மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 17

சிவமகுடம்  - 17
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 17

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம்  - 17

துவங்கியது போர்!

இயற்கையின் ஒட்டுமொத்த சூட்சுமங்களும் தன்னிடமே பொதிந்திருப்பதாகக் காட்டிக்கொள்வது போல், தோற்றத்தில் அதிபயங்கரத்தைக் காட்டித் திகழ்ந்தது அந்த வனம். ஆனால், ‘உன் சூட்சுமமே என் வசம்’ என்பதுபோல், அவ்வப்போது ‘ஹோ’ எனும் பேரிரைச்சலுடன் சுழன்று வீசிய பெருங்காற்று, அங்கிருந்த பெரும் விருட்சங்களையும் அசைத்து அலைக்கழித்தது.

அப்படி வீசும் காற்று திடுமென நின்றுபோக பெரும் நிசப்தமும் வனத்தில் குடிகொள்ளும். அப்போது இலைகளும் அசையாது  மெளனம் காக்கும். மீண்டும் சிறிது பொழுது கழித்து பெருங்காற்று வீசும்;
மரங்கள் பேயாட்டம் போடும். இப்படியான விநோதச் சூழலில்... அந்த வனத் திடலில் சைவத் துறவிக்குமுன், அவர் சொன்னதைக் கேட்டு சில கணப் பொழுது பேச்சற்று நின்றுவிட்டாள் பொங்கி.

“சோழர் படைகள் காத்து நிற்கும் புலியூர் வேறு; பாண்டிய படைகள் தாக்கப் போகும் புலியூர் வேறு’’ என்று அவர் கூறிய வார்த்தைகள் அவள் உள்ளத்தை நடுநடுங்கச் செய்தன. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. சில நொடிகள் கழித்து வாய் திறந்தாள். சோழருக்குத் தூது செல்லும் தன்னிடம் ரகசியத்தை உடைப்பது ஏன், பாண்டியர்களுக்குச் சோழர்கள் மீது திடீர் கரிசனம் ஏற்பட்டது ஏன் என்பது முதலான தனது சந்தேகங்களை சைவத்துறவியிடம் கேட்டாள். அவர் சொல்லும் பதிலை வைத்து, அவர்களின் திட்டத்தை ஓரளவு யூகிக்க முடியும் என்றும் நம்பினாள். சைவத்துறவியும் பெருமூச்சொன்று விட்டபடி பதில் சொல்லத் தயாரானார்.அப்போதுதான் அந்த சத்தம் கேட்டது. சருகுகள் மீது ஏதோ ஊர்ந்துபோகும் சத்தம்தான் அது. இருவருமே சத்தம் வந்த திசையை நோக்கினர்.

பெரிய சர்ப்பம் ஒன்று ஒரு விருட்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, விருட்சத்தை நெருங்கி, தரை தாழ்ந்திருந்த அதன் கிளை ஒன்றில் ஏறவும் செய்தது.
“நன்று... மிக நன்று...’’ என்றபடி மேலும் கீழுமாக தலையசைத்தார் சைவத்துறவி.

எதற்காக அவர் அப்படிச் சொல்கிறார், விருட்சத்தின் மீது சர்ப்பம் ஏறுவதால் இவருக்கு என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது என்று புரியாமல், துறவியை நோக்கினாள் பொங்கி.

சர்ப்பம் தொற்றிக்கொண்டிருந்த கிளைக்கு நேரே மேலுள்ள கிளையில்தான், இவர்களைக் குறிபார்த்தபடி உட்கார்ந்திருந்தான் அந்த வில் வீரன். சர்ப்பத்தை நோக்கியவர் அவனையும் பார்த்ததால்தான் “நன்று’’ என்று கூறி திருப்திப் பட்டுக்கொண்டார். அவருடைய பார்வை நிலைக்கும் திசையில் தனது பார்வையையும் பதித்த பொங்கி, வில்லவனைக் கண்டு அதிர்ந்து போனாள்.

அவன் யாருக்குக் குறிவைத்திருக்கிறான்? தனக்கா துறவிக்கா என்பது அவளுக்குத் தெரியவில்லை.

அதேநேரம், அவன் அமர்ந்திருந்த கிளைக்குக் கீழிருந்த கிளையில் இருந்து சர்ப்பம் மெள்ள மேல் நோக்கி நகர்வதையும் கண்டாள். அதை வைத்து அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். ‘வில்லவன் நாணை விடுவித்தால், தங்களில் ஒருவருக்கு மோட்சகதி நிச்சயம். ஆனால், சர்ப்பம் முந்திகொண்டால் வில் வீரனின் மரணம் நிச்சயம். சர்ப்பம் முந்திக்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில்தான் ‘நன்று’ என்று திருப்திப் பட்டுக் கொள்கிறாரோ இந்த கபடத் துறவி’ என்றுகூட எண்ணினாள் பொங்கி.

ஆனால், சைவத் துறவி திருப்திப்பட்டுக் கொண்டது அதற்காக அல்ல என்பதை மறுகணமே  தெரிந்துகொண்டாள் பொங்கி.

கிளையில் அமர்ந்திருந்த வில் வீரனை நோக்கிய சைவத் துறவி,, “வேலழகா உடனே கீழே குதித்துவிடு’’ என்று கூவினார். அதேவேளையில் வேலழகனும் சர்ப்பத்தைக் கவனித்துவிட்டான். சட்டென்று கீழே குதித்து சைவத் துறவியை நெருங்கி அவரை தாள்பணிந்து வணங்கி எழுந் தான். அவனுக்குப் புன்னகையுடன் ஆசிகூறிய துறவி பொங்கியின் பக்கம் திரும்பினார்.

சிவமகுடம்  - 17

“உனக்கு இங்கு நிகழ்வது எதுவுமே புரியவில்லை அல்லவா பொங்கி?’’ என்று கேட்கவும் செய்தார். அவளோ பதிலுக்கு அவரை முறைத்தாள். அவள் முறைத்ததைக் கண்டுகொள்ளாதவராக வில் வீரனை நோக்கியவர், “வேலழகா! இங்கு, எனக்குப் பாதுகாப்புத் தேவையில்லை. உனக்கு உறையூரில் நிரம்பப் பணிகள் காத்திருக்கின்றன. உன் தோழர்களுடன் புறப்படு... சீக்கிரம்!’’ என்று அவனை துரிதப்படுத்தினார். மீண்டும் அவரை வணங்கிய வேலழகன், எதிர்புறமாகத் திரும்பி வாயால் விநோதமாக ஒலியெழுப்பினான்.  அவ் வளவுதான் அங்கிருந்த விருட்சங்கள் ஒவ்வொன் றிலும் இருந்து கீழே குதித்த வீரர்கள், ஓரிடத்தில் திரண்டார்கள். அனைவருமாக சேர்ந்து சைவத் துறவியை ஒருமுறை வணங்கி விட்டு, அங்கிருந்து புறப்பட்டனர். நடந்தது எல்லாவற்றையும் கண்டு மலைத்து நின்றாள் பொங்கி.

மெள்ள அவள் பக்கம் திரும்பிய சைவத்துறவி புன்னகையுடன் பேசத் துவங்கினார்.

“பெண்ணே! நான் எதற்காக நன்று என்று திருப்திப்பட்டுக் கொண்டேன் தெரியுமா?’’ எனக் கேட்டவர், அவளின் பதிலுக்குக் காத்திராமல் தானே பேசத் துவங்கினார் “முதலில் வில்லவனை நோக்கினேன். நான் குறித்த நேரத்தில் எனது மெய்க்காவல் படை இங்கு வந்துவிட்டதை அவன் மூலம் புரிந்து கொண்டதால் எனக்கு முழு திருப்தி. அவனுக்கு நீ புதியவள் ஆதலால், உன்னால் எனக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாதே எனக் கருதி வில்லில் நாணேற்றி காத்திருந்தான். அவனுக்கு உன்னைப்பற்றி என் கண்ணசைவினாலேயே புரியவைத்து விட்டேன். எனது திருப்திக்கு இன்னொரு காரணமும் உண்டு’’ என்றவர் தொடர்ந்தார்.

“பச்சை விருட்சத்தின் மீதிருந்து சர்ப்பங்கள் கீழே இறங்குவதைக் காணக் கூடாது. அது கெட்ட சகுனம். ஆனால் அவை விருட்சத்தின் மீது ஏறுவதைக் காண்பது நல்ல சகுனம்*. சந்தோஷச் செய்தி காத்திருக்கிறது என்று அர்த்தம்....’’ என்றவரை இடைமறித்தாள் பொங்கி.

“சந்தோஷச் செய்தி யாருக்கு... பாண்டியருக்கா, சோழர்களுக்கா? நானும்தான் விருட்சத்தில் சர்ப்பம் ஏறுவதை கண்டேன். எனில், வெற்றி சோழர்களுக்கு எனக் கொள்ளலாமா’’ எனக் கேட்டாள். அவளின் துடுக்குத்தனமான கேள்வியை துறவி பெரிதும் ரசித்திருக்க வேண்டும். பெருங்குரலெடுத்து சிரித்துவிட்டுச் சொன்னார்.

“அம்மையே! சந்தோஷச் செய்தி எல்லோருக்கும் தான்!’’ ஏன்றார்.

பொங்கி புரியாமல் விழித்தாள். அவள் அருகில் வந்து பரிவுடன் தலையை வருடியவர், ‘‘குழந்தாய். ‘பகைவரில் ஒருவருக்குத்தானே சந்தோஷச் செய்தி காத்திருக்கும். எல்லோருக்கும் எப்படி கிடைக்கும் என்று நீ சிந்தை குழம்புவது புரிகிறது. வீணாக மனதை அலட்டிக்கொள்ளாதே. உடனே புறப்படு. உங்கள் புலியூரில் காத்திருக்கும் சோழப் படைகளை உறையூருக்கு நகரச் சொல்.’’ என்றார்.

“ஆனால், எனது கேள்விகளுக்கு இன்னும் எந்தப் பதிலும் தங்களிடம் இருந்து வரவில்லை’’ என்று அவருக்கு நினைவூட்டினாள் பொங்கி.

“இரண்டொரு நாட்களில், உனக்கான எல்லா கேள்விகளுக்கும் காலமே பதில்சொல்லும்'' என்றார். இப்போது பொங்கி சொன்னாள் “நன்று... மிக நன்று...’’ என்று
“எது நன்று?’’

“தங்கள் திட்டம் மிக நன்று! போகவேண்டிய இடத்துக்கு என்னைப் போகவிடாமல்  தடுத்தது நன்று. புலியூர் என்று ஊரின் பெயரை மட்டுமே கசியவிட்டு, சோழர் படைகளைப் பிரித்தது, எங்களுக்கு உதவியாக வந்த பரதவரையும் கடற்புறத்திலேயே தங்கவைக்க நீங்கள் செய்த உபாயம்  என உங்கள் தரப்பு செய்த திட்டங்கள் யாவும் மிக நன்று’’ என்றவள் விருட்டென புறப்பட்டாள்.

சில எட்டுகள் எடுத்து வைத் தவள், சீற்றத்துடன் திரும்பினாள்.

“ஒன்று மட்டும் நிச்சயம் துறவியாரே. எங்கள் மானியார் இருக்கும் வரையிலும் உங்கள் திட்டம் எதுவும் பலிக்காது. இன்னொரு விஷயத்தையும் சொல்லிவிடுகிறேன். இப்போது நான் செல்லப்போவது புலியூருக்கு அல்ல, உறையூருக்கு. வருகிறேன்’’ என்றவளை தடுத்து நிறுத்தியது, துறவி அடுத்து கூறிய வார்த்தை.

“உறையூருக்குச் செல்வதால் பயன் ஏதும் இல்லை பேதைப் பெண்ணே! கூண்டுக்குள் அகப்பட்ட புலிகளாக  உறையூர் கோட்டைக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் மானியும், உங்கள் அரசர் மணிமுடிச் சோழரும்.’’ என்றவர் சற்று இடைவெளி விட்டு, பிறகு நிறுத்தி நிதானமாகச் சொன்னார்.

“உறையூரில் போர் துவங்கிவிட்டது!’’

சைவத் துறவி சொன்னதில் ஒருபாதி சரிதான். உறையூரில் போர் துவங்கிவிட்டிருந்தது உண்மை தான். ஆனால் அவர் சொன்னதுபோல்  அந்தப் புலிகள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கவில்லை.பகைவர் படைகளுக்கு இடையே சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன!

- மகுடம் சூடுவோம்...

* சகுனம் - சகுனம் பார்ப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். சகுனம் பார்த்துச் சொல்வதற்கென்றே அக்காலத்தில் நிமித்திகர்கள் இருந்தார்கள். சகுனம் பார்ப்பது பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.