பிரீமியம் ஸ்டோரி
நாரதர் உலா

ஸ்... புஸ்ஸென்று வேர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தார் நாரதர். அவருக்கு இஞ்சி, மாங்காய்த் துண்டுகள், கொத்துமல்லி போட்ட ஜில்லென்ற நீர்மோர் கொடுத்து உபசரித்தோம். ஏ.சி-யில் சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், “அடடா... என்ன வெயில்! என்ன வெயில்!” என்றார்.

‘‘என்ன நாரதரே, ரொம்ப நாளாக இந்தப் பக்கம் காணோம்? ஏகப்பட்ட கோயில்களுக்கு திக்விஜயம் சென்றுவிட்டீரோ?’’ என்று கேட்டோம்.

‘‘நான் ஊர்சுற்றிதான். ஆனால், இந்த வெயிலில் என்னால் ஊர் ஊராக அலைய முடியுமா? அதனால், கயிலாய மலைக்குச் சென்று ‘சிவனே’யென்று அங்கேயுள்ள பனிமலையில் பதினைந்து நாட்களுக்கு மேல் படுத்துவிட்டேன்!” என்று சிரித்தார் நாரதர்.

நாரதர் உலா

“அடடா! நீங்கள் வந்ததும் ‘நாரதர் உலா’ பகுதிக்கு செமத்தியான தீனி கொண்டு வந்திருப்பீர் என்றல்லவா நினைத்தோம்?” என்றோம் சற்று ஏமாற்றத்துடன்.

“கொண்டு வராமலென்ன? காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் போய் வந்தேன்...’’ என்று தொடங்கிய நாரதரை மறித்து, ‘‘அங்கே ஏதோ உற்ஸவர் விக்கிரஹத்தை முன்னிட்டுப் பொதுமக்கள் போராடுவதாகக் கேள்விப்பட்டோமே?’’ என்றோம்.

‘‘அதைத்தான் சொல்ல வந்தேன். அந்தக் கோயிலில் மிகவும் பழைமையான சோமாஸ்கந்த உற்ஸவ விக்கிரஹத்தின் இடது கை மற்றும் அடிப்புறத்தில் பழுதடைந்துவிட்டதாகவும், அதற்கு பதிலாக புதிதாக விக்கிரஹம் செய்து வைக்கவேண்டும் என்றும் அர்ச்சகர்கள் கோரிக்கை வைத்தார்களாம். அதன் அடிப்படையில், அறநிலையத்துறையின் தலைமை ஸ்தபதியிடம் ஆய்வு செய்யுமாறு ஆணையர் உத்தரவிட்டாராம்...’’
 
‘‘ஆய்வு நடத்தப்பட்டதா?’’

‘‘நடத்தப்பட்டது. ஸ்தபதி விக்கிரஹத்தை ஆய்வு செய்து, பழைமையான அந்த சோமாஸ்கந்த விக்கிரஹத்தை 75% தங்கம் கலந்து செய்யப்பட்டதுபோல் தெரிகிறது என்றும், மிகவும் கனமான வெள்ளியால் ஆன கவசம் அணிவித்ததால் அப்படிச் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அந்த விக்கிரஹத்தை ஆகம விதிக்கு உட்பட்டுப் பழுது பார்த்தால், 1000 வருஷங்களுக்குக் குறையாமல் வழிபடலாம்; இப்போதைக்கு முக்கிய உற்ஸவங்களுக்கு மட்டும் அந்த விக்கிரஹத்தைப் பயன்படுத்திக்கொண்டு, புதிதாக ஒரு விக்கிரஹம் செய்து அதை மற்ற உற்ஸவங்களுக்கும் திருவீதிஉலாக்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிக்கை சமர்ப்பித்தாராம் தலைமை ஸ்தபதி. அதன்பிறகே பழைய விக்கிரஹத்துக்கு தங்கக் கவசம் செய்வது என்றும், புதிய விக்கிரஹம் தயாரிப்பது என்றும் கோயில் நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. சுவாமிக்கு புதிய உற்ஸவர் திருமேனி செய்தால், அம்பாள் திருமேனியையும் மாற்ற வேண்டும் என்று திருக்கோயில் ஸ்தானீகர்களும், குருக்களும் கோரிக்கை வைக்க, தற்போது அம்பாள் ஏலவார்குழலி திருமேனியையும் புதியதாக உருவாக்கி வருகிறார்கள்’’ என்றார் நாரதர்.

‘‘நல்ல விஷயம்தானே? பின்னே, புதிய உற்சவர் விக்கிரஹத்தைப் பயன்படுத்தக்கூடாது; பழைய விக்கிரஹத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் போராடுவதற்கு என்னதான் காரணம்?’’ என்றோம் புரியாமல்.

‘‘பஞ்ச பூத ஸ்தலங்களில் ‘ப்ருத்வி’ எனப்படும் மண் ஸ்தலமான இக்கோயிலின் மூலவர் மணல் லிங்கம். எனவே, இந்த மூலவருக்கு அபிஷேகம் கிடையாது; உற்ஸவருக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். பஞ்சலோகங்களால் உருவாக்கப்பட்ட மிகப் பழைமை வாய்ந்த இந்த உற்ஸவர் விக்கிரஹத்தை மன்னர் பெருமக்கள் பலர் வழிபட்டிருக்கிறார்கள். சோமாஸ்கந்த பெருமானைத் தாங்கி உலா வருவதற்காகவே வெள்ளி ரிஷப வாகனத்தை கிருஷ்ண தேவராய மன்னர் அளித்திருக்கிறார். ‘முனிவர் பெரு மக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழிபட்ட விக்கிரஹத்தை ஏன் மாற்ற வேண்டும்? பழுதடைந்துவிட்டால், ஆகம முறைப்படி பழுது நீக்கி வழி பாட்டுக்கு உரியதாகச் செய்யலாமே!’ என்பதுதான் பக்தர்களின் கோரிக்கை.

தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களில் தெய்வ விக்கிரஹங்கள் இதைவிடவும் பழுதடைந்துள்ளன. அந்த விக்கிரஹங்கள் எல்லாம் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு, தினமும் ஆராதனைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது இந்த விக்கிரஹத்தை மாற்றுவதற்கு மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதுதான் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்வி’’ என்ற நாரதர் தொடர்ந்து,

‘‘பழைமையான அந்த விக்கிரஹத்தில் இருந்த குழந்தை வடிவிலான முருகன் சிலை சுமார் 20 வருஷங்களுக்கு முன்னால் காணாமல் போய் விட்டதாம்!’’ என்றார்.

‘‘என்ன அநியாயம்? குழந்தை முருகன் சிலை மட்டும் காணாமல் போய்விட்டதா? இது குறித்து நிர்வாகம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையா?’’

‘‘இல்லை என்று பொதுமக்கள் சொல் கிறார்கள். கோயில்களில் இதுபோல் சிலைகள் காணாமல் போனால், அறநிலையத் துறை சட்டப் பிரிவு 30-ன்படி பதிவேட்டில் பதிவு செய்வதுடன், காவல்துறையில் புகார் செய்யவேண்டியது அவசியம். ஆனால், இன்றுவரை அப்படி எதுவும் செய்யவில்லை என்பதோடு, காணாமல் போன முருகன் சிலையைப் போலவே ஒன்றைச் செய்துகொண்டு வந்து வைத்துவிட்டதாகவும் பொதுமக்கள் சொல்கிறார்கள்.”

 ‘‘அப்படிச் செய்வதெல்லாம் சாத்தியமா?''

நாரதர் உலா

“தெரியவில்லை. பொதுமக்கள் பகிர்ந்து கொண்டதை உம்மிடம் சொல்கிறேன்.இப்போது புதிதாக விக்கிரஹம் செய்தால், காணாமல் போன முருகன் விக்கிரஹம் போலவே பழைமையான இந்த விக்கிரஹமும் காணாமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் போராடுகிறோம் என்று பொதுமக்கள் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, புதிய விக்கிரஹம் செய்யும் முயற்சியைக் கைவிடவில்லை என்றால், தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள்!’’

‘‘கோயில் நிர்வாகத் திடம் இது குறித்துப் பேசினீரா?’’

‘‘கோயில் செயல் அலுவலர் முருகேசனிடம் பேசினேன். ‘ஸ்தபதிகள் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பித்த பிறகுதான் ஆணையரின் உத்தரவின்படி புதிய விக்கிரஹம் செய்ய முடிவு செய்தோம். போராட்டம் நடத்துபவர்களின் சார்பில் யாரேனும் வந்தால், நாங்கள் விளக்கவும் தயாராக இருக் கிறோம். புதிய விக்கிரஹம் வழிபாட்டுக்கு வந்தாலும், பழைய விக்கிரஹத்துக்கு நடைபெறும் ஆறு கால பூஜைகள் தொடரவே செய்யும்’ என்றார்.’’

‘‘அதிருக்கட்டும்... காணாமல் போன முருகன் சிலை பற்றி விசாரித்தீரா?’’

‘‘விசாரித்தேன். முருகன் சிலை காணாமல் போனது பற்றி 1993-ம் வருடமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, காவல் துறையின் அறிக்கையும் தரப்பட்டுள்ளதாம். தொல்பொருள் ஆய்வுத் துறையின் பதிவு அலுவலரால் ஆய்வும் நடத்தப்பட்டதாகவும், காணாமல்போன முருகன் விக்கிரஹத்துக்குப் பதிலாக புதிய முருகன் விக்கிரஹத்தைப் பிரதிஷ்டை செய்வதற்கு அப்போதைய ஆணையரிடம் உத்தரவு பெறப்பட்ட பிறகுதான் வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்’’ என்ற நாரதர், “சரி, பிறகு பார்க்கலாம். நான் கிளம்புகிறேன்” என்றபடி அந்தர்தியானமானார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு