
முன்னோர் ஆராதனை எதற்காக?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

?ஞான நூல்களும், மகான்களும் முன்னோர் ஆராதனையை வலியுறுத்துவதன் காரணம் என்ன? முன்னோர் ஆராதனைக்கு அப்படியென்ன முக்கியத்துவம்?
- வி.சத்தியசீலன், கடலூர்
‘தாயை வழிபடு’, ‘தந்தையை வழிபடு’ என்று கூறி, முன்னோர் ஆராதனைக்கு முன்னுரிமை அளிக்கிறது வேதம் (மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோபவ). ஆமாம்! முன்னோர் ஆராதனையை அறமாகச் சொல்கிறது வேதம்.
மனிதன் பிறக்கும்போது மூன்று கடன்களுடன் (கடமைகள்) பிறக்கிறான் கல்வியை ஏற்று நிறைவு செய்தால் ரிஷிகள் கடன் அடைந்துவிடும். வேள்வியில் இணைந்தால் தேவர்கள் மகிழ்வார்கள். குழந்தைச் செல்வத்தை ஈன்றெடுத்தால் பித்ருக்கள் (இறந்த முன்னோர்) கடன் தீர்ந்துவிடும் என்கிறது சாஸ்திரம் (ப்ரம்ச்சர்யேண ரிஷிப்ய: யஞ்ஞேன தேவேப்ய: ப்ரஜயாபித்ருப்ய: ய: புத்ரீ...). ரிஷிகள், தேவர்கள், முன்னோர்கள் ஆகியோர் தினம் தினம் வழிபட வேண்டியவர்கள். அனுதினமும் நீரை அள்ளி அளித்து இந்த மூவரையும் வழிபடுவது உண்டு (ப்ரம்ம யக்ஞம்).
மாமரத்தின் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாம்பழத்தின் கொட்டை, மற்றுமொரு மாமரத்தை உற்பத்தி செய்து சங்கிலித் தொடர் போல் மாமரத்தின் பெருக்கத்தை நிறைவு செய்கிறது. தகப்பனும் தனது ஜீவாணுக்கள் வாயிலாக மகன்களை ஈன்றெடுத்து, வேதம் சொல்லும் அறத்தை நடைமுறைப்படுத்தி உலக இயக்கத்திற்கு ஒத்துழைக்கச் செய்கிறார். நம்மை ஈன்றெடுத்து வளர்த்து, திருமணத்தில் இணையவைத்து, பரிணாம வளர்ச்சியில் தென்படும் பருவங்களுக்கு உகந்த வகையில் தேவைகளை நிறைவேற்றி... இவ்வாறு நமக்குச் செய்யும் பணிவிடையையே தமது வாழ்வின் நோக்கமாக ஏற்றுக்கொண்டவர்கள் நம் முன்னோர். பூத உடலைத் துறந்து தெய்வமாக விளங்கும் அவர்களை ஆராதிப்பது நமது கடமை.
?முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் என்னென்ன? விளக்குங்களேன்!
- தோ.பரமசிவன், கடையம்
பிறந்த மனிதன் தினமும் இருவேளை உணவு உட்கொள்கிறான். முன்னோர்களுக்கு, அவர்கள் பூத உடலைத் துறந்து தெய்வமான நாளில், அவர்களின் நினைவோடு அறுசுவை உணவை அன்னதானமாக அளித்து கடமையை நிறைவேற்ற வேண்டும் (ப்ரத்யப்தம் பூரி போஜனாத்). தான் இறந்த பிறகும், தனது உடலைத் துறந்து சென்ற நாளில், தமது குடும்பம் செழிப்பாக இருக்கும் பொருட்டு அன்னதானம் அளிக்கச் சொல்லி விடைபெறுகிறார் தகப்பன். இறந்தும் அவர்கள் நம் நினைவில் இருக்கிறார்கள். பித்ரு லோகத்தில் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களது எண்ணத்தை அறிந்து, அவர்களின் நினைவு நாளில் அன்னதானம் செய்ய வேண்டும். அந்த அறம் அவன் குடும்பத்தைச் செழிப்பாக்கிவிடும்.
தன்னலமற்ற நம் முன்னோர்களை வழிபடுவது சிறந்த அறம். ‘என் மனதில் பதிந்து விளங்கும் முன்னோர்களே! தங்களைப் பணிவிடை செய்ய விழைகிறேன். உங்களால்தான் நான் நல்ல தகப்பனைப் பெற்றவனாகப் பெருமை அடைகிறேன். எனது இந்த விருந்தோம்பல் தங்களை நல்ல புதல்வனைப் பெற்றவனாக மகிழவைக்கும்’ என்ற தகவல் வேதத்தில் உண்டு. (ஆகந்தபிதர: பித்ருமாஹைப் யுஷமாபி:பூயாஸம். ஸுப்ரஜஸோமயாயூயம் பூயாஸ்த). தகப்பனின் பூத உடல் நெருப்பில் மறைந்தாலும், தனயனின் மனதில் அவர் குடிகொண்டிருப்பார். அவ்வாறு மனதில் பதிந்த தகப்பனை நினைத்து ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் எள்ளும் தண்ணீரும் அளிக்கவேண்டும். ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களி லாவது அவர்களுக்கு நீரும் எள்ளும் அளிக்க மறக்கக் கூடாது.
அவர்களுடைய நினைவு முன்னேற்றத்தின் முன்னோடி. அவர்களுக்கான பணிவிடை இணையாத எந்த ஸம்ஸ்காரமும் இல்லை. பதினாறு வகை ஸம்ஸ்காரங்களிலும் அங்கமாக முன்னோர் ஆராதனை இருக்கும். அதற்கு நாந்தீ சிராத்தம் என்று சிறப்புப் பெயர் உண்டு. நாந்தீ என்ற சொல்லுக்கு ஒட்டுமொத்த வளர்ச்சி (ஸமிருத்தி) என்று பொருள்.
?இந்து தர்மத்தில் மறு பிறவி நம்பிக்கை அதிகம். எனில், முன்னோர் வழிபாடு ஏற்கத் தகுந்ததா? மண்ணை விட்டு மறைந்தவன் வேறொரு பிறவி எடுப்பான் எனும்போது, இங்கே அவனுக்கான வழிபாடு கள் நடத்துவது வீண்தானே எனப் பேச்சாளர் ஒருவர் பேசியதைக் கேட்க நேர்ந்தது. அவரது கருத்து சரியா?
- வத்சலா முருகப்பன், தஞ்சாவூர்-2
முன்னோர்களின் அருள், வாழ்க்கையில் சந்திக்கும் இக்கட்டான சூழலிலிருந்து வெளிவரும் உத்தியைத் தோற்றுவிக்கும். அவர்களது அருள், ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும். மற்றவர்களின் வழிகாட்டு தலைவிட நம்பகமானது முன்னோர்களின் அருள். மனம் சங்கடத்தில் ஆழ்ந்து தவிக்கும் வேளையில், அதே மனதில் பதிந்த முன்னோர்கள் சடுதியில் செயல்பட்டு, சங்கடத்திலிருந்து வெளியேற வழிகாட்டுவார்கள்.

பகுத்தறிவாதிகளது பரிந்துரையில் மயங்கி, முன்னோரை வழிபடுவதில் சுணக்கம் காட்டக் கூடாது. ‘இறந்த பிறகு எந்தச் சடங்கும் தேவை யற்றது. முன்னோர்களை வழிபடுவது மூட நம்பிக்கை’ என்று சொல்லும் மகான்களும் இருப்பார்கள். அதைக் காது கொடுத்துக் கேட்கக் கூடாது. வேதத்தைவிட உயர்ந்த தத்துவ விளக்கும் அளிக்கும் மகான்கள் தோன்றமாட்டார்கள். நமது அறியாமையைப் பயன்படுத்தி பலரும் நம்மைக் குழப்பிவிடுவார்கள். தெரியாத ஒரு தத்துவத்தை இல்லை என்று சொல்பவர்களைப் பின்பற்றக் கூடாது.
நமது உடலோடும் உள்ளத்தோடும் இணைந்த வர்கள் நம் முன்னோர். தாய்- தந்தையின் சுக்கில-சோணித இணைப்பில் உருவானது நம் உடல். அவர்களது மனதின் பங்கு, நம் மனதிலும் உண்டு. தாயின் வடிவம் அல்லது தந்தையின் வடிவம் ஏந்திய எத்தனை புதல்வர்களைப் பார்க்கிறோம்! தாயின் சிந்தனையும், தந்தையின் சிந்தனையும் பிரதிபலிக்கும் உள்ளங்களைப் பெற்ற எத்தனை தனயன்களைப் பார்க்கிறோம். முன் னோர்களுக்கும் நமக்கும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு தொடர்பு உண்டு. அப்படியிருக்க, ‘இறந்த பிறகு தகப்பன் தொடர்பு அற்றுவிட்டது; அவர்களை வணங்குவது மூடநம்பிக்கை’ என்று சொல்பவர்கள் அறியாமையில் மூழ்கியவர்களே!
?மனித குலம் உலகமெங்கும் பரவியிருக்கிறது. நம் நாட்டைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் முன்னோர் ஆராதனை இல்லை. முன்னோர் ஆராதனை யில் ஈடுபடாதவர்கள் முன்னேறி இருக்கிறார்கள். நமக்கும் மட்டும் அது எதற்கு?
- செ.வேலவமூர்த்தி, பாளையங்கோட்டை
பாரதத்தின் தனித்தன்மை, அதில் பிறந்தவனின் தனிப் பெருமை, உலகமெங்கும் பரவியிருக்கும் போது, நாம் அதை அறிந்துகொள்ளாமல் இருப்பது தவறு. ஜெர்மனியில் பிறந்த மாக்ஸ்முல்லர் நமது பொக்கிஷங்களை ஆராய்ந்து தெளிவு பெற்றார். ஆனால், கடைசியில் அவர் சொன்ன வார்த்தை எல்லோரையும் பிரமிக்கவைத்தது. ‘சிந்தனையில் நான் பாரதத்தைச் சேர்ந்தவன். ஆனால், அங்கு பிறக்கும் பாக்கியம் இல்லாதது ஒரு குறைதான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சிந்தனையின் எல்லையை எட்டிய சங்கரா சார்யர் நம் மண்ணில் தோன்றினார். போரில் லாமல் வெல்லும் அஹிம்சா முறை மஹாத்மா காந்தியின் சிந்தனையில் உதித்தது. நம் மண்ணின் மைந்தன் அவர். சிந்தனை வளம் பெற்றவர்கள் இந்த நாட்டில் தோன்றியதால், அதற்குத் தனிப் பெருமை உண்டு. அவர்களது சிந்தனை வேறெந்த நாட்டு மனித இனத்திலும் தோன்றாத ஒன்று. ஆகையால், முன்னோர் ஆராதனை உயர்ந்த சிந்தனையின் அடையாளம்.
?ஏகாதசி திதி, பிரதோஷம் முதலான வைபவங்கள் வரும் நாளன்று முன்னோர் சிராத்தம் வந்தால் செய்யலாமா? செய்யலாம் எனில், எதை முதலில் கடைப்பிடிப்பது... சிராத்தத்தையா, குறிப்பிட்ட தெய்வ வழிபாட்டையா?
- ப.வேணுகோபாலன், விழுப்புரம்
நீங்கள் குறிப்பிடுவது போன்ற தினங்களில் சிராத்தம் வந்தால், சிராத்தத்தையே நடைமுறைப் படுத்த வேண்டும். ஏகாதசியோ, பிரதோஷமோ... இந்த விரதங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்ப வருக்கு, ஒரு முறை சிராத்தத்தால் அவற்றைக் கடைப்பிடிக்க இடையூறு நிகழ்ந்தாலும், விரத பலன் கிடைத்துவிடும்.
இது ஸ்மார்த்தர்களது நடைமுறை. வேத கோட்பாடுகளுக்கு இணங்க வரையறுக்கப்பட்ட சட்டதிட்டங்களின் தொகுப்பு ‘ஸ்மிருதிகள்’. இதைப் பின்பற்றுவோர் ஸ்மார்த்தர்கள். பின்னர் தோன்றிய மத நூல்களில் தங்களை இணைத்துக்கொள்ளாமல், ஸனாதன தர்ம கோட்பாடுகளில் நிலைத்து நிற்பவர்கள் அவர்கள். தேவ காரியமும், பித்ரு காரியமும் ஒரே வேளையில் செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் பித்ருக்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
ஏகாதசி முதலான விரதங்கள் பலமுறை வரும். ஆனால், வருடத்துக்கு ஒருமுறையே சிராத்தம் வரும். சிராத்தம் இல்லாத ஏகாதசிகளில் விரதம் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, சிராத்தம் வரும் ஏகாதசியில் விரதத்தைத் தவிர்க்கலாம். அன்று ஏகாதசி விரதத்துக்கு முன்னுரிமை அளித்தால், சிராத்தம் தடைப்படும். பல ஏகாதசி நாட்களில் விரதம் செயல்பட்டு தனது உரிமையை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. சிராத்த திதியிலும் விரதம் செயல்பட்டால், சிராத்தத்தின் உரிமை பறிபோகும். அதன் உரிமையை நிலை நாட்ட ஏகாதசி திதியில் சிராத்தம் வந்தால், சிராத்தத்துக்கு இடமளிப்பதே சிறப்பு!
?குளக்கரை மற்றும் ஆற்றங்கரையில் திதி கொடுக்கலாமா? சிலர், வீட்டில் வைத்து கொடுப்பதுதான் சிறப்பு என்கிறார்களே?
- வை. மாரிமுத்து, விளவங்கோடு
‘இறை உருவ வழிபாடு, வேள்வி, ஜப ஹோமங்கள் மற்றும் முன்னோர் ஆராதனை ஆகியவற்றை, மேற்கூரை உள்ள இடத்தில் செய்வதே சிறப்பு’ என்கிறது தர்ம சாஸ்திரம். முதல் வேள்வியை அறிமுகம் செய்த வேதம், கூரையுடன் அமைந்த இடத்தையே பரிந்துரைத்தது. (அந்தர்ஹி தோஹி தேவலோகோ...) வீட்டில் கொடுக்கும் திதிக்குத் தனிச்சிறப்பு உண்டு.
புண்ணிய நதிகள், புண்ணிய தீர்த்தங்களுக்குச் சென்று நீராடி, தீர்த்த சிராத்தங்கள் நிகழ்த்தலாம். இதற்கென தனியே நேரம், காலம் இருப்பதால், அந்த இடங்களில் திதி கொடுப்பது தவறில்லை. ஆனால், வீட்டில் கொடுக்கவேண்டிய திதியை நதி மற்றும் குளக்கரைகளில் கொடுப்பது தவறு. அது வேறு; இது வேறு! அதாவது... ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் நதி, குளங்களில் நீராடி, அங்கு திதி கொடுப்பதில் தவறு இல்லை. முன்னோர்களை வழிபட வீட்டைப் பயன்படுத்தலாம். வீடு சிறியது அல்லது பொருளாதார வசதி இல்லாதவர்கள், ஆற்றங்கரையில் திதி கொடுக்கலாம். இருப்பினும் கூடியவரை வீட்டில் திதி கொடுக்க முயற்சியுங்கள். இதனால், அடுத்த தலைமுறையினருக்கும் திதி கொடுக்கும் முறை பரிச்சயமாகும்.
?புண்ணிய தீர்த்தங்கள், நீர்நிலைகளின் கரையோரங்களில் முன்னோர் பணிவிடையைச் செய்வதால் என்ன விசேஷம்?
- வி.சுப்புலக்ஷ்மி, திண்டிவனம்
‘என் தகப்பனின் கண்கள் சூரியனில் இணையட்டும். அவரது ஆன்மா காற்றில் இணை யட்டும்; அல்லது தேவலோகத்தில் இணையட்டும் அல்லது அவர் வாழ்ந்த பூமியிலும், பயிர்களிலும், நதியின் பெருக்கிலும் இணைந்து எங்களது வழிபாட்டுக்கு இடத்தை அளித்து அருளட்டும் என்று தகப்பனின் பூத உடலைச் சுட்டிக்காட்டி தேவதை களை வேண்டுவான் தனயன்.
ஆகையால்தான் கயையிலும் திரிவேணி சங்கமத்திலும், காசியிலும், ராமேஸ்வரத்திலும், கங்கை, யமுனை முதலான நதியிலும், தேங்கிய தடாகத்திலும் அவர்கள் ஸான்னித்யம் இருப்பதை உணர்ந்து, அவர்களை நினைத்து எள்ளும் நீரும் அளித்து பணிவிடை செய்யும் பழக்கத்தை நமக்கு ஊட்டினார்கள். அதோடு நிற்காமல், நதியோரங்களிலும் அவர்கள் நினைவு நாளில் பிண்டம் அளித்துப் பெருமைப்படுத்துகிறோம்.
** இறப்பு தீட்டு யார் யாருக்கு எத்தனை நாட்கள்?
** முன்னோர் வழிபாட்டில் எள்ளுக்கு என்ன முக்கியத்துவம்?
** மறைந்துவிட்ட முதல் மனைவிக்கு, இரண்டாவது மனைவியின் மூலம் பிறந்த மகன் சிராத்தம் செய்யலாமா?
- இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழிலும்...
