
அருட்களஞ்சியம்

கொடியேற்றம்
ஆலயங்கள்தோறும் கம்பீரமாகக் காட்சி தரும் துவஜஸ்தம்பம் ஆலயத்தின் முக்கிய அங்கங்களில் ஒன்று. ஒவ்வோர் ஆலயத்திலும் அங்கு கோயில் கொண்டுள்ள தெய்வத்தின் சாந்நியத்துக்கு உரிய புனித பூமி, துவஜ ஸ்தம்பத்திலிருந்து கர்ப்பக்கிருஹம் வரை வியாபித்துள்ளது. அந்தப் புனித பூமியில் தெய்வ தரிசனத்துக்காக நுழையும்போது, ‘இங்கே புனித பூமி தொடங்குகிறது; ஆசார நியமத்துடன் செல்லுங்கள்’ என்பதை உணர்த்துவதே கொடிமரம் நிறுவப்பட்டிருப்பதன் முக்கிய நோக்கம்.
வேத காலத்திலேயே கொடியை உபயோகிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. கொடிகள் துவஜம் என்றழைக்கப்பட்டு வந்தன. போரை வருணிக்கும் இடங்களில் மட்டுமே ‘துவஜம்’ குறிப்பிடப்படுவதால், அக்காலத்தில் அரசர்களின் முக்கிய சின்னங்களில் ஒன்றாக கொடி கருதப்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. அரசு சின்னமான கொடியை அவமதித்தால், நூறு வெள்ளி நாணயங்கள் அபராதம் விதிக்க வேண்டும் என்று மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது.
நீண்டுயர்ந்து காணப்படும் கொடிமரத்தில் பல கணுக்கள் உண்டு. முப்பத்து மூன்று கணுக்க ளுடன் அமைக்கப்பட்டிருக்கும் கொடிமரம் உத்தம துவஜஸ்தம்பமாகும். அதற்குக் குறைவான கணுக்களை உடையது மத்திம வகையைச் சேர்ந்தது. சில்ப சாஸ்திர நூல்களிலும், ஆகமங் களிலும் துவஜஸ்தம்பத்துக்கு ‘வீணா தண்டம்’ என்றும், ‘மேரு தண்டம்’ என்றும் பெயருண்டு.
ஆலயங்களில் உற்சவ காலங்களில் கொடியேற் றுவது ஒரு முக்கிய நிகழ்ச்சி. இது துவஜாரோகணம் எனப்படுகிறது. சிவாகமங்களின்படி, கொடி ஏற்றுவது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து மேல் ஏறி, ஆறு ஆதாரங்களைக் கடந்து சகஸ்ராரத்தை அடைவதைக் குறிக்கிறது. இந்நிலை ‘சாதாக்கிய நிலை’ எனப்படுகிறது. இங்கேதான் சிவசக்திகள் ஐக்கியப்பட்டு அமிர்தம் வர்ஷிக்கிறது.
** 1969 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...
கொடிக்கவி
மெய்க்கண்ட சாத்திரங்களில் ‘கொடிக் கவி’ ஒன்றாகும். அதனை அருளியவர் உமாபதிசிவம். சிதம்பரம் நடராஜப் பெருமானுக்குத் திருவாதிரை விழாவின்போது கொடியேற்றிய சமயத்தில் அவர் -
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம்
ஒன்று மேலிடில் ஒன்று
ஒளிக்கும் எனினும் இருள்
அடராது உள் உயிருக்கு உயிராய்த் தெளிக்கும் அறிவு திகழ்ந்துள
தேனுந்திரி மலத்தே
குளிக்கும் உயிர் அருள்
கூடும்படிக் கொடி கட்டினனே.
என்று பாடிப் பரவசப்பட்டிருக்கிறார்.
இதன் கருத்து: உயிர்களுக்கு பெத்தம் (பாசம் அல்லது கட்டுப்பாடு) முத்தி என்ற நிலைகள் உண்டு. பெத்த நிலையில் இருளாகிய ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களில் உயிர் மூழ்கி, ஞான ஒளியாகிய இறைவனை உணராது விளங்கும். முக்தி நிலையில் உயிர், மும்மலங்களிலிருந்து நீங்கி, இறைவனோடு ஒன்றி நின்று, இறைவன் அருளைப் பெறுவதேயாகும்.

ஓவியங்கள்: சித்ரலேகா
இளவரசியின் தஸ்தாவேஜு
மனைவி காலில் விழுந்த சக்ரவர்த்தி எழுந்து அவள் முகம் பார்த்து, ‘‘அம்மா! நீ ஏன் பழிக்கு உள்ளாக வேணும்? உன் மகன் பரதன்தான் இணங்கப் போகிறானா? அவன் இணங்கினாலும் உலகம் ஒப்புக்கொள்ளுமா?” என்றெல்லாம் மிகவும் பரிந்து வேண்டிக்கொள்கிறார்.
என்ன கெஞ்சியும் கொஞ்சியும், வண்மைக் கைகேயி, ‘‘உம்மைப் போல் உண்மையுடையவர் இனி இந்தப் பூமண்டலத்திலே வேறு ஒருவரும் இல்லை!” என்று ஏளனமாய்த்தான் பதில் சொல்கிறாள்:
‘’என்னே? மன்னா!
யார்உளர் வாய்மைக்(கு)
இனி?” என்றாள்.
“கொடுத்த வரத்தை ‘வேண்டாம் என்று சொல்லிவிடு, கண்ணே! பெண்ணே’ என்று என்னிடம் கொஞ்சுகிறீர். இது புத்திசாலித்தனமாக இருக்கலாம்; ஆனால் இது ஆண்மையா? அறமா? சத்தியந்தானா?” என்று பரிகசிக்கிறாள்.
சக்ரவர்த்தியின் கடைசி பிரார்த்தனை
‘‘நின்மகன் ஆள்வான்;
நீ இனி(து) ஆள்வாய்!
நிலமெல்லாம்
உன்வயம் ஆமே,
ஆளுதி, தந்தேன்,
உரைகுன்றேன்;
என்மகன், என்கண்,
என்உயிர், எல்லா
உயிர்கட்கும்
நன்மகன், இந்த
நாடிற வாமை
நய!” என்றான்.
‘‘பரதன் ஆண்டாலும் சரி, கைகேயி அம்மாள் தனக்கே முடிசூட்டிக்கொண்டு மகாராணியாக வீற்றிருந்து ஆட்சி செய்தாலும் சரி!” என்று கூடத் தசரதர் சொல்லிப் பார்த்தார். தமக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களுக்கும் ஸத்புத்திரனாக விளங்கும் ராமனுக்கு ராஜ்யம் வேண்டாம்; அவன் ராஜ்யத்தை விட்டு நீங்காமலிருக்க மாத்திரம் அருள் புரிய வேண்டும் என்று நயந்து வேண்டிக்கொண்டார்.
‘‘கண்மணியாகிய ராமன் என் கண் வட்டத்தை விட்டுப் போகலாமா? என் உயிரான ராமன் போய்விட்டால் நான் உயிரோடு இருப்பதுதான் எப்படி?” என்றெல்லாம் சொல்லி, ‘நங்காய்!’ என்று பரிதாபமான குரலில் பிரார்த்தனை செய்துகொண்டார் - ஏதோ ஒரு சக்தி வாய்ந்த துஷ்ட தேவதையை நோக்கிப் பிரார்த்தனை செய்துகொள்ளும் ஓர் உபாஸகனைப் போல.

“என் வரத்தைப் பெற்றால்தான் உயிரை வைத்திருப்பேன்; இல்லாவிட்டால் உயிரை மாய்த்துக் கொள்வது நிச்சயம்!” என்று பயமுறுத்துகிறாள் கைகேயி. உடனே, தசரதர் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு, ராமன் காதலையும் துறந்துவிட்டு, ‘‘வரத்தைக் கொடுத்தேன். கொடுத்தேன்” என்று கதறுகிறார். சூழ்ச்சி பலித்துவிட்டது. ஆம், கூனி சூழ்ச்சியும் கைகேயி சூழ்வினையும். விதியின் சூழ்ச்சியும்தான்!
‘நீந்து, நீந்து, உன் மகனோடும்!’
‘பரதன் நாடாள வேணும்; ராமன் காடாள வேணும்’ என்ற இரண்டு வரங்களையே கேட்டாள் கைகேயி. தசரதரோ அவளுக்கு மூன்று வரங்கள் கொடுக்கிறார்! முதல் வரம் தமது மகனான ராமன் வனம் ஆள்வான் என்பது. அடுத்த வரமாக, கைகேயி மகன் நாடாள்வான் என்று சொல்லிவிட்டாரா? அந்த மூன்றாவது வரம்தான் என்ன?
‘வீந்தா ளேஇவ்
வெய்யவள்!’ என்னா,
மிடல்வேந்தன்,
‘’ஈந்தேன். ஈந்தேன்
இவ்வரம்: என்சேய்
வனம் ஆள,
மாய்ந்தே நான்போய்
வானுல(கு) ஆள்வேன்!
வசைவெள்ளம்
நீந்தாய், நீந்தாய்
நின்மக னோடும்
நெடி(து)!” என்றான்.
‘சிங்காசனத்திலா இருக்கப்போகிறாய்? வசை வெள்ளத்தில் அல்லவா நீந்தித் துளைந்துகொண்டு இருக்கப்போகிறாய், உன் மகனோடு? அடி பாவி கைகேயீ!’ என்று அலறுகிறது தசரத ஹிருதயம். ‘‘இதற்காகவே கைகேயியும் இவள் மகனும் நீண்ட காலம் உயிரோடு இருக்க வேண்டுமாம்; வசை வெள்ளத்துக்குள்ளே சிரஞ்சீவியாய்க் கிடக்க வேண்டுமாம்.”
வாள் பாய்ந்தது ஹிருதயத்திலே
‘எவ்வளவு உயர்ந்த குணம் உள்ளவளாக இருந்த கைகேயி இப்படி வசைக்குள்ளாகிவிட்டாளே, இனி இவள் செத்தவள்தான்! சரி, இவள் எப்படியாகிலும் தொலைந்து போகட்டும்! படுபாவீ!’ என்றெல்லாம் கருதும் தசரதரின் ஹிருதயம், ‘இதோ பார், நீ கேட்ட வரத்தைக் கொடுத்துவிடுகிறேன் - இதோ கொடுத்துவிட்டேன்!’ என்று கதறுகிறது.

இப்படி வாய் விட்டு வரம் கொடுத்தாரோ இல்லையோ, உடனே பெருந்துயரம் வந்து இதயத்தில் வாள் போலப் பாய்கிறது. ‘‘ஆஹா! ராமன் காட்டுக் குப் போகிறான் - என் கண்! என் உயிர்! இந்தப் பாவி கைகேயியும், இவள் மகனான பரதனும் எத்தகைய பழிக்கெல்லாம் - எவ்வளவு இழிவான பழிக்கெல்லாம் உள்ளாகிறார்கள்!” என்ற துயரம் அது. இந்தத் துயர - வாள் விழுந்து நெஞ்சைப் பிளக்க, அறிவு மாய்ந்து, செயலும் மாய்ந்து, மூர்ச்சையாய்ப் போகிறார் தசரதர்.
உறக்கமும் வந்தது!
தன் காரியம் கைகூடுமோ என்று சலித்துக் கொண்டிருந்தது - ஒரே கவலை கொண்டிருந்தது - கைகேயி - சிந்தை, ‘ஈந்தேன் இவ்வரம்!’ என்று ஏதோ சாபம் கொடுத்தது போலத் தசரதர் சொன்னதே, கைகேயிக்குப் பரம திருப்தியைக் கொடுத்து விடுகிற தாம். உள்ளம் நிம்மதியாகி உறக்கமே வந்து விடுகிறதாம். கவலையில்லாமல் தூங்குகிறாள் கைகேயி. சக்ரவர்த்தியோ மூர்ச்சித்துக் கிடக்கிறார்.
ராமனுடைய நீண்ட கையில் புனிதமான மங்கல நாண் அணிவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். முடிசூட்டு விழாவை ஒட்டி விழா நடைபெறாத தால் அந்த மங்கல நாண் அணிவதற்கு முன்பே கொட்டகைப் பந்தலைப் பிரித்துவிடுகிறார்களாம்.இக்கருத்தை வைத்துக் கொண்டு கவிஞன்,
விரித்த பந்தர்பி -
ரித்த தாமென மீன்ஓ ளித்தன
வானமே
என்று எவ்வளவு உள்ள நெகிழ்ச்சியோடு கூறுகிறான்!
அந்தப்புரத்திலே - அமைதி குடிகொண்ட அந்த நள்ளிரவிலே - பட்டாபிஷேகத்துக்குக் கைகேயி இழைத்த இடையூறு, நகரவாசிகள் ஒருவரும் அறியாதது. அவர்கள், ‘எப்போது விடியும்? எப்போது ராமனது முடிசூட்டு விழாவைக் காண்போம்?’ என்ற பேராசையோடு காத்திருந்தார்கள்.
சூரியனுக்கும் கோபமா!
விடியற்காலத்திலே அரண்மனை விளக்குகள் எல்லாம் ஒளி மழுங்கி அணையும் நிலையில் இருக்கின்றன. அந்த விதமாகத் தசரத சக்ரவர்த்தியின் உயிரும் தேய்ந்து உடம்பும் ஜீவ ஒளியை இழந்து வருகிறதாம்:
வையம் ஏழும் ஓரேழும், ஆருயி-
ரோடு கூட வழங்கும்அம்
மெய்யன், வீரருள் வீரன், மாமகன்
மேல்வி ளைந்ததோர் காதலால்,
நைய நையநல் ஐம்பு லன்கள்
அவிந்(து) அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த சேயொளி
போல்,ம ழுங்கின தீபமே.
கைகேயி ராஜ்யத்தைத்தான் கேட்டாள்; தசரதரோ மகாராஜ்யத்தோடு தம்முடைய உயிரையும் அவளுக் குத் தத்தம் செய்துவிடுகிறாராம்.

இசை விருந்து
அந்த விடியற் காலத்திலே அயோத்தி எங்கும் ஒரே இசை விருந்துதான். ராம பட்டாபிஷேகம் நடைபெறப்போகும் மகா மங்கள தினம் அல்லவா. அத்தகைய தினத்தின் அதிகாலை வேளையை வேறு எவ்விதமாகத்தான் கொண்டாடுவது?
வங்கி யம்பல தேன்வி ளம்பின; வாணி முந்தின;
பாணியின்
பங்கி அம்பரம் எங்கும் விம்மின; பம்பை பம்பின; பல்வகைப்
பொங்கி யம்பல வும்க றங்கின; நூபு ரங்கள் புலம்ப, வெண்
சங்கி யம்பின; கொம்பலம்பின; சாம கீதம் நிரம்பவே.
மங்களகரமான வாத்திய கோஷங்கள் செவிகளை நிரப்புகின்றன. சந்திரோதயம் போல் முத்துக் குடைகள் ஜொலிக்க, இருபுறமும் வெண்சாமரை வீச, அரசர்கள் அந்தஸ்துக்கு ஏற்ற முறைப்படி பிரவேசிக்கிறார்கள். மற்ற ஜனங்களும் மிக்க மகிழ்ச்சியோடு மண்டபத்திலே வந்து கூடிய வண்ணமாயிருக்கிறார்கள்.
‘மாதவக் கிழவன் வந்தான்!’
திடீரென்று வாசலில் ஒரு பெரிய ஆரவாரம்: ‘விலகுங்கள், விலகுங்கள்’ என்று ஜன சமுத்திரத் தைக் கடைந்துகொண்டு வருகிறது ஒரு குழாம். எல்லாரும் பளிச்சென்று விலகி வெகு மரியாதையாக வழிவிடுகிறார்கள்; வழிபடுகிறார்கள்.
ஆம்; வேத கோஷம் முழங்க வருகிறாரே அந்த ‘மாதவக் கிழவர்’, அவர் ஸாக்ஷாத் வசிஷ்ட மகரிஷிதான். அவர் மண்டபத்துக்குள் வந்ததும் பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய சாமக்கிரியைகளை யெல்லாம் சித்தஞ் செய்து வைக்கிறார்:
கங்கையே முதல ஆகக் கன்னியீ றான தீர்த்தம்
மங்கலப் புனலும், நாலு வாரியின் நீரும் பூரித்(து)
அங்கியின் வினையிற்(கு) ஏற்ற யாவையும் அமைத்து, வீரச்
சிங்கஆ தனமும் வைத்துச், செய்வன பிறவும் செய்தான்.
கங்கா தீர்த்தம் முதல் கன்னியாகுமரி தீர்த்தம் வரையுள்ள புண்ணிய தீர்த்தங்களையெல்லாம் கும்பங்களில் நிறைத்து வைத்தார் வசிஷ்டர். ஹோமத்துக்கு வேண்டிய சமித்துக்கள் முதலியவற் றையும் தயாராக வைத்துக்கொண்டார். வீர ராமனை வீற்றிருக்கச் செய்து பட்டாபிஷேகம் செய்வதற்கு வீர சிம்மாஸனமும் தயாராக வைக்கப்பட்டிருந்தது. இன்னும் செய்யவேண்டிய காரியங்களையும் சர்வ ஜாக்கிரதையாகச் செய்து தம் அருமந்த சிஷ்யனான ராமனுக்கு முடிசூட்டிப் பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தார் முனிவர் பெருமான்.
** 28.7.46, 4.8.46, 11.8.46, 18.8.46 மற்றும் 8.9.46 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...