தொடர்கள்
Published:Updated:

சுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்!

சுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்!
News
சுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்!

நரசிங்கபுரம்மஹேந்திரவாடி உமாசங்கரன்

சுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்!

ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா


சிங்க முகமும், பயங்கர உருவமும், அபய கரமும், கருணையும் கூடிய, எங்கும் நிறைந்திருக்கும் பெருமானே..! இவ்வுலகைக் காத்து, பாவங்களைக் களைந்து, விரைவில் பலன் தருகின்ற அன்னை லட்சுமியின் அருளோடு கூடிய லட்சுமி நரசிம்மா..! வரங்களைத் அள்ளித் தந்தருளும்!

மகாவிஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங் களில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பானது. ஆனால், பக்தன் கூப்பிட்டவுடன் வந்து அருள் செய்த அவதாரம் நரசிம்ம அவதாரம் ஒன்றுதான்.
அதேபோன்று, மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், பஞ்ச நாமாக்கள் மிகவும் புகழ்பெற்றவை. ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்னும் நாமாக்களே பஞ்ச நாமாக்கள்.

நரசிம்மர் என்றவுடன், சட்டென்று அஹோபிலம்தான் பலரின் ஞாபகத்துக்கு வரும். அங்கு ‘நவ நரசிம்மர்’ கோயில்கள் உள்ளன. ஹைதராபாத்துக்கு அருகில் யாதகிரி கோட்டா, வட்டபல்லா, மட்டப்பள்ளி போன்ற தலங்களும், சிம்மாசலம், கத்ரி, மங்களகிரி, பெஞ்சல கோணா ஆகிய ஆந்திர மாநிலத்தின் இன்னும்பிற தலங்களும், கர்நாடகத்தில் சென்னபட்னா, தமிழகத்தில் சோளங்கிபுரம், பழைய சீவரம், அந்திலி, சிந்தலவாடி, மங்கைமடம், திருக்குரவளூர், ஆவணியாபுரம், நாமக்கல், சிங்கப்பெருமாள்கோவில், பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரி, காட்டழகிய சிங்கர்கோவில், நரசிங்கபுரம், வேலூர் மாவட்டத்தில் உள்ள கத்தாழம்பட்டு (சிங்கிரி கோயில்) ஆகிய திருத்தலங்களிலும் புகழ்பெற்ற நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. இவற்றில், தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் அதிகம் பிரபலமாகாத, ஆனால் பக்தர்கள் தரிசித்துச் சிலிர்க்கும் ஓர் உன்னதத் திருத்தலம். நரசிம்மர் பெயரையே தாங்கி நிற்கும் ஒப்பற்ற திருத்தலம் இது.

இக்கோயில் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டு, காலவெள்ளத்தில் சிதிலம் அடைந்து, பிறகு சோழர்கள் காலத்திலும், விஜயநகர அரசர்கள் காலத்திலும் திருப்பணி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இக்கோயிலில், 14 கல்வெட்டுகள் படி எடுக்கப் பட்டுள்ளன. இதில் முதலாம் குலோத்துங்கன் காலத்திய இரண்டு கல்வெட்டுகளில், அவன் காலத்தில் ராமர், சீதை உற்ஸவ மூர்த்திகள் இந்தக் கோயிலுக்கு வழங்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன. ராமருக்கு உற்ஸவம் நடத்த அந்த மன்னன் சில தானங்களை அளித்த செய்தி யையும் அந்தக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

விஜயநகர அரசர்கள் காலத்தில் இக்கோயில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டுள்ளது. நரசிங்கபுரத்தைச் சுற்றியுள்ள 31 சிற்றூர்கள் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. 16-ம் நூற்றாண்டில் அரசாண்ட வீரவெங்கடாபதி தேவராயர், அச்சுத தேவ மகாராயர் காலத்தில் இக்கோயில் மிகவும் உன்னதமான நிலையில் இருந்திருக்கிறது.

சுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்!

நரசிங்கபுரத்துக்கு அருகில் உள்ள மப்பேட்டைச் சேர்ந்த தளவாய் அரியநாத முதலியார், விஜயநகர அரசர்களிடம் அமைச் சராகப் பணியாற்றினார். அவர் காலத்தில் இக்கோயிலுக்கும், மெய்ப்பேட்டில் (மப்பேடு) உள்ள ஸ்ரீசிங்கீஸ்வரர் கோயிலுக்கும் பல திருப் பணிகளைச் செய்ததாகத் தெரிகிறது.

கூவம் நதிக் கரையில் உள்ளது நரசிங்கபுரம். ஒருமுறை, கூவம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், வீடு வாசல் இழந்த ஊர் மக்கள் நரசிம்மஸ்வாமி கோயிலில்தான் தங்கவைக்கப்பட்டார்கள்.

ஒருகாலத்தில் உன்னத நிலையில் இருந்த இந்தத் திருக்கோயில், காலப்போக்கில் மிகவும் சிதிலம் அடைந்துவிட்டது. கோபுரங்கள், விமானங்கள் எல்லாம் செடிகொடிகள் முளைத்து விரிசல் கண்டதுடன், ஆண்டாள் சந்நிதியும் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.

ராஜ கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து, கோயில் புஷ்கரணியும் பாழ்பட்டுவிட்டது. சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, பல வருஷங்களாகவே கோயில் சிதிலம் அடைந்திருப்பதாகவும், நித்திய பூஜைகள்கூட சரிவர நடப்பதில்லை என்றும் ஊர்மக்கள் வருத்தத்துடன் தெரிவித் திருந்தார்கள். 

ஆனால், தன் திருக்கோயில் விரைவில் புதுப் பொலிவுடன் திகழவேண்டும் எனத் திருவுள்ளம் கொண்டுவிட்டார் நரசிம்மர். நரசிம்மர் மனம் வைத்தால் நடக்காததும் உண்டா?

ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, ‘ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மஸ்வாமி சேவா டிரஸ்ட்’ என்றொரு அமைப்பை ஏற்படுத்தி, பல அன்பர்களின் உதவியுடன் திருப்பணிகள் செய்து, சில ஆண்டு களுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஐந்து நிலை, 7 கலசங்களோடு கூடிய அழகிய ராஜ கோபுரம். உள்ளே நுழைந்ததும் கொடி மரம், பலிபீடம்; கடந்து உள்ளே சென்றால், முதலில் 16 நாகங்களைத் தன் உடலில் தரித்துக் கொண்டிருக்கும் கருடாழ்வாரை தரிசிக்கலாம். நாகதோஷம் உள்ளவர்கள், சுமார் 4 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தரும் இந்த கருடாழ்வாரை வழிபடுவதால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.

அடுத்து, கோயில் முன் மண்டபத்தைக் கடந்து, கருவறையில்  நரசிம்மரைத் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் 12 ஆழ்வார்களும், சிறிய திருவடியான ஆஞ்சநேயரும் தரிசனம் தருகின்றனர். கோயிலை வலம் வரும்போது, மரகதவல்லித் தாயாரையும், ஆண்டாளையும் தரிசிக்கலாம். இக்கோயிலில் அழகிய கல்யாண மண்டபம் ஒன்றும் உள்ளது.

சுகங்கள் யாவும் அருளும் சுவாதி தரிசனம்!

கருவறை விமானம் உயர்ந்த நிலையில், திருமாலின் பல அரிய சுதைச் சிற்பங்களோடு அழகாகக் காட்சியளிக்கிறது. கருவறையில் அருளும் மூலவர், ஏழரை அடி உயரம் கொண்டவர். இடது திருவடியை மடித்து, வலது திருவடியை கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கும் கம்பீரக் கோலம். இடது தொடை மீது தாயாரை அமர்த்தி, அணைத்தபடி இருக்கும் பெருமாள் நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தியிருக்கிறார்; கீழ் வலது கரத்தை, அபய ஹஸ்தமாக வைத்திருக்கிறார்.

சாதாரணமாக, லக்ஷ்மி நரசிம்மர் கோயில் களில், லக்ஷ்மி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந் திருப்பார். ஆனால், இங்கே லக்ஷ்மி தாயார், வரும் பக்தர்களை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். ஆகையால், நரசிம்மரைத் தரிசித்தால் சத்ரு பயம் அகலுவதோடு, லக்ஷ்மி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். இவர் கல்யாண லக்ஷ்மி நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார்.

ஸ்வாதி நட்சத்திரம் வருகின்ற நாட்களில், மாலைப் பொழுதில் (ஒன்பது நாட்கள், ஒன்பது முறை) இவரைத் தரிசித்தால், சத்ரு பயம், தீராக்கடன், திருமணத்தடை போன்ற பிரச்னைகள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

 படங்கள்: தே.அசோக்குமார்

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் பகல் 11.30 வரை; மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை.

அருகில் தரிசிக்கக்கூடிய கோயில்கள்:

திருமாதலம்பாக்கம்    -    ஸ்ரீதிருமாலீஸ்வரர்;

தக்கோலம்     -    தேவாரத் தலம் (7 கோயில்கள்)

பேரம்பாக்கம்     -     ஸ்ரீசோழிஸ்வரர்; நரம்பு    சம்பந்தப்பட்ட வியாதிகள் தீரும்.

இலம்பயங்கோட்டூர்     -     ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீரம்பேஸ்வரர்; தேவாரத் தலம்

கூவம் (திருவிற்கோலம்) -     ஸ்ரீதிரிபுராந்தகேஸ்வரர்; தேவாரத் தலம்

மப்பேடு    -     ஸ்ரீசிங்கீஸ்வரர்.