மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
News
அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

`ஸ்ரீஆதிசங்கர ஜயந்தி... பெரிய புண்ணிய காலம்!'

வைகாச சுக்கிலபக்ஷ பஞ்சமி, ஸ்ரீசங்கராசாரிய ஸ்வாமிகளின் அவதார தினம். அப்பொழுது நக்ஷத்திரம் சிவபெருமானுக்கு உரிய திருவாதிரையாகவோ அல்லது ஸ்ரீராமனுக்கு உரிய புனர்வஸுவாகவோ அமையும்.

சர்வ வித்தைகளுக்கும் நாயகனான அந்தச் சதாசிவனே ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதர்களாக அவதரித்தார். ஸ்ரீஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளைவிடப் பெரிய புண்ணிய காலம் என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு உங்களுக்கு இரண்டு காரணங்கள் தோன்றலாம்.

‘நம்முடையது’ என்ற அபிமானத்தால் சொல்கிறேனோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீசங்கர ஜயந்தியாதலால், அதைச் சற்று உயர்த் திப் பேசுகிறேனோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீசங்கர ஜயந்தியை ஸர்வ உத்கிருஷ்டமான புண்ணியகாலம் என்கிறேன்.

அது என்ன காரணம்? ஸ்ரீசங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால் அந்த மதப் பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள். வேத தர்மத்துக்கு ஆபத்து வந்தபோது, அந்த மதத்தின் பண்டிகை எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டது. அப்போது ஸ்ரீசங்கர ஜயந்தி நிகழ்ந்ததால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன.

ஸ்ரீசங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிடில், இன்று ஸ்ரீராம நவமியையும், கோகுலாஷ்டமியையும், சிவராத்திரியையும், நவராத்திரியையும் மற்ற புண்ணிய தினங்களையும் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளை எல்லாம் நிலைநாட்டிய ஜயந்தியாக இதுவே இருக்கிறது. ஆகையினால்தான் ஸ்ரீசங்கர ஜயந்தியை மிக மிகப் புண்ணிய காலமாகச் சொல்கிறேன்.

தனி மனிதராக இருந்து கொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஓர் இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்த மகத்தான அனுக்கிரகத்தைச் செய்தார். ‘திக்
விஜயம்’ என்றால் அவர் செய்ததுதான் ‘திக் விஜயம்’. ஸ்ரீஆசார்யாளுடைய திக்விஜய மகிமையைக் கேட்டதற்குப் பிரயோஜனமாக நாம் அனைவரும் நம் மனத்தில் உள்ள அசட்டுத்தனங்களைப் போக்கி, நமக்குள் நாமே திக்விஜயம் செய்யவேண்டும்.

பஜகோவிந்தத்தில் ஆரம்பித்துப் பரமாத்ம தத்துவத்தில் முடிவது ஸ்ரீஆசார்யாளின் உபதேசம். ‘ஒன்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கோவிந்த கோவிந்த என்று சொல்’ என்று ‘பஜ கோவிந்த’த்தில் சொல்கிறார் ஆசார்யாள். 

எப்போதும் ‘கோவிந்த கோவிந்த’ என்று சொல்லிக் கொண்டே உண்டால், அந்த மனோபாவத்துடன் உள்ளே போகும் அன்னம், ஆத்ம தியானத்துக்கு அனுகூலம் செய்யும். அந்த அன்னஸாரம் உடம்பில் சேரச் சேர ஈசுவர ஸ்மரணம் அதிகமாகும். நாம் என்றைக்கும் போஜனத்தை நிறுத்தப் போவதில்லை. ஆகையினால் இந்தச் சின்ன அப்பியாசத்தால் கோவிந்த உச்சாரணம் என்றைக்கும் நடந்துவரும்.

கோவிந்த உச்சாரணத்துடன் சாப்பிடுகையில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நாமே நிறுத்துவோம். கண்ட வஸ்துக்களை கோவிந்த நாமத்துடன் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப் பாடு வரும். சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிக அவசியம். பல இடங்களில் பலவிதமான வஸ்துக்களைத் தின்னுவதே இன்றைய மனக் கோளாறுகளுக்கும் ஒழுக்கக் குறைவுக்கும் ஒரு முக்கியமான காரணம்.

ஆசார்யாள் மகிமை கேட்டதற்கு அடையாளமாக இப்படிச் சின்னச்சின்ன விஷயங்களையாவது அனுஷ்டானத்தில் கொண்டு வரவேண்டும்.

அருட்களஞ்சியம்

எல்லோரும் காலையில் சிறிது விஷ்ணு ஸ்மரணம், மாலையில் சிறிது சிவ ஸ்மரணம் செய்ய வேண்டும். இரவில் தூங்கும் முன்பு அம்பாளைப் பிரார்த்திக்கவேண்டும். அன்றைய தினம் ஆத்ம க்ஷேமமாகவோ, பரோபகாரமாக ஜீவகாருண்ய சேவையோ ஏதேனும் செய்தோமோ என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ‘‘அம்மா, இன்று வரை நான் செய்த தப்புக்களை மன்னித்து, நாளையிலிருந்தேனும் இந்தத் தப்புக்களைச் செய்யாமல் இருக்க ரக்ஷிப்பாய்’’ என்று காமாக்ஷியை மனமுருகி வேண்டிக் கொண்டு தூங்கவேண்டும்.

இன்று நம்மிடையே இப்படிப்பட்ட சிறிய, பெரிய அனுஷ்டானங்கள் பலவும் ஞாபகம் காட்டுகிற  அளவுக்காவது வந்திருப்பதற்குக் காரணமான ஸ்ரீஆதி ஆசார்யாளை என்றைக்கும் மறக்கக்கூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல் ஸ்ரீஆசாரிய பாதுகையை தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீஆசார்யாள் அனுக்கிரகத்தில் சகல மங்களங்களும் உண்டாகும்.

(ஸ்ரீ ஆதி சங்கர ஜயந்தி மகத்துவம் குறித்து காஞ்சி  மஹா பெரியவர் அருளியது.

** 1993 - ஆனந்த விகடன் ‘அருள் உரை' இணைப்பிதழ் தொகுப்பில் இருந்து...)

அருட்களஞ்சியம்

பி.ஸ்ரீ,   ஓவியம்: சிதிரலேகா

ஆனந்தத்திலே பங்கு!

மந்திராலோசனையில், தசரதர் எண்ணிய காரியம் எண்ணியபடியே கைகூடிவிட்டது. வசிஷ்டரும் மற்ற மந்திரிமார்களும், சிற்றரசர்களும், ‘ராம பட்டாபிஷேகம் மிகவும் உத்தமமான காரியம்’ என்று ஒருமுகமாய்ச் சொல்லிவிட்டார்கள். இதைக்காட்டிலும் ஆனந்தம் வேறு இருக்க முடியுமா? இந்த ஆனந்தத்தைத் தம் அருமை மனைவி கைகேயியுடன் பகிர்ந்துகொள்ள வருகிறார் தசரதர். உள்ளத்திலுள்ள உவகையை அப்படியே நெடுங்கையால் அள்ளிக் கொடுக்க வருவதுபோல் கம்பீரமாக வருகிறார்.

சரி, மாளிகைக்குள்ளே ஏன் இந்தக் காட்சி? இவளுக்கு வந்த துன்பம் என்ன? சக்ரவர்த்தி சோர்ந்த நெஞ்சுடன் கைகேயியைத் தழுவி எடுக்க முயல்கிறார். மான் போலத் துவண்டு கிடந்தவளை இரு கைகளையும் கோத்து வாரி எடுத்ததும், அவள் அக்கைகளைத் தள்ளிவிட்டு மின்னற் கொடிபோல் துவண்டு, மறுபடியும் தரையில் விழுகிறாள்.

வாய் திறந்து ஒன்றும் பேசாமல், கையைத் தள்ளிவிட்டுத் தரையிலே துவண்டு விழுந்து பெருமூச்சுவிடத் தொடங்கிய கைகேயியைக் கண்டு சக்ரவர்த்தி மன நடுக்கம் கொண்டார். உடம்பில் யாதொரு நோயும் இல்லை என்று தெரிந்துவிட்டது. ‘மனநோய்தான்! இவள் மனசை யாரோ புண்படுத்தி விட்டார்கள்!’ என்று நினைத்தார். நினைத்ததும் தன் உயிரையே யாரோ புண்படுத்திவிட்டது போலத் துடிக்கிறார்.

‘‘என்ன நடந்தது?” என்று கேட்டுவிட்டு, ‘‘உன்னை இகழ்ந்தவர் மாள்வர்!” என்று கம்பீரமாகச் சொல்லிப் பேரன்புடன் கைகேயியைத் தேற்றப் பார்த்தார். அவளை இகழ்ந்தவர் கொலைத் தண்டனைக்கும் உரியராவர் என்பதைத்தான் ‘‘மாள்வர்” என்று சொல்கிறார்.

அந்தோ! உண்மையில், இவரே அவளது கொடிய எண்ணத்தை உணர்ந்து கொண்டபின் அவளை இகழப் போகிறார்; மாளப் போகிறார்! தசரதருக்கும் கைகேயிக்கும் நடைபெறும் சம்பாஷணையின் தொடக்கத்தில், மரணம் - தசரதருக்கு ஏற்படப் போகும் மரணம் - இவர் அறியாமலே இவர் வாக்கில் வந்து விழுகிறது!

அருட்களஞ்சியம்

‘‘ஐயோ! உமக்கு அடியாளிடத்தில் இவ்வளவு தயவு இருக்கிறதா? உண்மைதானா? அப்படியானால் முன்னே கொடுத்த வாக்கை இப்போது நிறைவேற்ற வேணும்” என்று கெஞ்சுகிறாள் கைகேயி.
சக்ரவர்த்திக்குச் சிரிப்பு வந்துவிடுகிறது. ‘கைகேயி ஒன்றைக் கேட்டு நாம் மறுத்ததாக ஞாபகம் இல்லையே! ஒரு நாளும் இல்லாத திருநாளாக இன்று என்ன வேடிக்கை செய்கிறாள்’ என்று எண்ணித்தான் தசரதர் சிரித்திருக்க வேண்டும்.

கள்ளவிழ் கோதை கருத்துண ராத மன்னன்,
வெள்ள நெடுஞ்சுடர் மின்னின் மின்ன நக்கான்;
‘உள்ளம் உவந்தது செய்வன், ஒன்றும்உ லோபேன்,
வள்ளல் இராமன் உன்மைந்தன் ஆணை!’ என்றான்.


விதியும் சிரிக்கிறது!

‘‘நீ கேட்க உத்தேசித்திருக்கிற காரியத்தை - உன் உள்ளம் விரும்பியதை - நானும் உள்ளம் உவந்து செய்வேன். கொஞ்சமும் கருமித்தனமில்லாமல் நீ வேண்டியதைத் தருவேன். உன்னிடமா பேரம் பண்ணப் போகிறேன்?” என்று பேசிக்கொண்டே வந்த சக்ரவர்த்தி, ‘‘உன் மகனான ராமன்மேல் ஆணை!” என்று பிரதிக்ஞை செய்து கொடுக்கிறார்.

தன் உயிரைக்காட்டிலும் மேலாகத் தான் மதித்திருக்கும் தன் மகனாகிய ராமனை ‘உன் மகன்’ என்று கைகேயியிடம் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. ஆணை இடுவதற்கு ராமன் பெயரை இயற்கையாகச் சக்ரவர்த்தி உபயோகிக்கிறார் சிரித்துக்கொண்டே; விதியும் பிடரியிலிருந்து சிரிக்கிறது!

‘இனிமேல் சுற்றிச் சுழற்றிப் பேசிக் கொண்டிருக்கலாகாது; கேட்டேவிடவேண்டியதுதான் வரத்தை!’ என்று துணிந்த கைகேயி, ‘‘நீங்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த இரண்டு வரங்களில் ஒன்றினால் என் மகன் அரசாள வேண்டும்” என்று சொன்னாள். இதைக் கேட்டதும் சக்ரவர்த்தி என்ன நிலையை அடைந்திருப்பார்? திடுக்கிட்டு வேதனைப் பட்டிருப்பார் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை.

சக்ரவர்த்தி மகிழ்ச்சியடைந்திருப்பார் என்றுதான் சொல்லவேண்டும். ஏன்?

கைகேயி அன்றுவரை ராமனைத்தானே தன் மகனாக மதித்திருந்தாள்? ‘சரி, இன்னும் ஏதோ சொல்லப் போகிறாளே, மேலே பேசட்டும்’ என்று தசரதர் புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அருட்களஞ்சியம்

இன்னொரு வரத்தினால் ‘ராமன் வனம் போக வேண்டும்’ என்று கேட்ட பிறகுதான் சக்ரவர்த்தி திடுக்கிட்டுப் போயிருக்க வேண்டும்.

‘ஏயவ ரங்கள்இ ரண்டின் ஒன்றினால், என்
சேய்அர சாள்வது; சீதை கேள்வன், ஒன்றால்,
போய்வனம் ஆள்வ(து)’ எனப்பு கன்று நின்றாள்,
தீயவை யாவையி னும்சிறந்த தீயாள்!


ராமனைச் ‘சீதையின் கணவன்’ என்றுதான் குறிப்பிடுகிறாள். அவளால் ராமன் என்ற அந்த அருமைப் பெயரை இப்போது சொல்லவும் முடியவில்லை. பெற்ற பிள்ளையாகவே நினைத்து ‘ராமா, ராமா!’ என்று இவளால் அழைக்கப் பெற்று வந்தவனல்லவா? அந்த வாயால் அந்தப் பெயரைச் சொல்லிக் காட்டுக்குப் போக வேண்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே, ‘சீதை புருஷன் இருக்கிறானே, அந்தப் பிள்ளையாண்டான்’ என்று சொல்லுகிறாள்.

பரதன் அரசாள வேண்டும் என்றவள், ராமன் வனம் ஆள வேண்டும் என்று கூறுகிறாள். ஹிருதயக் கொடுமை வார்த்தையிலும் பீறிக்கொண்டு புறப்படு கிறது.

இப்படிச் சொல்லி ‘நின்றாள்’ என்கிறான் கவிஞன். தீயவர்களும் சொல்ல வாய் கூசும் கடும் சொல்லைச் சொல்லியும், கைகேயி மனம் கலங்கித் தளர்ந்து கீழே விழுந்துவிடாமல் உறுதியான தூண்போல நிற்கிறாள் என்பது குறிப்பு.

இதுவரையில் கவிஞன் கைகேயியைத் ‘தேவி’ ‘அன்னம்’ ‘தூயவள்’ என்றெல்லாம் அழைத்து வந்தான். இப்போதோ அந்தத் ‘தூயவளைத் ‘தீயவள்’ என்று சொன்னாலும் போதாதென்று, ‘தீயவை யாவையினும் சிறந்த தீயாள்’ என்று சொல்லி விடுகிறான். இப்படியெல்லாம் துணிந்து வரம் கேட்டுவிட்ட கைகேயி தைரியமாகத்தான் நின்றாள். ஆனால், அதைக் கேட்ட சக்ரவர்த்திக்கு நிலைகொள்ள வில்லை. அந்தத் துணிச்சலான வார்த்தைகளைத் தாங்கமுடியாமல் அப்படியே விழுந்துவிடுகிறார்.

நாகம்எ னும்கொடி யாள்தன் நாவின் வந்த
சோகவி டந்தொட ரத்துணுக்கம் எய்தா,
அகம்அ டங்கலும் வெந்(து) அழிந்(து), அராவின்
வேகம்அ டங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்.


யானை எவ்வளவோ பலம்கொண்ட பிரமாண்டமான பிராணிதான். ஆனால், நாகம் தீண்டிவிட்டால், தன்னுடைய வேகமெல்லாம் அடங்கிச் சோர்ந்து விழுமல்லவா? அப்படிச் சோர்ந்து சாய்ந்து விழுகிறாராம் சக்ரவர்த்தி.

தசரதரின் மூன்று காதல்

சிந்தை திரிந்து அயர்ந்து விழுந்த சக்ரவர்த்தி, சிறிது நேரம் சென்றதும் உணர்ச்சியுற்று எழுந்து உட்கார முயன்றார். முடியாமல் தள்ளாடி விழுந்தார். எழுந்து உட்கார முயலும்போதே ‘ஆ கொடியவளே!’ என்று கைகேயி அம்மாளையும், ‘ஓ கொடிதே அறம்!’ என்று தர்ம தேவதையையும் வாயாரச் சபித்தார். ‘சத்தியம் சாகட்டும்!’ என்று சபித்தார். பெருமூச்சு விட்டுக்கொண்டே இப்படியெல்லாம் சொல்லி எழுந்து தள்ளாடி விழுந்துவிட்டார் வீரமன்னராகிய தசரதர். கைகேயி மேலுள்ள கோபம் பெண்குலத்தையே சுற்றிக்கொள்கிறது.

‘நாரியர் இல்லைஇஞ் ஞாலம் எங்கும் என்னக்,
கூரிய வாள்கொடு கொன்று நீக்கி, யானும்
பூரியர் எண்ணிடை வீழ்வன்!’ என்று பொங்கும்,
வீரியர் வீரம்வி ழுங்கி நின்ற வேலான்.


‘பெண்டுகளே இல்லை இந்த உலகத்தில் என்று சொல்லும்படி கூர்மையான வாளால் கொலை செய்துவிடலாமா பெண் குலத்தை?’ என்ற ஆத்திரம் ஏற்படுகிறது சக்ரவர்த்திக்கு. ‘பெண்களைக் கொல்வது கோழைத்தனம்’ என்று தெரியாதா? தெரிந்தும்தான் ஆத்திரப்படுகிறது அவரது உள்ளம். எனவேதான், ‘வீரியர் வீரம்வி ழுங்கி நின்ற வேலான்’ என்று சுட்டிக் காட்டுகிறான் கவிஞன்.

அருட்களஞ்சியம்

‘சத்தியம் சாகட்டும்!’ ‘மெய்யுரை குற்றம்!’ என்றெல்லாம் தசரதர் கதறிய போதிலும், ராமன் மீதுள்ள காதலுக்காகவும் சத்தியக் காதலைக் கைவிடத் துணியவில்லை; சத்தியத்தின் மீதுள்ள காதலுக்காகவும் ராமன் காதலைக் கைவிட முடியவில்லை. இந்தப் பரம சங்கடமான நிலையில், கைகேயி காலில் விழுந்தாவது ‘சத்தியத்தையும் காப்பாற்ற வேண்டும்; ராமனையும் காட்டுக்குப் போகாமல் காக்க வேண்டும்!’ என்று தீர்மானிக்கிறார்.

கால்மேல் வீழ்ந்தான், கந்துகொல் யானைக் களிமன்னர்
மேல்மேல் வந்து முந்தி வணங்கி மிடைதாளான்.


மதயானை போன்ற வீர மன்னர்கள் - தொகுதி தொகுதியாக வந்தவர்கள் - ஒருவர் பின் ஒருவராக வந்து தசரதர் காலில் விழுந்து வணங்குகிறார்களாம். அப்பேர்ப்பட்ட சக்ரவர்த்தி இப்போது அபலையாகிய கைகேயியின் காலில் விழுந்து வணங்குகிறாராம்.

தசரதருக்கு மூன்று காதல்! 1) கைகேயி காதல்; 2) சத்தியக் காதல்; 3) ராமன் காதல். இம்மூன்றில் முதலாவது காதலை இப்போது முற்றும் இழந்துவிட்ட சக்ரவர்த்தி, பாக்கி உள்ள இரண்டு காதல்களுக் காகவும் போராடுகிறார், பல உபாயங்களாலும்!

** 23.6.46, 30.6.46, 7.7.46 மற்றும் 21.7.46 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...