Published:Updated:

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

வாரிவழங்கும் மாரியம்மன்! - குழந்தை வரம், தொழில் வெற்றி, உடல்நலம்...

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

வாரிவழங்கும் மாரியம்மன்! - குழந்தை வரம், தொழில் வெற்றி, உடல்நலம்...

Published:Updated:
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

க்தர்கள் வேண்டி வருவது எதுவாயினும், அதைக் கருணையுடன் அருள்பாலிப்பவள், இருக்கண்குடி மாரியம்மன். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இருக்கண்குடி மாரியம்மன் கோயிலுக்கு... வரலாற்று ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் உள்ள சிறப்புகள் பல. கோயிலின் பரம்பரை அறக்காவலர்குழுத் தலைவர் ராமமூர்த்தி பூசாரி, அம்மனின் சிலிர்ப்பூட்டும் தலவரலாறு சொன்னார்...

‘‘மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதி, பல சித்தர்கள் வாழ்ந்த பகுதி. சிவயோக ஞானசித்தர் என்பவர், ‘ஓம் சக்தி’ என்ற திருநாமத்தை உச்சரித்தபடி பல ஆண்டுகள் தவமிருந்தார். அதில் உள்ளம் கனிந்த பார்வதி நேரில் தோன்றி, ‘வேண்டும் வரம் என்ன?’ என்று கேட்டாள். ‘யாம் பெற்ற இன்பத்தை இந்த வையகமும் பெற வேண்டும் தாயே! உன் பக்தனான நான் எந்த இடத்தில் யோக நிஷ்டை (ஜீவ சமாதி) கொள்கிறேனோ, அந்த இடத்தில் நீ பீடமிட்டு அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும்’ என்று வேண்டினார்.

சித்தரின் வேண்டுகோளை ஏற்ற அகிலாண்ட ஈஸ்வரி, ‘சதுரகிரி மலையில் இருந்து உருவாகி பூமி நோக்கி ஓடும் அர்ச்சுனா நதியும், சில காட்டாறுகளோடு சேர்ந்து ஓடும் வைப்பாறும் சங்கமமாகும் இடத்தில் நீ யோக நிஷ்டை அடைவாய். அந்த இடமே என் கடாட்சம் பெற்று, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளிக்கும் புண்ணிய தலமாக விளங்கும்’ என்று சொல்லி மறைந்தாள். சித்தரும் அவ்வாறே செய்தார்.

வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி கடலுக்கு ஓடும் வைப்பாறும், சதுரகிரி மலையில் இருந்து வரும் அர்ச்சுனா நதியும் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ள நிலரப்பரப்புக்கு முன்னதாகக் கலந்து, பிறகு அந்த நிலப்பரப்பைவிட்டு தனித் தனியாகப் பிரிந்து, மீண்டும் இரு நதிகளும் கலக்கின்றன. அந்த இரு நதிகளுக்கும் இடையே தீவுத்திடல்போல் உள்ள நிலப்பரப்பில்தான், இந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இரு கங்கை நதிகள் கூடிப் பிரிவதால் அதற்கு ‘இரு கங்கை குடி’ என்றுதான் ஆரம்பத்தில் பெயர் இருந்தது. காலப்போக்கில் அது மருவி ‘இருக்கண்குடி’ ஆகிவிட்டது’’ என்றவர், அதற்குப் பின்னான காலத்தில் இயற்கைச் சீற்றங்களால் அவ்விடத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறினார். 

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘அர்ச்சுனா நதி, வைப்பாறு ஆகிய வற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கோயில்களும், அங்கிருந்த சாமி சிலைகளும்கூட தப்பவில்லை. தீவுத்திடல்போல் காட்சி அளித்த அந்த நிலப்பரப்புகூட அந்த வெள்ளத்தில் மூழ்கிப்போனது. வெள்ளம் வடிந்த பிறகு, கி.பி. 1400 ஆண்டுகளில் குக்கிரமமாக இருந்த அயன்மேலடை (தற்போதைய இருக்கண்குடி) கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி பிள்ளையின் மனைவி பரிபூரணத்தம்மாள் உள்பட சில பெண்கள், ஆற்றில் சாணம் எடுக்கக் கூடைகளுடன் சென்றனர். ஆற்றில் குளித்துவிட்டு பரிபூரணத்தம்மாள் தனது சாணக் கூடையைத் தூக்க முயன்றபோது... அது, பாறை கனம் கனத்தது. அவர் உடலில் இறங்கிய அம்மன், ஊர்ப்பெரியவர்களை அழைத்து வரச்சொல்லி, அந்தச் சாணக் கூடையைச் சுற்றிக் கோடுபோட்டு, அங்கு தோண்டச் சொன்னாள். பெரிய, அம்மன் கற்சிலை ஒன்று கிடைத்தது.

‘நான் பிறந்தது காஞ்சிபுரம். எனக்கு கண்ணனூர் மாரியென்றும், சமயபுரம் மாரியென்றும் பல பெயர்கள் உண்டு. என்னை ஒரு கிராம மக்கள் பல காலம் வணங்கி வந்தார்கள். காட்டு வெள்ளத்தில் அந்தக் கிராமமும், கோயிலும் சேதமடைந்தது. வெள்ளத்தில் மிதந்து வந்த நான், சிவயோக ஞான சித்தர் யோக நிஷ்டை அடைந்திருக்கும் இடத்தில் புதைந்துகிடந்தேன். என்னை உண்மையாக நம்பி வணங்கும் மக்களுக்கு சுபிட்சம் கொடுக்கவும், உலக மக்களை ரட்சிக்கவும் இப்போது வெளிப்பட்டுள்ளேன்.

நீங்கள் எனக்குச் சந்நிதி அமைத்து, இந்தச் சிலையை அங்கு பிரதிஷ்டை செய்து, வெள்ளாடு, எருமைக் கிடா பலியிட்டு வேண்ட, உங்கள் குலங்களும், கோத்திரங் களும் எந்த வித இன்னல்கள், இடையூறுயின்றி புத்திர பாக்கியத்துடன், எல்லா வகை செல்வங்களுடன் வாழையடி வாழையாக வாழ அருள்புரிவேன்’ என்று, பரிபூரணத்தம்மாள் மூலமாக வாக்குத் தந்தாள் மாரி. சுமார் கி.பி. 1545-ம் வருடம் மாரியம்மன் சிலையை கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ராமசாமிபிள்ளையும், அவருடைய வாரிசுகளும்தான் இன்று வரை கோயிலில் பூஜை செய்து வருகிறோம்’’ என்றார், ராமமூர்த்தி பூசாரி.

அம்மன் அருள்!

கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சிலரிடம் பேசினோம்...

சென்னை, கொரட்டூரில் இருந்து வந்திருந்தார் சசிகலா. ‘‘கிட்டத்தட்ட 20 வருஷமா இந்தக் கோயிலுக்கு வர்றேன். வீட்டில் என்ன பிரச்னைனாலும் வேண்டிக்குவேன், அம்மா தீர்த்துக் கொடுத்திடுவா. என் மகள் ஹேமவர்த்தினிக்கு கண் பார்வையில் கோளாறு இருக்கிறது. சரியாக வேண்டி, இப்போ வந்திருக்கேன். நிச்சயம் அம்மன் கருணை காட்டுவா. அப்புறம் பொங்கல் வெச்சு, காணிக்கையா கண் மலர் செலுத்துவேன்’’ என்றார் நம்பிக்கையுடன்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சென்னையைச் சேர்ந்த கீதாராணி, ‘‘என் அம்மா ராமலட்சுமிக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னால முதுகுத் தண்டுவடத்தில் ஒரு ஆபரேஷன் செஞ்சு, படுத்த படுக்கையாகிட்டாங்க. ‘என் அம்மாவை எழுந்து நடக்க வை, அவங்களை உன் கோயிலுக்குக் கூட்டிட்டு வர்றேன்’னு இந்த மாரிகிட்ட வேண்டினேன். இதோ... எங்கம்மா நடந்தே கோயிலுக்குள் வந்திருக்காங்க. அதுக்குத்தான் மாவிளக்கு, முடிக்காணிக்கை செலுத்தினேன்’’ என்றார் பக்தியுடன்.

சாத்தூரைச் சேர்ந்ந்த குமரேசன், நகைப் பட்டறை வைத்துள்ளார். ‘‘எனக்கு பெரிய அம்மை நோய்வந்து, ஒரு மாசத்துக்கு மேலாகியும் இறங்கலை. இங்க வயண மண்டபத்தில் தங்கி அம்மனை வேண்டிக்கொண்டேன். இப்போ சீக்கிரமா இறங்கி வருது. முழுசா இறங்கினதும் ஆத்தாளுக்கு மாவிளக்கு, பொம்மை காணிக்கை செலுத்தணும்’’ என்று காத்திருக்கிறார்.

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

சங்கரன்கோயிலில் இருந்து வந்திருந்த ராமகிருஷ்ணன், கோயில்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர். ‘‘எனக்குத் திருமணம் கொஞ்சம் தள்ளிப்போனப்போ, அம்மாகிட்ட வேண்டிக்கிட்டேன். நல்லபடியா முடிஞ்சது. இப்போ என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் தர, அம்மனை வேண்ட வந்திருக்கேன். அப்புறம், கண் திருஷ்டி கோளாறுனால ஏற்படும் தொழில் தடை, நோய்களுக்கும் இந்த அம்மனை வேண்டிக்கிட்டா நிச்சயம் காப்பாத்துவா’’ என்றார்.

பக்தர்களின் உறுதியான நம்பிக்கை, உள்ளம் நெகிழவைத்தது!

எம்.கார்த்தி, படங்கள்:ஆர்.எம்.முத்துராஜ்

குழந்தை வரம்

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

குழந்தை வரம், தொழில் வளர்ச்சி என பற்பல வேண்டுதல்களுக்கும் உரிய திருத்தலமாக விளங்குகிறது இருக்கண்குடி. குறிப்பாக, பிள்ளை வரம் வேண்டுபவர்கள் கோயில் வளாகத்தில் உள்ள தலவிருட்சத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பிறந்ததும் பொங்கலிட்டு பொம்மைச் சிலைகளைச் சுமந்துவந்து காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

வயண (வேண்டுதல்) மண்டபம்

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!
சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

கண் நோய், அம்மை நோய் உட்பட உடலில் ஏற்படும் சகல நோய்களையும் தீர்த்துவைக்கிறாள் இருக்கண்குடி மாரியம்மன். பெரிய அம்மை, சின்ன அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நாட்களாக அம்மை நோய் இறங்காவிட்டால் இந்தக் கோயிலின் வயண மண்டபத்தில் தங்கி அம்மனை வேண்ட, அம்மை சீக்கிரம் இறங்கிவிடும் என்பது ஐதீகம். அப்படி அம்மை நோய் தீர்ந்தவர்கள் மாவிளக்கு எடுத்தும், காணிக்கையாக ஆமணக்கு விதைகளை முத்துக்களாகச் செலுத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

ஆயிரங்கண் மண்பானை

சங்கடம் தீர்க்கும் சந்நிதிகள்..!

கண் நோய் தீர தாயிடம் வேண்டி பலன் பெற்றவர்கள், ஆயிரங்கண் மண்பானைக்குள் விளக்கு ஏற்றி, தலையில் சுமந்துவந்து நேர்த்திக்கடன் முடிக்கிறார்கள்.

எப்படிச் செல்வது?

சாத்தூரில் இருந்து 8 கி.மீ தூரத்தில் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல சாத்தூரில் இருந்து பேருந்து வசதி உண்டு.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5  மணி முதல் மதியம் 1.30 மணி; மாலை 4 மணி முதல் இரவு 8 மணி. செவ்வாய் மற்றும் சனிக்கிழமையில் மட்டும் காலை 5 மணி முதல் இரவு எட்டு மணி வரை கோயில் திறந்திருக்கும்.

கோயில் தொடர்பு எண்கள்: பரம்பரை அறங்காவல்குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி அலைபேசி எண்: 94435-44997

கோயில் அலுவல் தொடர்பு எண்: 04562-259614, 04562-259669

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism