Published:Updated:

பானகம், துள்ளுமாவு, வெள்ளரிப்பிஞ்சு படையலோடு களைகட்டிய சமயபுரம் பூச்சொரிதல் விழா! #VikatanPhotoStory

பானகம், துள்ளுமாவு, வெள்ளரிப்பிஞ்சு படையலோடு களைகட்டிய சமயபுரம் பூச்சொரிதல் விழா! #VikatanPhotoStory
பானகம், துள்ளுமாவு, வெள்ளரிப்பிஞ்சு படையலோடு களைகட்டிய சமயபுரம் பூச்சொரிதல் விழா! #VikatanPhotoStory

க்தி வழிபாடு தமிழகத்தில் பிரசித்தமானது. அதிலும் சமயபுரம் மாரியம்மன் கோயில், அம்மன்  கோயில்களுக்கெல்லாம் தலைமைப் பீடம் என்றே சொல்லலாம். ஆயிரம் கண்ணுடையாள் குடிகொண்டிருக்கும் ஆலயத்தில் நேற்று காலை கொடியேற்றத்தோடு பூச்சொரிதல் விழா தொடங்கியது. கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது.

மாசி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பங்குனி மாதத்தின் இறுதி ஞாயிறு வரை 28 நாள்களுக்குக் கடுமையான பட்டினி விரதம் அனுஷ்டிப்பாள். வேனில் காலத்தில் பரவக்கூடிய நோய்களிலிருந்து தன் மக்களைக் காப்பாற்றவே அன்னை இந்த விரதத்தை மேற்கொள்வாள். 

மண்ணுலக மக்களைக் காப்பதற்காக சமயபுரத்தம்மன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து நோன்பு நோற்கிறாள். விரத நாள்களில் சமயபுரத்தம்மனுக்கு வழக்கமான நைவேத்தியங்களுக்குப் பதிலாக பானகம், துள்ளு மாவு, வெள்ளரிப் பிஞ்சு, இளநீர் மட்டுமே படையலாக  படைக்கப்படுகின்றன. 

மகமாயி விரதமிருக்கும் நாள்களில், அவளைக் குளிர்விக்கவே  பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக, அனைத்து மாவட்ட ஊர்களிலிருந்தும் விதவிதமான மலர்கள் வண்டிகளில் கொண்டுவரப்படுகிறது.. அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கு மாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக் கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

முல்லை, மல்லிகை, ரோஜா, சம்பங்கி, சாமந்தி, செவ்வந்தி, தாமரை, மரிக்கொழுந்து என எல்லா மலர்களும் கூடைகூடையாக மக்களால் கொண்டுவரப்படுகிறது. 'வாழ்வை வளமாக்கும் எங்கள் மாரிக்கு வண்ண மலர்களால் அர்ச்சிக்கப்போகிறோம்' என்று வரிசை வரிசையாக மக்கள் கூட்டம் மலர்க் கூடைகளைச் சுமக்கிறது.

ஜாதி, மத பேதமில்லாமல் எல்லா மக்களும் பூக்களை வாங்கி அம்மனுக்குச் சமர்ப்பிக்கிறார்கள். கோடிக்கணக்கான மலர்களால் குளிர்ந்து போகும் தேவி, மக்கள் வேண்டிய வரங்களை அள்ளித் தந்து மகிழ்கிறாள். ஸ்ரீரங்கநாதர் அனுப்பிவைக்கும் மலர்களே அம்மனுக்கு முதன்முதலில்  அன்னையின் மீது சொரியப்படுகிறது. என்ன இருந்தாலும் அண்ணன் வீட்டுச் சீதனம்  என்றால் பெண்களுக்கு ஓர் அபிமானம் இருக்கும்தான் இல்லையா?  

தீமைகளை எல்லாம் அழிக்கும் மாரியம்மனாக கண்ணபுரம் வந்த தேவி, எட்டுக் கரங்களில் கபாலம், மணி, வில், பாசம், கத்தி, சூலம், அம்பு,  உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில், மாயாசுரனின்  தலைமீது கால் வைத்து அமர்ந்து காட்சி தரும் அம்பிகை, எந்த ஒரு துன்பமும் நம்மை அணுகாதபடி பாதுகாத்து வருகிறாள். 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்.


நம்மிடம் பேசுவதுபோன்ற பாவனையில் மகமாயி வீற்றிருக்கும் திருக்கோலத்தை தரிசித்தவர்கள்  மெய்சிலிர்த்துப் போவார்கள். உடுக்கை, சிலம்பு இல்லாமலே அவளின் முன்னால் அருள்வந்து ஆடும் பக்தர்கள் இங்கு அநேகம்... அநேகம்...சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை.

தீராத நோய்களையெல்லாம் தீர்த்துவைக்கும் மருத்துவச்சியாம் இந்தக் கண்ணபுரத்தாள். ஆலயத்து விபூதியும், மஞ்சளும், குங்குமமும், வேப்பிலையும், தீர்த்தமும் பக்தர்களுக்கு கண்கண்ட மருந்து. அம்மை, கண் கோளாறுகள், கொப்பளங்கள், கடுமையான காய்ச்சல்... என எது வந்தாலும் எளிய மக்கள் ஓடிவருவது இந்த சமயபுரத்து எல்லைக்குத்தான்.

சமயத்தில் வந்து காக்கும் இந்த சமயபுரத்தம்மனின் அருள் லீலைகளைக் கண்டு ஆங்கிலேயே அதிகாரிகளே பயந்தது உண்டு. நடுஇரவில் அம்மனின் உலாவைக்கண்டு பயந்துபோன தளபதி ஜின்ஜின்,  துப்பாக்கி கொண்டு அம்மனைச் சுட்டுவிட்டான். ஆனால், அந்தத் தோட்டாக்கள் மலர்களாக மாறி அம்மனை அபிஷேகித்தது. இந்த அற்புதத்தைக் கண்டு வியந்த வெள்ளையர்கள் உருவாக்கிய விழாவே இந்த பூச்சொரிதல் விழா. 

`தாய் வீடு சமயபுரம்’ என்று புகழப்படும் இந்த ஆலயத்தில் எல்லா நாள்களுமே திருவிழாக் கோலம்தான். அம்மன் ஆதியில் வந்து அமர்ந்த ஆதி சமயபுரம் என்ற இனாம் சமயபுரம் அருகிலேயே அமைந்துள்ளது. சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

உலக மக்களின் வாழ்வுக்காக மகமாயி விரதமிருக்கும் இந்த 28 நாள்களிலும் பக்தர்களால் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாவிளக்கு பூஜை, தீச்சட்டி ஏந்துதல், மடிப்பிச்சை எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், சக்தி கரகம் தாங்குதல் என எங்கு பார்த்தாலும் சக்தியின் அருள்வேண்டி பக்திப் பிரவாகம் பெருக்கெடுத்தோடும்.

பூச்சொரிதல் திருவிழாவையட்டி விக்னேசுவர பூஜை, புண்யாகவஜனம் முடித்த பிறகு முறைப்படி மாரியம்மனுக்குக் காப்பு கட்டுகிறார்கள். பிறகு, திருக்கோயிலின் தென்கரையிலுள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து, மூன்று யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து திருக்கோயில் முன்மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதிகள் நான்கின் வழியாகத் தேரடி வந்து, பின்னர் ராஜ கோபுரம் வழியாகப் பிரதட்சணம் செய்து, பூத்தட்டுகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். கோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது.

வேண்டுவோரின் துயர் தீர்த்து, நோய் தீர்த்து வழியனுப்பும் இந்த மாரியம்மனின் கருணை எல்லையில்லாதது. அன்போடு, உரிமையோடு இவளைக் கண்டிக்கும் எளிய பக்தர்களை இன்றும் நாம் சந்நிதியில் காணலாம். இவள் எளிய மக்களின் காவல் தெய்வமாக, நீதி வழங்கும் நீதி தேவதையாக, எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்லும் பேரரசியாக எப்போதும் துணையிருக்கிறாள். 

நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் பெருகி வழிந்தோடும் இந்த ஆலயத்தில், அம்மன் உறங்குவதே இல்லை. நடுஇரவிலும் இவள் நகர்வலம் வந்து பக்தர்களைக் காக்கிறாள். மூடா விழிகளுக்குச் சொந்தக்காரியான இந்த மகமாயி, எல்லோருக்கும் எப்போதும் காவல் இருப்பாள் என்பது சத்தியம். சமயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம். இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு ‘மாரி தீர்த்தம்’ என்று பெயர். 

தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம். குழந்தைப்பேறின்மை, தொழில் பிரச்னை, ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் சமயபுர மகமாயியை தரிசித்தால், அவள் கண்டிப்பாக பலன் தருவாள் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

இங்குள்ள அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள். இந்த மாரியம்மனை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதாகவும், அருகில் உள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன. உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.

"கண்ணபுரத் தெல்லையிலே காவல்கொண்ட மாரியரே, திக்கெல்லாம் பேர்படைத்த தேசமுத்து மாரியரே, மக்க பசிதீர்க்க பச்ச பட்டினிதான் நீ கிடந்தே, மாநிலம் நோய் தீர்க்க மகராசி பழி கிடந்தே..." எங்கோ ஒலித்த பாடலைக் கேட்கக் கேட்க நம்முள் ஒரு பரவசம் கூடியது. கண்ணீர் பெருகியது. 'தாயே நீ இருக்கக் குறையேது; உன் நிழலிருக்கத் தளர்வேது' என்று வணங்கி விடைபெற்றோம்.