மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 16

சிவமகுடம்  - 16
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 16

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம்  - 16

துறவி சொன்ன ரகசியம்!

அடர்ந்த வனப் பகுதியை ஊடறுத்தபடி, சர்ப்பத்தைப் போன்று வளைந்து நெளிந்து சென்ற அந்த ஒற்றையடிப் பாதையில் கற் களும் முற்களும் நிறைந்து காணப்பட்டதால், அதில் பயணிக்க சற்று சிரமமாகவே இருந்தது இளவரசியின் தோழி பொங்கிக்கு!

முன்னிரவுப் பொழுதில், புலியூருக்குப் புரவியில் விரைந்து கொண்டிருந்தவளை முரட்டுக்கூட்டம் ஒன்று சுற்றி வளைத்ததும், எங்கிருந்தோ புயலென புரவியில் விரைந்து வந்த வீரனொருவன் அவர்களிடம் இருந்து அவளைக் காப்பாற்றியதும், அருகிலிருக்கும் தடாகத்தில் தாமரை மொக்கில் ஒரு தகவல் ஒளிந்திருக்கிறது என்று அவன் சேதி சொன்னதும் அவளுக்குப் பெரிதும் வியப்பை அளித்தன என்றால், இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த வீரன் இன்னாரென்று அவளை அறிந்தபோது, பேரதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் ஆளானாள்!

ஆம்! தன்னைக் காப்பாற்றியது சோழர்குல பகைவரும் பாண்டிய மாமன்னருமான கூன்பாண்டியர் என்பதை அறிந்த பிறகும் அவளால் அச்சத்துக்கு ஆளாகாமல் இருக்கமுடியுமா?!

கனல் கக்கிய கண்களும்... தன் புரவியோடு பாய்ந்து அதன் கால்களுக்கு முரடர்கள் இருவரைப் பலியிட்ட துடன், நால்புறமும் சுழன்று முரடர்களைத் தாக்கிய அவரது வாள் வீச்சும் அவளுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்தியதா என்றால்... இல்லை! அவளின் அச்சம் தன்னைக் குறித்தல்ல; சோழத்தைக் குறித்தது. சோழத்தின் பொருட்டு தூதுசெல்லும் தன்னை பகையரசன் காப்பாற்று கிறார் என்றால், அதற்குக் காரணம் என்ன? இதில், சோழத்துக்கு ஆபத்து விளைவிக்கும் சூது ஏதேனும் ஒளிந்திருக்குமோ என்றுதான் அவள் அச்சமும் ஐயமும் கொண்டாள்.

அதுபற்றி அவரிடமே கேட்டுவிட துணிந்தாள் பொங்கி. ஆனால் அதற்கு வாய்ப்பு தராமல், முரடர்களுடனான சண்டை முடிவுக்கு வந்ததும், சிறிதும் தாமதிக்காமல் தடாகத்துக்குச் சென்று தாமரை மொக்கில் தகவலை சேகரிக்கும்படி அவளை பணித்துவிட்டு, புரவியை உசுப்பி யவர்தான்... மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டார்.

இங்ஙனம், முன்னிரவு சம்பவங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அவளது உள்ளம், பாதையின் சிரமங்களை சிறிதும் பொருட் படுத்தவில்லை; தாமரை மொக்கில் கிடைத்த வெண்பட்டு துணிச்சுருளில் இருந்த வரைகோடுகள் வழிகாட்டியபடி பயணித்தவள், தனது வேகத்தை அதிகப்படுத்தினாள். பகற்பொழுதில் கதிரவன்  பொழிந்த வெங்கதிரை உள்வாங்கி, தண்கதிரை பொழிந்து கொண்டிருந்த பால்நிலவின் பேரொளி, இரவின் இருளை விலக்கி அவளுக்கு உதவ, சில பல நாழிகைகளில் எல்லாம் பாதையின் முடிவை எட்டியிருந்தாள்; மரங்கள் சூழ்ந்த வனத் திடல் ஒன்றில் முடிந்திருந்தது பாதை!

மேற்கொண்டு என்ன செய்வது என்று அவள் திகைத்து நிற்க, ‘‘இதற்குமேல் செல்ல வழியில்லை. வரவேண்டிய இடத்துக்கு வந்து விட்டாய் பெண்ணே’’ என்று கூறியபடி, விருட்சத்தின் மறைவில் இருந்து வெளிப்பட்டது ஓர் உருவம்.

அந்த உருவம் நகர்ந்து வெளிச்சத்துக்கு வந்ததும், உருவத்துக்கு உரியவரின் தோற்றம் நன்கு தெளிவாக கண்களுக்குப்புலப்பட, இளவரசியின் தோழிக்கு மற்றவையெல்லாம் மறந்து சங்கப்புலவர் பெருந்தேவனாரின் பாடல்தான் நினைவுக்கு வந்தது.

‘தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே’ எனத் துவங்கும் அந்தப் பாடல், அருந்தவத்தோன் என சிவனாரைச் சிறப்பித்து,  அவர் உருவத்தையும் சித்திரிக்கும். தவ முதிர்ச்சியின் சான்றாக தாழ்சடையும், அனைத்துயிர்களுக்கும் காவலாகும் அருளுடைமையைக் காட்ட கையிலே நீர் வற்றாத கமண்டலமும், தலையிலும் மார்பிலுமாக கொன்றைப் பூ அணிந்தபடியும் திகழ்வதாக பரமனின் திருவுருவை பாடியிருப்பார் புலவர்!

இங்கே, இந்த உருவத்துக்குச் சொந்தக்காரரும் தோற்றத்தில் தவசீலராகவே திகழ்கிறார். காஷாயம் அணிந்திருக்கிறார். ஆனால் தலையிலும் மார்பிலும் கொன்றைப் பூக்கள் சூடிக்கொள்ளவில்லை. கையில் கமண்டலமும் இல்லை. இவை மட்டுமா இல்லை... தவசீலர்களுக்கு உரிய கருணாகடாட்சம் முகத்தில் துளியும் தென்படவில்லை! ஆதலால், வணங்குவதற்குப் பதில், அவரை நோக்கி ஏளனப் புன்னகையையே வீசினாள் பொங்கி.

பதிலுக்கு துறவி, ‘‘நன்று... மிக்க நன்று!’’ என்று உரத்துக் கூறினார்.

‘‘எது நன்று?’’

‘‘என்னை போலித் துறவி என அடையாளம் கண்டுகொண்டு விட்டாயே... உனது அந்த புத்தி சாலித்தனத்தையே நன்று என்று மெச்சினேன்’’ என்றார் அந்த சைவத் துறவி.

‘‘எனது புத்திசாலித்தனம் கிடக்கட்டும். என்னை ஏன் இங்கு வரவழைத்தீர்கள்?’’- சீற்றத் துடன் வினவினாள் பொங்கி.

சிவமகுடம்  - 16

‘‘இந்நேரம் உங்கள் இளவரசியாருக்குத் தெரிந்து விட்டிருக்கும் ஒரு ரகசியத்தை உனக்கும் தெரியப் படுத்த’’

‘‘என்ன ரகசியம்?’’

‘‘அதைச் சொல்வதற்குமுன் ஒரு கதையைச் சொல்கிறேன் கேள்...’' என்றார் துறவி.

கதையைத் துவங்குமுன் அவரை இடைமறித்த பொங்கி, ‘‘கதை கேட்க கால அவகாசம் இல்லை எனக்கு. விஷயத்தை நேரடியாகச் சொல்லி விடுவது நல்லது’’ என்றாள்.

ஆனால் சைவத் துறவி அதைப் பொருட்படுத் தாது, ‘‘சிறிய கதைதான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன்’’ என்றபடி கதையைச் சொல்லத் துவங்கினார்.

‘‘ஆதிகாலத்தில் ஒரு முனிவர் இருந்தார். முனிவர் என்றதும் என்னைப் போன்றவர்  என்று எண்ணிக்கொள்ளாதே! நம்மைப் போன்று அற்பமான இவ்வுலக விஷயங்களில் எல்லாம் ஆர்வம் கொண்டவர் இல்லை அவர்.

பரமனைப் பணிவதையே பாக்கியமாகக் கருதியவர். அதிகாலையில் விருட்சங்களில் மலர்கள் மலர்ந்ததுமே அவற்றைப் பறித்து சிவனாருக்கு அர்ப்பணிப்பதில் அதீத விருப்பம் அவருக்கு! தரையில் செடி-கொடிகளில் மலரும் மலர்களை எளிதில் கொய்துவிடும் முனிவர், இருள்விலகாத அதிகாலைப் பொழுதில் உயர மான விருட்சங்களில் ஏறி மலர்களைப் பறிக்க சிரமப்பட்டார். அந்த விருட்சங்களிலும் எளிதில் ஏறி மலர்களைப் பறிக்க ஏதுவாக, தனக்கு புலிக்கால்கள் வாய்க்கும்படி பரமேஸ்வரனிடம் வரம் பெற்றவர். அதனால் அவருக்கு புலிக்கால் முனிவர் என்று திருப்பெயர்.

தவத்தின் பலனால் தில்லை நடராஜனின் திருநடனத்தைத் தரிசிக்கும் பேறும் அவருக்குக் கிடைத்தது. அதுமட்டுமா? இன்னும் பல்வேறு ஊர்களில் சிவலிங்கத்தை எழுந்தருளச் செய்து வழிபட்டிருக்கிறார் அந்த முனிவர். அதனால் அந்த ஊர்கள் எல்லாம் அவரின் பெயரைக் கொண்டு புலியூர் என்றே பெயர் பெற்றுத் திகழ் கின்றன’’ கதையைச் சொல்லிக்கொண்டே வந்த துறவி, புலியூர் என்பதை மட்டும் சற்று அழுத்திக் கூறினார். அதுவரையிலும் தலையை தரை தாழ்த்தி கதையை செவிமடுத்துக்கொண்டிருந்த பொங்கி, புலியூர் என்ற பெயரைக் கேட்டதும் சட்டென்று தலைநிமிர்ந்தாள்...

‘‘அப்படியென்றால்..?’’ என்று சைவத்துறவியை நோக்கி முற்றுப்பெறாத ஒரு கேள்வியையும் தொடுத்தாள்.

‘‘ *புலியூர் ஒன்றல்ல பெண்ணே! அதே பெயரில் பல ஊர்கள் உண்டு!’’ என்ற துறவி, உறையூரில் ஓலை நறுக்கு பாடலின் மூலம் இளவரசி மானி தெரிந்துகொண்ட அந்த ரகசியத்தையும்
உடைத்தார் பொங்கியிடம்.

‘‘சோழப் படைகள் காத்து நிற்கும் புலியூர் வேறு; பாண்டியப் படைகள் தாக்குதல் நடத்தப்போகும் புலியூர் வேறு!’’
 
இதைக்கேட்டு திடுக்கிட்ட பொங்கி, யோசனையில் ஆழ்ந்தாள். பிறகு, ஒருவாறு சுதாரித்துக்கொண்டு சைவத் துறவியை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘‘என்னைக் காப்பாற்றியபோதே பாண்டிய மன்னர் இந்த ரகசியத்தை என்னிடம் கூறியிருக்க லாமே? இங்கு வரச்சொல்லிப் பணித்து என்னை அலைக்கழித்தது ஏன்? தவிரவும், சோழத்தின் மீது பாண்டியருக்கு திடீர் கரிசனம் வரக் காரணம் என்ன...?’’  - கோபமும் ஆவேசமுமாக அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுத்த பொங்கியை, சற்றுப் பரிவுடன் நோக்கிய சைவத்துறவி பெரு மூச்சொன்று விட்டபடி, அவளுக்குப் பதில் சொல்லத் துவங்கினார்.

அதேநேரம்... அருகிலுள்ள விருட்சத்தின் கிளையொன்றில், அவர்களின் திசைநோக்கி குறிபார்த்து, வில்லில் நாணேற்றி கணைதொடுக்கக் காத்திருந்தான் வில்லவன் ஒருவன்!

அங்கே உறையூரிலோ, இளவரசி மானி வீசியெறிந்த வேலாயுதம் பெரும் விசையுடன் சென்று, யானையை மதம்கொள்ளச் செய்ய தூண்டிக்கொண்டிருந்தவனின் தோளைத் துளைக்க, குருதி பொங்க கீழே வீழ்ந்தான் முரடன் அச்சுதன். மறுகணம் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள், சோழ மறவர்கள்.

சோழ தேசத்துக்கான பேராபத்து, பல கோணங்களில், பல்வேறு உருவங்களில் தீவிரம் அடைவதை உணர்ந்த மானி சற்றும் தாமதிக்க வில்லை. பார்வையாலேயே மன்னர்பிரானின் அனுமதியைக் கோரினாள். அவளின் உள்ளக் கிடக்கையை புரிந்துகொண்ட மணிமுடிச் சோழரும் தலையசைப்பாலேயே உத்தரவு தர, விண்ணை நோக்கி கரங்களை உயர்த்தினாள் மானி.

மறுகணம், பெரும் தாரைகள் ஒலியெழுப்ப, உறையூர்க் கோட்டை மதில்களில் இருந்த போர் முரசங்களும் விண்ணதிர முழங்கின!

- மகுடம் சூடுவோம்...

* கூன்பாண்டியனின் படையெடுப்புகளை-போர்களை விவரிக் கும் சரித்திரத் தகவல்கள் குறிப்பிடும் புலியூர் எது என்பதில், கருத்து பேதங்கள் உண்டு. இவன் களம் கண்ட ‘நெல்வேலி போர்’ குறித்தும்  மாறுபட்ட கருத்துகள் உண்டு.