Published:Updated:

திருப்பதி மலையில் முதல் நந்தவனத்தை அமைத்தவர்! அனந்தாழ்வான் அவதார தினப் பகிர்வு! #Tirupati

திருப்பதி மலையில் முதல் நந்தவனத்தை அமைத்தவர்! அனந்தாழ்வான் அவதார தினப் பகிர்வு! #Tirupati
திருப்பதி மலையில் முதல் நந்தவனத்தை அமைத்தவர்! அனந்தாழ்வான் அவதார தினப் பகிர்வு! #Tirupati

திருமலையில், திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்கச் செல்லும்போது எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக்கிடக்கும் நந்தவனங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த நந்தவனங்களில் போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் அமர்ந்து, இளைப்பாறியுமிருப்பீர்கள். ஆனால், திருமலையில் முதன்முதலில் நந்தவனத்தை அமைத்து, அந்த நந்தவனத்தில் மலர்ந்த மலர்களை மாலையாகத் தொடுத்து  பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தவர் யார் என்பதை அறிவீர்களா? 

உடையவர் ஸ்ரீராமாநுஜர் இடும் கட்டளையைச் சிரமேற்கொண்டு செயல்படுத்தும் அனந்தாழ்வான்தான் திருமலையில் முதன்முதலில் நந்தவனத்தை அமைத்தவர். 

திருவரங்கத்தில் அரங்கனின் அழகை ஆராதித்து, பூஜை, வழிபாடுகள், வீதி உலா உற்சவங்கள் எனக் கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருந்த ராமாநுஜருக்கு, திருமலையிலும் அப்படி பூஜை வழிபாடுகள் நடக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன் பொருட்டே அவரின் தாய்மாமன் திருமலை நம்பியை ஏற்கெனவே திருமலைக்கு அனுப்பி வைத்திருந்தார். 

தற்போது, பெருமாளுக்கு நித்யப்படி மாலை தொடுத்து அணிவிக்கும் பணியை எவரிடம் ஒப்படைப்பது என்று யோசித்தார். அவருடைய விருப்பத்தைச் செயல்படுத்துவதாகக் கூறினார் அனந்தாழ்வான். திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு திருமலைக்கு வந்தவர், தன் கர்ப்பிணி மனைவியின் துணையுடன், திருப்பதி மலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான `கோகர்ப்ப ஜலபாகம்' என்னும் குளத்தை உருவாக்கினார். 

குளம் உருவாகும்போது கர்ப்பிணியான அவரின் மனைவிக்கு சிறுவனாக வந்து பெருமாள் உதவப்போய், அனந்தாழ்வானின் கடப்பாரையில் அடிவாங்கினார். பெருமாளின் தாடையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்திட, இன்றுவரை பெருமாளுக்கு பச்சைக் கற்பூரம் வைப்பதன் பின்னணிக் கதை இதுதான் என்பதை நாம் அறிவோம்.

இத்தகையப் பெருமை வாய்ந்த அனந்தாழ்வானின் 964-வது அவதார தினம் மார்ச் 11-ம் தேதி திருமலையில் கொண்டாடப்படுகிறது. இன்று நாளொன்றுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மலர் மாலைகள்  பெருமாளுக்கு சாத்தப்படுவதுடன், திருமலையையும் அலங்கரிக்கின்றன. ஆனால், கிட்டதட்ட 900 ஆண்டுகளுக்கு முன்னர் பெருமாளுக்கு தினமும் மாலை சாத்தும் பாக்கியத்தைப் பெற்றவர் ஸ்ரீராமாநுஜரின் பிரியத்துக்கு உரிய சீடர் அனந்தாழ்வான். திருமலை திருப்பதியில் இதையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

தினந்தோறும் திருமலை நந்தவனத்தில் மலர்களைக் கொய்து, தானே அதை மாலையாகக் கட்டி பெருமாளுக்கு அணிவித்து, மகிழ்ந்து வந்தார். ஒருநாள், திருமலையில் தான் அமைத்த நந்தவனத்தில் பெருமாளுக்காக மலர்களைப் பறித்துக்கொண்டிருந்தார் அனந்தாழ்வான். அப்போது அந்த வனத்திலிருந்த பாம்பு ஒன்று அவரைத் தீண்டிவிட்டு அங்கிருந்து ஓடியது. ஆனாலும், அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமலும் சற்றும் பதற்றம் அடையாமல் பூக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார். 

அவருடன் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த அவரின் நண்பர்கள் பதறிப்போய், ''பாம்பின் விஷக்கடிக்கு பச்சிலை மருந்து வைத்துக் கட்டினால்தானே விஷமிறங்கும். அதைவிடுத்து நீங்கள் இப்படி செய்யலாமா?'' எனக் கேட்டனர்.

அதற்கு, அனந்தாழ்வான் சிறிதும் பதற்றமின்றி, ''கடித்த பாம்பு வலிமையற்றதாக இருந்தால், திருக்கோனேரியில் தீர்த்தமாடி, திருவேங்கடமுடையானை தரிசிப்பேன். வலிமையுள்ளதாக இருந்தால், விரஜா நதியில் நீராடி, வைகுண்ட வாசனை சேவிப்பேன்'' என பதில் சொன்னார்.

அவரின் பதிலைக் கேட்டு, நண்பர்களும் உறவினர்களும் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். அவர் கூறியதுபோலவே, பாம்பின் விஷம் வைராக்கியவாதியான அனந்தாழ்வானை எதுவும் செய்ய வில்லை. 

எத்தனை வைராக்கியமான பக்தி! திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மீது பக்தி வைத்ததுடன் சரண் புகவும் செய்தார். சரணாகதி தத்துவத்துக்கு அனந்தாழ்வானை விடச் சிறந்த உதாரணப் புருஷராக வேறு எவரைச் சொல்ல முடியும்? அவரது அவதாரத் திருநாளைப் போற்றுவோம்.