மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 15

சிவமகுடம்  - 15
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 15

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம்  - 15

விடுபட்டது புலியூர்!

கோடை மழையின் பெருவெள்ளத்தை ஏற்று, வழக்கத்தைவிடவும் அதிவேகமாகப் பாய்ந்துக்கொண்டிருந்த காவிரியின் மேனியைத் தழுவி, அதன் குளிர்ச்சியைச் சுமந்தபடி மெள்ள மேலெழுந்த காற்று, சோழ வீரர்களால் போர்த்துடிப்பு பெற்று ஆரவாரத்துடன் திகழ்ந்த உறையூர் கோட்டைக்குள் எவரது அனுமதியையும் எதிர்பாராமல் வெகு சுதந்திரமாக புகுந்ததுடன், கோட்டை மகுடங்களில் கட்டப்பட்டிருந்த புலிக்கொடிகளையும் பட்டொளி வீசிப்பறக்கச் செய்தது.

பிறகு, மீண்டும் தரை தாழ்ந்து வீசியக் காற்று, அரண்மனையில் திறந்து கிடந்த சாளரங்களின் வழியே இளவரசி மானியின் அறைக்குள்ளும் புகுந்து... கருமேகம் என்று கருதியோ என்னவோ, அவளது கூந்தலையும் சற்றே அலைக்கழித்தது.

மனிதரின் மனதைப் போலவே ஒரு நிலையின்றி சதா சஞ்சரித்துக்  கொண்டிருக்கும் காற்றுக்கு, நம் முன்னோர்கள் எத்தனை எத்தனைப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் தெரியுமா? அம்போதி, அரி, அநிலம், ஆசுகம், உலவை, ஊதல், ஊதை, காலசம், காலிலி, சலனம், சுசனம் என்று நீள்கிறது, காற்றுக்கு நம் இலக்கியங்கள் வழங்கியிருக்கும் பெயர்ப் பட்டியல்! இவை போக காற்று புறப்படும் திசைக்கு ஏற்ப... கீழ்க்காற்றை ‘கொண்டல்’ என்றும், மேற்கில் இருந்து வருவதை ‘கோடை’ என்றும், தெற்கில் இருந்து வீசுவதை ‘தென்றல்’ எனவும், வடக்கில் இருந்து வீசுவது வடந்தை அல்லது வாடை என்றும் வகை பிரித்துப் பெயர் வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

இவற்றில், மானியின் அறைக்குள் உழலும் பூங்காற்று எவ்வகையைச் சார்ந்ததோ தெரிய வில்லை. சாதாரண தருணமாக இருந்திருந்தால், அதுபற்றி ஆராயவும், ரசிக்கவும் செய்திருப்பாள் இளவரசி. ஆனால்,  யுத்தம் சமீபித்துவிட்ட அந்த அசாதாரணச் சூழலில், காற்றின் தீண்டலையோ, அதன் சீண்டலையோ பொருட்படுத்தாது சிந்த னையில் லயித்திருந்தாள் மானி. சோழத்தை குறிவைத்து நிகழும் நிழல் யுத்தங்கள் அவளைப் பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தன.

மன்னரின் மந்திராலோசனை அறையிலேயே நிகழ்ந்த கொலை முயற்சி முதலாக வணிக வீதி கலகம் வரையிலுமாக...  எல்லைப்புறக் கோயிலில் பரமேசுவரப் பட்டர் தனது சகாக்களுடன் கவலையுடன் பகிர்ந்துகொண்ட விஷயங்களையே மானியும் தனது மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தாள். ஒன்றை மட்டும் உறுதிசெய்தது அவள் உள்ளம். ஏற்கெனவே அவள் யூகித்தபடி, வணிக வீதியில் நிகழ்ந்தது வெறும் கலகம் அல்ல; பெரும் போரின் துவக்கம். அதை நிகழ்த்தியது சோழ வணிகர்களும் அல்ல; பயிற்சி பெற்ற போர் வீரர்கள்! எனில், அவர்கள் கோட்டைக்குள் மறைந்திருப்பது எங்கே?
பதிலறிய முடியாத இந்தக் கேள்வி, அவளின் சிந்தனையின் தீவிரத்தை அதிகப்படுத்த முயற்சிக்க, அதை முறியடித்து மானியின் சிந்தையைக் கலைத்தது, தரையதிர அறைக்குள் புகுந்த பட்டர்பிரானின் திடீர் வரவு.  அவரைத் தொடர்ந்து கோச்செங்கணும் நுழைந்து அவளுக்குத் தலைவணங்கினான்.

மானியிடம் நறுக்கோலையை நீட்டினார் பட்டர்பிரான். அதை வாங்கிப் பார்த்ததுமே ‘‘நான் யூகித்தது சரிதான்’’ எனக்கூறியபடி ஆவேசத்துடன் இருக்கையில் இருந்து துள்ளியெழுந்தாள் மானி.
பரமேசுவரப்பட்டரும் அவள் சொன்னதை ஆமோதிக்கும் விதம் மேலும் கீழுமாக தலையாட்டி யதுடன், முகத்தில் பெருமலர்ச்சியையும் வரவழைத்துக்கொண்டு ‘‘ஆஹா! பிரமாதம்... பிரமாதம்!’’ என்றபடி மானியை நெருங்கி, ‘‘தாயே! உனக்கு நிகர் இவ்வுலகில் எவரும் இல்லை’’ என்று பாராட்டியதுடன், அவள் சிரம் மீது கைவைத்து ஆசிர்வதிக்கவும் செய்தார்.

இளவரசியாரின் நுண்ணறிவைக் கண்டு கோச்செங்கணும் வியந்தான். அவன், நறுக்கோலைப் பாடலை முதலில் கண்ணுற்றபோது,    அதிலிருந்த சூட்சுமத்தை அவனால் அறிய முடிய வில்லை. பட்டர்பிரான்தான் பாடலின் சூட்சுமத்தை அவனுக்குப் புரியவைத்தார். ஆனால், இளவரசியார் பாடலைப் பார்த்த துமே அதன் சூட்சுமத்தை உணர்ந்து கொண்ட விதம், அவனைப் பெரிதும் அதிசயிக்கவைத்தது.

பட்டர்பிரானோ ஆசி வழங்கிய துடன் நிற்கவில்லை. இளவரசியிடம், ‘‘என்ன யூகித்தாய் மானி?’’ என்று கேட்டதுடன் நிற்காமல்,  ‘‘நான் யூகித்ததையே நீயும் யூகித்திருப்பாய் என்பது வெகுநிச்சயமாய் எனக்குத் தெரியும். அதை உன் வாய்வழிக் கேட்டால் இன்னும் மகிழ்வேன்; எனது யூகம் சரிதானா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வேன்’’ என்றார்.

அவரைப் பார்த்து புன்னகைத்த மானி, நறுக்கோலையை கோச்செங் கணிடம் கொடுத்து, அதில் உள்ளதை உள்ளபடி வாசிக்கும்படி  பணித்தாள். கோச்செங் கணும் பாடலை உரக்க வாசித்தான்.

ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காத ன் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம்,
மந்திர விதியின் மர ளி வழாஅ   
அந்தணர் வேள்விஓர்க் கும்மே

அவன் வாசித்து முடித்ததும், ‘‘இப்போது எனது உச்சரிப்பை உன்னிப்பாக கவனியுங்கள்’’ என்ற மானி, அட்சரம் பிசகாமல் பாடியே காட்டினாள், அந்த சங்கத் தமிழ் பாடல் வரிகளை.

ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம்,
மந்திர விதியின் மரபுளி வழாஅ   
அந்தணர் வேள்விஓர்க் கும்மே

பாடி முடித்தவள் பட்டர்பிரானிடம் சொன்னாள்: ‘‘பட்டர் பிரானே, நறுக்கோலையில் காணும் பாடலில் ‘பு’, ‘லி’ என்ற இரண்டு அட்சரங்கள் விடுபட்டிருக்கின்றன’’ என்றாள்.

‘‘இதிலிருந்து என்ன தெரிந்துகொண்டாய்?’’

பரமேசுவரப் பட்டரின் இந்தக் கேள்விக்கு மானி பதில் சொன்னாள்: ‘‘புலி விடுபட்டிருக்கிறது!’’

‘‘புலி விடுபடுகிறது என்றால்... சோழம் விடுபடுகிறதா?’’

‘‘அப்படியல்ல அர்த்தம். ‘புலி’ எனும் குறிப்பு சோழத்தைக் குறிப்பதாக இருந்தால், பாண்டியரின் படைகள் சோழத்தை நோக்கி நகரத் தேவையில்லையே’’

‘‘ஆமாம்... ஆமாம்!’’ பெரிதாகத் தலையசைத்தார் பட்டர்பிரான். மானி தொடர்ந்தாள்.

‘‘பாடல் சுட்டிக்காட்டும் குறிப்பு புலியூரை. அதாவது, கூன் பாண்டியர் தாக்கப்போவது, நாம் பாதுகாத்து வைத் திருக்கும் புலியூர் அல்ல என்று அர்த்தம்!’’

‘‘அற்புதம் அம்மா... அற்புதம்! எனது கணிப்பும் அதுவேதான். அதுசரி, வேறு எந்தப் புலியூரைத் தாக்க உத்தேசித்திருக்கிறான் பாண்டியன்?’’ எனக்கேட்டார் பரமேசுவரப்பட்டர்.

‘‘வாருங்கள்; அதுபற்றி தந்தையிடம் ஆலோசிப்போம்’’ என்றவள் பட்டர்பிரானின் கைகளைப் பற்றியிழுத்தபடி அறையில் இருந்து வெளியேறினாள். கோச்செங்கணும் பின்தொடர்ந்தான்.

அவர்கள் அரண்மனை வாயிலை அடைந்த தருணத்தில், கோட்டைப் பாதுகாப்பையும் முன்னேற்பாடுகளையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மணிமுடிச்சோழர். வாயிலின் முகப்பு திண்ணையில் இருந்து தரையில் இறங்கு வதற்காக படிக்கட்டுகளில் மானி காலெடுத்து வைக்க முற்பட்ட விநாடி... பெரிதாக ஒலித்தது யானையின் பிளிறல் சத்தம்.

சத்தம் வந்த திசையை நோக்கிய பட்டர்பிரான் அதிர்ந்துபோனார்.  பெரும் ஆவேசத்துடன் முன்னங்கால் களை உயர்த்தி பிளிறிய யானையின் மீது ஆரோகணித் திருந்தது, முதல்நாள் சிறையிலிடப்பட்ட முரடன் அச்சுதன்.

‘‘இவன் எப்படி தப்பித்தான்?!’’-பரமேசுவரப் பட்டர் திகைத்து நிற்க, அதேகணத்தில் மானி வேறொரு விபரீதத் தைக் கவனித்தாள். யானையின் மீது அமர்ந்திருந்தவன், அதன் கோபத்தைத் தூண்டும்படியான ஏதோவொரு காரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. அதன் காரணமாக அந்த யானை ஆவேசத்துடன் நகர முற்படுவதையும், எக்கணத்திலும் அது தந்தையின் மீது பாயலாம் என்பதை உணர்ந்தவள், சற்றும் தாமதிக்காது மின்னலெனச் செயல்பட்டாள். அருகில் நின்றிருந்த வீரன் ஒருவன் கையில் இருந்து வேலைப் பிடுங்கி, யானையைக் குறிபார்த்து வீசினாள்!

சிவமகுடம்  - 15

லாக்னியாய் களிறை நோக்கிப் பாய்ந்து சென்றது வேல்!

இங்ஙனம், உறையூரில் பெரும் விளைவுகளை நிகழ்த்திக் கொண்டிருந்த காலம், புலியூர் தடாகத்தில் பொங்கியை இறக்கிவிட்டிருந்தது, வேறோரு விளைவை நோக்கி.

குளிர்ந்த நீருக்குள் இறங்கிய பொங்கி, புலியூருக்கு வரும் வழியில்,  முரட்டு வீரர்களால் ஏற்பட்ட பெரும் ஆபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றியவர் கூறியபடி, தடாகத்தில் மலர்ந்திருந்த மூன்று தாமரைகளில் நடுவில் உள்ளதைப் பறித்து அதன் இதழ்களை விரித்தாள். உள்ளே... சிறு வெண்பட்டுத் துணிச் சுருளின் வடிவில், சிரித்துக்கொண்டிருந்தது விதி!

- மகுடம் சூடுவோம்...

* சங்க காலப் புலவரான நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப் படையின் இந்தப் பாடல்,
திருச்செந்தூர் முருனின்  திருமுக இயல்பை விளக்குவதாக அமைந்தது.