ஊர்வலம்!

தூத்துக்குடி- சரித்திரக் காலத்தில் கொற்கை, காயல் ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக பெரும் துறைமுக நகரமாகத் திகழ்ந்த இவ்வூருக்கு திருமந்திர நகர் என்ற பெயரும் உண்டு. முற்காலத்தில் பாண்டிய நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட இந்தப் பகுதியில், பரதவர்கள் முத்துக்குளித்தலில் ஈடுபட்டு வந்ததால், இது ‘முத்துக் குளித்துறை’ என்றும், ‘முத்து நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

 சீதா தேவியைத் தேடுவதற்காக அனுமனை அனுப்பிவைத்த பிறகு, இப்பகுதிக்கு வந்த ராமன், மந்திரங்களை உச்சரித்து தவம் செய்ததால் ‘திருமந்திர நகர்’ என்ற பெயர் வந்ததாகக் கூறுவர்.
 ஒரு முறை சிவபெருமானும், பார்வதியும் தூத்துக்குடி கடற்கரை ஓரத்தில் அமர்ந்து திவ்விய மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந் தனர். அப்போது கடல் இரைச்சல், பனைமர மட்டைகள் போடும் சப்தம், ஒரு குயவன் பானை செய்யும் சப்தம் ஆகிய மூன்றும் இடைஞ் சல்களாக இருந்ததாம். உடனே சிவபெருமான், ‘கடல் ஓசை நிற்கக்கடவது; பனை ஓசை நிற்கக்கடவது; குயவர்களே இல்லாமல் இருக்கக் கடவது’ என்று சாபமிட்டாராம். அதிலிருந்து தூத்துக்குடி பக்கமுள்ள கடலில் அலை ஓசை வருவதில்லை; பனை ஓலையின் ஓசையும் கிடையாது; அதேபோல், ‘இப்போது எப்படியோ தெரியாது. ஆனால், ஒரு காலம் வரையிலும் இவ்வூரில் குயவர்களும் கிடையாது’ என்பது இங்குள்ள முதியவர்களின் கருத்து.

 நீர் தேங்கிக்கிடந்த மண்ணைத் தூற்றி துறைமுகமும் குடியிருப்புகளும் தோன்றிய ஊர் என்பதால் ‘தூற்றுக்குடி’ என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே பின்னர் தூத்துக்குடி என்று மருவியது என்பார்கள். நெல்லை- தூத்துக்குடி வட்டார வழக்கில் தூத்துதல் என்பதற்கு ‘முழுவதுமாகச் சுத்தம் செய்தல்' என்பது பொருள்.

 வாகைக்குளம் மற்றும் கங்கைகொண்டான் கல்வெட்டுகளில் இவ்வூர் ‘தூற்றிக்குடி’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

 1930-களில் இவ்வூரில் மிகக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் கிணறுகளைத் தூர் எடுத்து தண்ணீர் குடித்ததனால், தூத்துக்குடி என்று பெயர் வந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.

 ‘தாலமி’ என்ற கிரேக்கப் பயணி தனது பயண நூலில், ‘சோஷிக் குரி’ (சிறு குடி) என்ற முத்துக்குளி நகரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊர்வலம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தூத்துக்குடியின் ஆதிகுடிகள் என்று அழைக்கப்படுபவர்கள் ‘பரதவர்கள்’. இவர்களது முக்கியத் தொழில் முத்துக்குளித்தல் ஆகும். பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்திலிருந்தே அவர்கள் முத்துக்குளித்தல் தொழில் செய்ததாகவும், பாண்டிய மன்னரின் குடிகளாக விளங்கியதாகவும் வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. பிறகு வந்த சோழர்களும் இவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதால், சோழர்களுக்குப் பரதவர்கள் வரி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

 பிற்காலப் பாண்டியர்கள் காலத்தில் காயல் பட்டினத்தில் வியாபாரம் செய்த ‘மூர்கள்’ என்ற அரேபியர்கள், பாண்டிய மன்னர்களுக்கு வேண்டிய குதிரைகளை வழங்கியதாகவும், அதற்குப் பதிலாக முத்துக்களைப் பெற்றுக் கொண்டதாகவும், பாண்டிய மன்னர்கள் அரசாங்கத்தில் முக்கிய அங்கத்தினர்களாக இடம் வகித்ததாகவும் கூறப்படுகிறது.

 தூத்துக்குடி நகரில் லிங்க வடிவில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு சங்கர ராமேஸ்வரரை, பார்வதிதேவி பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகக் கூறுகின்றனர்.  இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் திருநாமம் அருள்மிகு பாகம்பிரியாள்.

 தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் துறைமுகப் பெருமாள் கோயிலும், இரண்டாம் கேட் விநாயகர் கோயிலும் பிரசித்தி பெற்றவை.அதேபோன்று தூத்துக்குடி மதுரை சாலையில் கோயில் கொண்டிருக்கும் இசக்கி அம்மன், வாகன ஓட்டிகளின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள். இவளை வழிபட்டுச் சென்றால், பயணத்தில் வழித் துணையாய் வந்து காப்பாள் என்பது நம்பிக்கை.
 அதேபோல், கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள பெருமாள் கோயிலை, திருப்பதிக் கோயில் என்றே அழைக்கிறார்கள். திருப்பதிக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இங்கு வந்து வேங்கட வனைத் தரிசித்தால், திருப்பதிக்குச் சென்று வந்த பயனைப் பெறலாம் என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

 தூத்துக்குடியில் மட்டுமல்ல, இவ்வூரின் அருகிலும், சுற்றுவட்டாரங்களிலும் பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலங்கள் பல உண்டு.  தூத்துக்குடி-கோரம்பள்ளம் பகுதியில் உள்ள ‘பிரத்தியங்கரா தேவி’ கோயிலில் சத்ருசம்ஹார யாகம் நடத்தினால் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

 தூத்துக்குடி இருந்து சுமார் 31 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பாஞ்சாலங் குறிச்சி கோட்டை. பிற்காலத்தில் தமிழக அரசால் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கோட்டைக்கும், கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறுக்கும் தவறாமல் சென்று வருகிறார்கள் சரித்திர ஆர்வலர்கள். பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு அருகில் கோயில் கொண்டிருக்கும் வீரஜக்கம்மா தேவியையும் தரிசித்து வரலாம்.

ஊர்வலம்!

 அறுபடை வீடான திருச்செந்தூர், தூத்துக்குடியில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது. அதுமட்டுமின்றி ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருக்கோளூர், திருப்புளியங்குடி, ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, பெருங்குளம், தொலைவில்லி மங்கலம், இரட்டைத்திருப்பதி ஆகிய நவ திருப்பதிகளையும் தூத்துக்குடிக்குச் செல்லும் பக்தர்கள் தரிசித்து வரலாம். நவகயிலாய தரிசனமும் இப்பகுதியில் விசேஷம்!

 தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இருக்கும் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் அடிக்கடி வந்து வணங்கிச் செல்வாராம்.

 தூத்துக்குடியில் இருந்து சுமார் 86 கி.மீ. தொலைவில் உள்ளது கழுகுமலை. கழுகாசல மூர்த்தி எனும் பெயருடன் முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் ஊர் இது. இங்குள்ள கோயில் குடைவரையாகத் திகழ்கிறது. மேலும், இங்கே மலை உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயில், வெட்டுவான் கோயில், சமணப் படுகைகள், ஐயனார் சுனை ஆகியனவும் தரிசிக்க வேண்டியவை.
 செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் ஆகியோரால் சிறப்பு பெற்றது தூத்துக்குடி. வ.உ.சி பிறந்த ஓட்டப்பிடாரம் தூத்துக்குடியில் இருந்து சுமார் 23 கி.மீ தொலை விலும், மகாகவி பாரதி பிறந்த எட்டையபுரம் சுமார் 51 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

 வ.உ.சி. தன்னுடைய இறுதி நாட்களில் தூத்துக்குடி சிவன் கோயில் தெருவில் வசித்தார்.

 தூத்துக்குடி புதுக்காலனியில் உள்ள வக்கீல் சி.ராமசாமி ஐயரின் வீடு சரித்திரப் பிரசித்தி பெற்றது. சுதந்திரப் போராட்ட நாட்களில் சத்தியமூர்த்தி, ராஜாஜி, காமராஜர் ஆகியோர் இந்த வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்கள்.

 தூத்துக்குடி துறைமுகம் ஓர் இயற்கைத் துறைமுகம். அக்டோபர் மாதம் கடலில் அமைதி நிலவும்போது, முத்துக்குளித்தல் தொழில் நடைபெறுமாம்.

 உப்பு உற்பத்திக்கும் பிரசித்திப் பெற்றது தூத்துக்குடி. உப்பு விளையும் களம் என்பதையே, இன்று உப்பளம் என்கின்றனர். பழங்காலத்தில், வேலைக்குக் கூலியாக நெல்லும் (சம்பாவும்) உப்பும் (அளத்தில் விளைவது) கொடுக்கப்பட்டதாம். இதையொட்டியே ‘சம்பளம்' என்ற சொல் பிறந்தது என்பார்கள்.

ஊர்வலம்!

தூத்துக்குடி, உரத்துக்கும் பெயர் பெற்றது. திருச்செந்தூர் சாலையிலுள்ள ஸ்பிக் நகரில்தான் உர உற்பத்தி நடைபெறுகிறது. 

 ‘நல்ல குடி நாணயம், தூத்துக்குடி வெண்கலம்’ என்பது இப்பகுதி கிராமங்களில் வழங்கப் படும் சொல் வழக்கு. இதற்குக் காரணமாக உலோக கால நாகரிகத்தை வளர்த்தெடுத்த ஆதிச்சநல்லூரையும் சொல்வார் கள். தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு 1 மணி நேர பயணம். நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது, தமிழரின் ஆதி நாகரிகம் செழித்த ஆதிச்சநல்லூர். தூத்துக்குடிக்குச் செல்லும் அன்பர்கள், தொல்பொருள் ஆய்வுக் களமாகத்  திகழும் ஆதிச்ச நல்லூருக்கும் சென்று வருதல் அவசியம்!

படங்கள்: ஏ.சிதம்பரம்

தொகுப்பு: ம.மாரிமுத்து, ச.கணபதி, ர.பார்வதி, ஏ.முத்துராஜ், ப.அன்புமணி, கி.ராஜாமணி, ஐ.முருகபாண்டியன், ம.பாண்டிதுரை, நெ.மல்லிகா, அ.ஏரல்முத்து, கே.சி.ராமு

அடுத்த இதழில்... கும்பகோணம்

இந்த ஊர் குறித்த நீங்கள் அனுப்பும் தகவல்கள், 10.5.16-ம் தேதிக்குள் எங்களுக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள்!