மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27
News
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27

சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 27

43 - பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே ?

மதுராபுரி முழுவதும் ஒரே கொண்டாட்டம். இன்றுடன் கம்சனின் அட்டூழியங்களுக்கு ஒரு முடிவு வரப்போகிறது. தனுர் யாகம் என்ற பெயரில் கம்சன் கண்ணனையும் பலராமனையும் அழைத்துவர அக்ரூரர் சென்றிருக்கிறார். அவர் தேர் வரும் தடத்தைப் பார்த்தபடி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்தப்பெண்மணி கூட்டத்தை தள்ளிக் கொண்டு முன்னே வருகிறாள். அவளுடைய முதுகு முற்றிலும் கூனி இருக்கிறது. எனவே மற்றவரை போல அவளால் கண்ணனை எளிதாக நிமிர்ந்து பார்க்க இயலாது. அவள் ஊர் மக்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து பிழைப்பு நடத்துபவள். அவள் கைகளில் ஒரு பெரிய தாமரை இலையில் மணக்க மணக்க சந்தனம் பசுமையாக இருந்தது. கண்ணன் எப்பொழுது வருவான் நாம் எப்போது தன் கைகளால் அவன் திருமேனியில் சந்தனம் பூசுவோம் என்று காத்திருக்கிறாள்.

பூசும் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய,

வாச கம்செய் மாலையே வான்பட் டாடை யுமஃதே,
தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே,
ஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை யேக மூர்த்திக்கே “ என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

எம்பெருமானுக்கு பூசும் சந்தனம் தன்னுடைய நெஞ்சம் என்றும், பாடும் பாமாலையே அவனுக்குச் சூடும் பூமாலை என்றும், அணியும் பரிவட்டமும் அதுவே என்றும், ஒளி பொருந்திய அணிகலன் அவனைத் தொழும் நிலையில் உள்ள கைகள் என்று பாடுகிறார்.

வைணவ சம்பிரதாயத்தில் ஒரு வழக்கு உண்டு. மடிதடவாத சோறு; சுருள்நாறாத பூ; சுண்ணாம்பு கலவாத சந்தனம். இந்த பொருட்களே எம்பெருமானுக்கு சாற்றுவதற்கு ஏற்றவை.. மடிதடவாத சோறு என்றால் அது கைம்மாறு எதிர்பாராத விருந்தோம்பல் என்று பெயர். அப்படி ஒரு சோறிட்டவன் விதுரன் மட்டும்தான். மணம்வீசும் மாலைகளை மாலா(க்)காரர் என்பவர் அளித்தார். இதோ இந்தப் பெண்மணி கண்ணனுக்கு சந்தனம் பூசுவதற்காக காத்திருக்கிறாள்.

அதோ இந்த உலகை உய்விக்க வந்த மாயக்கண்ணன் தனது தமையனுடன் இரு அடலேறு போல வந்து கொண்டிருக்கிறான். அந்தக் கூனிக்கு தன்னை கண்ணன் கவனியாமல் சென்று விடுவனோ என்று கவலை. பிரதியுபகாரம் பாராமல் கைங்கரியம் செய்யும் எந்த பக்தன் கண்ணன் கண்களிலிருந்து தப்பியிருக்கிறான்?

கண்ணன் அவளிடம் வந்து நின்று “பெண்ணே நல்ல சந்தனம் இருந்தால் எனக்குப் பூசு" என்கிறான்.

இந்தத் தருணத்திற்கு அல்லவா அவள் காத்திருந்தாள்? தனது கைகளை ஏந்திய சந்தனத்தை கண்ணனின் திருமேனியில் பூசினாள்.

கண்ணனுக்கு ஆயர்பாடி குறும்பு போகவில்லை.

“ இந்தச் சந்தனம் நன்றாக இல்லை. வேறு சந்தனம் உன்னிடம் இல்லையா? “ என்கிறான்.

திகைத்துப் போனாள் அந்தக் கூனி. இருப்பதில் மிக வாசனையுள்ள சந்தனத்தைக் கொண்டு வந்தவளிடம் இப்படி ஒரு கேள்வியா?

“ வேறு சந்தனம் என்றால் என் மேனியைத்தான் நீ சந்தனமாக பூசிக் கொள்ள வேண்டும். எடுத்துக்கொள் “ என்றாள்.

கண்ணன் மெல்ல அவளை தொட்டு அவளது கூனை நிமிர்த்துகிறான்.

அப்படிப்பட்ட கூனியைப் போல எம்பெருமானுக்கு சந்தனம் பூச கொடுத்தேனா? இல்லையே ! எனவே நான் இந்தத் திருக்கோளூரை விட்டு கிளம்புகிறேன் “ என்று அந்தபெண் கிளம்புகிறாள்.

44 - பூவைக் கொடுத்தேனோ மாலா(க்)காரரைப் போலே ?

‘எவன் ஒருவன் எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலியவற்றை அர்ப்பணம் செய்கிறானோ , தூய்மையான பக்தியுடன் அந்த பக்தன் அளிக்கும் காணிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தனது பகவத் கீதையில் கூறுகிறார்.  எனவே துளசியும், பூக்களும் ஏற்றம் பெற்றன. வைணவர்கள் புஷ்ப கைங்கரியம் செய்வதில் சிறந்தவர்கள். பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் முதலியோர் போல நந்தவனம் அமைத்து புஷ்பகைங்கரியம் செய்தவர்களும் உண்டு. பொன்பூ, மண்பூ மூலம் கைங்கரியம் செய்தவர்களும் உண்டு. இதற்கெல்லாம் மூலம் ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்படும் இந்த மாலா(க்)காரரின் கதைதான்.

குப்ஜை என்று அந்த கோணல்முதுகு பெண்ணிற்கு ஒரு பெயராவது உண்டு. இவர் வெறும் மாலா(க்)காரர். தினமும் பூக்களைத் தொடுத்து மாலைகட்டி விற்பவர். ஸ்ரீகிருஷ்ணர் மதுரா வருகிறார் என்று தெரிந்ததும் இவரும் அந்தக் கூனியைப் போல கண்ணன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். கண்ணன் வந்து மாலா(க்)காரர் வீட்டு கதவை தட்டி தனக்கு அணிந்து கொள்ள மாலைகள் கேட்கிறான். தனது மாலைகளில் மிகச் சிறந்த மாலைகளை அந்த மாலா(க்)காரர் கொடுக்கிறார். அந்த மாதவன் அந்த இடத்திலேயே மாலா(க்)காரருக்கு மோட்சம் அளிக்கிறான் என்பது புராணம்.

சுருள்நாறாத பூவை கொடுத்து மாலா(க்)காரர் கைங்கரியம் செய்யும் பாக்கியம் நான் பெறாததால் இந்தத் திருக்கோளூரில் இருக்க தனக்கு யோக்கியதை கிடையாது என்று அந்தப் பெண்பிள்ளை வெளியேறுகிறாள்.