Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்
முன்னோர்கள் சொன்னார்கள்

ழாம் பாவத்துக்கு அதிபன், பாவ கிரகத்தின் (அசுப கிரகம் - வெப்ப கிரகம்) பார்வை பட்டிருந்தால் (7-வது பார்வை), அந்த ஜாதகரின் (ஆணானாலும் பெண்ணானாலும்) மனம் விக்ஷேபத்தை அடைந்து (நிலை தடுமாறி), வேறு புருஷன் அல்லது வேறு பெண்ணிடம் ஆர்வம் ஏற்பட்டு, அதன் விளைவாக தனது தரத்தைத் தாழ்த்திக்கொள்வார் என்கிறது ஜோதிடம்.

7-ம் பாவத்தில் அமர்ந்த கிரகத்தைக் குறிப்பிடாமல், அந்த பாவத்துக்கு உடையவனின் தகுதியில் இந்த விபரீதத்தைக் குறிப்பிடுகிறது ஜோதிடம். 7-க்கு உடையவனின் தகுதிதான் தாம்பத்தியத்தின் சிறப்புக்கு முக்கிய காரணமாக மாறுகிறது. அவனுக்கு அசுப கிரகத்தின் பார்வை பட்டால், அதன் தாக்கத்தில் நிலைகுலைந்து மனம் தடுமாறி, சூழலை மறந்து மாற்றுக் கணவனையும் மாற்று மனைவியையும் ஏற்கத் துணிந்து விடும். பண்டைய கலாசாரம் அதை ‘வ்யபிசாரம்’  என்ற பெயரில் அறிமுகம் செய்யும். அது, பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் இழுக்குதான். மனமுவந்து ஏற்ற தாம்பத்தியத்தின் பெருமையைத் தக்கவைக்க இயலாமல், இரு குடும்பங்களுக்கு ஊறு விளைவிப்பதையும் மறந்து, விருப்பத்துக்கு இணங்க தவறான பாதையை மனம் ஏற்றுக்கொண்டுவிடும். அற வழியிலான ஆர்வத்தை அழித்து, சுயநல ஆர்வத்தை நிறைவேற்றிக் கொண்டு விடும். இந்த நிலை இரண்டு குடும்பங்களின் சீரழிவுக்கு வித்திடும்.

வ்யபிசாரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு சட்டதிட்டத்துக்கும், பண்புக்கும் உட்படாமல், விருப்பத்துக்கு அதாவது சுயநலத்துக்கு முன்னுரிமை அளித்து சமுதாய நோக்கில் தரம் தாழ்த்திக் கொள்வது என்ற பொருளும் உண்டு. கணவன் சட்டப்படி தனக்கு வாய்த்த மனைவியையோ அல்லது மனைவியானவள் தனது கணவனையோ அலட்சியப்படுத்தி, சட்டத்துக்குப் புறம்பாக தனது வேட்கையைத் தணித்துக்கொள்வது தகாத செயல். இதையே ‘வ்யபிசாரம்’ என்கிறது ஜோதிடம். பண்பை போதித்து வ்யபிசாரத்திலிருந்து விலக வைப்பதில் தோல்வியுற்ற சமுதாயம், அதை சட்டமாக்கி வெற்றியாக மாற்றிக்கொண்டு விட்டது. வீடு, வாகனம் போன்ற நுகர்பொருள்களை மாற்றுவது போல், தாம்பத்தியத்தைத் தரம் தாழ்த்தி விருப்பப்படி தாம்பத்தியத்தை முறித்துக் கொள்ளவும், இணைத்துக் கொள்ளவும் உரிமை அளித்து விட்டது. தடுமாற்றத்தை சந்தித்த மனம் (விேக்ஷபம்) சட்டத்தை மீறத் துணிந்துவிடுகிறது.

7-க்கு உடையவன் தாம்பத்தியத்தை வரையறுப்பவன். அவன் பாப கிரகத்தின் பார்வையோடு (7-ம் பார்வை) இணைந்த நிலையில், அந்த கிரகத்தின் தாக்கத்தில் மனம் தடுமாறி, திசை திரும்பி சட்டத்தை மீறியாவது வேட்கையைத் தணித்துக் கொள்ளத் துணிவான் என்கிறது ஜோதிடம். 7க்கு உடையவன் ராகு அல்லது கேதுவோடு இணைந்திருந்தாலும், மனத் தடுமாற்றம் ஏற்பட்டு வ்யபிசாரத்தைத் தழுவுவான். 7-க்கு உடையவன் ராகுவுடன் இணைந்தால், அதன் ஏழில் கேது தென்படுவான்; கேதுவோடு இணைந்தால், அதன் ஏழில் ராகு தென்படுவான். சந்திரனின் ‘பாதம்’தான் ராகுவின் குறியீடு. ஆரம்பம் ராகு. அதன் முடிவின் குறியீடு கேது. கணிதப்படி அவை இரண்டு கிரகங்கள் அல்ல; ஒன்றுதான். ‘பாதத்தின்’ ஆரம்பம் தலை- அது ராகு; முடிவு கேது. அதைப் பாம்பாக உருவகப்படுத்தினால் தலை ராகு, வால் கேது என்று சொல்லலாம். நடைமுறையில் தலையை ராகு என்றும் வாலை கேது என்றும் படம் போட்டு வெளிப்படுத்துகிறோம்.

ராகு ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு அடியெடுத்து வைக்கும்போது கேதுவும் தானாகவே வேறு ராசிக்கு நகர்ந்து விடுவான். தலையிருக்க வால் ஆடாது! தலையின் அசைவுக்கு உகந்தபடிதான் வால் ஆடும். இதிலிருந்து அவை இரண்டு இல்லை, ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைய புது ஜோதிட பிரபலங்கள் ராகுப் பெயர்ச்சிக்கு பரிகாரம் சொல்ல முற்படும் வேளையில், கேதுப் பெயர்ச்சியையும் இணைத்துக் கொள்கிறார்கள். பாம்பு தலை மனித உடம்பு, மனிதத் தலை பாம்பின் உடம்பு இப்படி இரண்டு வகையான உடலமைப்பை ஏற்படுத்தி விளக்கும் பிரபலங்கள், அதற்கான சான்றினை தருவது இல்லை. ஏனெனில், அவர்களது விளக்கம்தான் சான்று!

ஜோதிடத்தில் (கணிதம்) அதற்குச் சான்று கிடையாது. ராகு-கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று, மற்ற கிரகங்களைவிட வேறுபடுத்திக் கூறும் ஜோதிடம் (கணிதம்). 12 வீடுகளில் (ராசிகளில்) அவர்கள் இருவருக்கும் இடம் இல்லை. அதை வைத்து வரும் தகுதியும் இல்லை என்று பலன் சொல்லும் பிரபலங்களும் விளக்குவார்கள். இப்படி மாறுபட்ட சிந்தனையில் பலன் சொல்லும் பிரபலங்கள் இன்றைக்கு பெருகிவிட்டார்கள். முறையாக ஜோதிடத்தையும், பலம் சொல்லும் பகுதியையும் கற்றுத் திறமையை வளர்த்துக் கொள்ள இயலாமல், செவி வழித் தகவல்கள் மற்றும் தங்களின் சொந்த அனுபவங்களை வைத்து பலன் சொல்ல முற்படும் பிரபலங்களும் தென்படுகிறார்கள். அவர்களது முடிவு பல பக்கவிளைவுகளை உண்டு பண்ணி விடுகிறது. அது அப்பாவி மக்களை பாதிப்பது அவர்களது துரதிர்ஷ்டம்.

10-ம் வீட்டுக்கு உடையவன், இரண்டுக்கு அதிபதி, 7-க்கு உடையவன் ஆகிய மூவரும் சேர்ந்து பத்தாம் வீட்டில் இருந்தால், அவளுக்கு கணவனைத் தவிர மாற்றான் ஒருவரது தொடர்பு இருக்கும் என்கிறது ஜோதிடம். 2-குடும்பத்தைக் குறிக்கும், 7-மனைவி, 10- கர்ம வினையின் செயல்பாடு.

10-க்கு உடையவனுடன் இந்த இருவரது (2, 7) இணைப்பு மாற்றானின் தொடர்பில் குழந்தையை ஈன்றெடுக்கும் அளவு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லும் ஜோதிடம் இரண்டின் அதிபதி, ஏழாம் வீட்டின் அதிபதிக்கு ஆறுக்கு உடையவனாக மாறிவிடுகிறான். 7-ன் அதிபதி இரண்டாம் வீட்டின் அதிபதிக்கு எட்டுக்கு உடையவனாக மாறிவிடுகிறான். அதற்குக் காரணம் ‘2-ன் 7’ ஆறாம் வீடு, ‘7-ன் 2’ எட்டாம் வீடு. இவர்கள் ஒன்றுக்கொன்று பகையாக 10-ம் வீட்டில் சேரும்போது விபரீத பலனை ஏற்படுத்திவிடுகிறார்கள். 10-க்கு  இரண்டாம் வீடு 4 (அதாவது கேந்திரம்). 2-க்கு பத்தாம் வீடு 9 (த்ரிகோணம்). அவர்கள் இருவரும் நெருங்கிய தொடர்பில் கர்மவினையை செயல்படுத்தும் தகுதியைப் பெறுகிறார்கள். ஆனால் 2-ம், 7-ம் பகைவர்களாக மாறியதால், கர்ம வினையின் தரம் விபரீத வினைக்குக் காரணமாக மாறிவிடுகிறது.

முன்னோர்கள் சொன்னார்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐந்துக்கு உடையவனோ, ஏழுக்கு உடையவனோ, ஆறாம் பாவாதிபதியுடன் இணைந்தாலோ, பார்த்தாலோ... அதே வேளையில் ஒரு சுபகிரகத்தின் பார்வை ஏற்பட்டாலோ, மாற்றான் வாயிலாக குழந்தையை ஈன்றெடுப்பாள் என்கிறது ஜோதிடம் (புத்ரேச்வரே தாரபதெளபலாட்யே...). 5-அவன் அல்லது அவளது சிந்தனையின் தரம். 7-அவன் அல்லது அவளின் தாம்பத்திய அளவு. ஆறாம் பாவாதிபதி அவர்களது சிந்தனையை திசை திருப்புபவன். சுப கிரகத்தின் பார்வை அந்த பாவத்தின் (5 - ம் பாவம்) நிறைவை (குழந்தையின் பிறப்பை) நடைமுறைப்படுத்துகிறது. மாற்றானின் இணைப்பில் தாம்பத்திய சுகத்தின் நிறைவை சந்திக்கவைப்பது சுப கிரகத்தின் பார்வை. குழந்தை உருவாவதுதான் தாம்பத்தியத்தின் நிறைவுக்கு அறிகுறி.

வெளிப்படையாகவும், திரைமறைவிலும் மாற்றான் தொடர்பு தென்படுவதை உணர்கிறோம். குழந்தையின்மையால் விவாகரத்தைச் சந்தித்த பலர், மாற்றான் மனைவியிடமும், கணவனிடமும் குழந்தை பெற்றது உண்டு. முதல் கணவனிடமும், முதல் மனைவியிடமும் குழந்தையைப் பெற இயலாதவர்கள், விவாகரத்துக்குப் பிறகு ஏற்கும் கணவன் அல்லது  மனைவியிடம் குழந்தையைப் பெறுவது உண்டு. விந்து வங்கி வாயிலாக செயற்கை முறையில் குழந்தையைப் பெற்றவர்களில் பலர், மாற்றானின் விந்துவின் சந்திப்பில் உருவான குழந்தையை ஏற்கிறார்கள். புதுக் கலாசாரம் எந்த வழியிலாவது குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் போதும் என்கிற முடிவை ஏற்கிறது. அவர்கள் இருவரது ஆர்வம்தான் புது கலாசாரத்தின் ஊற்றாக மாறியிருக்கிறது.

படிப்பு, வேலை ஆகியன விருப்பப்படி அமையாவிட்டாலும், கிடைத்ததை ஏற்று திருப்திப்பட்டு, அதில் முன்னேற ஊக்கத்தை  வளர்க்கும் பக்குவம் தென்படுகிறது. அதே அளவுகோலை தாம்பத்தியத்தில் கடைப்பிடிப்பது இல்லை. பார்த்துப் பேசி, பழகித் தேர்ந்தெடுத்து, தாம்பத்தியத்தில் இணைந்து, பிறகு மனத் தடுமாற்றத்தால் கணவனை அல்லது மனைவியை மாற்றும் எண்ணம் தென்படுவது மனதின் விஷேபத்தை (தடுமாற்றத்தை) உறுதி செய்கிறது. தாம்பத்தியத்தில் இணைக்க இருவரது மனப்போக்குதான் அளவுகோலாகச் செயல்படுகிறது. ஆகவே, மனதை ஆராயாமல் 10 பொருத்தங்களைக் கையாண்டு இணை சேர்க்கும் எண்ணம் ஜோதிட பிரபலங்களுக்கு வரக்கூடாது.இருவரது மனதில் உதிக்கும் சிந்தனையின் செயல்பாடுதான் அவர்களது கர்மவினையின் அடையாளம். கர்மவினை எப்படி செயல்வடிவம் பெறுகிறது என்பதை ஜாதகத்தில் அமைந்த கிரகங்களின் தரம் சுட்டிக்காட்டுகிறது.

இன்றையச் சூழலில், ஜோதிட பிரபலங்கள் பலரும் பஞ்சாங்கத்தில் தென்படும் பொருத்தப் பட்டியலை வைத்து முடிவெடுப்பதால், செழிப்பான வாழ்க்கைக்குப் பரிந்துரைக்கும் தகவல்கள் அனைத்தும் வீணாகிவிடுகிறது. இருவரின் மனதை ஆராயாமல் எடுக்கப்படும் எந்த முடிவும் ஜோதிடத்துக்கு உட்பட்டதாக ஆகாது. சின்னத்திரையிலும், திருமண மையங் களிலும், பொதுச் சொற்பொழிவுகளிலும் இணைந்த இன்றைய புது பிரபலங்களில் பலர், பொருத்தத்தில் ஏற்படும் விபரீதங்களுக்கு, புராணத் தகவல்களையும், கோயில்களின் சிறப்பையும் வைத்து பரிகாரங்களை சுயமாக விளக்கி, முடிவை ஏற்கவைக்கிறார்கள். அவர்களது முடிவு ஜோதிடத்துக்குப் புறம்பானது. ஆற அமர சிந்தனை செய்து முடிவை எட்ட வேண்டியவர்கள், கோயிலை யும், தீர்த்தங்களையும், புராணத் தகவல்களையும் முடிவுக்குச் சாதகமாக்குவது தகாது. மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, ஜோதிட விளக்கமாக தனது கருத்தை வெளியிடுவது மக்கள் சேவை ஆகாது.

ஒரு பக்கம் ஜோதிடம் மூடநம்பிக்கை என்று விளக்கப் படுவதும், மறுபக்கம் ஜோதிடத்துக்கு தொடர்பில்லாத விஷயங்களை ஜோதிடத் தகவலாக ஏற்கவைப்பதும் அதர்மமாகும். எந்தச் செயல்பாடும் மனதின் தொடர்பிலேயே நிகழும். மனம், அதன் சிந்தனை, அதன் தரம் இவற்றுக்குத் தொடர்பில்லாத எந்தச் செயல்பாழும் முழுமை பெறாது. அப்படியிருக்க, பஞ்சாங்கத்தில் தென்படும் அட்டவணையை நம்பி முடிவு கூறுவது தகாத செயல். பஞ்சாங்கத்தில் தென்படும் பத்து பொருத்தங்களுக்கு சான்று இருக்காது. சான்றில்லாத விளக்கமும் மூட நம்பிக்கையில் அடங்கும். ஜோதிடத்தை மூட நம்பிக்கை என்று பறை சாற்றியவர்களில் பலரும், பத்துப் பொருத்தத்தை (சான்றில்லாத பொருத்தம் - மூடநம்பிக்கை) ஏற்று, மூடநம்பிக்கையை நல்ல நம்பிக்கையாக மக்களை ஏற்கவைப்பது தகாது.

ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பில் விளையும் அத்தனைத் தகவல்களும், அவர்களது சிந்தனையோட்டத்தை வரையறுக்கும். பிரபலங் களின் ஆராய்ச்சி அவர்கள் சிந்தனையோட்டத்தில் முற்றுப் பெற வேண்டும். மன வளம், அதன் தரம், சிந்தனையில் ஏற்படும் மாறுபட்ட நிலைகள் ஆகிய அனைத்தையும் ஆராய்வது பிரபலங்களின் கடமையாகும். சம்ஸ்கிருத இலக்கியங்களில் மன வளத்தை விளக்கும் தகவல்கள் நிரம்பியிருக்கும். யோகவாசிஷ்டம் போன்ற நூல்கள் மனப்போக்கை முன்னிலைப்படுத்தி விளக்கம் அளிக்கும். ராமாயணத்தில் பல கதைகள் தென்பட்டாலும், ராமனைப் போல் வாழ வேண்டும்; ராவணனைப் போல் வாழக் கூடாது என்கிற விளக்கம்தான் அதன் கரு. வாழ்க்கையின் செழிப்புக்கும் இழுக்குக்கும் அவர்களது சிந்தனை தான் காரணம். கடவுள் பணிவிடை, குருவின் அருள் காரணமாகாது. இவை இரண்டும் செம்மையான சிந்தனைக்கு வழிகோலுமே தவிர பலனை ஈட்டித் தராது.

அறுசுவையை ரசிக்க நமது புலன்கள்தான் வேலை செய்ய வேண்டும். பணிவிடையோ அருளோ நேரடிக் காரணமாகாது. துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறேன், இன்பத்தில் திளைக்கிறேன் என்பதெல்லாம் மனதின் அனுபவங்கள். மனம், சிந்தனை இரண்டும் செம்மைப் படுத்தப்பட்டால், விரும்பிய பலனைச் சுவைத்து மகிழலாம். பிரபலங்கள் மனவியல் அறிவிலும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அப்போது ஜோதிடத்தின் தகவல்களை விளக்க இயலும். இனிப்பு என்று சொன்னால் இனிப்பை உண்ட உணர்வு மனதுக்கு ஏற்படாது. பத்து பொருத்தத்தில் மன வளம் அடங்காது.

ஜோதிடம், காணக்கிடைக்காத பொக்கிஷம். அதை அறியாதவர்களின் விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல. பகையின் காரணமாக ஜோதிடத்தை அணுகாமல், அதை மூடநம்பிக்கை என்று சித்திரிப்பதால் அதன் பெருமை குறையாது. முனிவர்களின் உயர்ந்த சிந்தனையில் உருப்பெற்ற ஒப்பற்ற ஜோதிடத்தைக் காப்பாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. தூற்றுபவர்களுக்கு பதில் சொல்ல முனையாமல், கடமையில் இறங்கினால், மக்கள் நன்மையை ஈட்டித் தரும் ஜோதிடத்தை விளங்க வைக்கலாம்.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism