Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்
முன்னோர்கள் சொன்னார்கள்

க்னத்துக்கு உடையவன், 6-ம் வீட்டின் அதிபதி, 2-ம் வீட்டின் அதிபதி ஆகிய மூவரும் பாப கிரகத்தின் சேர்க்கை பெற்று (அசுப கிரகம், வெப்ப கிரகம்) 7-ம் வீட்டில் இருக்க நேர்ந்தால், அந்த ஜாதகன் மாற்றான் மனைவியுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்புவான்.

லக்னம் - அவன் பிறந்தவேளை (அது அவன்).  6-ம் வீட்டுக்கு உடையவன் அவனுக்கு ஒத்துழைக்காதவன் மட்டுமல்ல, எதிரிடையான பலனையும் ஏற்கவைப்பவன். 2-ம் வீடு அவனது குடும்பம். அதற்கு உடையவன் இணைந்து செயல்படுபவன். ஆனால், இந்த மூவருடனும் அசுப கிரகம் சேர்ந்து இருப்பதால், அவரவரின் தனித்தன்மை இழக்கப்பட்டு, அசுப கிரகத்தின் இயல்பு அவர்களில் இணைந்துவிடுகிறது. அவர்கள் அனைவரும் 7-ம் வீட்டில் இருப்பதால், அந்த வீட்டின் தரத்தை (தாம்பத்தியத்தை) ஒட்டுமொத்தமாக ஒற்றுமையோடு சேர்ந்து பாதித்துவிடுகிறார்கள். அதனால், மனைவியிடம் திருப்தி அடையாமல், பண்பையும் கலாசாரத்தையும் அலட்சியப்படுத்தி, அறத்துக்குப் புறம்பான வழியில் மாற்றான் மனைவியிடம் ஈடுபடும் துணிவை ஏற்படுத்தி விடுகிறது. ஆக, இரண்டு குடும்பங்களுக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு தனது பெருமையை இழந்துவிடுகிறான்.

லக்னம் - அவன்; 7-ம் வீடு - அவன் மனைவி; 2-ம் வீடு - அவனது குடும்பம். ஆறாம் வீட்டின் அதிபதி அவனுக்கு இழுக்கை ஏற்படுத்துபவன். அத்துடன் அசுப கிரகச் சேர்க்கை இந்த மூவரின் தரத்தையும் இழக்கச் செய்கிறது. இது 7-ம் வீட்டில் நிகழ்ந்தபடியால், கைப்பிடித்தவளுக்கு துரோகம் செய்வதுடன், மாற்றான் மனைவியை விரும்புவதன் மூலம் அவளுடைய நல்ல குடும்பத்தையும் களங்கப்படுத்த வைத்துவிடுகிறது. மாற்றான் மனைவியின் ஜாதகத்தில் தென்படும் புனர்பூ தோஷமும் (கைப்பிடித்த கணவனை அலட்சியப்படுத்தி விட்டு மாற்று புருஷனோடு இணைவது), இவன் செய்யும் தவறுக்கு ஒத்துழைக்கும்.

மனைவி இருக்க, விருப்பப்படி மாற்றான் மனைவியை நாடும் எண்ணம் எல்லோருக்கும் இருக்காது. அதுபோல், இவன் விரும்பும் மாற்றான் மனைவிக்கு ‘புனர்பூ’ தோஷம் இல்லாமல் இருந்தால், அவள் இவனுக்கு இடமளிக்கமாட்டாள். இவனும், இவன் விரும்பும் மாற்றானின் மனைவியும் அறத்துக்குப் புறம்பாகச் செயல்படும் துணிச்சல் உடையவர்களாக இருக்கவேண்டும். இந்த அமைப்பு இருக்கும் புருஷ ஜாதகத்தைக் காணும் ஜோதிட பிரபலங்கள், அவனுக்கு வரப்போகும் மனைவியின் ஜாதகத்தை ஆராய வேண்டும். அளவு கடந்த காமமும், புருஷனை திருப்திப்படுத்தும் ஆர்வமும் இருக்கும் ஜாதகத்தை இணைத்தால் குடும்பம் இழுக்குக்கு ஆளாகாமல் தப்பிக்க இயலும்.

புருஷ ஜாதகத்தில் மாற்றான் மனைவியை ஏற்பான் என்பதை யும், பெண் ஜாதகத்தில் ‘பூனர்பூ’ தோஷத்தையும் ஆராயாமல் 10 பொருத்தங்களைக் கணக்கிட்டு இணை சேர்த்துவைக்கும் ஜோதிட பிரபலங்களின் விளையாட்டு காரியத்தால், விவாகரத்துகள் இன்று பெருகிவிட்டதைக் காணமுடிகிறது. திருடனின் காலில் விழுந்து இழந்த பொருளைத் திருப்பிக்கொடு என்று மண்டியிட்டால், தர மாட்டான். அத்துடன் நில்லாமல், போலீஸில் அடையாளம் காட்டிவிடுவாரோ என்ற பயத்தில், காலில் விழுபவனை அழிக்கவும் துணிந்துவிடுவான். அருளுக்கு பதிலாக ஆபத்து நேர்ந்து விடுவதும் உண்டு!

‘‘உனது ஜாதகத்தில் 7-ம் வீட்டில் தென்படும் சனி, உனக்கு துயரத்தை ஏற்படுத்துவான். ஆகவே எள்ளு மாலை அணிவித்து சனியை வழிபடு. அவர், உன்னை ஆபத்திலிருந்து விடுவிப்பார்”  என்றும், ‘‘உனக்கு குரு சரியாக இல்லை. கொண்டக்கடலை மாலை அணிவித்து அவரை வழிபடு. துயரம் பறந்து போகும்” என்றும், ‘‘சுக்கிரன் சரியில்லை, மொச்சைக்கொட்டை மாலை அணிவித்து வழிபடு; எல்லாம் சரியாகும்’’ என்றும், ‘‘உனக்கு ராகு சரியில்லை. பாம்புப் புற்றில் பால் வார்த்து வா. பிரச்னைகள் தீரும்” என்றும் பரிகாரம் சொல்லும் பிரபலங்களைக் காண முடிகிறது.  இவையெல்லாம் திருடன் காலில் விழுந்த கதைதான். திருடனைப் பிடித்து களவாடிய பொருளை கைப்பற்றி ஒப்படைக் கும் அதிகாரிகளிடம் போகாமல், திருடனிடம் அடி பணிய பரிந்துரைப்பது பிரபலங்களுக்கு அழகல்ல.

நெருக்கடியான நிலையில் கடவுளைச் சரணடையும் பகுத்தறிவு வாதிகளும் இருக்கிறார்கள். அப்பழுக்கற்ற பகுத்தறிவுவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் சிலர் உண்டு. அவசர கால நிலையில்... விருப்பம் இருந்தும் அவனது வீம்பு கடவுளை வழிபட இடமளிக்காது. அவர்களில் பலர், ஜோதிட பிரபலங்கள் சொல்லும் பரிகாரமான ‘மாலை அணிவித்தலை’ ஏற்பார்கள். அப்போது அவர்களுக்கு  மாலை அணிவித்தல் மூடநம்பிக்கையாகத் தெரியாது. இன துவேஷத்தை நடைமுறைப்படுத்த பகுத்தறிவாளனாக மாறியவர்களில் பலர், இன்று பிரபலங்களாக விளங்குகிறார்கள். அடிப்படைக் கல்வியை தவறவிட்டவர்களில் பலர் - விஞ்ஞான வாசனை அற்றவர்களாக இருந்தபோதிலும், விஞ்ஞான கோணத்தில் வித்தியாசமான விளக்கத்தை அளிக்கும் ஜோதிட பிரபலங்களாகத் திகழ்கிறார்கள்! விஞ்ஞானம் தடுமாறும்போது ஊன்றுகோலாக இருப்பது ஜோதிடம். அதற்கு விஞ்ஞான விளக்கம் அளிப்பது அறியாமையின் வெளிப்பாடு. சிக்கலில் மாட்டிக்கொண்ட ஜோதிடத்தை விடுவிக்க வேண்டிய பொறுப்பு பிரபலங்களுக்கு உண்டு. ஏனெனில், அதுதான் அவர்களது வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்கிறது.

6, 8, 12-ம் வீட்டுக்கு உடையவர்கள் எங்கு அமர்ந்தாலும், அந்த வீட்டின் பலனை தாறுமாறாக்குவார்கள். இங்கு ஆறுக்கு உடையவன், இரண்டுக்கு உடையவனோடும், லக்னத்துக்கு உடையவனோடும், தனக்கு ஒத்தாசை செய்யும் ஒரு அசுப கிரகத்துடனும் இணைந்து 7-ல் அமர்ந்து, தனது வலிமையைப் பொருள் படைத்ததாகச் செய்துவிடுகிறான் என்கிறது ஜோதிடம்.

சனி பாப கிரகத்துடன் இணைந்து இரண்டில் இருந்தாலும், சனி 7-க்கு உடையவனோடு இணைந்து இரண்டில் இருந்தாலும், மாற்றான் மனைவியிடத்து ஈடுபாடு இருக்கும் என்கிறது ஜோதிடம் (ஸௌரேஸபாபெயதி தாரனாதே...). சனி கீழ்த்தரமான செயலில் சங்கோஜம் இல்லாமல் ஈடுபடவைப்பான். அவன் பாபியுடன் இணைந்து, குடும்ப ஸ்தானத்தில் இருந்தால், குடும்பத்தைத் தரம் தாழ்த்தும்படி பரதாரத்தை ஏற்கவைப்பான். ஏழுக்கு உடையவ னோடு இணைந்து இரண்டில் இருப்பவன், தாரத்தையும் குடும்பத்தையும், தரம் தாழ்ந்த நிலைமையை எட்டவைப்பான்.

 முள்ளில் இலை இணைந்தாலும், இலையில் முள் இணைந்தாலும் இலைக்குதான் பாதிப்பு. சனியோடு இணைந்தாலும், சனி மற்றவரோடு இணைந்தாலும் பலன் ஒன்றுதான். சுபன் எந்த வீட்டில் இருக்கிறானோ, அந்த வீடு (பாவம்) செழிக்கும். அசுபன் எந்த வீட்டில் (அது அவனது சொந்த வீடாக இருக்கக் கூடாது) இருக்கிறனோ, அந்த வீடு துயரத்தைச் சந்திக்கும். சனி பாப கிரகம். அவன் இரண்டில் வந்ததாலும், பாப கிரகத்தின் இணைப்பிலும் வலுப்பெற்று, தாம்பத்தியத்துக்கு அடிப்படையான மனைவிக்கு மறைமுக துயரத்தை ஏற்படுத்துகிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்னோர்கள் சொன்னார்கள்

இன்றையச் சூழலில் விவாகரத்தை ஏற்றவர்கள், மாற்றான் மனைவியையும், மாற்றாரின் கணவனையும் சங்கோஜம் இல்லா மல் ஏற்றுக்கொள்கிறார்கள். அதை அறமாகவும் நிறைவாகவும் நினைக்கிறார்கள். சமுதாயமும் அங்கீகாரம் அளிக்கிறது. ஆனால், அவர்கள் இருவரோடு அந்தத் தவறு முற்றுப் பெறாது. குடும்ப அங்கங்களில் கசப்பு உணர்வுகளை ஏற்படுத்தி, அவர்களின் வாழ்க்கையிலும் நிம்மதி அடைய முடியாமல் செய்துவிடுவதைப் பார்க்கிறோம். இரண்டு தாய், இரண்டு தந்தைகளைச் சந்திக்கும் அவலம் குழந்தைகளுக்கு வந்துவிடுகிறது. அது, குடும்ப ஆரோக்கியம் ஆகாது. அப்பாவை பார்க்கும் நாள், அம்மாவைப் பார்க்கும் நாள் என்ற நிலைமை குழந்தைகளுக்கு உருவானது, நாம் செய்த பாவத்தின் எல்லையாகும்.

 நினைத்தப்படி படிப்பு, வேலை அமையாத நிலையில், கிடைத்த வேலையில் கசப்பு உணர்வையும் மறந்து நீடித்து, வாழ்க் கையின் தரத்தைப் பாதுகாக்க விரும்புபவன், கைப்பிடித்தவளை ஒரு நொடியில் துறந்து, மாற்றானுக்கு மனைவியாக இருந்தவளை ஏற்பது எந்த விதத்திலும் பெருந்தன்மை அல்ல. வாழ்க்கையில் தாரத்தோடு இணைந்தபிறகு, தனது சுயநலத்துக்கு முன்னுரிமை அளிப்பது மனித இயல்பு அல்ல. பகுத்தறிவு சீரழிவுக்கு இடமளிப்பதையும் கவனிக்க வேண்டும். ஹிரண்யகசிபு ‘நாராயணா’ என்று சொன்னான். அவன் பக்தனாக முடியுமா? நாராயணன் அருளவில்லை; அழித்தார். பகுத்தறிவாளன் அறிவு பூர்வமான விளக்கம் அளிக்கிறான். அது ஜோதிடமாகுமா? அறிவுக்கு எட்டாத ஜோதிடத்தை அப்படியே ஏற்று, அதன் தகவலை ஆராய்ந்து உண்மையை உணர்ந்து விளக்க வேண்டும். அதை விடுத்து, தனது சிற்றறிவை கருவியாக வைத்து, ஜோதிடத்தைப் புரிந்துகொள்ளாமல் உண்மை விளக்கமளிப் பவனாக தன்னை சித்திரித்துக்கொள்வது தகாது.

பண்டை நாட்களில் மக்கள் விருப்பம் அவர்களது பிறப்புரிமை என்று சட்டமாக்கப்படவில்லை. மக்களின் மகிழ்ச்சி, பெருமை, நாகரிகம், உயர்வு, ஸமுதாயக் கட்டுக்கோப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே சட்டம் இயற்றினார்கள். இன்று மக்கள்தான் ஆளுகிறார்கள். அவர்கள்தான் அரசர்கள். அவர்கள் விருப்பம்தான் சட்டம் என்றாகிவிட்டது. சமுதாயமும் அதை ஏற்கிறது. பிறப்புரிமையானாலும், மறுபக்கம் சமுதாயச் சீரழிவைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. ஜோதிடத்தின் சிந்தனை சமுதாயக் கட்டுக்கோப்பு கலையாமல் இருக்கச் செயல்படும். சமுதாயக் கொந்தளிப்பை அறவே அகற்ற முன்னுரிமை அளிக்கும். அவனவன் ஆசாபாசத்துக்கு இணங்கி செயல்படவைத்து, அவனைச் சீரழிய வைக்கும்படியான செயலில் இறங்காது. தனி மனிதனின் சிந்தனையின் போக்கை ஆராய்ந்து அதற்கு உகந்த வகையில் செயல்பட அவனை வற்புறுத்தும். கசப்பாக இருந்தாலும் ஏற்கவைக்கும்.

ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனையே சமூக சிந்தனையாக உருவெடுக்கிறது. ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், காந்தி போன்றவர்களின் தனிமனித சிந்தனையில் மக்கள் இணைந்தார்கள்.
அவர்களது சிந்தனைதான் பொது சிந்தனையாக - மக்கள் சிந்தனையாக மாறியது. தற்போது மக்கள் குழாமின் சிந்தனை ஆராயாமல் ஏற்கப்படுகிறது. ஜோதிடத்திலும் அது நுழைந்து விட்டது. அது நமது துரதிருஷ்டம். சிந்தனை வளம் பெற்றவர்கள், தனது தகுதியால் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஜோதிடம், சிந்தனை வளத்தைப் பெருக்க உதவுகிறது. அதனுடைய விளக்கங்களை அலசி ஆராய்ந்தால், தெளிவான சிந்தனை

உருவாகும். அது நமக்கும் நாட்டுக்கும் உயர்வை அளிக்கும் என்பது அதன் சிறப்பு. அதை அறவே உதறித்தள்ளி நவகிரகங்களை ஆராதனைச் செய்யப் பரிந்துரைத்து, மக்களின் சிந்தனையை வளரவிடாமல், தனது வாழ்க்கைக்கு அவர்களைப் பயன்படுத்துவது தகாது.

ஜோதிடம், எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய சாஸ்திரம். அது, ஒரு சாராருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சாஸ்திரமாக மாறியது நமது துரதிர்ஷ்டம். சிந்தனை வளத்தைப் பெருக்கிக் கொள்ளாமல், பிறரது வழிகாட்டுதலில் செயல்படுவது உயர்வை ஈட்டித்தராது. கிடைத்த சுதந்திரத்தை இழந்து, பிறருக்கு அடிமையாக வாழும் நிலை உருவாகும். உழைத்துப் பிழைக்க எண்ணிலடங்கா வேலை வாய்ப்புகள் தயார் நிலையில் இருக்கும்போது, உழைக்காமல் பிழைக்க ஜோதிடத்தைக் கையாளுவது தகாது. மக்களின் தெளிந்த மனதை குழப்பிவிட்டு, அந்த சந்தடியில் தங்களது விருப்பத்தை நிறைவேற்றும் கருவியாக ஜோதிடத்தைப் பயன்படுத்துவது அதர்மம். நமக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் பெருமையளிக்கும் விதத்தில் ஜோதிடத்தைக் கையாள வேண்டும். அந்த எண்ணத்தில்தான் முனிவர்கள் அதை அருளியிருக்கிறார்கள்.

சிந்தனை வளம் பெற்ற நம் முன்னோர்கள், மக்கள் வாழ்க்கையை சிறப்பிக்கும் விதமாக ஜோதிடத்தைக் கையாளும்படி பரிந்துரைத்தார்கள். பண்டைய நாளில் வேதம் ஓதும் பரம்பரை ஜோதிடத்தை கையாண்டு சமூக சேவை செய்தார்கள். பணம் ஈட்ட அவர்கள் முற்படவில்லை. இந்த வழியில்தான் (அறவழியில்) பணம் ஈட்ட வேண்டும் என்று கட்டாயம் உண்டு. அதைக் கைப்பிடித்து பிறருக்கு உதவ ஜோதிடத்தைப் பரிந்துரைத்தார்கள். இன்று வேத பரம்பரை அற்றுவிட்டது; ஜோதிடம் இடம் மாறிவிட்டது. குறிக்கோளும் மாறிவிட்டது. அது, வேலை வாய்ப்புக் கல்வியாக மாறிவிட்டது. செவிவழித் தகவல்களும் புராணக் கதைகளும் அவர்களது ஜோதிடத்துக்கு உரமூட்டுகின்றன.

 கணினி வாயிலாக நொடிப் பொழுதில் விளக்கும் விதமாக ஜோதிட விளக்கத்தை எளிதாக்கி, பலபேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. கணினியை வைத்துக்கொண்டு ஜாதக விளக்கம் அளிப்பவர்கள் ஏராளம். கணினியில் ‘கணனம்’ எல்லோருக்கும் ஒன்றாக இருக்கும். ஆனால், விளக்கம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டிருக்கும். விளக்கம் அளிப்பவர்கள் கணினி அல்ல; ஆகையால் மாறுபாடு இருக்கும். ஒரு கணினி ஜோதிடம், ‘நல்ல காலம்’ என்று சொல்லும். மற்றொன்று ‘கெட்ட காலம்’ என்று சொல்லும். நீண்டப் பரிகாரங்களையும் பரிந்துரைக்கும். இப்படியெல்லாம் தாறுமாறான ஜோதிடத்தை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு ஜோதிட பிரபலங்களுக்கு உண்டு.

- (தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism