பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிக தகவல்கள்...

அதிசய சிவன் கோவில்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள பரன் ஏலக்கோட்டை பொது ஆவுடையார் கோயில், நள்ளிரவு மட்டுமே திறக்கப்படும்; சூரிய உதயத்துக்கு முன்னதாக சந்நிதி அடைக்கப்பட்டுவிடும். எனினும், தட்சிணாயன புண்ணிய காலத்தில், சூரியக் கிரணங்கள் ஸ்வாமியின் திருமேனியில் படர்ந்து வழிபடும் காட்சியைத் தரிசிப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்ததாகாக் கருதப்படு கிறது. இந்தக் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த சந்தனமும், வெற்றிலை -பாக்கு தாம்பூலமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. மற்றபடி சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற எந்த வைபவங்களும் இங்கே கொண்டாடப்படுவதில்லை. இந்தக் கோயிலில் இங்கு சிவன் ஆலமரமாக காட்சித் தருவது சிறப்பம்சம்!

- சு.இலக்குமணசுவாமி, மதுரை

ஈர ஆடை வழிபாடு

பொதுவாக ஈர ஆடையுடன் இறைவனை வழிபடக்கூடாது என்பது, நம் முன்னோர்களும் ஞான நூல்களும் வகுத்துவைத்திருக்கும் நெறிமுறையாகும். இதற்கு விதிவிலக்காக அமைந்துள்ள ஆலயம் குமாரக்கோவில்.

குமரி மாவட்டம், தக்கலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில். வேளிமலைச் சாரலில் இயற்கைப் பொலிவுடன் திகழும் இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, ஈர ஆடையுடன் இறைவனை வழிபடுவதைக் காணலாம். இங்கு அருள்பாலிக்கும் மூலவர் முருகன், சுமார் 8 அடிக்கும் மேலான உயரத்துடன் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார்; வள்ளிதேவியின் விக்கிரகம் சுமார் 6 அடி உயரம்!

- இரா.கணேசன், சேலம்

ஆலயங்களில் உற்சவம் ஏன்?

உற்ஸவம் என்பது ஆலயங் களில் ஏற்படும் நித்ய நைமித்திகக் குறைவுகளைத் தீர்க்கவும், எல்லோ ருக்கும் நன்மை உண்டாகவும் செய்யப்படும் வைபவம் ஆகும். இது சாகல்யம், பாவனம், சாந்தம், மாங்கல்யம் என நான்கு வகைப்படும்.

ஆன்மிக தகவல்கள்...

சாகல்யம்: துவஜாரோகணம் முதல் தீர்த்தவாரி வரையிலும் நடைபெறும் உற்சவம்.

பாவனம்: துவஜாரோகணம் மட்டும் செய்யப்படுவது.

சாந்தம்: துவஜாரோகணமும், காலை உற்சவமும் இல்லாமல் இரவில் மட்டும் உற்சவம் நடத்துவது.

மாங்கல்யம்: காலையில் மட்டுமே நடைபெறும் உற்சவம். இவற்றுள் முதலாவதாகக் கூறப்பட்ட சாகல்யம் ஒன்பது வகையாகத் திகழ்கிறது. அவை: கவுரம், சாந்திரம், சாவித்திரம், கௌமாரம், தைவீகம், பவுநம், பௌதிகம், கணம், சைவம். (ஒரு சில இடங்களில் மாறுபட்ட நியதிகள் உண்டு)

- முத்து. இரத்தினம், சத்தியமங்கலம்

நின்றகோலத்தில் விநாயகர்

ஆன்மிக தகவல்கள்...

பெரும்பாலான தலங்களில் விநாயகரை அமர்ந்த திருக்கோலத்திலேயே தரிசித்திருக்கிறோம். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து பேரையூர் செல்லும் வழியில் உள்ள மாத்தங்கரை எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் விநாயகர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலக் கரத்தில் கோடரியுடன் அருளும் இந்தப் பிள்ளையாரைத் தரிசித்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மதுரையில் இருந்து சாட்டூர் செல்லும் பேருந்துகளில் பயணித்து இவ்வூரை அடையலாம்.

- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு

மழலை வரமருளும் படிப்பாயசம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது ஆயக்குடி. இங்கே கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு விசேஷ அர்ச்சனை- ஆராதனைகள் செய்து பழப் பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், வேண்டுதல் விரைவில் பலிக்கும் என்பது நம்பிக்கை. மேலும், குழந்தை வரம் அருளும் குமரன் இவர் என்று உள்ளம் சிலிர்க்க கூறுகிறார்கள் பக்தர்கள்.

- இல.வள்ளிமயில், திருநகர்

வினைகள் தீர்க்கும் வில்வ மரம்

மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் ரோடு, தனக்கன் குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஆதிகாமாட்சி அம்மன் திருக்கோயில். இங்குள்ள வில்வ மரம் தெய்வ சாந்நித்தியம் மிகுந்தது என்கிறார்கள். இதைத் தொட்டு வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கும், பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- சு.இலக்குமணசுவாமி, மதுரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு