தொடர்கள்
Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 3

கயிலை... காலடி... காஞ்சி! - 3
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை... காலடி... காஞ்சி! - 3

நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 3

த்ரயீ ஸாங்க்யம் யோக: பசுபதிமதம் வைஷ்ணவமிதி
ப்ரபிந்நே ப்ரஸ்தாநே பரமிதமத: பத்யமிதி ச |
ருசீநாம் வைசித்ர்யாத்ருஜுகுடில நாநாபதஜுஷாம்
ந்ருணாமேகோ கம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ


பல்வேறு இடங்களில் தோன்றி, பல்வேறு பாதைகளில் வளைந்து நெளிந்து சென்றாலும், அனைத்து நதிகளும் முடிவில் ஒரே கடலில் சங்கமிப்பதுபோல், உலகத்தில் வேதாந்தம், யோகம், சாங்க்யம், சைவம், வைஷ்ணவம், பாசுபதம் என்று ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மார்க்கத்தைப் பின்பற்றினாலும் முடிவில் அவர்கள் ஒன்றேயான பரம்பொருள் உன்னிடமே சங்கமிக்கிறார்கள்.

- சிவமஹிம்ன ஸ்தோத்திரம்

கயிலையில் உறையும் நம் ஐயனுக்கு ஆயிரமாய் திருநாமங்கள் இருந்தாலும், அவற்றுள் சம்பு என்ற திருப்பெயரும், சங்கர என்ற திருநாமமும் அளவற்ற மகிமை கொண்டவை.

சம்பு என்பது இருந்த இடத்தில் இருந்தபடி, தன்னைத் தேடி வந்து சரண் அடைபவர்களுக்கு அருள்புரிவது; சங்கர என்பது தானே தேடிச் சென்று அருள்புரிவது.

தன்னைத் தேடி வந்து சரண் அடைபவருக்கு அருள்புரியும் அந்தச் சம்பு மூர்த்திதான், ஒரு நெருக்கடியான சூழ்நிலையில்், நம்மைத் தேடிவந்து அருள்புரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்படி நிகழ்ந்ததுதான் சங்கர அவதாரம்!

எனில், அந்த நெருக்கடிதான் என்ன?

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம்...

அந்நியர்களின் ஆதிக்கம் எதுவும் இல்லாத அந்தக் காலத்திலேயே, என்ன காரணத்தாலோ சனாதன தர்மம் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கி, பலவகையான துர்சமயங்கள் தோன்றி, மனிதர்களிடையே சதா சண்டை சச்சரவுகள் நிலவியது.

கயிலையில் சம்புவாக இருந்த ஈசனின் திருமுகத்தில் சிந்தனை ரேகைகள். ‘‘ஐயனே, தங்களின் சிந்தனைக்கான காரணத்தை நான் அறியலாமா?’’ எனக் கேட்டாள் அம்பிகை.

‘‘அநாதியான நம் சனாதன தர்மம் நலிவுற்று வருகிறது. நம் குழந்தைகள் பாவக்குழியில் வீழ்ந்து வருகின்றனர். அவர்கள் நம்மைத் தேடி வரவும் இயலாதவர்களாக, அஞ்ஞானக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றனர். எனவே, அவர்களை நல்வழிப்படுத்தவும், அவர்களைப் பாவக் கடலில் இருந்து கரை சேர்க்கவும் நானே அவர்களைத் தேடிச் செல்வதென முடிவு செய்துள்ளேன்!”

ஐயனின் முடிவுக்கு அம்பிகையும் சம்மதித் தாள். அவளுக்கும் தன் குழந்தைகளாகிய நம்மிடம் அன்பும் கருணையும் இருக்காதா என்ன?!

அப்படி நிகழ்ந்ததுதான், காலடியில் ஸ்ரீசங்கர அவதாரம்.

கயிலையில் சம்புவாக இருந்த சிவபெருமான் தான் காலடியில் சங்கரராக அவதரித்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி?

இதோ, காஞ்சி பெரியவர் தெய்வத்தின் குரலாய் மொழிந்திருப்பதைக் கேளுங்கள்...

‘‘ஸ்ரீசங்கராசாரியாள் ஈஸ்வர அவதாரம்தான் என்பதற்கு வேதமே பிரமாணம். யஜுர் வேதத்தில் உள்ள ஸ்ரீருத்ரத்தில், ‘கபர்த்திக்கு நமஸ்காரம்; வ்யுப்தகேசனுக்கு நமஸ்காரம்’ என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ‘கபர்த்தி’ என்றால், ஜடாதரி என்று பொருள். சிவபெருமானை பொதுவாக ஜடாதரியாகவே காண்கிறோம். ‘வ்யுப்த’ என்றால், ‘வபனம் செய்துகொண்ட’ என்று பொருள். ‘வ்யுப்தகேசன்’ என்றால், தலையை முண்டனம் செய்துகொண்டவன் என்று பொருள். ஜடாதரியான சிவன் தலையை முண்டனம் செய்துகொண்டவனாக ‘வ்யுப்தகேச’னாக இருந்தது எப்போது? ஸ்ரீஆதிசங்கரராக இருந்தபோதுதான். ஆக, திரிகாலமும் உணர்ந்த வேதம், இதை முன்பே சொல்லிவிட்டது!’’

சரி, அந்த சர்வேஸ்வரனே இந்தப் பூவுலகில் அவதரிக்கவேண்டும் என்றால், அந்த அவதாரக் குழந்தையைப் பெற்றெடுப்பவர்கள் பெரும் புண்ணியம் செய்திருக்கவேண்டும் அல்லவா?
அப்படிப் புண்ணியம் செய்தவர்கள்தான் காலடியில் வேதமே சுவாசமாக வாழ்ந்த சிவகுரு - ஆர்யாம்பா தம்பதியினர். அவர்தம் புண்ணியப் பலனாக இந்த மண்ணுலகைப் புனிதப்படுத்த சம்புவின் சங்கர அவதாரம் காலடி க்ஷேத்திரத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.

சங்கர அவதார காலம் முப்பத்திரண்டு ஆண்டுகள்தான் என்றாலும்கூட, அந்தக் குறுகிய காலத்திலேயே ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் திக்விஜயம் செய்து, நலிவுற்று இருந்த சனாதன தர்மத்துக்குப் புத்துயிர் கொடுத்தார்; பல கிரந்தங்களுக்கு பாஷ்யம் இயற்றினார்; ஷண்மத ஸ்தாபிதம் செய்தார்; அனைத்துக்கும் மேலாக, அனைத்து ஜீவன்களும் ஒன்றேயான பரம்பொருளின் அம்சமே என்னும் உயரிய அத்வைத தத்துவத்தை நிலைநிறுத்தினார். அத்துடன், தன் அவதார காலம் முடிந்ததாகக் கொண்டு, தமது யதாஸ்தானமாகிய கயிலைக்கே திரும்பிவிட்டார்.

ஆண்டுகள் பல நூறு கடந்தன. சனாதன தர்மத்தில் இருந்து மீண்டும் ஒருமுறை தேசம் விலகிச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. அந்நியர்களின் ஆதிக்கம் அதற்கு அடித்தளம் இட்டது. யதாஸ்தானத்துக்குச் சென்றுவிட்ட சம்புவாகிய சங்கரர் மீண்டும் இந்த உலகத்தில் அவதரிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஆனால், முந்தைய அவதாரம்போல் குறுகிய கால அவதாரமாக இல்லாமல், நம்மிடையே நீண்ட நெடுங்காலம் இருந்து, நமக்கெல்லாம் அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார்.

கயிலை நாயகனின் திருவுள்ளப்படியே, விழுப்புரத்தில் கடந்த 19-ம் நூற்றாண்டில் மீண்டும் சங்கர அவதாரம் நிகழ்ந்தது.

அந்த அவதாரம், நம் வாழ்வில் என்றென்றும் வசந்தம் தழைக்கச் செய்ய வந்த அவதாரம்போன்று வசந்தகாலத்தில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஒருவரின் வம்சத்தில்தான் அந்த அவதாரம் நிகழ்ந்தது.

யார் அவர்? அவருடைய வம்சம் செய்த புண்ணியம்தான் என்ன?

- திருவருள் தொடரும்

காஞ்சி மஹா ஸ்வாமிகளின் ஜயந்தி விழா!

கயிலை... காலடி... காஞ்சி! - 3

காஞ்சி மஹா ஸ்வாமிகளின் ஜயந்தி, வரும் 22-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு,  சிவாஸ்தானம் என்று சொல்லப்படும் தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மே மாதம் 1 முதல் 27 வரை கிருஷ்ண யஜுர் வேத பாராயணமும், மே 11 முதல் 27 வரை ரிக் வேத பாராயணமும், மே 11 முதல் 22 வரை சாம வேத பாராயணமும் நடைபெற இருக்கிறது. மே மாதம் 13-ம் தேதி சித்திரை மாதம் 30-ம் தேதி மஹா ஸ்வாமிகள் பட்டத்துக்கு வந்த நாள் என்பதால், அன்றைய தினம் பிரம்மபுரீஸ்வரர் தெப்போற்ஸவமும், மே 21-ம் தேதி மஹா ருத்ரமும், 22-ம் தேதி ஹோமம் மற்றும் அபிஷேகங்களும் நடைபெற இருக்கின்றன. அன்பர்களின் பொருளுதவியுடன் நடைபெறும் இந்த வைபவத்தில் அனைவரும் பங்கேற்று மஹா ஸ்வாமிகளின் அருள் பெறலாம்.