Published:Updated:

ஆலயம் தேடுவோம்

திருப்பணிக்குக் காத்திருக்கும் பழையவலம் பரமன்!எஸ்.கண்ணன்கோபாலன்

பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்

யிலையில் நடைபெற்ற சிவபெருமானின் திருமண வைபவத்தின்போது, சமநிலை தவறிய உலகத்தை மீண்டும் சமன்படுத்த விரும்பிய ஐயன், அந்த மாபெரும் பொறுப்பை அகத்திய முனிவரிடம் ஒப்படைத்தார். மகேஸ்வரனின் மணக்கோலத்தைத் தரிசிக்க இயலாமல் போகிறதே என்னும் அகத்தியரின் மன வருத்தத்தைத் தணிவிப்பதுபோல், அவர் தென் திசைப் பயணம் மேற்கொண்டபோது வழியில் எண்ணற்ற திருத்தலங்களில் அவருக்கு கல்யாண கோலத்தில் தரிசனம் தந்தார் ஐயன் ஈசன். கூடவே, அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு, நாளும் தம்மை வழிபடும் அன்பர்களுக்கு அருள்புரியும் வண்ணம் திருக்கோயில் கொண்டார்.

அப்படி அகத்தியருக்கு தரிசனம் தந்ததும், கோயில் கொண்டதுமான தலங்களில் ஒன்றுதான், இதோ இப்போது நாம் தரிசிக்கும் பழையவலம் அகத்தீஸ்வரர் திருக்கோயில். ஒருகாலத்தில் மிகப் பிரசித்தியுடன் திகழ்ந்த இந்தத் திருக்கோயில், இப்போது பாழ்பட்டுக் கிடப்பதைக் கண்டபோது, மனம் பதைபதைத்தது; கண்களில் நீர் பெருகியது.

இந்தக் கோயிலில் ஐயன் அகத்தீஸ்வரர் சந்நிதிக்கு இடப் புறத்தில் அம்பிகை சத்யாயதாக்ஷி கிழக்குப் பார்த்து தனிச் சந்நிதி கொண்டிருப்பது மிகவும் விசேஷமான அமைப்பு என்கிறார்கள். அதேபோல், இங்கே நவகிரகங்கள் ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலின் சிறப்புகள் குறித்து ஆலய அர்ச்சகர் லக்ஷ்மிநாராயண முரளி குருக்களிடம் கேட்டோம்.

ஆலயம் தேடுவோம்

‘‘இந்தக் கோயிலில் உள்ள இறைவன், அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பெற்று வழிபடப் பெற்றவர். சத்தியத்தை ஆள்பவள், சத்திய வழியில் நடப்பவர்களைக் காப்பவள் என்பதால், இங்குள்ள அம்பிகைக்கு சத்யாயதாக்ஷி என்னும் திருப்பெயர் ஏற்பட்டதாக ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ஒருகாலத்தில் நித்திய பூஜைகளும், விழாக்களும் நடைபெற்று வந்த இந்தக் கோயில், கடந்த பல வருஷங்களில் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதிலம் அடைந்துவிட்டது. இருந்தபோதிலும், ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் இங்கே ஒருகால பூஜையும், சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி, வைகாசி விசாகம் போன்ற வைபவங்களும் தடைப்படாமல் சிறப்பாக நடந்து வருகின்றன’’ என்றார்.

ஐயன் அகத்தீஸ்வரரும் சரி, அம்பிகை சத்யாயதாக்ஷியும் சரி... பக்தர்கள் வேண்டும் வரத்தை வேண்டியபடியே அருள்வதில் சமர்த்தர்கள் என்று சொல்லும்படியாக, சில அன்பர்கள் தங்கள் அனுபவத்தை நம்மிடம் சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்கள்.

ஆலயம் தேடுவோம்

கோயிலில் பூஜைகள் செய்து வரும் லக்ஷ்மிநாராயண முரளி குருக்களின் பெண்ணுக்குப் பல காரணங்களால் திருமணம் தடைப்பட்டுக் கொண்டே வந்தது. பின்னர், வரன் அமைந்தும் நிச்சயம் செய்வதில் தாமதம், லக்ன பத்திரிகை எழுதுவதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. ஒரு பெரியவர் சொன்னதன் பேரில் அகத்தீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் செய்தார். அடுத்த சில மாதங்களில், அதுவரை தடைப்பட்டுக் கொண்டே வந்த அவருடைய பெண்ணின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அந்த ஊரைச் சேர்ந்த அன்பர் மகேந்திரன். “நான் ராணுவத்தில் பல வருஷங்கள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விட்டேன். எனக்குக் கல்யாணம் ஆகி, பல வருஷத்துக்குப் பிறகுதான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், எங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாத குறை இருந்து வந்தது. கோயில் குருக்கள் என்னிடம் அகத்தீஸ்வரரை வேண்டிக்கொண்டால் குறை நீங்கும் என்று கூறினார். அதேபோல் வேண்டிக்கொண்டேன். அடுத்த வருடமே எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது’’ என்றார்.

அதேபோல், தஞ்சாவூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஸ்டேஷன் மாஸ்டர் ராஜேஸ்வரனின் இரண்டு பெண்களுக்கும் திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமலே இருந்தது. அவர் இங்கு வந்து தம் மகள்களுக்காக வேண்டிக் கொண்டார். அதைத் தொடர்ந்து விரைவிலேயே அவரு டைய இரண்டு பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்தது.

ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கும் முருகேசன் நம்மிடம்,  “இந்தக் கோயில் பல வருஷமாவே இப்படிச் சிதிலமடைஞ்சுதான் இருக்கு. பல வருஷங்களுக்கு முன்னாடி சென்ட்ரல் கவர்ன்மென்ட் 25 லட்ச ரூபா நிதி ஒதுக்கிச்சு.

ஆனாலும், டெண்டர் விட்டப்போ யாரும் அந்தத் தொகைக்கு வேலை செய்ய ஒத்துக்கலை. காரணம், இந்தக் கோயிலைச் சீரமைக்கிறதுக்கான செலவு குறைஞ்சது ஒரு கோடி ரூபாயாவது ஆகும்னு சொல்றாங்க. சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஒதுக்கின நிதியும் இப்ப அரசாங்கத் துக்கே திரும்பிடுச்சு’’ என்றார்.

ஆலயம் தேடுவோம்

கேட்கவே மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மத்திய அரசு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கியதுமே மாநில அரசின் இந்துச் சமய அறநிலையத்துறையும் தன் பங்குக்கு ரூ.25 லட்சம்  போட்டு திருப்பணியை ஆரம்பித்திருந்தால், பக்தர்களும் விருப்பத்தோடு தங்களால் முடிந்த பங்களிப்பைச் செய்திருப்பார்களே! கோயில் திருப்பணிகள் முடிந்து இந்நேரம் கும்பாபிஷேகமும் நடந்திருக்குமே!

இனியாவது சம்பந்தப்பட்ட வர்கள் முன்வந்து திருப்பணிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடு களைச் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் ஊர் மக்களிடம் மட்டுமல்ல; நம்மிடமும் ஏற்படவே செய்தது.
சிதிலம் அடைந்த நிலையிலும் பூரண சாந்நித்தியத்துடன் விளங்கும் அம்பிகை சத்யாயதாக்ஷி சமேத ஐயன் அகத்தீஸ்வரரின் திருக்கோயில் திருப்பணிகள் விரைவில் தொடங்க வேண்டாமா?

அந்த உன்னத திருப்பணிக்கு நாமும் நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்ய வேண்டியது அவசியம் அல்லவா? அப்போதுதானே ஐயனின் திருக்கோயில் புதுப்பொலிவு பெற்று, வரும் காலங்களில் நம் சந்ததியினரும் ஐயனின் அருள் பெற்றுச் சீரும் சிறப்புமாக வாழமுடியும்?

ஆலயம் தேடுவோம்

பழையவலம் அகத்தீஸ்வரரின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்து, நமக்கும் நம் சந்ததியி னருக்கும் இறையருள் பூரணமாகக் கிடைத்திடச் செய்வோம்.

படங்கள்: க.சதீஷ்குமார்

எங்கு இருக்கிறது..? எப்படிச் செல்வது..?

மழலை வரம் அருளும் பரமன் கோயில் கொண்டிருக்கும் இந்த பழையவலம் திருத்தலம், திருவாரூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூரில் இருந்து இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பேருந்து வசதி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு