார்கள். 7-ல் செவ்வாய், 7-ன் 7 லக்னம். அதை முழுப் பார்வையாக செவ்வாய் பார்க்கிறான். பரஸ்பரம் பார்வை தென்படும்போது, இருவரிடமும் ரஜோ குணம் முன்னின்று பகையை ஏற்படுத்திவிடும். முன்பின் யோசனையின்றி செயல்படும் பாங்கு தென்படும். அது, அவர்களது மகிழ்ச்சியை பாதித்துவிடும். சூழலை மறந்து முடிவெடுத்து, பிரிவை ஏற்று துயரத்தைத் தழுவ நேரிடும்.

கர்மவினைப்படி அவனுக்கு தாம்பத்திய சுகத்தை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அல்பாயுளில் இருக்கும் மனைவியின் மரணம் ஏற்பட்டு, அவனது கர்மவினை வென்று விடுகிறது. மனைவி மரணத்துக்கு, அவனது கர்மவினை ஆயுள் குறைந்த மனைவியை ஏற்கவைத்து தனது செயலைப் பயனுள்ளதாக்கியது. அல்லது செவ்வாய் வலுக்கட்டாயமாக நீண்ட ஆயுள் இருப்பவனை அல்பாயுஸாக மாற்றியது என்று விளக்கம் அளிக்கக் கூடாது.

7-ல் இருக்கும் செவ்வாயை 7-ம் பார்வையாக குரு பார்த்தால் அவனது தாம்பத்தியம் செழிக்கும். மனைவி இழப்பு இருக்காது. லக்னத்தில் இருக்கும் குரு, 7-ல் இருக்கும் செவ்வாயையும், 7-ம் பாவத்தையும் பார்ப்பதால், நிதானமும் ஆற அமர யோசித்து செயல்படும் எண்ணமும் எழுவதால் பகை ஏற்படாமல் தாம்பத்தியம் இனிக்கும். இருவருக்கும் நீண்ட ஆயுள் இருந்தால், வாழ்க்கையும் மகிழ்ச்சியோடு இருக்கும். குரு லக்னத்தில் இருப்பதால் லக்னம் அடக்கத்தையும் பொறுமையையும் அடைந்து விடும். 7-ஐ பார்ப்பதால் மனைவிக்கும் பக்குவமாக நடந்து கொள்ளும் பாங்கு முளைத்துவிடும்; செவ்வாயின் ஆராயாமல் செயல்படும் குணம் மறைந்து விடும். அல்லது செயல்பட்டாலும் பலன் அளிக்காது. காரத்துடன் உப்பு இணைந்தால் உட்கொள்ளும் தகுதி வரும். காரத்தின் கெடுதலும் தலைதூக்காது. தயிரோடு இனிப்பைக் கலந்தால் தயிரின் கெடுதல் செயலற்றுவிடும். பாப கிரகத்துடன் சுப கிரகம் இணைந்தாலும் பார்த்தாலும் பலன் மாறுபடும்.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism