தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

நாரதர் உலா

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

திருக்கல்யாண உற்ஸவத்தில் பறிபோன திருமாங்கல்யம்!

நாரதர் உலா

நாரதரின் வருகைக்காகக் காத்திருந்த வேளை யில், தூறலில் நனைந்து நடுங்கியபடி நம் அறைக்குள் பிரவேசித்தார் நாரதர். வந்ததும் வராததுமாக, ‘‘கோயில்களில் திருக்கல்யாண வைபவத்தில் பெண் பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொள்வது ஏன் தெரியுமா?’’ என்ற கேள்வியை வீசினார்.

‘‘தெரியவில்லையே. நீர்தான் சொல்லுமே’’

‘‘திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் ஆகவும், திருமணம் ஆன பெண்கள் தங்களின் மாங்கல்யம் நிலைக்கவும்தான் கோயிலுக்கு வருகிறார்கள். ஆனால், அப்படி திருக்கல்யாணம் காண வந்த பெண் பக்தர்கள் ஓரிருவருக்கு தங்க திருமாங்கல்ய சங்கிலி பறிபோனதுதான் பரிதாபம்’’ என்ற நாரதரிடம்,

‘‘அடப் பாவமே. எங்கே நடந்தது இந்தக் கொடுமை?’’

‘‘கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவில், கடந்த வாரம் நடைபெற்ற திருக்கல்யாண உற்ஸவத்தில் தான் இந்தக் கொடுமை நடந்தது. இதனால் பக்தர் களிடம் அச்சமும் வருத்தமும் ஏற்பட்டுள்ளது’’

‘‘திருக்கல்யாண உற்ஸவம் என்றால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது நிர்வாகத்துக்குத் தெரியாதா? உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டுமல்லவா””

‘‘திருக்கல்யாண வைபவத்தை சிறப்பாக நடத்தவேண்டும் என்பதற்காக கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள நாட்டியாஞ்சலி மண்டபத்தில் நடத்தி இருக்கிறார்கள். காவல்துறையின் உரிய பாதுகாப்பு வசதிகளைச் செய்திருந்தால், இப்படி ஒரு கொடுமை நடந்திருக்காது’’

நாரதர் உலா

‘‘கோயிலுக்குள் சி.சி.டிவிக்கள் இருக்குமே. நடந்த திருட்டுகள் அதில் பதிவாகி இருக்குமே’’

‘‘சி.சி.டிவிக்களையும் பார்த்து விட்டார்கள். திருக்கல்யாணம் நடைபெற்ற மண்டபத்தில் இருந்த சி.சி.டிவிக்களில் நிகழ்ச்சிகள் சரியாகப் பதிவாகவில்லையாம். மேலும் திருக்கல்யாண வைபவம் தரிசிக்க வந்த பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அன்னதான மண்டபத்துக்கு பக்தர்கள் குறுகலான வழியில்தான் செல்ல வேண்டி இருந்தது. அந்த இடத்தில் ஏற்பட்ட நெரிசலைப் பயன்படுத்தியும் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி இருக்கலாம் என்றும் பக்தர்கள் சந்தேகப்படுகின்றனர்’’.

‘‘இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதா?’’

‘‘ஆமாம்! அதுகுறித்து அவர்கள் தரப்பில் வழக்கம்போல் விசாரணை நடைபெற்று வருகின்றனவாம்’’

 ‘‘அதுசரி... மகாமகத்தின்போது கும்பேஸ்வரர் திருக்கோயில் பகுதியின் கிழக்கு வீதியில் போடப்பட்டிருந்த கடைகளை தற்காலிகமாக அகற்றியிருந்தார்களே? அது பற்றி விசாரித்தீர்களா?’’

‘‘ஆம்.. தேரடி எனப்படும் கிழக்கு வீதியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறிய கடைகள் அமைந்திருந்தன. 70 - வருடங்களுக்கும் மேலாக திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களையும், வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் நம்பித்தான் அந்த கடைகளும், அந்தக் கடைகளை நடத்தி வரும் குடும்பங்களும் இருந்தன. கடை நடத்துவதற்கான வாடகையும் அவர்கள் திருக்கோயிலுக்கு செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மகாமகத் திருவிழாவின்போது, தேரோட்டம் நடைபெற இருந்ததால் அக்கடைகள் அனைத்தையும் தற்காலிகமாக அகற்றுமாறு அற நிலையத் துறையினர் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி கடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், மகாமகம் முடிந்து தற்போது மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றளவும் மீண்டும் கடைகளை நடத்த அனுமதி கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். திருக்கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டாலும் சரியாக பதிலளிப்பதில்லை. இன்று எங்களுடைய வாழ்வாதாராமே பாதிப்புக்குள்ளாகிவிட்டது என்று புலம்புகிறார்கள் அம்மக்கள்.’’

நாரதர் உலா

‘‘இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தீரா?’’

‘‘நேரிலேயே சென்று விசாரிக்கலாம் என்றிருக் கிறேன்’’ என்ற நாரதர் வேறொரு திருக்கோயில் குறித்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘சுற்றிலும் அகழிகள் கொண்ட திருக்கோயில் களான வேலூர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகரானது, தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் ஆலயம். நாற்புறமும் அகழிகளால் சூழப்பட்ட ஒரு கோட்டை போன்றே அமைந்துள்ள இத்திருக்கோயில் முதல் பராந்தக சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் போன்ற மன்னர்களின் கல்வெட்டுக்களைக் கொண்டது. இத்தகைய சிறப்புகளைப் பெற்ற கோயில் தற்போது பல்வேறு ஆக்கிரமிப்புகளால் பிரச்னைக்கு உள்ளாகி இருப்பது பக்தர்களிடத்தில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாரதர் உலா
நாரதர் உலா

திருக்கோயிலைச் சுற்றிலும் தனியார் ஆக்கிரமிப்புகள் மிகுதியாக இருப்பதாகவும், திருக்குளத்துக்கு தென் கிழக்கு திசையில் நீர் ஆதாரங்கள் இருந்தும், திருக்குளத்துக்குள் நீர் வரமுடியாதபடி ஆக்கிரமிப்புகள் செய்யப் பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனையோடு தெரிவித்தனர். மேலும் அவர்கள் பேசும்போது, ‘எங்கள் ஊர் எங்கள் பெருமை’ என்ற அமைப்பை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கி, பசுபதீஸ்வரர் திருக்கோயில் பிரச்னைக்கு முடிவு காண்பதற்கான போராட்டத்தையும் துவக்கிவிட்டதாகக் கூறினர். சுமார் 18 ஏக்கர் வரை அகழி நீர்நிலைகள் அழிக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்கள் 2016-ம் ஆண்டு தமிழ்நாடு நில அளவை இயக்குநர் மூலம் வரைபடத்தையும் வாங்கிப் பார்த்தார்களாம்.  இன்றும் வருவாய்த்துறை மற்றும் நில பதிவேட்டில் இவை நீர்நிலைகளாகத்தான் இருக்கிறதாம். ஆனால், கடந்த சில வருடங்களாகத்தான் அந்த நீர்நிலைகள் சிறிது சிறிதாக அழிக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சாவூர் நில அளவை உதவி இயக்குநரிடமும் புகார் அளித்துப் பார்த்தும் எந்த பதிலோ நடவடிக்கையோ இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.’’

‘‘நீர்நிலைகள் மீது பட்டா வழங்கக்கூடாது என்று தமிழ்நாட்டு அரசின் சட்டமே இருக்கும் போது, இப்படியொரு போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கும் பொதுமக்களின் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையா?’’ என்று நாம் கேட்கவும், நாரதரின் அலைபேசிக்கு ஏதோ அழைப்பு வரவே நம்மிடம் எதுவும் சொல்லாமல் விருட்டென கிளம்பிவிட்டார் நாரதர்.