Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
முன்னோர்கள் சொன்னார்கள்
முன்னோர்கள் சொன்னார்கள்

7-க்கு உடையவன் பாப கிரகத்தோடு இணைந்து செவ்வாயின் பார்வை பட்டு 2-ல் இருந்தால், மாற்றான் வாயிலாக குழந்தையை ஈன்று எடுப்பாள் என்கிறது ஜோதிடம் (தாரேசிலரேபாபயுதே...) கணவன் இருந்தும் தாம்பத்யத்தில் மகிழ்ச்சி இருந்தும் பரபுருஷனிடம் ஈர்ப்பு ஏற்பட்டு குழந்தையை ஈன்றெடுக்கும் அளவுக்கு நெருக்கத்தை விரும்புவாள். தாம்பத்யத்தை அதாவது கணவனிடமிருந்து கிடைக்கும் சந்தோஷத்தை சுட்டிக்காட்டுபவன் ஏழுக்கு உடையவன்.

அவனுக்கு வெப்பக் கிரகத்தின் சேர்க்கையும் செவ்வாயின் பார்வையும் 7-க்கு உடையவனின் இயல்புக்கு மாறாக செயல்பட வைக்கிறார்கள். வெப்ப கிரகத்தின் சேர்க்கையும் செவ்வாயின் பார்வையும் வலுப்பெற்று, வலுக்கட்டாயமாக பரபுருஷனின் ஆர்வத்தை உண்டு பண்ணி சிந்தனையை திசை திருப்பிவிடுகிறார்கள். அவ்விரு கிரகங்களின் உந்துதலில் மனம் விஷேபத்தை (தடுமாற்றத்தை) அடைந்து, சூழலையும் தனது தகுதியையும் மறந்து பண்பற்ற செயலில் சங்கோஜமில்லாமல் இறங்க வைத்து குழந்தையைப் பெற வைக்கிறார்கள். வெளியுலகத்துக்குத் தெரியாமல் இருந்தாலும், அவளுடைய மனசாட்சியானது அவளுடைய ஈனச் செயலைச் சுட்டிக்காட்டுவதால், குடும்பத்தில் நிறைவு இருந்தாலும், அவளை மனநிம்மதி இழந்து தவிக்கச் செய்கிறது.

குடும்பஸ்தானத்தில் (2-ல்) இருப்பதால், குடும்பச் சூழலை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் அளவுக்கு அவளது குற்ற உணர்வு வளர்ந்து அமைதியைக் கெடுத்துவிடும். இங்கு 7-க்கு உடையவன் சுப கிரகமானாலும் அசுப கிரகமானாலும் 7-க்கு உடைய பலனை (தாம்பத்யச் செழிப்பை) அளிப்பதில் சுணக்கமுறமட்டாள். அசுப கிரகத்தின் சேர்க்கையும் பார்வையும் திசை திருப்பிவிடுவதால், தன் வசமிழந்து அவர்களது வழிகாட்டுதலில் தனது சுகத்தை தானே இழக்கும்படி செய்துவிடுகிறார்கள். தன் விரலைக் கொண்டே தன் கண்ணை குத்திக்கொள்வதுபோல் அமைந்து விடுகிறது. இரண்டும் (குடும்பஸ்தானம்) ஏழும் (தாம்பத்யத் தின் செழிப்பு) ஒன்றுக்கொன்று 6-ம் 8-ம் ஆக அமைவதால், அந்த இரண்டு பாவாதிபதிகள் முழுபலத்தை அளிப்பதில் தகுதி இழந்து விடுகிறார்கள்.

இணையைச் சேர்க்கும் பிரபலங்கள் எச்சரிக்கையோடு செயல்பட்டால், விருப்பமில்லாத இணைப்பைத் தவிர்த்து, விபரீத பலன் ஏற்படவிடாமல் செய்துவிடலாம். தங்களது சிற்றறிவுக்கு எட்டியவாறு விளக்கம் அளித்து, அதை மக்களை நம்ப வைக்க விஞ்ஞான விளக்கமாகக் காட்டிக் கொண்டு, இரண்டில் இருக்கும் கிரகத்தை (7-க்கு உடையவனை) குரு பார்க்கிறார், சுக்கிரன் பார்க்கிறான், இரண்டுக்கு உடையவன் வலுவாக இருக்கிறான், லக்னத்துக்கு உடையவன் உச்சம் பெற்று விளங்குகிறான், இங்கு கஜகேசரி யோகம் இருக்கு, மஹாபுருஷ யோகம் இருக்கு, குழந்தைச் செல்வம் நிறைய இருக்கு, இருவருக்கும் தீர்க்க ஆயுள் இருக்கு... இப்படிச் சம்பந்தமில்லாத விஷயங்களை அடுக்கடுக்காக வெளியிட்டு, ஆராய்ந்து பதில் சொல்லுபவன் போல் காட்டிக்கொள்ளும் பிரபலங்களும் நிறைய இருக்கிறார்கள். இந்தத் தோஷத்துக்கு முருகனை வணங்கினால் போதும், விலகி விடும்; சுதர்சன ஹோமம் செய்தால் விலகிவிடும் என்று ஜோதிடத்துக்குத் தொடர்பு இல்லாத இறை வழிபாடுகளை ஏற்க வைத்து, அப்பாவி மக்களை அல்லலில் ஆழ்த்துபவர்களும் உண்டு. ஏதாவதொரு இறை வழிபாடு ஜோதிடத்தில் தென்படும் விபரீதங்களுக்குப் பரிகாரமாக மாறிவிடும் என்றால், ஜோதிடம் பொய்த்துவிடுமே!

முன்னோர்கள் சொன்னார்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இறைவழிபாட்டை ஏற்காதவன் துயரத்தைச் சந்திப்பான், மற்றவர்கள் சந்திக்க மாட்டார்கள் என்றாகிவிடும். ஜோதிடத்தை விளக்க வந்த பிரபலம் அதை விளக்காமல், வழிபாட்டின் உயர்வைப் பிரகடனப்படுத்துகிறார் என்று ஆகி விடும். அதுமட்டுமல்ல, கடவுள் வழிபாட்டைப் பரிந்துரைப்பவர்கள் அத்தனை பேரும் ஜோதிடம் கற்காமலே பிரபலங்களாக மாறி விடலாம். நாமும் ஏதோ ஒரு இறைவழிபாட்டைத் தினமும் தொடர்ந்து வந்தால், அதன் வாயிலாக ஜோதிடம் சுட்டிக் காட்டும் விபரீதங்களை அகற்றிவிடலாம். பிரபலங்களை அணுக வேண்டிய தேவையே இருக்காது. இஷ்ட தேவதை, குல தேவதை, கிராம தேவதை போன்று ஏதேனும் வழிபாடு செய்தால் போதும், ஜோதிடம் சுட்டிக்காட்டும் விபரீதங்கள் அகன்றுவிடும் என்று இந்த விஞ்ஞான யுகத்திலும் பகுத்தறிவு வாதமாகவும் யுக்தி வாதமாகவும் பரிகாரம் சொல்லி, தனது ஜோதிட அறிவைத் தக்க வைக்கும் சில பிரபலங்கள் தென்படுவது அதிசயமாக இருக்கிறது.

விஞ்ஞானம் ஒரு பக்கம் குழந்தையின்மைக்குத் தீர்வு சொல்கிறது; ஜோதிடம் மறுபக்கம் இறை வழிபாட்டின் துணையோடு குழந்தையின்மைக்குத் தீர்வு சொல்லுகிறது. இரண்டும் வெற்றி பெறவில்லை. ஆனால், அவ்விருவருக்கும் சமுதாயத்தில் முதல் இடம் உண்டு. முறையான படிப்பும் தேர்ச்சியும் இருந்தால் நேர் வழியில் தீர்வு காணும் திறன் இருக்கும். அப்படியில்லாதவர்கள் பிரபலங்களாகத் திகழ்வதும், அவர்களை நாம் அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் நமது துரதிருஷ்டம். ஜோதிடத் தகவல்களை நகைச்சுவைக்காக ஏளனம் செய்பவர்களும் பிரபலங்களில் ஊடுருவியிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொள்ள நம்மால் முடிவதில்லை. அதன் விளைவாகத்தான் விவாகரத்து பெற்றவர்களும், குழந்தையின்மையால் வாடுபவர்களும் இன்றைக்கு அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறார்கள்.

இந்த ஆண் ஜாதகத்தில் மனைவியோடு நிற்காமல் மற்றொருத்தியோடு மறைமுகத்தொடர்பு இருப்பதை ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பெண் ஜாதகத்தில் கணவனைத் தவிர, வேறு ஒருவருடன் மகப்பேறை ஏற்கும் எண்ணம் இருப்பதை ஜோதிடம் சுட்டிக்காட்டுகிறது. இரண்டு ஜாதகங்களிலும் செவ்வாய் தோஷம் இருந்தால் பொருந்தும் என்று தப்பான கோட்பாட்டில் இணைய வைப்பது போல், இரண்டிலும் மாற்றாள், மாற்றான் தொடர்பு இருப்பதால் பொருந்தும் (தோஷஸாம்யம் இருக்கு) என்று இணைய வைப்பதும் பிரபலங்களின் அறியாமை. இரண்டு ஜாதகங்களிலும் (ஆண்-பெண்) செவ்வாய் தோஷம் இருந்தால், அது பொருந்தும், சேர்க்கலாம், அவர்கள் அமோகமாக வாழ்வார்கள் என்ற கருத்தில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. உடன்பாடு இல்லாத இதைச் சான்றாக வைத்து, இரண்டிலும் இடையூறு தென்பட்டால் தோஷ ஸாம்யம் இருப்பதாக நினைத்து சேர்த்து வைக்கும் பிரபலங்கள் தென்படுகிறார்கள். இல்லாத சான்றை இருப்பதாக நினைத்து தனது அறியாமை இணையை சேர்த்து வைக்க உதவியது. அப்படிச் சேர்த்து வைத்த தம்பதிகளில் பலர் வலுக்கட்டாயமாக விவாகரத்தை ஏற்று, மறுமணத்தில் இணைந்தவர்கள் நிறையப் பேர் சமுதாயத்தில் தென்படுகிறார்கள்.

சிந்தனை வளமும், நல்ல ஒழுக்கமும், செல்வாக்கும், பெருந்தன்மையும் இணைந்த புருஷ ஜாதகத்தோடு சேர்த்து வைத்தால், அவனது (கணவனது) நற்குணங்களின் அருமை பெருமைகளானது, மாற்றானில் இணையவேண்டும் என்ற அவளுடைய ஆர்வத்தைத் துறக்க வைத்துவிடும். தவறு செய்தவள் தண்டனை பெற்று சிறையில் கட்டுப்பாட்டோடு இருக்க நேரும்போது காலப் போக்கில் திருந்திவிடுவாள்; வெளியே வந்தவுடன் திரும்பவும் தவறு செய்யமாட்டாள். கணவனின் கண்காணிப்பும் எச்சரிக்கையும் அவள் மனதில் இருக்கும் விஷேபத்தை (தடுமாற்றம்) இல்லாமல் செய்துவிடும் என்று சொல்லும் ஜோதிடம். மனைவியின் மனப்போக்கை எடை போட்டு, அதைச் செயல்படவிடாமல் தடுத்து தானாகவே திருந்த சந்தர்ப்பம் அளிப்பதை வலியுறுத்தும் ஜோதிடம்.

கட்டங்களில் அமைந்த கிரகங்களை வைத்துக் கொண்டு ஆராய்ந்து அவளது அல்லது அவனது மனப்போக்கைத் துல்லியமாக எடைபோடும் திறமையை பிரபலங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் (மனப்போக்கின் அடிப்படையில்) பொருத்தத்தை இறுதி செய்ய வேண்டும். மனப்போக்கை எடைபோடும் தகுதி 10 விதமான பொருத்தங்களுக்கு இல்லை. சிந்தனை வளம், ஆயுள், குழந்தைச் செல்வம், செல்வச்செழிப்பு, புகழ், மகிழ்ச்சி, வேலை வாய்ப்பு - இவற்றை 10 பொருத்தங்கள் சொல்லாது. கிரகங்களுடைய அமைப்பின் அடிப்படையில் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும். இரு ஜாதகங்களில் தென்படும் தகுதிக்கு (நல்லதோ கெட்டதோ ஆனாலும்) நட்சத்திரப் பொருத்தங்கள் (10 பொருத்தங்கள்) உகந்தவாறு செயல்படும். பத்து பொருத்தங்கள் தன்னிச்சையாக இறுதி முடிவெடுக்கத் தகுதியற்றவை ஆகும். கிரகங்களின் முடிவுக்கு ஒத்தவாறு நட்சத்திரப் பொருத்தங்கள் பலனளிக்கும்.

பிறந்த வேளையை (லக்னம்) அப்படியே அகற்றிவிட்டு, சந்திரன் இருக்கும் ராசியின் அடிப்படையில் பலன் சொல்லும் பிரபலங்கள் பலர் வாரா வாரம் மாறுபட்ட பலனை விளக்குவதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. ராசி நேயர்களே! தங்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்; கணவன் - மனைவி உறவு சுமுகமாக இருக்கும்; எதிர்பாராத பணவரவு இருக்கும்; வேலை செய்யுமிடத்தில் மேலதிகாரியின் பாராட்டு இருக்கும்; வர வேண்டிய கடன்கள் வந்து சேரும்; வெளிநாட்டுப் பயணம் இருக்கும்; வேலையில் உயர்வு இருக்கும்; நண்பர்களது ஒத்துழைப்பு இருக்கும்;

மகான்களின் சந்திப்பு இருக்கும்; பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்; புது வீடு வாங்குவீர்கள்; வரும் செவ்வாய், புதன், வியாழன் - இந்த மூன்று நாட்கள் சந்திராஷ்டம நாள். அந்த நாளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 10-ல் தென்படும் ராகுவின் இடையூறை விலக்க காளஹஸ்தி போய் வரவும். இடையூறு அகன்றுவிடும்... - இது போன்ற விளக்கங்கள் ஜோதிடத்தில் வராது. இது பிரபலங்களின் சொந்த சிந்தனை வளத்தில் உதித்தவை. அதை அவர் ஜோதிடத்தோடு இணைத்துக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் பாமரர்களுக்குத் தெரியாததால், பிரபலங்களைக் கொண்டாடுகிறார்கள்.

6-க்கு உடையவன், இரண்டுக்கு உடையவன், ஏழுக்கு உடையவன்... இவர்களில் ஒருவர் 4-ம் வீட்டில் இருந்தால், கணவன் பிறர் மனைவியிடம் இன்பம் காண ஏங்குவான் என்கிறது ஜோதிடம் (ஏகோ க்ரஹஸ்தேஷு சதுர்த்தராசௌ...) தன் மனைவியிடம் திருப்தியடையாதவன் மாற்று வழியை ஏற்பான். இரு மனமும் ஒரு மனமானால் கிடைத்ததில் திருப்தியடைந்துவிடும்; வேறொன்றைத் தேடும் எண்ணம் தலைதூக்காது. பொருத்தம் பார்க்கும்போது இருவர் மனமும் ஒன்றாக இணைவதற்கு உரிய கிரக அமைப்பு இருக்கிறதா என்று கிரகங்களின் அமைப்பைப் பார்த்து உறுதி செய்துகொண்டு இணை சேர்த் தால், கணவன் தன் மனைவியிடத்தில் திருப்தி கண்டுவிடுவான்; மற்றொருத்தியை விரும்பும் எண்ணம் மறைந்துவிடும் என்கிறது ஜோதிடம்.

4-ம் வீடு உலகவியல் சுகத்தைச் சுட்டிக்காட்டும். அதில் 6-க்கு உடையவன் அமர்ந்தால், சுகத்தை இழக்க வைப்பான். 6-க்கு உடையவன், 2-க்கு உடையவன், 7-க்கு உடையவன் - இவர்களோடு 4-க்கு உடையவனின் தொடர்பு அற்று இருப்பதால், உலக சுகத்தின் முழுமையை (தாம்பத்யம்) எட்ட முடியாமல் போகும்; திருப்தி ஏற்படாமல் மாற்றான் மனைவியை அடையும் விருப்பம் ஏற்பட்டுவிடும். 11-க்கும் 3-க்கும் பார்வை இருக்காது. 6-ம் வீடும் 4-ம் வீடும் 11-ம் (6-க்கு 4) வீடு மற்றும் 3-ம் வீடாக (4-க்கு 6) இருப்பதால், பார்வை என்கிற நோக்கில் தொடர்பு அகன்றுவிடும். 2-க்கும் 4-க்கும் தொடர்பு அற்று இருக்கும். 7-க்கும் 4-க்கும் தொடர்பு இருக்காது. ஒன்றுக்கொன்று பார்வை இல்லாத நிலையில் நிறைவை எட்டாமல் போய்விடும் என்பதால், பரஸ்த்ரீயைத் தேடும் எண்ணம் வந்துவிடும் என்று விளக்கமளிக்கும் ஜோதிடம். தாம்பத்ய நிறைவுக்கு பரஸ்த்ரீக மனம் இடையூறு.

சந்தோஷத்தில் மனம் நிறைவை எட்டாத இடத்தில், அந்தத் தவறு தலைதூக்கும். மனைவியிடம் அடக்கம், ஒழுக்கம், புருஷனை திருப்திப்படுத்தும் அளவுக்கு உடல், உள்ளம் இரண்டின் திறமை, பண்பைப் பேணிக்காக்கும் ஆர்வம், மனமுவந்து செயல்படும் பாங்கு இவை கிரஹ அமைப்பில் தென்பட்டால், அவள் கணவன் பரஸ்த்ரீக மனத்தில் நுழைய மாட்டான். பெண் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, கிடைத்ததில் திருப்திப்படும் அளவுக்கு மனம் படைத்தவளாக இருப்பதை ஊர்ஜிதம் செய்ய வேண்டும். அதே வேளையில் இருவருடைய மனமும் ஒன்றாக இணையும் தகுதியும் இருக்க வேண்டும். அந்த  இரண்டும் கிரக அமைப்பில் இருப்பதை ஊர்ஜிதம் செய்தால் கணவன் வேறொருத்தியைத் தேடி அலைய மாட்டான் என்கிறது ஜோதிடம். பண்டைய முனிதம்பதிகளும் அரச தம்பதிகளும் அப்படி இருந்தார்கள். அது அன்றைய பதிவ்ரத்யத்திற்கு அரணாக அமைந்தது. பண்பை உதறித் தள்ளிப் புலன் வேட்கையைத் தணிப்பது குறிக்கோளாக மாறிய நிலையில், இந்தத் தவறுகள் சட்டவடிவம் பெற்று, சமுதாயம் ஏற்றுக்கொள்ளும்படி ஆயிற்று. அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதுதான் ஜோதிடத்தின் குறிக்கோள். அதற்கு பண்பின் பங்கு ஒத்துழைக்கிறது.

- தொடரும்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism