Published:Updated:

ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்

பரிதாப நிலையில் பாதாளேஸ்வரர்!எஸ்.கண்ணன்கோபாலன்

ஆலயம் தேடுவோம்

பரிதாப நிலையில் பாதாளேஸ்வரர்!எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:
ஆலயம் தேடுவோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்
ஆலயம் தேடுவோம்

யிலைநாயகன் கொண்ட எண்ணற்ற வடிவங்களில் தனிச் சிறப்பு கொண்ட வடிவம் உமாமகேஸ்வர வடிவம். ஐயன் தன் சக்தியுடன் இணைந்திருக்கும் அருட்கோலம்தான் உமாமகேஸ்வர திருக்கோலம். ஐயன் இந்த அழகு திருக்கோலத்தில் அருட்காட்சி தந்து, கோடானுகோடி பக்தர்களின் கொடுவினைகள் எல்லாம் போக்கி, அவர்தம் வாழ்வில் எண்ணற்ற நன்மைகள் அருளிய திருத்தலம்தான், இதோ நாம் இப்போது தரிசித்துக் கொண்டிருக்கிறோமே, இந்த உமாமகேஸ்வரர் திருக்கோயில்.

திருக்கோயில் என்று நாம் குறிப்பிட்டாலும், புதர் மண்டி மிகவும் சிதிலம் அடைந்திருக்கும் ஒரு கோபுரத்தைதான் நம்மால் இங்கே தரிசிக்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தக் கோயிலும்கூட உமா மகேஸ்வரருக்கான கோயில் இல்லையாம். நாம் தரிசித்துக் கொண்டிருப்பது பாதாளேஸ்வரர் ஆலயமாம். எனில், உமாமகேஸ்வரர் கோயில் என்ன ஆனது?

அந்தக் கொடுமையைக் கேட்டபோது, நம் நெஞ்சமே பதறித் துடித்தது. ஆம், நம்மை அடிமைப்படுத்தி ஆளவந்த அந்நிய தேசத்தவர்கள், தங்களின் போக்குவரத்து வசதிக்காக இங்கிருந்த உமாமகேஸ்வரர் திருக்கோயிலை இடித்துவிட்டு, ரயில் பாதை அமைத்துவிட்டனராம். காலம் காலமாய் பக்தர்களுக்கு அருள்புரிந்த ஐயனின் திருக்கோயிலை இடிப்பதற்கு அவர்களுக்கு எப்படித்தான் மனம் துணிந்ததோ?

உமாமகேஸ்வரர் திருக்கோயி லுக்குத்தான் இந்த நிலை என்றால், அருகிலேயே இருக்கும் மங்களநாயகி சமேத ஐயன் பாதாளேஸ்வரரின் திருக்கோயிலும் கவனிப்பார் இல்லாமல், காலப்போக்கில் சிதிலம் அடைந்துவிட்டது. இப்போது இந்தப் பாதாளேஸ்வரர் திருக்கோயிலில்தான் உமா மகேஸ்வரர் திருக்கோயிலின் தெய்வ விக்கிரஹங்களும் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஐயனின் எழிலார்ந்த உமா மகேஸ்வரர் விக்கிரஹம் மட்டும் சிதைக்கப்பட்டு விட்டதாம். இந்தக் கொடுமையைக் கேட்டபோது, நம் கண்களிலிருந்து நீர் பெருக்கெடுப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஐயனின் வடிவங்களிலேயே அதி அற்புதமான அழகு வடிவம் உமாமகேஸ்வர வடிவம். ஐயனின் அருட்சக்தியாக விளங்கும் அன்னை உமையவள், ஐயனை அன்பு கனியப் பார்த்திருக்கும் திருக்கோலமே உமாமகேஸ்வர திருக்கோலம். இப்படி ஓர் அற்புத திருக்கோலத்தை சிதைத்தவர்களுக்கும் சரி, சிதைக்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் சரி... அன்பும் பக்தியும் மட்டுமல்ல, ரசனையும்கூட அறவே இருந்தி ருக்காது போலும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆலயம் தேடுவோம்

உமாமகேஸ்வரபுரம் என்னும் இந்த உன்னதமான தலம், பஞ்சகூடத் தலங்கள் என்று போற்றப்பெறும் திருநாட்டியத்தான்குடி, திரு நமசிவாயபுரம், திருக்காறாயில், திருநெல்லிக்காவல், திருத்தங்கூர் ஆகிய ஐந்து தலங்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. இங்கே அருள் புரியும் மங்களாம்பிகை சமேத பாதாளேஸ்வரரும், முற்றிலும் சிதைக்கப்பட்ட உமாமகேஸ்வரர் கோயிலில் இருந்து இங்கு கொண்டு வைக்கப்பட்டிருக்கும் தெய்வமூர்த்தங்களும் அத்தனை எழிலுடன் அழகாகக் காட்சி தருகின்றனர்.

கோயிலின் சிறப்புகளைப் பற்றி ஆலய அர்ச்சகர் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.

‘‘இங்குள்ள பாதாளேஸ்வரர் மிகுந்த வரப்பிரசாதி. பித்ரு தோஷத்தைப் போக்கி அருள்பவர். அமாவாசையன்று இங்கு வந்து, ஆலயத்துக்கு எதிரில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி, நெய் தீபம் ஏற்றி பாதாளேஸ்வரரை வழிபட்டால், பித்ரு தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம். ஒருகாலத்தில் பித்ருக்களுக்குத் திதி கொடுக்கத் தவறியவர்கள், மகாளய அமாவாசையன்று இங்கு வந்து சூரிய தீர்த்தத்தில் நீராடி, கோயிலில் நடைபெறும் யாக வழிபாட்டில் கலந்துகொண்டு, பித்ரு வழிபாடு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. பின்னாளில், கோயில் சிதிலம் அடைந்துவிடவே, தற்போது பித்ரு வழிபாடு செய்ய வழியில்லாமல் இருக்கிறது.

சந்திரா நதியின் கரையில் இருந்த உமா மகேஸ்வரர் கோயிலும் ஒருகாலத்தில் பூரண சாந்நித்தியத்துடன் இருந்தது. அக்காலத்தில் திருமணம் தடைப்பட்டு வந்தவர்கள், கார்த்திகை மாத பௌர்ணமி அன்று விரதம் இருந்து, உமா மகேஸ்வரரை வழிபட்டனர் என்றும், அதன் பயனாக அவர்களுக்குத் திருமணம் கைகூடிய தாகவும், அதேபோல் மன வேற்றுமை காரணமாகப் பிரிந்திருத தம்பதியர்கள் இங்கே விரதம் இருந்து ஒன்று சேர்ந்தார்கள் என்றும் ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள்’’ என்றார்.

அவர் சொன்ன அத்தனை உன்னதங்களும் இன்றைக்குப் பழங்கனவாகப் போனதுதான் நம்மைப் பெரிதும் கலங்கச் செய்கிறது.

ஆலயம் தேடுவோம்

நம்முடைய கலக்கத்தைப் போக்கவும், ஆலயம் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரியவும் திருவுள்ளம் கொண்டதுபோல், ஊர்மக்களின் மனங்களில் பிரவேசித்து, தனக்கோர் ஆலயம் அமைத்திடும் எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார் ஐயன். ஆம், ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் அந்த ஊரைச் சேர்ந்த தண்டபாணி என்ற அன்பர் தற்போது கோயில் திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரிடம் பேசினோம்.

‘‘இந்தக் கோயில் எத்தனையோ வருஷமா இப்படித்தான் இருக்கு. பழைமையான இந்தக் கோயிலை இப்படியே இன்னும் எத்தனை வருஷத்துக்குதான் பாழ் நிலையில் வச்சிருக்கிறதுன்னு நினைச்சுத்தான், ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து திருப்பணி ஆரம்பிச்சிருக்கோம். கடந்த மாசம்தான் பாலாலயம் செஞ்சோம். கும்பகோணத்தில் இருக்கும் திருவடிக்குடில் சுவாமி வந்திருந்தாங்க. ஏதோ ஒரு நம்பிக்கையில நாங்க திருப்பணி யில் இறங்கிட்டோம். இந்த ஊர்ல இருக்கிற எல்லோருமே நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவங்க தான்; அதனால, அவங்க தங்களோட உழைப்பை தான் ஆத்மார்த்தமா கொடுக்க முடியுமே தவிர, திருப்பணிகளுக்கான பண வசதி வெளியில இருந்துதான் வரணும். எங்களோட இந்த முயற்சி நல்லபடியா நிறைவேற பாதாளேஸ்வரரும் உமா மகேஸ்வரரும்தான் கருணை காட்டவேண்டும்’’ என்றார்.

இத்தனைக்கும் இந்தக் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதும், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ஒருவேளை பூஜை நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பாரம்பர்யப் பெருமைகள் கொண்ட இந்தக் கோயிலைப் புனரமைக்க அறநிலையத் துறை முன்வராதது ஏன் என்ற கேள்விக்கு நமக்கு விடை தெரியவில்லை.

எனினும், சிதிலம் அடைந்திருக்கும் இந்தக் கோயிலை ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து புதுப்பிக்க முன்வந்திருக்கும் அவர்களின் நல்ல முயற்சி வெற்றி பெற்று, திருக்கோயில் திருப்பணிகள் நல்லபடியாக நிறைவேறி, இங்கே வந்து வழிபடும் பக்தர்கள் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ ஐயன் உமாமகேஸ்வரரும், ஐயன் பாதாளேஸ்வரரும்தான் அருள்புரியவேண்டும்.

ஆலயம் தேடுவோம்

ஊர்மக்களின் இந்த உன்னதமான முயற்சி நல்லபடி நிறைவேற வேண்டுமானால், இந்துசமய அறநிலையத் துறையின் ஒத்துழைப்பு மட்டுமல்ல; பக்தர்களின் பங்களிப்பும் இருந்தால்தானே சாத்தியமாகும்?

ஐயன் பாதாளேஸ்வரரும், அழகே வடிவான அருளின் பொருளான ஐயன் உமாமகேஸ்வரரும் விரைவிலேயே எழிலார்ந்த சந்நிதியில் எழுந்தருள, நாமும் நம்மால் இயன்ற நிதியுதவி செய்வோம். ‘அரியானும் அந்தணர்தம் சிந்தையுளானும், அருமறைகளினுள் உள்ளானும், தெரியாத தத்துவனும், தேனாகவும், பாலாகவும், திகழொளி யாகவும் திகழ்பவ’னும் என்று நாவுக்கரசர் போற்றும் நாயகன் தன் அருள் நமக்களித்து என்றும் நம்மைக் காப்பான் என்பது உறுதி.

படங்கள்: க.சதீஷ்குமார்

எங்கு இருக்கிறது..? எப்படிச் செல்வது..?

திருவாரூருக்குத் தெற்கில் சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் உமா மகேஸ்வரபுரத் துக்குச் செல்ல திருவாரூரில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.