
அருட்களஞ்சியம்

தீராத விளையாட்டுப் பிள்ளை! -பி.ஸ்ரீ..
ஆழ்கடல்சூழ் வையகத்தார் ஏசப்போய், ஆய்ப்பாடி
தாழ்சூழலார் வைத்த தயிருண்டான், காணோடீ!
தாழ்சூழலார் வைத்த தயிருண்ட, பொன்வயி(று), இவ்
ஏழுவதும் உண்டும் இடம் உடைத்தால்! சாழலே’’
- திருமங்கையாழ்வார்
ஏசப் போகிறார்களே! தெரியாதா? தெரிந்தும் அப்படிச் செய்வானேன்!
அந்தக் கவலை அவனுக்கில்லை. ‘‘தயிர் போய்விட்டதே!’’ என்ற கவலை அவளுக்குமில்லை. ‘அப்படியாவது அந்த முகத்தைப் பார்க்கக் கிடைத்ததே!’ என்ற திருப்தி பரஸ்பரமாயிருக்கிறது. அவனுக்கு அந்த விளையாட்டில் பரம திருப்தி. அவன் வயிறு குளிர, அவள் நெஞ்சும் குளிர்கிறது. தீராத விளையாட்டு; ஓயாத தொல்லை; ஆனால் குறையாத திருப்தி.
ஏதோ ஒரு காலத்தில் நடந்ததாம் கோகுலத்திலே அந்த விளையாட்டு, எக்காலத்திலும் உலகம் ஏசும்படி, உலகத்தார் ஏசவேணுமென்றே போய்ச் செய்த காரியம் போலிருக்கிறதாம்.
வாஸ்தவம்தானே; இக்காலத்திலும் அந்த விளையாட்டுப் பிள்ளையை- அந்தக் கள்ளக் கிருஷ்ணனை - ஏசுவோர் இல்லையா?
ஆனால் தயிருண்ட அந்த வயிறு, தயிரை மட்டுமா உண்டது? தயிர்க்காரியின் உள்ளத்தையும் உண்டது; உயிரையும் உண்டது. தயிர், தயிர்க்காரி, ‘கள்ளப் பிள்ளை’யென்று ஏசினவர் - எல்லாரையும் உண்டது.
என்ன பசி! ஆ, என்ன வயிறு!
வாய் குளிர ஏசினவரையும் உண்டது; வயிறு எரிய ஏசினவரையும் உண்டது. ஏசினவர், ஏசுகிறவர், ஏசப் போகிறவர்களையும் உண்டுவிட்டதாம். அந்த ‘ஆய்ப்பாடி’யோடு, அகில உலகத்தையும் உண்டதாம், ‘தயிருண்ட பொன் வயிறு.’
ஏன்? எப்படி?

பழைய உலகம், புதிய உலகம் - ஏசும் உலகம், ஏசாத உலகம் - எல்லாவற்றையும் பட்சபாதமில்லாமல் வைத்து இரட்சிக்க.
உலகங்களையெல்லாம் உண்டும், பசி தீர்ந்தபாடில்லை. அந்தத் தீராத விளையட்டுப் பிள்ளையின் வயிற்றில் இன்னும் இடம் இருக்கிறதாம். வேண்டிய இடம் இருக்கிறதாம், இன்னும் எத்தனை எத்தனை உலகங்கள், அண்டங்கள் தோன்றினாலும் அவற்றையெல்லாம் ஒருங்கே வைத்து இரட்சிப்பதற்கு.
தோன்றிய உலகம், தோன்றுகிற உலகம், தோன்றப் போகும் உலகம், தோன்றாத உலகம் - எல்லாவற்றையும் வாரி உண்டு நிறையாத வயிறு. என்றென்றும் நிறையாத வயிறு.
நிறையாத வயிறு; எனினும் குறையாத திருப்தி - ஆம்; இந்தத் தீராத விளையாட்டிலே! உலக சிருஷ்டி, உலகரட்சை, உலக அழிவு எல்லாம் இந்த விளையாட்டே!
ஆக்கத்துக்காகவே அழிவு; அழிவுக்காகவே ஆக்கம்; இரட்சைக்காகவே ஆக்கமும் அழிவும்! ஆ ஆ... என்ன விளையாட்டு!
கண்ணன் தயிரைக் கொட்டியும் உண்டும் விளையாடுவது போன்றது, என்றும் தீராத இந்த முத்தொழில் - விளையாட்டும். அறக் கருணையும் விளையாட்டே; மறக் கருணையும் விளையாட்டே; சாதலும் திருவிளையாடல்; காதலும் திருவிளையாடலே.
எவ்வளவு பெரிய தத்துவத்தை - எவ்வளவு பெரிய சமய உண்மையை - எவ்வளவு எளிமையாகவும் வேடிக்கையாகவும் வெளியிடுகிறது கள்ளக் கிருஷ்ணன் விளையாட்டு!
நரகாசுரவதம் செய்து உலகத்துயர் தீர்த்துத் தீபாவளி கொண்டாடுவதும் இந்தத் தீராத திருவிளையாட்டின் ஓர் அம்சமே.
இன்றும் இந்த விளையாட்டு நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்தத் தீராத விளையாட்டு, நமது காலத்தில் உலகத்தை நரகமாக்கும் அசுர சக்திகளையும் எப்படியாவது திருத்திவிடும் அல்லது தீர்த்துவிடும் என்பது திண்ணம்.
வயிற்றில் இடமும் இருக்கிறது; ஜீரண சக்தியும் இருக்கிறது!
தீராத விளையாட்டில், தீராத காதலும் இருக்கிறதல்லவா?!
** 1940 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...

கூற்றாக வந்த தாயார்!
‘முகூர்த்தம் நெருங்கிவிட்டது’ என்று அவசரப்படுத்துகிறார்கள் சோதிட சாஸ்திரிகள். உடனே வசிஷ்டர், ‘சக்ரவர்த்தி எங்கே? இன்னும் வரவில்லையே!’ என்று நினைத்து, அருகே இருந்த சுமந்திரனை நோக்கி, ‘‘தசரத சக்ரவர்த்தியை உடனே அழைத்துக்கொண்டு வா’’ என்று சொல்லி அனுப்பினார்.
சுமந்திரன் தசரதருடைய அரண் மனைக்கு விரைந்து போனான். அங்கே சக்ரவர்த்தியைக் காணவில்லை. கைகேயி யின் அரண்மனையில் அவர் இருப்பதாக அங்கே இருப்பவர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டான். அப்படியே கைகேயி மாளிகைக்கு ஓடினான்.
அங்கே பணிப்பெண்கள் மூலமாகச் சக்ரவர்த்தியிடம், ‘முகூர்த்தம் நெருங்கி விட்டது; தப்பிவிடக் கூடாதே!’ என்று செய்தி தெரிவிக்கச் சொன்னான்.
அவர்களோ பளிச்சென்று கைகேயியிடம் ஓடிச் செய்தி சொல்கிறார்கள். அவள் சுமந்திரனை நோக்கி, ‘‘பிள்ளையை அழைத்துக்கொண்டு ஓடி வா!” என்று கட்டளையிடுகிறாள்.

இவ்வளவு பரபரப்பையும் செய்யுளில் பார்க்கலாம்.
விண்தொட நிவந்த கோயில் வேந்தர்தம் வேந்தன் தன்னைக்
கண்டிலன், வினவக் கேட்டான், கைகயள் கோயில் நண்ணித்
தொண்டைவாய் மடந்தை மாரில்சொல்ல, மற்(று) அவரும் சொல்லப்
பெண்டிரில் கூற்றம் அன்னாள் ‘‘பிள்ளையைக் கொணர்க” என்றாள்.
இந்தச் செய்யுளைப் பாடப் பாட, ‘முகூர்த்தம் தப்பிவிடலாகாதே’ என்ற சுமந்திரனுடைய பதற்ற மும், ‘நான் பெற்ற வரம் தப்பிவிடலாகாதே!’ என்ற கைகேயியின் ஆத்திரமும் அற்புதமாய்ப் புலனாகின்றன.
கைகேயியின் ஆத்திரத்துக்கு உண்மையான காரணம் இன்னதென்று இப்போது சுமந்திரனுக்குத் தெரியாது. அவளும் ‘முகூர்த்தம் தப்பிவிடலாகாதே; ராமன் தலையில் விரைவிலே மகுடம் ஏறிவிட வேணும்!’ என்று நினைப்பதாகவே சுமந்திரன் நினைக்கிறான். இவன் உள்ளத்திலே பெருமகிழ்ச்சி பொங்குகிறது- ‘சிறிய தாயானாலும் என்ன பேரன்பு!’ என்று.
‘‘ராமனை அன்புடன் வளர்த்து வந்த கைகேயி அம்மாளே முடி சூட்டவும் அழைத்திருக்கிறாள்; அவளுடைய மகிழ்ச்சியைத்தான் எப்படி வர்ணிக்க முடியும்?” என்று பேசிக்கொண்டவர்கள் ஒருபுறம்; வேறொரு புறம், ‘‘ராமன் முடிசூடி நமக்குப் பாது காப்பும் இன்ப வாழ்வும் அளிக்கப் போகிறான்; இந்த ராஜ்யத்திலே புது யுகம் பிறக்கப் போகிறது!” என்று குதூகலிக்கிறது மக்கள் கூட்டம்.
இப்படியெல்லாம் பொங்கிப் பெருகும் குதூகலத்துக்கு இடையே செல்லும் ராமனின் ரதம் வீதி வழியாகப் போய்த் தசரதனது அரண்மனையை அடைகின்றது. வீதி நிறைந்து போகும் அந்தச் சுந்தர மணித்தேர் சக்ரவர்த்தியின் அரண்மனையை அடைந்ததும், ராமன் அங்கே தந்தையைக் காணாத வனாய்க் கைகேயியின் அரண்மனைக்கு உடனே போகிறான். ‘தாய் வேறு, சிறிய தாய் வேறு’ என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாததால் கைகேயியைத் தாயாகவே மதிக்கிறான்.
கைகேயி அவனை எதிர்கொண்டு வருகிறாள். எத்தகைய மனநிலையோடு?
‘நாயகன் உரையான் வாயால்;
நான்இது பகர்வென்!’ என்னாத்
தாயென நினைவான் முன்னே
கூற்றெனத் தமியள் வந்தாள்.
சக்ரவர்த்தி உள்ளே மூர்ச்சித்துக் கிடக்கிறார் அல்லவா? ராமன் அங்கே போய்த் தந்தையைப் பார்த்துவிடக்கூடாது என்பது கைகேயியின் கவலை. தசரதனும் ராமனும் சந்தித்துச் சம்பாஷித்தால் காரியம் கெட்டுப்போகும் என்பது கைகேயியின் பயம். எனவே, ‘நாயகன் வாக்கை நானே தெரிவிக்க வேண்டும்; அவர் தம் வாயால் சொல்லமாட்டார்!’ என்று தனக்குள் தானே சொல்லிக்கொண்டு வரும் கைகேயி, கூற்றாக வரும் கொடுமையின் வடிவம் என்கிறான் கவிஞன்.
உடலையும் உயிரையும் வேறு பிரித்துக் கூறுபடுத்துவது கூற்று; இந்தப் பெண் யமனும் தசரதரையும் அவருக்கு உயிரான அருமை மகனை யும் வேறு வேறாகப் பிரித்துவிடப் போகிறாளல்லவா?
பண்பின் வடிவம்
கைகேயியைக் கண்டதும் ராமன் பெரும் பணி வும் பக்தியும் தோன்ற வெகு நயமாக வணங்கி நிற்கிறான்.
வந்தவள் தன்னைச் சென்னி மண்ணுற வணங்கி, வாய்த்த
சிந்துரப் பவளச் செவ்வாய் செங்கையில் புதைத்து, மற்றைச்
சுந்தரத் தடக்கை தானை மடக்குறத் துவண்டு நின்றான்,
அந்திவந்(து) அடைந்த தாயைக் கண்டஆன்
கன்றின் அன்னான்.
தலை நிலத்தில் படும்படி ராமன் அவளைத் தண்டன் இடுகிறான். பிறகு எழுந்து, பவளம் போன்ற அழகிய வாயைச் சிவந்த அழகிய கை ஒன் றால் பொத்திக்கொண்டு, அழகான மற்ற கையால் ஆடையை மரியாதையாகச் சிறிது மடக்கி உள்ளம் நெகிழ்ந்து நிற்கிறான். நீண்ட நேரம் பிரிந்திருந்து மாலைப் பொழுதில் வந்து சேர்ந்த தாய்ப் பசுவைக் கண்ட கன்றை ஒத்திருக்கிறது அவனது மனநிலை ‘என்ன அன்பு! என்ன அடக்கம்! என்ன பண்பு! என்ன அழகு!’ என்று நமக்கும் உள்ளம் நெகிழ்ந்து போகிறதல்லவா?

ஆனால், இவ்விதமாக நின்ற ராமனைப் பார்க்கும் கைகேயி உள்ளம் சிறிதும் நெகிழவில்லை. கூற்றைப் போல் கொடுமை வாய்ந்த அவ்வுள்ளம் இரும்பைப் போல் வலிமை வாய்ந்ததாகக் காண்கிறது.
‘‘அப்பா! உன் தந்தை உன்னிடம் சொல்லக் கருதிய வார்த்தை ஒன்று உண்டு. நீ சொல்லலாமென்றால் சொல்லுகிறேன்!” என்று பீடிகையாக விநயமாய்ப் பேசுவதுபோல் பேசுகி றாள். என்ன கொடுமையினும் கொடுமை!
அதற்கு அவன், ‘‘அம்மா! தகப்பனாரே கட்டளையிட, அதைத் தாயாராகிய நீரே உமது வாயால் எனக்குச் சொல்ல வாய்க்குமானால், அது எனக்குக் கிடைக்கும் பெரும் பாக்கியமல்லவா?” என்று சொல்லி,
‘‘தந்தையும் தாயும் நீரே!
தலைநின்றேன், பணிமின்” என்றான்.
கைகேயி சொன்ன வார்த்தையைக் கேட்டு ராமன், ‘ஏதோ ராஜ்ய பரிபாலன விஷயமாகத் தந்தை புத்திமதி சொல்லக் கருதுகிறார். அந்த நல்வாக்கை தாயினும் சிறந்த கைகேயி மூலம் சொல்லச் செய்வது நலமென்றும் கருதியிருக்கிறார்’ என்றுதான் எண்ணியிருக்க வேண்டும்.
இந்த மனநிலையில் கைகேயியைத் தந்தையா கவும் தாயாகவும் ஒருங்கே பாவித்து அவளுடைய கட்டளையை நிறைவேற்ற ஒப்புக்கொள்கிறான் ராமன். என்ன வசீகர மனப் பண்பு!
கைகேயியின் உள்ளமோ ராமனுடைய இந்த வார்த்தைகளாலும் சிறிதும் அசையவில்லை. தன் கட்டளையை நிறைவேற்ற அவனே தயாராக இருப்பதாய்ச் சொல்லிவிட்டானே! அவ்வளவுதான், கைகேயிக்கு ஒரே துணிச்சல்!
இந்நிலையில் வார்த்தைகள் எப்படி வந்து விழுகின்றன என்று பார்க்கலாம்.
‘ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீபோய்த்
தாழ்இருஞ் சடைகள் தாங்கித் தாங்கருந்
தவம்மேற் கொண்டு
பூழிவெங் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ்இரண்(டு) ஆண்டின் வாஎன்(று) இயம்பினன்
அரசன்” என்றாள்.
பரதன் நாடாள, ராமன் காடாள வேண்டும் என்ற கொடுமையைத்தான் கைகேயி எவ்வளவு கொடுமையான விவரங்களுடன் தெரிவிக்கிறாள்!

எனினும், ‘புழுதி நிறைந்த கொடிய பாலைவனத்தை அடைந்து’ என்று சொன்னதும் ‘தசரதன் வார்த்தையாக அல்லவா தெரிவிக்கிறோம்?’ என்று நினைவு வருகிறது. ஆகவே, ‘‘புண்ணியத் துறைகள் ஆடி, ஏழிரண்டாண்டின் வா” என்கிறாள். ‘பதினாலு வருஷமா?’ என்று ராமன் ஏங்கிப் போகாமலிருக்கவே ‘ஏழ் இரண்டு ஆண்டு’ என்றும், ‘நீ போய்.... வா’ என்றும் அரசன் சொன்னதாகக் குறிப்பு.
இப்படிக் கொடுமையாகவும் கபடமாகவும் கைகேயி கூறியதைக் கேட்டதும், ராமனது முக மண்டலத்தில் ஏதாவது மாறுதல் உண்டா? எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும் முகம், இப்போது வழக்கமான சந்தோஷத்தையும் சௌந்தரியத்தையும் வென்றுவிடுகிறதாம்.
இப்பொழு(து) எம்ம னோரால் இயம்புதற்(கு) எளிதோ? யாரும்
செப்பருங் குணத்(து)இ ராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு, பின்பு வாசகம் உணரக் கேட்ட
அப்பொழு(து), அலர்ந்த செந்தா மரையினை
வென்ற(து) அம்மா!
எப்போதும் ராமனுடைய முகம் அப்போது மலர்ந்த செந்தாமரைபோல் புத்தம் புதிய மகிழ்ச்சி யுடனும் அழகுடனும் விளங்குமாம். கைகேயி காட் டுக்குப் போகச் சொன்ன இப்போதோ, அப்போது மலர்ந்த செந்தாமரையையும் வென்று விடுகிறதாம்.
துயரத்தை வென்ற அருள்
தந்தை கட்டளை என்ற கைகேயி ராமனைக் காட்டுக்குப் போகச் சொன்னாளோ இல்லையோ, ராமனுக்கு இல்லாத மகிழ்ச்சியும், மகிழ்ச்சியால் பெருகும் வசீகர அழகும் வந்துவிட்டனவாம்.
அன்போடு தன்னை வளர்த்துவிட்ட கைகேயிக்கு ‘என்னதான் கைம்மாறு செய்யலாம்?’ என்று எவ்வளவோ உள்ளன்போடு ராமன் எண்ணிக் கொண்டிருப்பானென்று கருதலாம். இப்போதோ அவளுடைய உள்ளத்துக்கு உண்மையாகவே திருப்தி செய்யும்படியான சந்தர்ப்பம் வாய்த்து விட்டதல்லவா? இதை நினைக்க ராமன் அகத்தில் ஒரே அன்பு வெள்ளம்; ஆனந்தவெள்ளம்! அவ்வளவும் இப்போது முகத்திலே அலையெறிந்து அபூர்வ மலர்ச்சியையும் அழகையும் வசீகர சக்தியையும் காட்டிவிடுகின்றன.
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது உண்மையினும் உண்மை! ராமனது அற்புதமான முகமலர்ச்சிக்கும் அவனது ஒப்பற்ற அக மகிழ்ச்சியே காரணமாகும். ராஜ்ய ஆசையும் பதவி மோகமும் கொஞ்சமும் இடம் பெறாத உள்ளம், ‘தந்தையின் கட்டளையை மீறுவது எப்படி?’ என்றே ராஜ்ய பாரத்திற்கு இசைந்து நின்றதாம்.
ஆகவே, ராமன் கண்களில் கைகேயி இரக்கம் இல்லாதவளாய்க் காணப்படவில்லை; விசேஷ அருள் உடையவளாகவே, காணப்படுகிறாளாம்.
** 8.9.46, 6.10.46 மற்றும் 13.10.46 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...