
வாரிசு சிக்கலில் இருக்கன்குடி மாரியம்மன்

வியர்க்க விறுவிறுக்க நமக்கு முன்னால் பிரசன்னமானார் நாரதர். ‘‘என்ன நாரதரே, வெயில்தான் இப்போது குறைந்து விட்டதே... அப்படியும் ஏன் இந்த வியர்வை வெள்ளம்?’’ என்றபடியே, அவருக்கு இளநீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய பிறகு, ‘‘இந்த முறை எந்தக் கோயிலுக்குச் சென்று வந்தீர்?’’ என்று கேட்டோம்.

‘‘நிரம்பி வழியும் உண்டியலைத் திறக்காமல் சாக்குப் பைகளால் போர்த்தி வைத்திருக்கும் ஒரு கோயிலுக்குத்தான் சென்று வருகிறேன்’’ என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
‘‘ஓ... இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குப் போய் வருகிறீரா? தென்தமிழ்நாட்டின் பிரசித்தியான கோயில் ஆயிற்றே அது! உண்டியலைத் திறப்பதில் என்ன பிரச்னையாம்?’’ என்று கேட்டோம்.
‘‘இருக்கன்குடி மாரியம்மன் சிலையைக் கண்டெடுத்தவர் பரிபூரணத்தம்மாள்; அவரின் கணவர் ராமசாமி. இந்தத் தம்பதியின் வாரிசுகள்தான் கோயிலை நிர்வகிக்க வேண்டும் என அம்மன் அருள்வாக்கு கூறியதாகத் தலவரலாறு. அன்று முதல் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள்தான் கோயில் பூஜைகள் மற்றும் பிற வருமானங்களைக் கவனித்து வருகின்றனர். இப்போதும் அந்த வம்சத்தில் வந்த மூன்று குடும்பத்தினர்தான் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கோயிலில் பூஜை செய்து வருகின்றனர். அந்த மூன்று குடும்பங்களின் சார்பில் 10 பேர் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பரம்பரை அறங் காவலராக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

சமீபகாலமாக, திருக்கோயிலுக்கு யார் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் என்பதில் அந்த மூன்று குடும்பங்களுக்கு இடையே பூசல் உருவாகி, அந்தப் பிரச்னை பூதாகாரமாகிவிட்டது. இதற்கிடையில் திருக்கோயிலின் உண்டியல்களும் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளால் நிரம்பி வழிந்திருக்கின்றன. உண்டியல்களைத் திறப்பதற்காக அதிகாரிகள் போயிருக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், பரம்பரை அறங்காவலர் பிரச்னை தீராமல் உண்டியலைத் திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கவே, உண்டியல்களை சாக்குப் பைகள் போட்டு மூடி வைத்திருக்கிறார்களாம்.’’

‘‘இந்த விவகாரத்தில் அறநிலையத் துறை என்ன முடிவு எடுத்திருக்கிறதாம்?’’
‘‘என்ன முடிவு எடுப்பது என்று துறை அதிகாரிகள் ஆலோசனை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஏற்கெனவே இந்தக் கோயிலை அறநிலையத் துறை கையகப்படுத்த நினைத்தபோது, அந்தக் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. இறுதியாக, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அந்த பூசாரிகளின் குடும்பச் சொத்து; எனவே, எல்லா உரிமைகளும் பூசாரிகளுக்கு இருக்கிறது. கோயில் உண்டியலைத் தவிர, மொட்டை போடுதல், சிறப்பு தரிசனக் கட்டணம் உள்பட கோயிலின் பிற வருமானத்தில் பூசாரிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு தர வேண்டும் என்று இந்து அறநிலையத் துறைக்கும், கோயிலில் பூஜை செய்யும் அந்த வாரிசுக் குடும்பங்களுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை உருவாக்கப்பட்டு, இருக்கன்குடி கோயிலை நிர்வகிப்பது, கண்காணிப்பது மட்டுமே இந்து அறநிலையத் துறையின் பணி என்றானது. இப்போது ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக அரசுக்குக் கணக்கு காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் கோயில் வருமானம் பல கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள் பக்தர்கள். சாமி கும்பிட சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.10-தான். ஆனால், பிளாக்கில் ரூ.50-க்கு விற்கிறார்களாம்.
அதேபோல், முடி காணிக்கை செலுத்துவதற்கான கட்டணம், நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான கட்டணம் போன்றவற்றிலும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது; கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை ஏலம் விடுவதிலும், மாரியம்மனுக்கு பக்தர்கள் வழங்கும் பட்டுத் துணிகளை ஏலம் விடுவதிலும்கூட நிறைய முறைகேடுகள் நடக்கின்றன என்கிறார்கள்.

இதுபோன்ற முறைகேடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கிறார்களாம்; பக்தர்கள் தட்டிக் கேட்டாலும், ஒரு பலனும் இல்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்’’ என்றார் நாரதர்.
‘‘கும்பகோணம் பக்கத்தில் உள்ள கொட்டையூர் கோடீஸ்வரர் கோயிலிலும் ஏதோ பிரச்னை என்று கேள்விப்பட்டோமே?’’
‘‘உலகப் புகழ்பெற்ற மகாமகத் திருவிழாவில் கலந்துகொள்ளும் பிரசித்தி பெற்ற கோயில் கோடீஸ்வரர் கோயில். வருடம்தோறும் 10 நாட்கள் பங்குனி உத்திர பிரம்மோற்ஸவம் நடைபெற்ற கோயில் இது. ஆனால், கடந்த 25 வருடங்களாக பங்குனி உத்திரத் திருவிழா நடத்தப்படவே இல்லை. இது பக்தர்களிடையே பெருத்த வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.’’
‘‘சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் இணைக் கோயில்தானே அது?’’

‘‘ஆமாம். பாடல்பெற்ற இந்தத் திருக்கோயில் 1300 வருடங்களுக்கும் மேலான பழைமை வாய்ந்தது. அருணகிரிநாதர், வள்ளலார் போன்ற அருளாளர்கள் போற்றிப் பாடிய தலம். இந்தத் தலத்தில் ஏரண்ட ரிஷி தவம் இயற்றி இருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடுவது உண்டு. ஒருகாலத்தில் நித்திய பூஜைகளுடன் மாதாந்திர, வருடாந்திர திருவிழாக்களும் நடைபெற்றதாக அங்கிருக்கும் ஊர்ப் பெரியவர்கள் சொல்கிறார்கள். கல்வெட்டுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால், இப்போது அந்தப் பிரசித்தி பெற்ற திருவிழா நடைபெறாதது ஏன் என்பது புரியாத புதிராக இருப்பதாகவே பக்தர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.’’
‘‘அதானே..? பிரம்மோற்ஸவம் நடத்துவதில் அப்படி என்னதான் பிரச்னையாம்?’’
‘‘அதுதான் தெரியவில்லை. இத்தனைக்கும் கொடியேற்றத்துக்கான கொடி மரம் செப்புக் கவசம் போட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், உற்ஸவ மூர்த்தி விக்கிரஹங்கள் அனைத்தையும் சுவாமிமலை கோயிலுக்குக் கொண்டு சென்று வைத்துவிட்டார்கள். சுவாமி புறப்பாட்டுக்காக இருக்கும் மர வேலைப்பாடுகள் நிறைந்த வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் பழுதுபட்ட நிலையில் இருப்பதைக் காணச் சகிக்கவில்லை. சுவாமியும் அம்பாளும் எழுந்தருளும் தேர்கள் கூடப் பழுது பார்க்கப்பட்டு, உபயதாரர் உதவியுடன் தகரக் கொட்டகை அமைத்துப் பாதுகாத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை வெள்ளோட்டம்கூட விடவில்லை’’ என்ற நாரதரிடம் நாம் ஏதோ கேட்க யத்தனிப்பதற்குள் அவரே முந்திக்கொண்டு,
‘‘இது பற்றிக் கோயில் நிர்வாகத்திடம் பேசினீர்களா என்றுதானே கேட்கப் போகிறீர்கள்? இப்போது எனக்குக் கொஞ்சம் அவசர ஜோலி இருக்கிறது. அடுத்த முறை வரும்போது உமக்கு இதற்கான ஃபீட்பேக்கை நிச்சயம் தருகிறேன்’’ என்றபடியே சட்டென்று காணாமல் போனார் நாரதர்.
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்
க.சதீஷ்குமார்