மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26
பிரீமியம் ஸ்டோரி
News
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26

சத்தியப்பிரியன், ஓவியம்:ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 26

41 - மண் பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே?

வைணவ சம்பிரதாயத்தில் பூ மண்டபம், போக மண்டபம், தியான மண்டபம் என்று மூன்று திவ்ய தேசங்கள் வர்ணிக்கப்படுகின்றன. பூ மண்டபம் என்பது திருவேங்கடமலையைக் குறிப்பதாகும்.
எந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை, வானவர் வானவர் கோனொடும், சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து, அந்த மில்புகழக் காரெழில் அண்ணலே என்று நம்மாழ்வார் தனது பாசுரத்தில் திருவேங்கடமலையை சிந்து பூ மகிழ் திருவேங்கடம் என்று ஏற்றம் கொடுத்ததால் இதற்கு பூ மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. போக மண்டபம் என்று திருவரங்கத்தையும் காஞ்சியை தியாகமண்டபம் என்றும் வழங்குவர். பூ மண்டபம் என்று பெயர் பெற்ற திருவேங்கடத்தில் ஒரு குயவனின் கதையை இப்போது பார்ப்போம்.

திருவேங்கடத்தில் குரவநம்பி என்றும் குறும்பறுத்தநம்பி என்றும் வழங்கப்பட்ட மண்பானைகள் செய்யும் குயவன் ஒருவன் இருந்தான். தினமும் வேங்கடநாதனை மனதில் தியானித்து தனது தொழிலைத் தொடங்குவான். மாலையானதும் எஞ்சியிருக்கும் களிமண்ணில் தனது மனம் இசைந்து அந்த எம்பெருமானை நினைத்து அழகிய மண் பூக்களை வடிவமைப்பான். அப்படிச் செய்த அழகிய மண் பூக்களை எடுத்துக்கொண்டு ஏழுமலையான் சன்னதியின் வாசலில் வைப்பான். பிறவியின் காரணமாக அவனுக்கு சன்னதியினுள் நுழைய அனுமதியில்லை. எனவே வாசலோடு சரி.
இது நடந்தது தொண்டைமான் என்ற மன்னன் ஆட்சி புரிந்த சமயம். திருக்கச்சி நம்பி, பட்டர் போன்ற ஒருசிலர் அர்ச்சாவதாரமாக உள்ள எம்பெருமானுடன் நேரடியாக பேசும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்களில் தொண்டைமானும் ஒருவன். இவன் அரசன் அல்லவா? தினம் வாடும் மலர்களால் வேங்கடநாதனை அலங்கரிக்காமல் பொன்னால் செய்த பூக்களால் அலங்கரிப்பது வழக்கம். தினமும் பொன் பூக்களை பெருமாளின் திருப்பாதங்களில் சமர்ப்பிப்பான். சன்னதி வாசலில் குறும்பறுத்தநம்பியின் மண் பூக்கள் இருக்கும். தினமும் நடையை சாத்திவிட்டு செல்லும்வரையில் தொண்டைமான் இருந்துவிட்டுச் செல்வார்.

மீண்டும் காலையில் வந்து பார்த்தால் தொண்டைமான் வைத்துவிட்ட பொன் பூக்கள் அப்படியே இருக்கும். குறும்பறுத்தநம்பியின் மண் பூக்களை வேங்கடவன் தலையில் சூடியபடி எழுந்தருளியிருப்பான். தொண்டைமானுக்கு பெருத்த ஆச்சரியம். தனது பக்தியில் குறையிருக்குமோ என்று ஐயப்பட்டு பெருமாளிடமே நேரடியாக கேட்டான். இப்போது ஏழுமலையானுக்கு ஒரு பெருத்த சங்கடம்.

இந்த இடத்தில்தான் வைணவத்தின் உயரிய பண்பான கைங்கரியம் என்பது ஏற்றம் காண்கிறது. குறும்பறுத்தநம்பி தினமும் பக்தியுடன் எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து ஒரு நிபந்தனையையும் வைக்கிறார். “ இந்த மண்பூக்களை தினமும் சமர்ப்பிப்பது யார் என்ற கேள்வி கண்டிப்பாக எழும். அப்படி கேள்வி கேட்பவரிடம் பெருமாளே நீ அது நான்தான் என்று காட்டிக்கொடுக்கக் கூடாது. உனக்கு கைங்கரியம் செய்வது மட்டும் எனது நோக்கம். ஆனால் என்னுடைய கைங்கரியத்தில் பிரியப்பட்டு இதனை ஏற்றுக்கொள்ளும் நீ என்னை இன்னார் என்று அடையாளம் காட்டிவிட்டால் அவர்கள் என் கைங்கரியத்தை விட்டுவிட்டு என்னை உயர்வாகக் கருதத் தொடங்கிவிடுவார்கள். அப்படி ஒரு அபவாதம் எனக்கு வேண்டாம் “என்பதுதான் அந்த நிபந்தனை. சின்ன மின்சார விளக்கில்கூட ஒளி மங்கும்படி உபயதாரர் பெயர் எழுதும் இந்தக்காலத்தில், தான் செய்யும் கைங்கரியத்தைக்கூட வெளி மனிதர்கள் அறியக்கூடாது என்றொரு வைணவர் இந்த பாரத தேசத்தில் இருந்திருக்கிறார் என்பது கண்டிப்பாக ஆச்சரியம் அளிக்கும். “அப்படி உன் பெயரைச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் வந்து, ஒருநாள் நான் உன் பெயரை சொல்லிவிட்டால் என்ன செய்வது?" என்று திருமால் திருப்பிக் கேட்கிறார்.

“ஒன்றும் செய்ய வேண்டாம். அப்படி ஒரு தர்மசங்கடம் உனக்கு ஏற்ப்பட்டு என்னுடைய பெயரைச் சொல்ல வேண்டிய கட்டாயம் நேரிட்டால் அன்று எனக்கு முக்தி கொடுத்துவிடு" என்று குறும்பறுத்தநம்பி பதில் கூறினார். எனவே தொண்டைமானின் கேள்விக்குப் பதில் கூறுவதை நாளை நாளை என்று திருப்பதிசாமி தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார். இறுதியாக எம்பெருமான் குறும்பறுத்தநம்பிக்கு முக்தி கொடுக்க முடிவு செய்து தொண்டைமானிடம் அவருடைய கைங்கரிய மகிமையைக் கூறுகிறார். தொண்டைமான் குறும்பறுத்தநம்பியைக் காண ஓடோடி அவர் இல்லம் விரைகிறார். அதற்குள் குறும்பறுத்தநம்பி எம்பெருமானின் பரமபதத்தை அடைந்துவிட்டார். ‘தான் செய்யும் கைங்கரியம்கூட அடுத்தவர்க்கு தெரியாமல் எம்பெருமானுக்கு செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கமுடைய அந்தக் குறும்பறுத்தநம்பி போல நான் எந்தக் கைங்கரியமும் திருக்கோளூர் வைத்தநிதி பெருமானுக்கு செய்யவில்லையே. பிறகு நான் எதற்கு இந்தத் திருக்கோளூரில் இருக்க வேண்டும்?" என்று அந்தப் பெண்பிள்ளை கிளம்பினாள்.

42 - மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே?

சரணாகதி என்ற உயரிய தத்துவத்தைத் தன்னுள்ளே கொண்டுள்ள மதம் வைணவம். சரண்புகுதலே மோட்சத்தின் முதல் மார்க்கம் என்று கூறும் உயரிய நெறி அது. இதன் விளக்கம் நமது இரண்டு இதிகாசங்களான இராமாயணத்திலும், மகாபாரதத்திலும் பல பகுதிகளில் காணக் கிடைக்கின்றன. ஸ்ரீமத் பாகவதத்திலும் தனிப்பகுதியாக சரணாகதி தத்துவத்தை விவரிக்கும் கஜேந்திர மோட்சம் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அனைத்து புராணக் கதைகளுக்கும் இருப்பதுபோல இதிலும் ஒரு சாபமும் அதற்கான சாபவிமோசனமும் கூறப்பட்டுள்ளது. விஷ்ணு பக்தனான இந்திரத்யும்னன் என்ற மன்னன் விஷ்ணுவின் நினைவாக துர்வாச முனிவரின் வருகையை பாராதிருக்க கோபம்கொண்ட முனிவர் அவனை ஒரு யானையாக மாற்றி மஹா விஷ்ணுவால் சாபவிமோசனம் பெற அருள்புரிந்தார்.

 அதேபோல ஒரு குளத்தில் மற்றவர்க்கு தொந்தரவு அளித்துவந்த ஹூஹூ என்ற அரக்கன் மறு ஜென்மத்தில் முதலையாகப் பிறக்க அகத்தியர் சாபமும், சாப விமோசனமாக எம்பெருமானின் திருவாழி உதவும் என்று கூறிவிட்டார். அவர்கள் இருவரும் கஜேந்திரன் என்ற யானையாகவும், மடுவில் முதலையாகவும் ஜன்மமெடுத்தனர். முற்பிறவி வாசனை போகாததால் கஜேந்திரன் மடுவில் உள்ள தாமரை மலர்களை பறித்து மகா விஷ்ணுவை பூஜிப்பதும், முதலை மடுவில் உள்ளவர்களைப் பற்றி இழுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தன. ஒருமுறை எம்பெருமானுக்கு மலர் பறிக்க மடுவில் இறங்கிய யானையின் கால்களை அந்த முதலை பற்றி இழுக்க கஜேந்திரன் ‘ஆதிமூலமே' என்று அலற, மகாவிஷ்ணு கருட வாகனத்தில் விரைந்து வந்து தனது திருவாழி எனப்படும் ஸ்ரீசுதர்சன சக்கரத்தை சுழலவிட்டு அந்த முதலையைக் கொன்று யானையை காப்பாற்றினார் என்பது புராணம். இந்த கஜேந்திரனை நம்மாழ்வார் காதல் களிறு என்கிறார். இதைவிட ஒரு சிறந்த சொல்லால் சரணாகதி தத்துவத்தை விளக்க முடியாது. சட்டென்று நமது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் நாம் கேட்போம். யானை கூப்பிட்டதற்கு வந்தாரே நாம் கூப்பிட்டால் ஏன் வருவதில்லை? முதலை வாயில் பட்டதும் 'ஆதிமூலமே' என்று கதறியதும் எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய ஓடிவருகிறார். வந்து நின்ற பெருமானை நோக்கி “அழிந்துபோகக்கூடிய இந்த உடல் வேதனைப்படுவதற்காக நான் அலறவில்லை. நீ எழுந்தருளியதும் உன்னை சேவித்துவிட்டு உன் திருவடிகளில் இந்தத் தாமரை மலர்களை சமர்ப்பிப்பதற்காக அலறினேன்". எம்பெருமான் வைகுந்தத்தில் இருந்தபடியே திருவாழியை ஏவிவிட்டு காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் நேரில் எழுந்தருளியதன் காரணத்தைத்தான் நம்மாழ்வார் காதல் களிறு என்கிறார். எம்பெருமான்மீது காதல்கொண்டு கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற சித்தம் வேண்டும். தூய காதலுடன் சரணாகதி செய்தால் அந்த பாகவதன் ஒரு மிருகமாக இருந்தாலும் ஓடோடி வந்து காத்தருள்வான்.

மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்,
தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே,
மழுங்காத ஞானமே படையாக, மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே?
, என்கிறார் நம்மாழ்வார். அப்படி ஒரு பேறுபெற்ற கஜேந்திரனைப் போலன்றி ஒரு கைங்கரியமும் செய்யாத நான் இந்தத் திருக்கோளூரில் இருக்க பிரியப்படவில்லை என்று கூறிவிட்டு அந்தப்பெண் வெளியேறுகிறாள்.

- தொடரும்