மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 14

சிவமகுடம்  - 14
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 14

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம்  - 14

சிலந்தி வலையும் சதி வலையும்!

‘‘சிலந்தி வலையைத் தொடாதே!’’ உறையூர் எல்லைப்புறக் கோயிலின் கருவறையும் அதிரும்படி ஒலித்தக் குரல், அக்கோயிலின் சிறிய அர்த்த மண்டப விதானத்தில், வலைப் பின்னல் இட்டுக் கொண்டிருந்த சிலந்தியையும் அதன் வலையையும் தன் வாள் முனையால் அகற்ற முயன்ற சோழர் உப தலைவனான கோச்செங்கணைத் தடுத்து நிறுத்தியது. 

எங்கும் சூழ்ந்துவிட்டிருந்த மையிருட்டில் குரலுக்கு உரியவர் யாரென்பதை சட்டென்று அனுமானிக்க இயலாத கோச்செங்கணின் கண்கள், அனிச்சையாக கருவறையை நோக்கியது. ஒருவேளை, அங்கு லிங்க மூர்த்த மாய் எழுந்தருளியிருக்கும் கால காலனே அசரீரியாய் கட்டளையிடுகிறாரோ என்றுகூட எண்ணம் எழுந்தது அவனுக்குள். காரணம், ஒலித்த குரலின் தொனி அப்படி!

அவனுள் எழுந்த அந்த எண்ணத்தை, கருவறையை நோக்கி அவன் திரும்பியதில் இருந்து, குரலுக்கு உரியவரும்  புரிந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில், மீண்டும் அவருடைய கனத்த குரல் அவனை அழைத்திருக்காது.

‘‘கோச்செங்கா! உன்னை தடுத்தது சிவ பிரான் அல்ல; இந்த பட்டர்பிரான்தான்!’’ என்றபடியே பரதவர் தலைவன் தம்மைப் பின்தொடர, வெளிச்சத்துக்கு வந்தார் பரமேசுவரப்பட்டர்.

கருவறையில் மிக மெல்லியதாக சுடர்விட்டுக் கொண்டிருந்த விளக்கின் வெளிச்சம், அவர்  கோயிலை நெருங்கிய பிறகே, அவரை இன்னா ரென்று அடையாளம் காட்டியது. தனது வீரவாளை தரை தாழ்த்தி தலைவணங்கினான்  கோச்செங்கண். ஏற்கெனவே, அவனுடன் கோயிலில் உறைந்திருந்த பட்டர்பிரானின் பிரதான சீடனும் அவரை வணங்கினான். தலையசைப்பாலேயே அவர்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்ட பட்டர் பிரான், கோச்செங்கண் பேசுவதற்கு இடம் கொடுக்காமல், தானே தொடர்ந்து பேசினார்.

‘‘சிவாலயத்தில் படரும் சிலந்தி வலையை நான் தொடுவதில்லை. சிலந்திக்கும் சிவனாருக் கும் தொடர்பு உண்டு. அவருக்கு மட்டுமல்ல, சோழகுலத்துக்கும், உனக்கும்... ஏன், எனக்கும், இந்தச் சீடனுக்கும், பரதவனுக்கும்கூட தொடர்பு உண்டு.’’ என்றார்.

சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அவர் ஏதேதோ பேசுவதைக் கண்டு ஒன்றும் புரியாமல், அவருடைய முகத்தில் இருந்து தனது பார்வையை அகற்றி மீண்டும் லிங்க சொரூபத்தில் நிலைக்கவிட்டான்
கோச்செங்கண். அதைக் கண்டுகொள்ளாது, சிரமேற் கரம்குவித்து சிவனாரை ஒருமுறை வணங்கித் தொழுத பரமேசுவரப்பட்டர், மெள்ளத் திரும்பி தொண்டையை செருமி அவன் கவனத்தை மீண்டும் தன் பக்கம் இழுத்தார்.

‘‘ *ஆனைக்கா ஆலயத்தின் தலபுராணத்தைத் தெரிந்து வைத்திருந்தால், இப்படி விழிக்க மாட்டாய்’’ என்றவர், அந்தக் கதையையும் சுருக்கமாய் எடுத்துரைத்தார்.

‘‘வெட்டவெளியில் இருந்த லிங்கத் திருமேனிக்கு வலை பின்னி பந்தலிட்டதாம் ஒரு சிலந்திப்பூச்சி. அந்த லிங்கத்தை ஏற்கெனவே வழிபட்டுவந்த யானை ஒன்று, காலையில் வந்து சிலந்தி வலையைக் கண்டது.

உன்னைப் போன்றே அதற்கும் சிலந்திவலை அபசாரமாகத் தெரிந்தது போலும். வலையைப் பிய்த்தெறிந்துவிட்டு, வழக்கம்போல் தனது பூசனையை முடித்துவிட்டுச் சென்றது. ஆனால் சிலந்தி சும்மா இருந்ததா என்றால் இல்லை. மீண்டும் வலை பின்னி பந்தலிட்டது. மறுநாள் வந்த யானை, வலையை அழித்தது. இந்தக் கதை மீண்டும் மீண்டும் தொடர, ஒருநாள் யானையின் துதிக்கையில் புகுந்துவிட்டது சிலந்தி. வலிபொறுக்காத யானை மரண அவஸ்தைக்கு ஆளாக, அந்த யானைக்கும் சிலந்திக்கும் சிவனார் மோட்சகதி அளித்ததாக திருக்கதை நீளும்.’’

‘‘ஆமாம், ஆமாம்! நானும் கேட்டிருக்கிறேன். அந்தச் சிலந்தி, தனது சிவபக்தியால் விளைந்த புண்ணியத்தால் மறுபிறவியில் மன்னனாகப் பிறந்தது என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்’’ என்று பட்டர்பிரானை இடைமறித்துப் பேசிய கோச்செங்கண், மேலும் அவரிடம் கேட்டான்.

‘‘பட்டர்பிரானே! சிலந்தியின் திருக்கதை புரிகிறது. ஆனால், சோழத்துக்கும் நமக்கும் சிலந்தி வலைக்கும் தொடர்பு உண்டு என்று குறிப் பிட்டீர்களே? அதுதான் புரியவில்லை...''
கோச்செங்கண் முடிப்பதற்குள் பதில் சொல்லத் தொடங்கிவிட்டார் பரமேசுவரப் பட்டர்.

‘‘கோச்செங்கா! புறக் கண்ணைக் கொண்டு பார்த்தால், இந்த வெறும் சிலந்தி வலை மட்டுமே புலப்படும். அகக் கண்ணாலும் பார்க்கக் கற்றுக்கொள். அப்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் சதி வலைகளும் புலப்படும்’’ என்றவர், அவனுக்கு தெளிவாகப் புரியும்படி, சோழத்தை ஆபத்து களாலும் சதிகளாலும் பின்னிப் பிணைத்திருந்த சதி வலையைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

‘‘அப்பனே! சோழமும் அதன் அங்கங்களாகிய நாமும் மன்னரும், இளவரசி மானியும், நம் மக்களும்  புறக் கண்களுக்குப் புலப்படாத காலத்தின் மாய வலைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறோம். கூன் பாண்டியனையும், நம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் அந்த வலையைப் பின்னும் சிலந்திகளாக்கிவிட்டது பொல்லாத காலம்!

எல்லையில் தொல்லை தரும் சேரனை விட்டுவிட்டு, சோழத்தின் மீது போர் தொடுக் கிறான் பாண்டியன். இளவரசி மானியும் நீயும் பகை தேசத்துக்குள் சென்று ஒற்றறிந்து வந்தீர் கள்; பகைவன் மேற்கொள்ளப் போவது அஸ்திர வியூகம் என்றீர்கள். அவனோ தன் படைகளை இரண்டு அஸ்திரங்களாக ஏவுகிறான்!

இங்கே உறையூரிலோ மந்திராலோசனை நடக்கும்போதே கொலை முயற்சியும் நடக்கிறது.

அதற்குக் காரணமான முரடர்களை, அவர்கள் இடத்துக்கே சென்று நாம் மடக்கு கிறோம். ஆனால், எதிர்பாராதவிதமாக பாண்டியர் முன்னோடிப் படை நம்மை சுற்றி வளைக்கிறது. பெரும் பாறைகளை உருட்டிவிட்டு நாம் தப்பித்தோம் என்றாலும், நம் நாட்டுக்குள் பகைவரின் முன்னோடிப் படை சுதந்திரமாக வளைய வருகிறது என்றால், அதை என்னவென்பது?

அதையெல்லாம் விட, நேற்றும் இன்றும் நடக்கும் சம்பவங்கள் இன்னும் விநோதம்!

மன்னர்பிரான் மணிமுடிச் சோழரும், நானும் நம் முன்னோர் அமைத்த பெரும் சுரங்கப் பாதையைக் கண்டோம். அதைப் பயன்படுத்தி மானி வகுத்திருந்த பூ வியூகத்தைக் கேட்டுப் பூரிப்பு அடைந்தோம். ஆனால், அடுத்த சில நாழிகைகளிலேயே  ‘அங்காடி வீதியில் பெரும் கலகம்' என்று தகவல் வருகிறது. ஆனால், மன்னர் கட்டளைப்படி இளவரசி மானி அங்கு விரைவதற்குள், கலகக்காரர்கள் மாயமாய் மறைந்துவிட்டார்கள்! அதேநேரம் இங்கே ஏரிக் கரையிலும் சிறு போர்  நடந்து முடிந்தது!’’

‘‘என்ன சொல்கிறீர்கள் பட்டர்பிரானே... போர் நடந்ததா?’’ திகைப்பு மேலிடக் கேட்டான் கோச்செங்கண்.

சிவமகுடம்  - 14

அவன் திகைப்புக்கும் காரணம் இருக்கவே செய்தது. சோழ எல்லைக்குள் சண்டை நிகழ்கிறது என்றால், அதுகுறித்து   இளவரசியார் தனக்கு தகவல் தெரிவிக்காமல் இருக்கமாட்டார். பட்டர்பிரான் சொல்வதைப் பார்த்தால், தகவல் பரிமாற்றத்துக்கும் வாய்ப்பு இல்லாதபடி திடுமென நடந்து முடிந்திருக்கிறது, அவர் குறிப் பிட்ட சிறு போர் என்ற முடிவுக்கு வந்தான்.

மேலும் சில கேள்விகளும் அவனுக்குள் எழுந்தன. நடந்தது சிறு போர் எனில், யார் யாருடன் மோதினார்கள், எத்தனைப்பேர் கை கலந்தார்கள், வெற்றி யாருக்கு.. இப்படி, அலையலையாய் எண்ணங்களும் கேள்விகளும் மனதில் எழ, அவற்றுக்கு பதிலறியும் முனைப்பும் தென்பட்டது பட்டர்பிரானை அவன் கேட்ட கேள்வியில்.

பட்டரோ ‘‘சிறு போர் குறித்து இவன் விளக்கு  வான் உனக்கு’’ என்று அருகில் நின்றிருந்த பரதவர் தலைவனைக் காட்டினார். அவனும் ‘‘ஆம் உப தலைவரே! ஏரிக்கரையில் களமாடியது நானும் என் நண்பர்களும்தான். வெற்றியும் நமக்குத்தான்'' என்று முன்னுரையுடன் துவங்கி முழுவதுமாக விவரித்தான்.

‘‘என்ன காரணத்தாலோ இந்த ஏரிக்கரை யையும் அதன் அருகில் அமைந்திருக்கும் சுரங்கத்தின் வெளி வாயிலையும் ரகசியமாகக் கண்காணிக்கும்படி என்னைப் பணித்திருந்தார் இளவரசி மானியார். அதன்படியே நாங்களும் இப்பகுதியை தீவிரமாகக் கண்காணித்து வந்தோம். நேற்று இரவு சூழும் நேரத்தில் புரவிகளில் வந்த சிலர்,  ஏரிக் கரையை அடைந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த ஆயுதங்களைக் கண்டதுமே அவர்களது நோக் கத்தைப் புரிந்துகொண்டேன், ஏரிக்கரையை பழுதுபடுத்தப் போகிறார்கள் என்று. கரை உடைந்தால் விளைவு என்னவாகும் என்பதையும் சடுதியில் புரிந்துகொண்டேன். நானும் என் வீரர்கள் சிலரும் துரிதமாகச் செயல்பட்டோம்.

அவர்கள் அறியாவண்ணம் ஏரிக்கரையின் வேறொரு இடத்தை அடைந்து, நீரில் மூழ்கியபடி நீந்தி, அவர்கள் இருந்த இடத்தை அடைந்தோம். அவர்கள் ஏரிக்கரையில் கை வைத்ததும் நீரிலிருந்து நாங்கள் எழுந்தோம். போர் துவங்கியது. சிறிது நேர சண்டைக்குப்பின் எதிரிகளில் ஓரிருவர் மரணித்தார்கள். மற்றவர்கள் பிடிபட்டார்கள். அவர்களுக்குத் தலைவனாக வந்தவன் அந்த கொலைகார முரடன்''
பரதவர் தலைவன் உரைத்த கடைசி வாக்கி யம், கோச்செங்கணை உறையச் செய்தது.

அதுமட்டுமின்றி, ஆலயத்தில் காத்திருந்த பட்டர்பிரானின் சீடனிடம் ஒற்றன் ஒருவன் முந்தையநாள் கொடுத்துச் சென்ற நறுக்கோலைப் பாடலின் ரகசியத்தை பரமேசுவரப்பட்டர் உடைத்தபோது, இன்னும் அதிர்ந்துபோனான் கோச்செங்கண்!

சதிவலை குறித்து இங்கே இவர்கள் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்த அந்த முன்னிரவுப் பொழுதில், புலியூருக்கு புரவியில் விரைந்து கொண்டிருந்த இளவரசியின் தோழி பொங்கியை முரட்டுக்கூட்டம் ஒன்று சுற்றி வளைத்தது.

திடுமென சூழ்ந்துவிட்ட பேராபத்துகூட அவளை அச்சத்துக்கு ஆளாக்கவில்லை. ஆனால், அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வந்த மனிதனே அவளைப் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கினான்! 

- மகுடம் சூடுவோம்...