Published:Updated:

மனசெல்லாம் மந்திரம்! - 5

மனசெல்லாம் மந்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மனசெல்லாம் மந்திரம்! ( மனசெல்லாம் மந்திரம்! )

நல்ல வாழ்க்கைத் துணை அமைய...சுயம்வரா பார்வதி மந்திரம்வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்

மனசெல்லாம் மந்திரம்! - 5

‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. திருமணம் என்பது, உலக மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்துவதற்காக வகுக்கப்பட்ட நியதியே ஆகும்.

நம்முடைய பாரத கலாசாரத்தைப் பொறுத்த வரை, ஒவ்வொரு வரனும் ஒரு வதுவைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்துகொள்வது மரபாக உள்ளது. முற்காலத்தில், சுயம்வரத்தின் மூலம் ஒரு பெண் தனக்கு உரிய கணவனைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளதை நாம் புராணங்களில் பார்க்கிறோம். இன்றைக்குத் திருமணங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு, சாஸ்திரப்படி நடைபெறுகின்றன. ஆனால், காதல் திருமணங் கள் நடைபெறும்போது சாஸ்திர சம்பிரதாயங்கள் அடிபட்டுப் போகின்றன.

மனித இனத்தில் அனைவருக்கும் உரிய வயதில் திருமணம் நடைபெறுவது அவசியம்; ஒருவன் தன் திருமணத்துக்குப் பிறகே முழு வாழ்க்கையை அடைகிறான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணத்துக்குப் பிறகே ஒருவர் செய்யும் அனைத்து வித கர்மங்களும் தர்ம காரியமாகிறது. எனவேதான், பாரதத்தில் மனைவியை தர்மபத்தினி என்று போற்றுகிறார்கள். அது மட்டுமல்ல, கணவர் தான் செய்யும் அனைத்து தர்ம காரியங்களையும் மனைவியின் அனுமதி பெற்ற பிறகே செய்யவேண்டும் என்னும் நடைமுறை இப்போதும் மந்திரவழி நடைபெறும் தர்மங்களில் உள்ளது.

திருமணத்துக்கு உரிய வயதைக் கடந்த பிறகும் சரியான வரன் கிடைக்காமல் திருமணம் தள்ளிப் போனாலும், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் போன்ற தோஷங்களால் திருமணம் தடைப்பட்டாலும், தடைகள் நீங்கி திருமணம் நடைபெறுவதற்காக பிரம்ம தேவரால் அருளப்பட்ட மந்திரம்தான் சுயம்வரா பார்வதி மந்திரம். இந்த மந்திரமானது சகலவித தோஷங்களையும் போக்கி, நல்ல வாழ்க்கைத் துணையை அருளும். தன்னுடைய படைப்புத் தொழில் நல்லபடி தொடர்ந்து நடக்கவேண்டும் என்பதற்காகவே பிரம்ம தேவர் இந்த மந்திரத்தை அருளியிருக்கிறார்.

இந்த மந்திரம் அழகும் நல்ல பண்புகளும் கொண்ட வாழ்க்கைத் துணை அமைவதற்காக மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைத்து அசையும் பொருட்கள், அசையா பொருட்களை அடையவும் பயன்படுகிறது.

தட்சனின் மகளாக அவதரித்த பார்வதி தேவி, சிவபெருமானை திருமணம் செய்துகொள்ளத் தவம் இருந்தபோது, இந்த சுயம்வரா பார்வதி மந்திரத்தை ஜபித்ததாக ஐதீகம். அம்பிகையின் தவத்தைக் கலைக்க நாரதரும் ஈசனும் முயற்சித்தபோதும், அம்பிகை உறுதியாக நின்று இந்த மந்திரத்தை ஜபித்ததன் பயனாக பரமேஸ்வரனைத் திருமணம் செய்துகொண்டாள்.

சுயம்வரா பார்வதி மந்திரத்தை முறைப்படி உபதேசம் பெற்ற பிறகே ஜபிக்கவேண்டும். மற்ற மந்திரங்களைப் போலவே இந்த மந்திரத்துக்கும் அங்கநியாச, கரநியாச பூர்வாங்க பூஜை, பீஜமந்திரம், மூல மந்திரம், தியானம் எல்லாமே உண்டு. ‘ஹ்ரீம்’ என்பதே பீஜ மந்திரமாகும்.

‘உதய கால சூரியனைப்போல் பிரகாசமாக இருப்பவளும், எல்லோரும் பிரமிக்கும் அளவுக்கு அழகு உடையவளும், வண்டுகள் ரீங்காரமிடும் வாசமுள்ள மலர்களால் ஆன மாலையைக் கையில் ஏந்திச் சென்று பரமனை நெருங்கி, அவர் கழுத்தில் மாலை சூட்டுபவளுமான பார்வதி தேவியை நமஸ்கரிக்கிறேன்.

ஆண்களையும் பெண்களையும் பரஸ்பரம் வசீகரித்துச் சேர்த்து வைப்பவளும், தங்க நிறம் உடையவளும், 64 கலைகளின் நாயகியும், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் அவர்கள் கேட்காமலே நிறைவேற்றி அருள்புரிபவளும், தன்னுடைய ஒப்பற்ற அழகினால் பரமனை ஈர்த்தவளும் ஆன தேவியை நான் நமஸ்கரிக்கிறேன்.

மனசெல்லாம் மந்திரம்! - 5

அழகான முகமும், அருள் ததும்பும் கண்களும் கொண்டவளும், பரமேஸ்வரனின் திருநடனத்தை ரசித்துப் பார்க்கும் ஆர்வம் உள்ளவளும், அன்னபூரணியாகத் திகழ்பவளும், அழகிய ஆடைகள் உடுத்தி, சிரசில் பிறைச் சந்திரனைத் தரித்திருப்பவளும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் போன்ற ஆயுதங்களை ஏந்தி இருப்பவளும், பக்தர்களுக்கு அபய ஹஸ்தம் அருளியபடி பரமேஸ்வரனின் மடியில் அமர்ந்திருக்கும் பார்வதி தேவியை நான் நமஸ்கரிக்கிறேன்’

- என்று அம்பிகையை தியானம் செய்துவிட்டு, சுயம்வரா பார்வதி மந்திரத்தை ஜபித்தால், தடைப்பட்டு வரும் திருமணம் நடைபெறுவதுடன், உலகத்தில் உள்ள அனைத்துவித அசையும் மற்றும் அசையாப் பொருட்களையும் விரும்பியபடி அடையலாம்.இந்த மந்திரத்தின் ரிஷி- பிரம்மா; சந்தஸ்- அதிஜகதி; தேவதை- தேவி கிரிபுத்ரி ஸ்வயம்வரா தேவதா.

மந்திரம்:

ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி
யோகேஸ்வரி யோகேஸ்வரி
யோக வசங்கரி யோக வசங்கரி
சகல ஸ்தாவர ஜங்கமஸ்யா
முக ஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா:


(யோக வசங்கரிக்கு பதிலாக யோக பயங்கரி என்று சொல்லும் மந்திரமும் வழக்கத்தில் உள்ளது.) முறைப்படி குருமுகமாக உபதேசம் பெற முடியாதவர்கள், இங்கே கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் பாராயணம் செய்து, பிரார்த்திப்பதன் மூலம் திருமணத் தடை நீங்கி நல்ல வாழ்க்கைத் துணை அமையப் பெறலாம். திருமணம் கூட்டுவிக்கும் திருமணஞ்சேரி திருத்தலத்தில் அப்பர் பெருமான் அருளிய பாடல் இது.

துன்னுவார் குழலாள் உமையாளொடும்
பின்னுவார் சடைமேற் பிறை வைத்தவர்
மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை                    
உன்னுவார் வினை யாயின ஓயுமே. 


- தொடரும்