மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

சாஸ்திரங்கள் எதற்காக?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

? தர்ம சாஸ்திரத்தின் மூலம் எது? மனு சாஸ்திரம் என்று பெயர் வரக் காரணம் என்ன?

- கே.ரங்கராஜன், நெல்லை-2


‘தர்மசாஸ்திரம்’ - மனித இனத்தின் ஒட்டு மொத்த முன்னேற்றத்துக்கு உகந்த நல்லுரைகளின் தொகுப்பு. மனுஷ்யன், மாளவன், மர்த்யன், மனுஜன், நர: - இந்தப் பெயர்கள் அத்தனையும் மனுவின் பரம்பரை. மனிதனின் மூல புருஷன் இயற்றிய சட்ட திட்டங்களுக்கு அவன் பெயரைச் சூட்டினார்கள்.

? தர்ம சாஸ்திரம் அருளப்பட்டதன் நோக்கம் என்ன?

- வீ.பத்மாவதி, டெக்ஸாஸ்


தர்மம், அறம் - என்பதெல்லாம் மனிதனின் கடமைகள். கடமைகளைப் பட்டியலிட்டு வகுத்துத் தந்தது தர்மசாஸ்திரம். தனிமனிதனின் ஆரோக்யத்தையும் உள்ளத்தின் உயர்வையும் உயர்த்தி அவன் வழி சமுதாயத்தைச் சீராக்குவது தர்ம சாஸ்திரத்தின் கொள்கை.

கேள்வி - பதில்

நூலில் சாயத்தை ஏற்றிவிட்டால் சேலைக்குச் சாயம் ஏற்ற வேண்டிய வேலை இருக்காது. பிடிவாதத்துடன், சேலையைச் சாயத்தில் முக்கினாலும், ஒவ்வொரு நூல் இழையிலும் சாயம் முழுமையாகப் பரவும் என்பதற்கு உத்தரவாதம் இருக்காது. தனி மனிதனைப் பண்பாளனாக மாற்றினால், பண்பாளர்களின் சமூகத்துக்கு பண்பை ஓதவேண்டிய அவசியம் இருக்காது. தனி மனித அறம் செழிப்பாக அமைந்தால் சமுதாய அறம் தானாகவே கிடைத்துவிடும்.

? சாஸ்திரம் சுட்டிக்காட்டும் அறங்கள் எல்லோருக்கும் பொதுவாகத்தானே இருக்கவேண்டும். அப்படியில்லாமல், தனித்தனி நியதிகள் எதற்காக?

- மு.வேல்முருகன், கோலாலம்பூர்


இயல்பில் மாறுபட்ட சிந்தனை உள்ளவர்களுக்குப் பாங்காக தனிமனித அறத்தை மாறுபட்ட அளவில் செயல்பட வைக்கிறது தர்மசாஸ்திரம். மனித இனத்தில் பிறந்தாலும் ஆண் - பெண் எனும் பேதம் இருக்கத்தான் செய்யும். அவர்களது உடலமைப்பு, இயல்பு, எண்ணங்கள். அதை நிறைவேற்றும் நடைமுறைகள் ஆகிய ஒவ்வொன்றும் மாறுபட்டுத் தான் இருக்கும். அவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வைச் சுட்டிக்காட்ட வரவில்லை சாஸ்திரம். அவர் களுடைய வாழ்க்கை முழுமை பெறு வதற்கு அனுசரணையான நல்லுரை களின் தொகுப்பு தேவைப்படுகிறது.

ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு, மோப்பநாய்களின் திறமை இருக்காது. கற்றுக் கொடுத் தாலும் வெற்றி கிடைக்காது. குயிலும் காகமும் பறவை இனம்தான். எனினும், குயிலுக்கு இருக்கும் குரல் வளத்தைக் காக்கையில் உருவாக்க இயலாது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அது, படைப்பின் அதிசயம். நமது முயற்சியால் ஒன்றாக்குவது, இயற்கைக்கு எதிரிடையாகச் செயல்படுவதாடும். யார் யாருக்கு என்ன தகுதி உள்ளதோ, அந்தத் தகுதிக்கு உகந்த வகையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில், மாறுபட்ட அறங்களையும், அட்டவணை யையும் உருவாக்கி, ஒட்டுமொத்த மனித இனத்தின் மேன்மையை எட்டவைக்க நினைப்பது சாஸ்திரம்.

கேள்வி - பதில்

? ஐயா, எங்கள் பகுதிக்கு வந்திருந்த சொற்பொழிவாளர் ஒருவர், ‘புத்தி ஜீவிக்கு ஒரு வழி, சிரம ஜீவிக்கு ஒருவழி என அறம் வகுத்து எல்லோரும் மேன்மை அடைய உதவுகின்றன நம் சாஸ்திரங்கள்’ எனக் குறிப்பிட்டார். அதென்ன புத்தி ஜீவி, சிரம ஜீவி?

- கே.தியாகு, மேலூர்


சிந்தனைவளத்தில் செழிப்பான வர்களும் உண்டு; போதுமான சிந்தனை வளம் பெறாதவர்களும் உண்டு. பிறப்பின் குறிக்கோளை இந்த இரு தரப்பினரும் அடையவேண்டும் அல்லவா? அதற்கு உகந்த மாறுபட்ட அறவழிகளைச் சொல்கிறது சாஸ்திரம்.

ஒரே சட்டதிட்டமானால் சிந்தனை வளம் பெறாதவர்கள் முன்னேற முடியாமல் தவிப்பார்கள். அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். எனவே, தனி மனித அறம் மாறுபட்டு இருக்கும்.

புத்தி ஜீவி - சிந்தனை வளத்தால் முன்னேற்றத்தை எட்டி மகிழ்பவர். சிரம ஜீவி - உடலுழைப்பில் முன்னேற்றத்தை எட்டுபவர்.  இந்த இரு பிரிவுகள் இன்றும் தொடர்கின்றன. எல்லோரையும் சிந்தனையாளர்களாக மாற்ற இயலாது. பிறக்கும்போதே மூளை வளர்ச்சி குன்றியவர்கள் தென்படுகிறார்கள். இயற்கையை வென்று நம்மால் எல்லோரிலும் மூளை வளர்ச்சியைத் திணிக்க முடியாது. குறை இருப்பவரையும், அவருக்கு உகந்த வகையில், அவரது வாழ்க்கையில் முழுமையை எட்டுவதற் கான நல்லுரைகளை சாஸ்திரம் வழங்கும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பொதுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்காமல், அவர்களுக்கு உரிய பள்ளிக்கூடத்தை உருவாக்கி அவர்களையும் முன்னேற வைக்கும் எண்ணம் இன்றும் தென்படுகிறது. அது தகாது என்று எவரும் நினைப்பதில்லை.

விசித்திரமான படைப்புதான் உலகம். ஒரே இனமானாலும் அதில் பாகுபாடு தென்படுவது இயற்கை.  ஆதிசங்கரரின் சிந்தனை எல்லோருக்கும் உதிக்கவில்லை, டார்வினின் சிந்தனையும் அப்படித்தான். மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகிய மாமனிதர்களின் சிந்தனை மற்றவரிடம் தென்படவில்லை. தாய்போல எல்லோரையும் அணைத்துக்கொண்டு முன்னேற வைப்பதுதான் சாஸ்திரத்தின் கொள்கை. கையில் இருக்கும் விரல்களில், கட்டை விரல் குட்டையாக இருக்கும். ஆனால், அது இல்லை என்றால் மற்ற விரல்கள் செயல்பட இயலாது. அந்த நான்கு விரல்களிலும் மாறுபாடு உண்டு (அங்கு ஸீஷீ ஸதீஷ்வபி அங்குஷ்ட மேவ ஆதிபத்தியம் குருதெ). ஆனால் அவற்றின் இணைப்பில் கைகள் செயல்பட்டு முன்னேற் றத்தை அளிக்கும். அதுபோல், மாறுபட்ட இயல்புகளை உடையவர்களின் இணைப்பில் ஒட்டு மொத்த சமுதாய முன்னேற்றம் கிட்டிவிடுகிறது.

கேள்வி - பதில்

? சாஸ்திரம் எவ்வகையிலான அறங்களை எல்லாம் போதிக்கிறது, அவற்றால் என்ன பயன்?

- என்.சரஸ்வதி, செங்கல்பட்டு


தர்மசாஸ்திரம் இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுத்தரும்; எதிர்த்துப் போராடி தோல்வியைத் தழுவ பரிந்துரைக்காது. தனி மனிதனுக்கான அறம், குடும்பச் சூழலில் கடைப்பிடிக்க வேண்டிய அறம், சமுதாயத்தோடு இணைந்து கடைப்பிடிக்க வேண்டிய அறம், நாட்டோடு இணைந்து கடைப்பிடிக்க வேண்டிய அறம், உலகத்தோடு இணைந்து கடைப்பிடிக்க வேண்டிய அறம் ஆகியவற்றை விளக்கி, கடைசியில் அந்த அறங்களின் வழியில், ஒட்டுமொத்த உலகையே ஒரு குடும்பமாகப் பார்க்கும் பாங்கை ஏற்படுத்தி, மனிதனை உயர்த்துகிறது தர்மசாஸ்திரம் (வஸீதைவகுடும்பகம்).

இவன் என்னைச் சார்ந்தவன், இவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்கிற பாகுபாடு மறைந்து, ‘உலகில் இருக்கும் மனிதர்கள் யாவரும் என்னைச் சேர்ந்தவர்கள்; ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள்’ என்ற எண்ணத்தை வரவழைக்கும் தர்ம சாஸ்திரம் (அயம் நிஜ: பரோவேதி கண்ணாலகு சேதஸாம். உதாரசரிதானாம் துவஸீ தைவ குடும்பகம்).

? ஆசாரம் இல்லாத பக்தி பலன் அளிக்குமா? இதுகுறித்து சாஸ்திரத்தின் விளக்கம் என்ன?

- தி.வரதன், கோவை-2


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடவுளோடு இணைந்துவிடுவது பக்தி. விஷயமறிந்த முன்னோர்கள், சான்றோர்கள் கடைப்பிடித்த பழக்க வழக்கங்கள், தனக்கும் சமுதாயத்துக்கும் பெருமையளிக்கும் சிறந்த செயல்பாடுகள் ஆகியவை ஆசாரத்தில் அடங்கும். ஆசாரத்தோடு இணைந்த பக்திதான் உண்மையானது.

‘பிணி அகல வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தி செலுத்துபவர், செல்வம் - கல்வி - மனை - மனைவி ஆகியவற்றைப் பெற பக்தி செலுத்துபவர் ஆகியோரை என் பக்தர்கள் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன். ‘அறிவாளியாக இருந்து எதையும் விரும்பாமல், பக்தி செலுத்துபவனே எனக்குப் பிடித்தமானவன்!’ என்று ஸ்ரீகண்ணன் கூறுவான். ஆசாரத்துடன் ஸ்வதர்மத்தை அதாவது கடமைகளை நிறைவேற்றாத பக்தனை அவர் ஏற்கமாட்டார். ‘ஆசாரத்திலிருந்து அறம் தோன்றுகிறது’ என்று வியாசர் கூறுவார்  (ஆசாரப்ர பவோ தர்ம:). இரண்டும் சேர்ந்தால் நன்மை. ஒன்று மட்டும் பயனளிக்காது!

- பதில்கள் தொடரும்...

கேள்வி - பதில்