மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

எள்ளுடன் அரிசி சேர்ப்பது ஏன்?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

?தர்ப்பணம் கொடுக்கும்போது பித்ருக்களின் திருப்திக்கு எள்ளும் நீரும் விடுகிறோம். தர்ப்பணத்தில் எள்ளுக்கு அப்படி என்ன முக்கியத்துவம்?

-ரங்கராஜன், சேலம்


ரகுவம்சத்து அரசன் திலீபனுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்தது. அந்நிலையில் அவன் தன் குலகுருவான வசிஷ்டரிடம் சென்று தன்னுடைய மனக்குறையைத் தெரிவிக்கிறான். அத்துடன் தனக்குக் குழந்தைச் செல்வத்தை அருளும்படியும் வேண்டுகிறான். சீராட்டிப் பாராட்டி வளர்ப்பதற்காகக் குழந்தையைக் கேட்கவில்லை; அவனுடைய அரசுரிமையைக் கட்டிக் காக்கவும் அவன் குழந்தை வேண்டும் என்று கேட்கவில்லை. தன் முன்னோர்களின் ஆராதனை சங்கிலித் தொடர் போல் தொடர்ந்து நடைபெற வேண்டும்; அதற்கு இணையாக தன்னுடைய வம்ச பரம்பரையும் செழிப்புற்று விளங்கவேண்டும்; வம்சவிருத்தியின் குறிக்கோளான அற ஈடுபாடும் அறுபடாமல் நிலைக்கவேண்டும் என்ற நோக்கத்திலேயே அவன் குழந்தைச் செல்வத்தை விரும்பினான்.

திலீபனின் இந்த நிலையை காளிதாசன் தன்னுடைய ரகுவம்சத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்.

“நான் முன்னோர்களின் ஆராதனையில் ஈடுபட்டேன். அவர்களுக்கு அன்னதானமும் அளித்தேன். அன்னம் உட்கொள்ளப் போகும் தருணத்தில் அவர்கள் என்னைப் பார்த்துக் கண்கலங்கினார்கள். காரணம், ‘தற்போது எங்களுக்கு அன்னம் அளிக்கும் திலீபன் இறந்த பிறகு எங்களுக்கு உணவளிக்க யாரும் இல்லையே, அதன் காரணமாக எங்களுடைய வருங்காலம் இருண்டு காணப்படுகிறதே' என்ற எண்ணம்தான் அவர்களை அப்படிக் கலங்கச் செய்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். அவர்களின் துயரத்தைப் போக்கவும் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் எனக்கு ஒரு வாரிசை வழங்கி அருளுங்கள்' என்று குரு வசிஷ்டரிடம் வேண்டிக்கொண்டான்.

மேலும் தொடர்ந்து, ‘நான் ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தாகம் தீர எள்ளும் குளிர்ந்த நீரும் அளிப்பதுண்டு. அப்படி நான் அளிக்கும் தண்ணீரை அவர்கள் கையில் ஏந்தும்போது திலீபனாகிய எனக்கு வாரிசு இல்லாத காரணத்தினால், தொடர்ந்து தங்களுக்கு தண்ணீர் கிடைக்க வழி இல்லையே என்ற ஏக்கம் அவர்கள் மனதை வாட்ட பெருமூச்சு விடுகிறார்கள். அவர்களின் அந்த சூடான பெருமூச்சு அவர்களுடைய கையில் இருக்கும் தண்ணீரில் பட்டு சூடாக மாற்றியது. அதன் காரணமாக நான் அளித்த அந்த குளிர்ந்த நீரை சூடாகப் பருகவேண்டிய நிலை அவர்களுக்கு. அவர்களின் ஏக்கத்தைப் போக்க எனக்கு வாரிசை அருளுங்கள்' (மத்பரம் விச்சே ததர் சின: நப்ரகாமபுஜ: சராக்தேஸ்வதாஸங்கரஹ தத்பரா:) என்கிறான் திலீபன்.

கேள்வி - பதில்

திலீபன் மட்டுமல்ல, முன்னோரைத் திருப்திப்படுத்த ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்தான் பகீரதன். மண்டனமிச்ரர் முன்னோர் ஆராதனையில் மூழ்கியிருந்தார். விருந்தாளியாக வந்த சங்கராசார்யரை வெளியே காக்க வைத்தார். முன்னோர் ஆராதனை முடிந்த பிறகு அவரை வரவேற்றார். எல்லா அறத்திற்கும் மேலாக முன்னோர் ஆராதனை விளங்குகிறது. குழந்தை பிறந்தவுடன் குதூகலப்படுவது முதலில் முன்னோர்கள்தான். தனது வம்ச பரம்பரை அறுபடாமல் இருக்க அவர் கள் என்றும் விழித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு உணவு கிடைக்கும் என்ற எண்ணத் தில் அல்ல!

முன்னோர்களுக்குச் சிலை வைப்பது, மணி மண்டபம் கட்டுவது, தெருவுக்கு முன்னோர்கள் பெயர் வைப்பது. தன் வாரிசுகளுக்கு முன்னோர்கள் பெயர் வைப்பது, முன்னோர்கள் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்துவது போன்றவை அவர்களின் ஆராதனையாகாது. அவர்களை நினைத்து மனமுருகி அவர்கள் இறந்த நாளிலும் அமாவாசை தினங்களிலும் உணவும் எள்ளும் தண்ணீரும் அளித்து வழிபட வேண்டும். அது மட்டும்தான் அவர்களுக்கான பணிவிடையாக மாறும். இயற்கையின் சொத்தான எள்ளும், தண்ணீரும், உணவும்தான் அவர்களுக்கு அளிக்க வேண்டும். வேறு வழிகளில் அவர்களை திருப்திப்படுத்துவது வெறும் பாசாங்குதான்.

‘இலைகள், புஷ்பங்கள், பழங்கள், தண்ணீர் இவற்றை எனக்கு அளித்தால் போதும். நான் திருப்தியடைந்து மகிழ்வேன்’ என்றான் கண்ணன் (பத்ரம், புஷ்பம், பலம் தோயம் யோமெ பக்த்யா...) நமது படைப்புகள் அவர்களை மகிழ்விக்காது. இயற்கையில் விளைந்த பயிரும், எள்ளும் தண்ணீரும்தான் அவர்களை மகிழ்விக்கும்.

?சில குடும்பங்களில் இறந்தவர்களை ‘சமாதி அடைந்துவிட்டார்கள்’ என்று கூறி, அவர்களை அப்படியே உட்கார வைத்துப் புதைப்பார்கள். இவ்வாறு சமாதி அடைந்தவர்களுக்கு வருடா வருடம் அவர்கள் இறந்த தினத்தன்று திதி கொடுக்கக்கூடாது என்று கூறுகிறார்கள் அது சரிதானா? அல்லது, திதி கொடுக்கலாமா?

- கே.ராமகிருஷ்ணன், பெங்களூர்


இறந்தவர்களை அடக்கம் பண்ணுவது என்பது நம் கலாசாரப்படி இரண்டு விதமாக இருக்கிறது. ஒன்று அக்னியால் எரித்துவிடுவது. மற்றொன்று பூமியில் புதைத்துவிடுவது. இரண்டுமே சம்பிரதாயத்தில் வந்தவை. மிகப் பழைய காலத்தில் எரிக்க மட்டுமே செய்வார்கள். அதுதான் சரியான நடைமுறை. வேற்று மதத்தினரைப் பார்த்து, புதைப்பது என்பதை நாமும் வழக்கமாக்கிக் கொண்டோம். நம் கலாசாரத்திலேயே குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டுவதற்கு முன் இறந்துவிட்டால், எரிப்பதில்லை. புதைக்கத்தான் செய்வோம்.

இறந்த உடலை எரிப்பது என்றால், குப்பையைப் பொசுக்குவதைப் போலில்லை. சுத்தப்படுத்தவே எரிக்கிறோம்! அந்த உடலில் புழு வைத்து, அழுகிக் கெட்டுப் போகாமல் இருக்கட்டும் என்கிற நல்லெண்ணத்தின் வெளிப்பாடே எரியூட்டல்.

சந்நியாசிகளை எரிக்கிற வழக்கம் இல்லை. புதைப்பதே வழக்கம். உலக வாழ்க்கையைத் துறந்து சந்நியாசி ஆனவருக்கு எரியூட்டுவது என்பதை தர்ம சாஸ்திரம் சொல்லவில்லை. மூடினால் போதும் என்கிறது. ‘சமாதி ஆனார்’ என்றால், அவர் இரண்டறக் கலந்துவிட்டார் என்றுதான் அர்த்தம். வெறுமனே தரையில் புதைத்தாலே சமாதி என்பதாகாது.

கேள்வி - பதில்

சமாதி ஆன சாமியார்களுக்கே சிராத்தம் உண்டு. வருஷா வருஷம் ஆராதனை என்று செய்கிறார்களே... அது வேறென்ன?

சந்நியாசிக்கே பண்ணும்போது மற்றவர்களுக் கும் பண்ணத்தான் வேண்டும். உங்கள் சிந்தைக்குள் அவர் இருக்கும் வரை சிராத்தம் செய்துதான் ஆக வேண்டும்.

? மறைந்துவிட்ட முதல் மனைவிக்கு, இரண்டாவது மனைவியின் மூலம் பிறந்த மகன் சிராத்தம் செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம். முன்னோர் ஆராதனை மகத்தானது. அதை நிறைவேற்றுவது சிறப்பு. எப்படியாவது சிராத்தம் செய்யவேண்டும் என்கிற நோக்கம் பாராட்டுக்கு உரியது. இறந்துவிட்ட முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவிக்குப் பிறந்த பிள்ளையின் மூலம் சிராத்தம் செய்யலாம்.

?ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமாவாசை வரும் பட்சத்தில், அன்று தர்ப்பணம் செய்பவர்கள், எள்ளுடன் சிறிது அரிசியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்களே... தர்ப்பணத்துக்கும் கிழமைகளுக்கும் என்ன தொடர்பு?

- ராஜலக்ஷ்மி சந்தானம், தருமபுரி


கிழமைகளை அறிமுகம் செய்தது வானசாஸ்திரம். அதன்படி சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி இந்த வரிசையில், அண்டவெளியில் தனித் தனி  ஓடு பாதையில் கிரகங்கள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இவற்றின் பெயர்களால் கிழமைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

ஆகாயத்தின் அடித்தட்டில் சந்திரன்; அதற்கும் மேல் தட்டில் புதன்... இந்த வரிசையில் கடைசியில் இருப்பவன் சனைச்சரன் (சனி). இன்று சனிக்கிழமை எனில், சனியில் இருந்து 4-வது கிரகத்தின் பெயரே அடுத்த கிழமைக்கு! அதாவது, சனியை விட்டுவிட்டு அடுத்த கிரகத்தில் இருந்து எண்ண வேண்டும். சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன்; நான்காவதாக வருவது சூரியன். ஆகையால், சனிக்கிழமைக்கு அடுத்த நாள் ஞாயிறு!

ஞாயிறை (சூரியன்) விட்டு விட்டு அடுத்த கிரகத்தில் இருந்து எண்ணினால், 4-வது வருவது சந்திரன். எனவே, ஞாயிறுக்கு பிறகு திங்கள். இப்படியே செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று கிரகங்களின் பேரில் கிழமைகள் குறிப்பிடப்படுகின்றன. கிழமைகளுக்குத் தனியே பெயர் கிடையாது. சூரியன் தோன்றும் வேளை, ‘சனி ஹோரை’யாக இருந்தால், அன்று முழுவதும் சனிக் கிழமை.

கிழமைகளைக் குறிப்பிடும்போது, அந்தப் பெயருக்குரிய கிரகங்கள் நமது ஞாபகத்துக்கு வரும். அந்த கிரகத்தின் இயல்புகளை, அன்று துவங்கும் செயல்பாடுகள் அல்லது வைபவங்களுடன் நம் மனம் தானாகவே சேர்த்து வைத்துப் பார்க்கும். உதாரணமாக... சனிக்கிழமையன்று ஒரு நல்ல காரியத்தை செய்ய உத்தேசிக்கிறோம். உடனே, சனிபகவானும் அவரது இயல்புகளும் ஞாபகத்துக்கு வரும். சனி, துயரத்துக்குக் காரகன். எனவே, ‘அன்று செய்யப்படும் காரியம் துயரத்தில் முடிந்துவிடுமோ!’ என்றொரு நெருடல் மனதில் எழும். உடனே, சனிக்கிழமையைத் தவிர்த்து விடுவோம்.

‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது!’ என்பார்கள். புதன் பகுத்தறியும் திறனை அளிப்பவன். புதனைப் பற்றிய சிறப்பான இந்தச் சிந்தனைகள், செயல்பாட்டை வெற்றியடையச் செய்யும். எனவே, புதன்கிழமையை ஏற்றுக்கொள் வோம்.

வழிபாட்டின் சிறப்பிலும் கிழமைகளுக்குப் பங்கு உண்டு. ஞாயிறு - சூரிய வழிபாட்டுக்கு உரியது. திங்கட்கிழமைகளில் ஈசனையும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்பாளையும் ஆராதனை செய்யலாம். சனிக்கிழமைகளில் தர்மசாஸ்தாவையும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நாராயணனையும் வழிபடலாம். சோமவாரம், கிருஷ்ணாங்காரக சதுர்த்தி போன்றவையும் கிழமைக்கு முன்னுரிமை அளிக்கும் விரதங்களே!

சித்த யோகம், அமிர்த யோகம் மற்றும் மரண யோகம் ஆகியவற்றிலும் கிழமைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. ‘தலைமுடியைக் களைய திங்களும் புதனும் சிறந்த நாட்கள். தகப்பன் இருப்பவர்கள், வெள்ளிக்கிழமை முடி வெட்டக்கூடாது. தாய்-தந்தையைத் தவிர, மற்றவர்களுக்குச் செய்யும் ஸபிண்டீகரண ஆராதனையை வெள்ளிக்கிழமையில் செய்யக் கூடாது’ என்கிறது தர்மசாஸ்திரம். சுமங்கலிகள் வெள்ளிக்கிழமையில் பயணம் மேற்கொள்ளக் கூடாது. செவ்வாயில் வீடு திரும்பக் கூடாது, என்பது ஜோதிடம் சொல்லும் கருத்து. வார சூலை என்பது கிழமைகளை மட்டுமே வைத்து உருவானவை. நாம் செய்யும் சங்கல்பத்திலும் வருஷம், மாதம், நட்சத்திரம் ஆகியவற்றுடன் கிழமையையும் சேர்த்துக் கொள்வது உண்டு. இப்படி, பல விஷயங்களில் கிழமைகளின் பங்கு இருக்கும் போது தர்ப்பணத்திலும் அதன் பங்கு இருப்பது இயற்கையே.

கொழுக்கட்டையில் எள்ளுக் கொழுக்கட்டை உண்டு. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், பருப்புக் கொழுக்கட்டையையும் சேர்த்துக் கொள்வர். தில ஹோமத்தில்... அக்னியில் எள்ளைப் போடும்போது நெல்லையும் கலந்து பயன்படுத்துவர். எள்ளுருண்டை மட்டுமின்றி வடை, அப்பம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்வார்கள். அன்னத்தை அக்னியில் சேர்க்கும்போது சிறிது சர்க்கரையையும் சேர்த்துக் கொள்வார்கள். இப்படி, மனதுக்கு நெருடல் அளிக்கும் பொருட்களுடன் மற்றொரு பொருளையும் சேர்த்து, மன நெருடலை அகற்றுவது உண்டு. வெற்றிலையுடன் பாக்கையும், புடைவையுடன் ரவிக்கையையும் சேர்த்துக் கொடுப்பார்கள். இப்படி எதிரிடையான எண்ணங்கள் தோன்ற வாய்ப்புள்ள தருணங்களில் மற்றொரு பொருளையும் சேர்ப்பது, தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம்.

சில கிழமைகளில் எள்ளை தனியாகப் பயன்படுத்தாமல், அரிசியையும் சேர்ப்பதுண்டு. இறந்த வீட்டில் தனி எள்ளை தாராளமாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் எள்ளை மட்டும் தனியாகப் பயன்படுத்தினால், மன நெருடல் தோன்றும். இதைத் தவிர்க்க எள்ளுடன் அரிசியைச் சேர்ப்பது பொருந்தும்.

?குழந்தை இல்லாத நிலையில்... இறந்து போன மனைவிக்கு கணவன் சிராத்தம் செய்ய வேண்டுமா?

- கருணாகரன், மரக்காணம்


இறந்தவருக்கு நெருங்கிய தொடர்பு உடையவர் சிராத்தம் செய்ய வேண்டும். பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு முதலிடம்; அவர்கள் இல்லை என்றால், கணவனை செய்யச் சொல்கிறது சாஸ்திரம். பிள்ளைகள் ஏற்றால், அந்த சிராத்தம் நீண்ட நாட்கள் செயல்படுத்தப்படும். கணவன் ஏற்றால், அவர் ஆயுள் உள்ள வரை மட்டுமே நீடிக்கும். எனவே, பிள்ளைகளுக்கு முன்னுரிமை!

இறந்தவருக்குத் தொடர்பு உடைய எவரேனும் சிராத்தம் செய்தே ஆக வேண்டும் என்று சாஸ்திரம் நிர்பந்திக்கிறது. இறை வழிபாட்டுக்கு இணையானது முன்னோர் ஆராதனை.

- பதில்கள் தொடரும்

கேள்வி - பதில்