Published:Updated:

திருப்பதி பெருமாள் மீது 32,000 கீர்த்தனைகளைப் பாடிய அன்னமய்யா! - நினைவுதினப் பகிர்வு #Tirupati

திருப்பதி பெருமாள் மீது 32,000 கீர்த்தனைகளைப் பாடிய அன்னமய்யா! - நினைவுதினப் பகிர்வு #Tirupati
திருப்பதி பெருமாள் மீது 32,000 கீர்த்தனைகளைப் பாடிய அன்னமய்யா! - நினைவுதினப் பகிர்வு #Tirupati

திருப்பதி வெங்கடேசப் பெருமாள் மீது மாறாத பாசமும் பக்தியும் கொண்ட ரிஷிகள், மகான்கள், பக்தர்கள் எனப் பலரிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மகான்களில், தாளப்பாக்கம் அன்னமய்யா மிக முக்கியமானவர். பெருமாளின் மீது பக்தி ரசம் சொட்டும் 32,000 கீர்த்தனைகளைப் பாடிப் புகழ் பெற்றவர். திருப்பதி மலையடிவாரத்தில் இருக்கும் அலிப்பிரி பாதாள மண்டபத்தில் நாளை மார்ச் 13-ம் நாள் அன்னமய்யாவின் 515-வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.  இதையொட்டி அன்னமய்யா வேங்கடவன் மீது மாறாத பக்தியுடன் இசைத்த கீர்த்தனைகளும் பாடல்களும் இசைக்கப்படுகின்றன.  

அன்னமய்யா ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்திலிருக்கும், தாளப்பாக்கம் எனும் கிராமத்தில், சூரி அக்கலாம்பா தம்பதிக்கு மகனாக கி.பி 1408-ல் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே சாஸ்திர விஷயங்களைக் கற்றுத்தேர்ந்தார். அவருக்கு திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் மீது அளவுகடந்த அன்பு உண்டானது. சதா சர்வகாலமும் அவரின் சிந்தனையுடனேயே இருந்தார். பக்தி என்றால், அப்படிப்பட்ட ஒரு பக்தி. 
இன்றும் இவரது பாடல்கள் இசைக்கப்பட, அவற்றைக் கேட்ட பிறகுதான் பெருமாள் துயில் கொள்ளச் செல்கிறார் என்பது ஐதீகம்.
பகவானின் மீது பக்திகொள்வதில்தான் எத்தனையெத்தனை விதங்கள். பிரதானமாக ஒன்பது வகை பக்திகள் சொல்லப்படுகின்றன. `சிரவணம்', `கீர்த்தனம்' `ஸ்மரணம்', `பாதசேவை', `அர்ச்சனை', `வந்தனம்', `தாஸ்யம்', `ஸக்யம்' மற்றும் `ஆதம நிவேதனம்’ எனச் சொல்வார்கள். 

அன்னமாசார்யா இந்த ஒன்பதுவிதமான பக்தியில் இரண்டாவதைத் தேர்வு செய்துகொண்டார். பதினாறாவது வயதில் பாடல்கள் எழுதத் தொடங்கியவர், 80 ஆண்டுகள் அதாவது 1503-ம் ஆண்டு வரை 32 ஆயிரம் பாடல்களை இயற்றியிருக்கிறார் என்பதைக் கேட்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

'அத்யாத்ம சங்கீர்த்தனலு', 'சிருங்கார சங்கீர்த்தனலு', 'சிருங்கார மஞ்சரி', ஆகிய பாடல் திரட்டுகள் முக்கியமானவை. எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாள், ப்ரியா சிஸ்டர்ஸ் ஆகியோர் அன்னமய்யாவின் கீர்த்தனைகளை தற்கால இசைக்கருவிகளின் துணையுடன்  பாடியுள்ளனர். இதில் விஷேசம் என்னவென்றால் தெலுங்கு தெரியாதவர்கள் இப்பாடல்களைக் கேட்டாலும் இதயசுத்தியுடன்

கேட்கும்போது அர்த்தம் புரியும்வண்ணம் அவை இயற்றப்பட்டுள்ளன என்பதுதான். அந்த அளவு படித்தவர் முதல் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் ஒரு பொதுவான இசைகோர்ப்பாக அமைந்துள்ளன.

இவரது துணைவியார் `திம்மக்கா' தெலுங்கு இலக்கிய உலகில் முதல் பெண்பாற் புலவராகக் கருதப்படுகிறார். `சுபத்ரா கல்யாணம்' எனும் கவிதை நாடகத்தை அந்தக் காலத்திலேயே எழுதி, அரங்கேற்றியவர். அன்னமய்யாவின் மூத்த மகன் திருமலாச்சார்யாவையும் அவர் கீர்த்தனைகள் இயற்றும்படி கூற, அவரும் பெருமாளின் மீது பல கீர்த்தனைகளை எழுதி, பாடியிருக்கிறார்.அன்னமய்யாவின் பாடல்களை பக்தி, சிருங்காரம், வைராக்கியம் என மூன்று வகைகளாக இசை உலகம் பிரிக்கிறது.

பல்லவி, அநுபல்லவி, சரணம் என கர்னாடக சங்கீத இசை உருமாற்றம் அடைந்ததில், இவர்களது குடும்பத்தினரின் பங்களிப்பு மிகவும் அதிகம். இவர்தம் பாடல்கள், வைணவ பக்தி இலக்கிய உலகில், நம் தமிழகத்தின் ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் போன்றவை.

உடையவர் ஸ்ரீராமாநுஜர் மீதும் மிகுந்த பக்தியைக் கொண்டவர். அவரது கருத்துகளைப் பல பாடல்களில் வலியுறுத்தியிருக்கிறார். உலகில் நாம் ஒவ்வொருவரும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அன்பு நம் திருப்தியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இறைவனின் மீதான அன்பு இறைவனின் திருப்தியை அடிப்படையாகக் கொண்டது. அப்படிப்பட்ட விசேஷமான அன்பைப் பெற்றவர் அன்னமய்யா. 
****