Published:Updated:

மனசெல்லாம் மந்திரம்! - 3

மனசெல்லாம் மந்திரம்!
News
மனசெல்லாம் மந்திரம்! ( மனசெல்லாம் மந்திரம்! )

கல்வியில் சிறக்க... வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்

மனசெல்லாம் மந்திரம்! - 3

லகத்தில் அழியாத சொத்து என்பது ஒருவர் பெற்றிருக்கும் கல்விதான். ராஜாவோ, திருடனோ, உடன்பிறந்த சகோதரனோ யாராலும் தட்டிப் பறிக்கமுடியாத செல்வம் கல்விச் செல்வம் மட்டும்தான். ஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவனும், கிராமத்தில் கிராம பிரபுவும், தேசத்தில் ராஜாவும் பூஜிக்கப் படுவார்கள். ஆனால், கல்வியில் சிறந்த பண்டிதர்களோ அவர்கள் சென்ற இடமெல்லாம் போற்றி பூஜிக்கப்படுவார்கள். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! ‘வித்வான் சர்வத்ர பூஜ்யதே’ என்றனர் ஆன்றோர்.

அப்படிப்பட்ட கல்வியறிவு, வித்யை மற்றும் சமயோசித ஞானத்தைப் பெறுவதற்கு அநேக மந்திரங்கள் உள்ளன.

மனசெல்லாம் மந்திரம்! - 3

வித்யை என்பதை அறிவு, உள்ளறிவு, முன்னறிவு, பின்னறிவு, நுண்ணறிவு, பகுத்தறிவு எனப் பல வகைகளாகப் பிரிக்கலாம். உதாரணமாக, பின்னால் வரப்போவதை முன்கூட்டியே அறிவது முன்னறிவு. இதை ஞான திருஷ்டி என்றும் சொல்லலாம் பின்னறிவு என்பதை நாமே அனுபவப்பட்டுத் தெரிந்துகொள்வது. பட்ட பின்பும் அதிலிருந்து பாடம் கற்கத் தெரியாமல் இருக்கும் பலரைப் பார்க்கிறோம். எனவே, பட்ட பின்பு தெரிந்துகொள்வதற்குக்கூட அறிவு தேவை. எனவே, எந்த ஒரு அறிவாக இருந்தாலும் அதைப் பெற இறைவனின் அருள் வேண்டும்.

திவ்யமான அனைத்து அறிவுகளையும் பெற்றவர் சிவபெருமானின் அம்சாவதார மாகிய ஆஞ்சநேயர். சிலர் நன்றாகப் பேசி, பலரையும் கவர்வார்கள். ஆனால், அவர்களுடைய படிப்பறிவு என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். இன்னும் சிலர் நன்றாகப் படித்திருப்பார்கள். ஆனால், மற்றவர்களைக் கவர அவர்களால் முடியாது. இதற்குக் காரணம் அவர்களுடைய பூர்வ ஜன்ம ஞானத்தின் தன்மையே ஆகும்.

முந்தைய ஜன்மத்தில் ஒருவன் கடவுளிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காமல், இறைவனின் சரணங்களே கதி என்று நினைத்திருந்தால், அவன் இந்த ஜன்மத்தில் சிறந்த ஞானவானாகவும், சகல வசதிகளையும் பெற்றவனாகவும் மகிழ்ச்சி யான வாழ்க்கையை அனுபவிப்பான். அப்படி இல்லாதவர்களும்கூட இந்த ஜன்மத்தில் சிறந்த ஞானமும் நிறைந்த செல்வமும் பெறவேண்டும் என்பதற்காக நம் முன்னோர்களாகிய ரிஷிகள் எண்ணற்ற மந்திரங்களைக் கண்டறிந்து நமக்கு அருளி இருக்கிறார்கள்.

கல்விக்கு உரிய கடவுள் சரஸ்வதி என்பது மரபு. கணபதியையும் குருவையும் வணங்கியபின் சரஸ்வதியை வழிபடுவது மரபாக உள்ளது. வித்யாராக்ஞீ, நீல சரஸ்வதி, வீணாவாணி, புஸ்தக ஹஸ்தா என அநேக ஆயிரம் மந்திரங்கள் சரஸ்வதியின் அருளைப் பெறுவதற்குக் கூறப்பட்டிருந்தாலும், நாம் கேட்காமலேயே நமக்குள் ஞானத்தை பிரவகிக்கச் செய்பவர் மேதா தட்சிணாமூர்த்தி.

‘வடவிருட்ச தரோர்மூலே விருத்தா: சிஷ்யா:

குரோர் யுவா: குரோஸ்து மௌனம் வியாக்யானம் சிஷ்யாஸ்து ச்சின்ன சம்ஸயா:’


- என்று தக்ஷிணாமூர்த்தி கடவுளைப் பிரார்த்திக்கும்போது கூறுவார்கள். அதாவது, சிஷ்யர்கள் எதுவும் கேட்காமலே அவர்களின் தேவை அறிந்து சமயோசிதமான புத்தியையும் சக்தியையும் கொடுப்பவர் தக்ஷிணாமூர்த்தி.

எனவே, நாம் கல்வி அறிவிலும் ஞானத் திலும் சிறந்து விளங்கவும், தன் தேஜஸ் என்கிற உள்ளறிவையும், பிரக்ஞை என்கிற நுண்ணறிவையும் பெற்றிடவும் மேதா தக்ஷிணாமூர்த்திக்கு உரிய மந்திரத்தைச் சொல்லிப் பிரார்த்திப்போம்.  வழக்கம்போல் ‘ஆம் ஈம் ஊம் ஐம் ஔம் அ:’ என்னும் பீஜ மந்திரத்துடன் பூர்வாங்க பூஜைகளை முடித்துக்கொண்டு, ஸ்படிகம் போலவும், வெள்ளியைப் போலவும் முத்துக்களால் உருவாக்கப்பட்ட மாலை அணிந்திருப்பவராக, வித்யையாகிற அமிர்தக்கலசத்தைக் கையில் கொண்டிருப்பவராக, கைக்கிடையில் பாம்பையும், தலையில் பிறைச் சந்திரனையும் தரித்தவராக, மூன்று கண்களை உடையவராக, விசேஷ அலங்காரங்களுடன் கூடிய தக்ஷிணாமூர்த்தியை தியானித்து, கீழ்க்காணும் மந்திரத்தை ஜபிக்கவேண்டும்.

ரிஷி- பிரம்மா; சந்தஸ்- காயத்ரீ; தேவதை- தென்முகக் கடவுளான தக்ஷிணாமூர்த்தி

தக்ஷிணாமூர்த்தி மந்திரம்

ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம்
ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா


குருமுகமாக உபதேசம் பெற முடியாதவர்கள் கீழ்க்காணும் தமிழ்ப் பாடலை பக்தியுடன் பாராயணம் செய்யலாம்.

கல்லாலின் புடையமர்ந்து நான்மறை
    ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த
    பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
    இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
    நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

 - (தொடரும்)